06 நவம்பர் 2014

என் ஆசான்

நண்பர்களே, 
6 ஆம் ஆண்டு
ரோட்டரி புத்தகத் திருவிழாவிற்கு
வருமாறு
தங்களை அன்போடு அழைக்கின்றேன்
வருக      வருகஎன் ஆசான்


பன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர்
     தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த
     எளிமையை என்றும்நான் மறக்கேன்
                             - திருவிசைப்பா

     நண்பர்களே, மாதா, பிதா, குரு, தெய்வம் எனத் தெய்வத்தினும் மேலாய், குருவைப் போற்றுதல் நம் மரபு.

     ஆசிரியரைப் பள்ளியில் இருக்கும் பெற்றோர் எனவும், பெற்றோரை வீட்டில் இருக்கும் ஆசிரியர் எனவும் பெருமை பொங்க போற்றுபவர்கள் அல்லவா நாம்.

     ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும், ஓரு பெண் இருப்பார் எனக் கூறுவர். ஆணோ, பெண்ணோ, ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னும், நிச்சயம் ஒரு ஆசிரியர் இருப்பது உறுதி.

     நண்பர்களே, நான் இன்று ஆசிரியராய்ப் பணியாற்றுகின்றேன், ஐந்து நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன், வலைப் பூவில் வாரந்தோறும் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் எனது ஆசிரியர்கள்தான்.

     அறிந்தோ, அறியாமலோ, மற்ற பாட ஆசிரியர்களைவிட, தமிழாசிரியர்களுடனேயே, மிகவும் நெருங்கிப் பழகியவன் நான்.

    என்னைக் கரம் பிடித்து அழைத்துச் சென்று, நல்வழி காட்டியவர்கள், நெறிப் படுத்தியவர்கள், எனது தமிழாசிரியர்களே ஆவர். மேலும் கல்வி பயின்ற பள்ளியிலேயே, ஆசிரியராய்ப் பணியில் சேர்ந்தபோது, தோழமையோடு என்னை ஏற்று, முன்னிலும் அதிகப் பாசம் காட்டி, நேசத்தோடு அரவணைத்தவர்கள் எனது தமிழாசிரியர்களே.

     நண்பர்களே, அத் தமிழாசிரியர்களுள் முதன்மையானவரைத் தங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகின்றேன்.

புலவர் சிவ. திருஞான சம்பந்தம்

     ஒன்பதாம் வகுப்பிலும், பத்தாம் வகுப்பிலும் எனது தமிழாசிரியர் இவர். எப்பொழுதுமே ஓர் புன்னகை, நிரந்தரமாய் தவழும் முகத்திறகுச் சொந்தக்காரர். இவர் வாய் திறந்தால், பழ மொழிகள் அருவியெனக் கொட்டும்.

     ஒரு மாணவனைக் கண்டிப்பதற்கும், அவன் செய்த தவற்றை உணர்த்தித் திருத்துவதற்கும் கூட, இவர் நாவில், எப்பொழுதும் ஓர் பழமொழி, தயாராய் காத்திருக்கும்.

     பழமொழிகளின் நாயகன் இவர்.

     இவர் மிதிவண்டியோ அல்லது வேறு இரு சக்கர வாகனமோ ஓட்டி, நான் பார்த்ததில்லை. பள்ளிக்கு அருகாமையிலேயே வீடு. நடந்தே வருவார். நடந்தே செல்வார்.

     பள்ளி விழாவாயினும் சரி, கரந்தைத் தமிழ்ச் சங்க விழாவாயினும் சரி, இவரின் பங்களிப்பு இல்லாமல், விழாக்கள் நடைபெறாது.

     விழாவிற்கு ஏற்பாடு செய்தல், தக்கவரை அழைத்தல், அழைப்பிதழ் தயார் செய்தல், மேடை நிர்வாகம், நிகழ்ச்சி நிரலினை வடிவமைத்தல் என ஒவ்வொன்றையும் எனக்குக் கற்றுக் கொடுத்தவர் இவர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் அமர்ந்து, முப்பதாண்டுகள் ஒப்பிலாப் பணியாற்றியவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களாவார்.

     தமிழவேள் உமாமகேசுவரனாரின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து எழுதி, தனியொரு நூலாக வெளியிடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. புலவர் அ.இராமசாமி என்பாருடனும், எனது ஆசானுடனும் இணைந்து, நூலினை உருவாக்கிய நாட்கள், என்றென்றும் மறக்க இயலாதவை.
    

புலவர் சிவ.திருஞான சம்பந்தம், திரு ஆ.இராமகிருட்டின்ன், முனைவர் துரை.பன்னீர் செல்வம் ஆகியோருடன் இணைந்து, உமாமகேசுவரனார் கட்டிய, நாகத்தி பாலத்தில் நடந்து, நடந்து மெய் சிலிர்த்ததும், தொண்டராயன் பாடி பாலத்தைத் தேடி, பூதலூர் முழுதும் அலைந்து, திரிந்ததும், என் வாழ்வின் பொன்னான நாட்களாகும்.

     தமிழவேள் உமாமகேசுவரனாரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவின்போது, புலவர் அ.இராமசாமி அவர்களுக்கும், புலவர் சிவ.திருஞான சம்பந்தம் அவர்களுக்கும், எனக்கும், நூல் வெளியீட்டு விழா மேடையிலேயே, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார், கணையாழி அணிவித்துப் பாராட்டிய காட்சி, இன்றும் பசுமை மாறாம்ல் நெஞ்சில் நிலைத்திருக்கிறது.

பார்த்த அழகையும், மலேசியப் பயணத்தையும்
சேர்த்து எழுதி சிறந்த நூலாக்கி
என்றுமுள செம்மொழி ஏற்றம் பெற்றிடவே
இன்னொரு நூலை இனிதாகச் சேர்த்தாய்

விழியோரக் கண்ணில் வெளிவந்த நீரால்
பழகிய நட்பின் பாங்கினைக் கூறி
உன்னறுஞ் செயலுக்கு உறுதுணையாய் இருந்த
நண்பருக்கு எல்லாம் இன்பம் அளித்தாய்

என்பணி கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கே
என்றுபணி யாற்றும் இனியநல் தம்பிஜெயக்குமாரா
பண்புடனே பணியாற்றி, பயனுள்ள நூலியற்றும்
உன்பணி தொடர்ந்திடவே உளமாற வாழ்த்துகின்றேன்

எனது பயணக் கட்டுரை நூலான, விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம் என்னும் நூலுக்கு, என் ஆசான் வழங்கிய வாழ்த்துரை இது. இதைவிட வேறு என்ன பெருமை வேண்டும் எனக்கு?
    
பணி ஓய்வு பெற்றபோது,நினைவுப் பரிசு வழங்கும் காட்சி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல திருக்கோயில்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் இவர்தான். இவருடன் சேர்ந்து பல கோயில்களுக்குச் சென்றிருக்கிறேன். எக்கோயிலுக்குச் சென்றாலும், அக்கோயிலின் சிறப்புக்களை, பெருமைகளை, சிறு குழந்தைக்குக் கூறுவது போல் கூறி மகிழ்வார்.

     நண்பர்களே, இவர் மிகப் பெரிய பக்தர். மிகப் பெரிய ஆன்மிக வாதி. ஆயினும் இவரின் ஒரு செயல் கண்டு, பல முறை நான் வியந்திருக்கிறேன்.

    எந்தக் கோயிலுக்குச் சென்றாலும், இறைவனுக்குக் காட்டப்பெறும் தீப ஆராதனையின்போது, தூர நின்று, மனமுருகி, கைக் கூப்பி வணங்குவார். ஆனாலும் திருநீரு பெறாமலேயே திரும்பி வந்து விடுவார்.

     எனக்கெதிரில் இறைவன் இருக்கிறார். எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டுகிறேன். இறைவனும் மனமிறங்கி, எனக்கு அருளிக் கொண்டே இருக்கிறார். எங்கள் இருவருக்குமான புனிதமான உறவில், இடையில் புக, எவரையும் அனுமதியேன் என்பார்.

சித்தர் கருவூரார்
கொங்கணச் சித்தர்
இருவரையும், வாரந் தவறாமல் வழிபடும் தன்மையினர். இவ்விருவரின் அருளாளேயே, இன்றும் நலமுடன் இருப்பதாகக் கூறுவார்.

     நண்பர்களே, நாமெல்லாம், சிறு சிறு துன்பம் வந்தாலே, துவண்டு போய் விடுவோம். மீள வழி அறியாது, பல நாட்கள் தூக்கம் இழந்து புலம்புவோம். ஆனால் என் ஆசானோ, மாபெரும் துன்பம் வந்தபோதும், துன்பத்தை எதிர் நின்று சந்தித்து, துணிவுடன் போராடி வெற்றி பெற்ற வீரர்.

     ஆமாம் நண்பர்களே, ஒரு முறை அல்ல, இரு முறை, அந்த யமனையே, எதிர்த்துப் போராடி, மறு பிறவிகளைக் கண்டவர்.

     இன்றைக்கு 26 ஆண்டுகளுக்கு முன்னர், 1988 ஆம் ஆண்டின் மத்தியில், இவருக்கு ஒரு பிரச்சினை தொடங்கியது. எச்சிலைக் கூட விழுங்க இயலாத நிலை. தொண்டயில் வலி சிறிது, சிறிதாய் வலுத்தது. காரணம் புரியாமல், மருத்துவரை அணுகினார். பரிசோதனைகள் பல செய்தனர். முடிவைக் கூறினர். நோய் பற்றிய முடிவினை மட்டுமல்ல, இவரின் முடிவினையும் சேர்த்தே கூறினர்.

உங்களின் வாழ்நாள், இன்னும் சில மாதங்கள் மட்டும்தான்.

தொண்டையில் புற்றுநோய்.

     ஆங்கில மருத்துவம் தன்னை காப்பாற்றாது, கரை சேர்க்காது என்பதை உணர்ந்தார். பதட்டப் படவில்லை. தெளிவாய் யோசித்தார். இக் கொடு நோயினைத் தீர்க்கும் பிற வழிகள் என்ன என்று சிந்தித்தார். சித்த மருத்துவமே சிறந்த வழி என்று முடிவு செய்தார்.

     உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் அன்று பணியாற்றிய திரு க.தாமோதரன் அவர்களின் உறவினர், திருவையாற்றில், சித்த வைத்தியராக இருப்பதை அறிந்து, அவ்வாசிரியரையும் அழைத்துக் கொண்டு சென்று, அவ் வைத்தியரைச் சந்தித்தார்.
    
திருவையாறு சீனிவாச வைத்தியர்

பார்த்தாலே கையெடுத்து வணங்கத் தூண்டும் உருவம். அன்பு தவழும் முகம். கருணை பொங்கும் கண்கள். கனிவாய், நம்பிக்கையினை, நம் நெஞ்சில், விதையாய், விதைக்கும் சொற்கள்.

திருவையாறு சீனிவாச வைத்தியர்

     பரம்பரை வைத்தியர். சித்த வைத்திய நெறிமுறைகளைக் கரைத்துக் குடித்தவர். ஒருசில நிமிடங்கள், இவர் எதிரில் அமர்ந்து, பேசிக் கொண்டிருந்தாலே போதும், பாதி நோய், நம் உடலை விட்டு, அகன்று போய்விட்டதை உணர முடியும்.

    
     திருவையாற்று சீனிவாச வைத்தியரும் பல சோதனைகளைச் செய்து, என் ஆசானுக்கு வந்துள்ளது, புற்று நோய்தான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டார்.

     அஞ்ச வேண்டாம். கருவூரார் காப்பாற்றுவார். கொங்கணச் சித்தர் கைவிட மாட்டார். துவங்குவோம் மருத்துவத்தை எனக் கூறி, மருத்துகள் பலவற்றைத் தயார் செய்து கொடுத்தார்.

8.12.1988

      என் ஆசான், புலவர் சிவ. திருஞான சம்பந்தம் அவர்களுக்கு, மருத்துவம் தொடங்கிய நாள் இதுதான். வாழ்வின் மறக்க இயலா நாள் அல்லவா?  என் ஆசான் மறு பிறப்பை உணர்ந்த நாள் அல்லவா? இப்பொழுது கேட்டாலும், அடுத்த நொடி, இத் தேதியினை மறவாமல் கூறுவார்.

     மருத்துவம் தொடங்கியது. பத்தியமும் கைப் பிடித்து உடன் வரத் தொடங்கியது. பத்தியம் என்றால் கடும் பத்தியம். உப்பு கூடவோ கூடாது, புளியின் வாசனை கூட, ஆகவே ஆகாது, என்று பலப் பல நிபந்தனைகள். புரதச் சந்தினை அதிகரிக்க, முடிந்த மட்டும் பாதாம் பருப்பினை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

     என் ஆசான், அன்று முதல், நாவின் சுவைக்காக உண்ணுவதைத் துறந்தார். வயிற்றிற்காக மட்டுமே உண்டார். என் ஆசிரியரை எண்ணும் போதெல்லாம், அவரின், துணைவியாரை எண்ணாமல் இருக்க இயலாது. காணும் போழுதெல்லாம், குடும்ப உறுப்பினர் அனைவரையும் ஒவ்வொருவராக நலம் விசாரித்து மகிழும் நல் மனத்தினர்.

     கணவர் பத்தியம் இருக்க, தான் மட்டும், அறுசுவைகளை உண்டு மகிழ்வதா? என்று எண்ணி, அன்று முதல் தானும், பதியுடன் இணைந்து பத்தியச் சாப்பாட்டினையே, நல் அமுதமாய் எண்ணி, உண்ணத் தொடங்கினார்.

    நண்பர்களே, ஒன்றல்ல, இரண்டல்ல, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, இன்றும் அதே சாப்பாடுதான்.

திருவையாற்று சீனிவாச வைத்தியரின்
மருத்துவத் திறமை
என் ஆசானின், மன உறுதி, கலங்கா நெஞ்சம்.
புற்று நோய் உடலை விட்டே,
தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியது.
காலனை வென்றார்.

     நண்பர்களே, என் ஆசானுக்கு வந்த சோதனை, இத்துடன் முடியவில்லை. இருபத்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், 2013 இல், என் ஆசானின், மலக் குடலில், புற்று நோய் மீண்டும் ஒரு முறை எட்டிப் பார்த்தது.

இம்முறை
திருவையாற்று சீனிவாச வைத்தியர்
இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன்,
இயற்கை அவரைத்,
தனக்கு வைத்தியம் பார்க்க அழைத்துக் கொண்டது.

    விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட காலமல்லவா இது. என் ஆசான், சென்னை சென்றார். அப்போல்லோ மருத்துவர் திரு கே.இராஜாராம் அவர்களைச் சந்தித்தார். அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது நலமுடன் இருக்கிறார்.

அறுவை சிகிச்சை நடைபெற்ற நாள் 15.2.2013

இருமுறை மறுபிறவி எடுத்தவர் என் ஆசான்
புலவர் சிவ.திருஞானசம்பந்தம்.

     கும்பகோணம் செல்லும் போதெல்லாம், குடும்பத்துடன் இவர் இல்லத்திற்குச் சென்று, உரையாடி வருவது என் வழக்கம். அறுவை சிகிச்சைக்கு முன், நண்பர் பால்ராஜ் அவர்களுடன், இவரைப் பார்ப்பதற்காகவே, சென்னை சென்று வந்தேன். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்து, இவர் இல்லம் திருமபிய பிறகு, பல்வேறு அலுவல்களால், அலைச்சல்களால், இவரைச் சென்று காண இயலாமல், காலம் கரைந்து கொண்டே சென்றது.
    


சில நாட்களுக்கு முன்னர்தான், நண்பர்களுடன் இணைந்து, கும்பகோணம் சென்ற பொழுது, இன்றைக்கு சாக்கோட்டை என்றழைக்கப்படும், சாகாஜிக் கோட்டைக்குச் சென்று, என் ஆசானைச் சந்தித்தேன்.

     மகிழ்ந்து வரவேற்றார். நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்தோம்.

     நண்பர்களே, எனக்கு ஒரு சந்தேகம், அடிக்கடித் தோன்றிக் கொண்டே இருக்கிறது. வஞ்சக மனத்தினர், தீய வழியில் பொருள் சேர்ப்பவர்கள், மற்றவர்கள் மனம் புண்பட ஏளனமாய் பேசி, எள்ளி நகையாடி மகிழ்பவர்கள் எல்லாம், நலமுடன் வாழும் போது, நல்லவர்களுக்கு மட்டும் ஏன் மீண்டும், மீண்டும் சோதனை. விடைதான் தெரியவில்லை.

காலனையே இருமுறை
புறம் கண்டு ஓட விட்ட
என் ஆசான்
புலவர் சிவ.திருஞான சம்பந்தம் அவர்கள்
நூறாண்டு வாழ

வாழ்த்துவோமா நண்பர்களே.

74 கருத்துகள்:

 1. குரு வந்தனம்.

  எங்கள் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 2. காலனை இருமுறை வென்ற தங்களின் ஆசான் புலவர் சிவ.திருஞான சம்பந்தம் அவர்கள் நூறாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன் நண்பரே...

  பதிலளிநீக்கு
 3. முதலில் சிகிச்சை தொடங்கிய நாள் : 8th December. மிக அருமையான நாள். அவர்கள் நூறாண்டு வாழ வாழ்த்துவோம்.

  பதிலளிநீக்கு
 4. பாரம்பரிய வைத்தியர்களோடு நல்லாசிரியரும் அருகிவிட்டார்களே அய்யா!
  காசுக்காய் வேலை செய்து கடமையென்று போகும் நிலையில் நீங்கள் உங்கள் ஆசானையும் அவர் உங்களையும் இன்னும் நினைந்திருக்கும் அன்பின் பெருக்கு!
  சாக்கோட்டை..
  அங்கு எனக்குத்தெரிந்த தமிழ்படித்த சித்த வைத்தியர் ஒருவர் இருக்கிறார் அய்யா.
  புலவர் கண்ணன் அவர் பெயர்.
  அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே
   புலவர் கண்ணன் பற்றி என் ஆசானிடம் தெரிவித்திருக்கிறேன்

   நீக்கு
 5. கணையாழி பரிசு பெற்ற கரந்தையார் வாழ்த்தினாலே நாங்களும் வாழ்த்தியது போலத்தான் !
  த ம +1

  பதிலளிநீக்கு
 6. குருவை மறவாது மரியாதை கொடுத்து அவர்களை ஏதாவது ஒருவிதத்தில் கௌரவிப்பது வாழ்க்கையில் ஒருவருக்கு உயர்வையே தரும். வாழ்க உங்கள் பணி

  பதிலளிநீக்கு
 7. குரு நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன் அருள்வார்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்
  ஐயா.

  தங்களின் வெள்ளை உள்ளம் கண்டு மகிழ்ச்சியடைகிறேன் மிக அருமையாகசொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா.த.ம 4வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 9. காலனை வென்ற ஆசான் நூற்றாண்டுகள் நலமுடன் வாழவேண்டும் என்று வாழ்த்தி இறைவனையும் வணங்குகிறேன்.வாழ்க தமிழ்! வாழ்வாங்கு வாழ்க தமிழ் சான்றோற்கள்!!!மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 10. தஞ்சை புத்தகக் கண்காட்சி பற்றிய தகவலுக்கு நன்றி. திருச்சியில் நடந்த போது முழுமையாக பார்க்க இயலவில்லை.

  தங்கள் தமிழாசிரியர் புலவர் சிவ. திருஞான சம்பந்தம் அவர்களது மேன்மையையும் அவர் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பினையும் தெரிந்து கொண்டேன்.

  // நண்பர்களே, எனக்கு ஒரு சந்தேகம், அடிக்கடித் தோன்றிக் கொண்டே இருக்கிறது. வஞ்சக மனத்தினர், தீய வழியில் பொருள் சேர்ப்பவர்கள், மற்றவர்கள் மனம் புண்பட ஏளனமாய் பேசி, எள்ளி நகையாடி மகிழ்பவர்கள் எல்லாம், நலமுடன் வாழும் போது, நல்லவர்களுக்கு மட்டும் ஏன் மீண்டும், மீண்டும் சோதனை. விடைதான் தெரியவில்லை.//

  இந்த சந்தேகம் உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே உண்டு. விடை தெரியா கேள்விகளில் இதனையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்.

  இதே சந்தேகத்தை கவிஞர் கண்ணதாசன் அவர்களும் எழுப்பி அதற்கு சில விளக்கமும் ’ அர்த்தமுள்ள இந்து மதம் - 10 ஆவது பாகத்தில், நூலின் இறுதி அத்தியாயத்தில் தந்துள்ளார். ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் மன பக்குவத்தைப் பொறுத்தது.

  நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த நூலை ஒரு பார்வையிட உங்களின் இந்த கேள்வி காரணமானதற்கு நன்றி!
  த.ம.5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடைதெரியாத கேள்விகள்தான் வாழ்வின் சுவாரசியம் என்று எண்ணுகின்றேன் சரியதானே ஐயா
   வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும நன்றி ஐயா

   நீக்கு
 11. குருவிற்கு எங்கள் வந்தனங்கள்! அவர் இன்னும் நீண்ட நாட்கள் வாழ எங்கள் பிரார்த்தனைகள்!

  பதிலளிநீக்கு
 12. உங்கள் குருபக்தி நெகிழ வைத்தது..
  அவர் நெடுங்காலம் வாழ பிரார்த்திக்கிறேன் ...
  மது
  த ம ஆறு

  பதிலளிநீக்கு
 13. உங்கள் தமிழாசிரியரைப் பற்றி மிகவும் சிறப்பாக ஒரு பகிர்வு ஐயா...

  பதிலளிநீக்கு
 14. பெயரில்லா07 நவம்பர், 2014

  தங்கள் குருவிற்கு இறையாசி நிறையட்டும்.
  தங்குள் குரு பக்தி வாழ்க.
  அன்புடன்
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 15. குருவிற்கு வந்தனங்கள்.
  தாங்கள் ஆசானாகி விட்டபோதிலும், தன்னுடைய ஆசானை மறக்காமல் நினைவுகூர்ந்த தங்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. தங்கள் குருநாதர் பற்றிய மிக சிறப்பான பதிவு
  //வஞ்சக மனத்தினர், தீய வழியில் பொருள் சேர்ப்பவர்கள், மற்றவர்கள் மனம் புண்பட ஏளனமாய் பேசி, எள்ளி நகையாடி மகிழ்பவர்கள் எல்லாம், நலமுடன் வாழும் போது, நல்லவர்களுக்கு மட்டும் ஏன் மீண்டும், மீண்டும் சோதனை. விடைதான் தெரியவில்லை.//
  உண்மை ஐயா

  பதிலளிநீக்கு
 17. அன்பின் ஜெயக்குமார்

  அருமையான பதிவு -

  தங்கள் தமிழாசிரியர் புலவர் சிவ. திருஞான சம்பந்தம் அவர்களது மேன்மையையும் அவர் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பினையும் தெரிந்து கொண்டோம்.

  த.ம.வாக்கு : 7

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 18. அன்பின் ஜெயக்குமார்

  அருமையான பதிவு -

  தங்கள் தமிழாசிரியர் புலவர் சிவ. திருஞான சம்பந்தம் அவர்களது மேன்மையையும் அவர் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பினையும் தெரிந்து கொண்டோம்.

  த.ம.வாக்கு : 7

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 19. குருவே சரணம்...

  சோதனைகள் வந்தாலும் நல்லவைகளே நடக்கும்...

  பதிலளிநீக்கு
 20. இத்தனை காலங்கள் மாணவர்களின் நினைவில் நிற்பதிலிருந்தே ஆசிரியரின் பெருமை தெரிகிறது. ஆசிரியரை நினைவில் நிறுத்துவதும் நல்ல மாணவர்களாலேயே முடியும். ஆசிரியர் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 21. உங்கள் ஆசான் வழங்கிய வாழ்த்துரைக்கு முற்றிலும் பொருத்தமானவர்தான் நீங்கள். அது உங்கள் எழுத்துக்களில் தெரிகிறதுஒரே ஊரில் இருந்து ஒரே ஊரில் படித்து படித்த பள்ளியிலேயே பணிக்கமரும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. அதனால் உள்ள சாதகங்களை உங்கள் எழுத்தில்காண்கிறேன் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஐயா
   யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது
   நன்றி ஐயா

   நீக்கு
 22. //வஞ்சக மனத்தினர், தீய வழியில் பொருள் சேர்ப்பவர்கள், மற்றவர்கள் மனம் புண்பட ஏளனமாய் பேசி, எள்ளி நகையாடி மகிழ்பவர்கள் எல்லாம், நலமுடன் வாழும் போது, நல்லவர்களுக்கு மட்டும் ஏன் மீண்டும், மீண்டும் சோதனை. விடைதான் தெரியவில்லை.//

  விடை காண இயலாத கேள்விகளுள் இதுவும் ஒன்று..

  தங்கள் குருநாதர் அவர்களுக்கும் தங்களுக்கும் வணக்கம் ஐயா..

  பதிலளிநீக்கு
 23. ஆசிரியரை நினைவுகூர்வது என்பதானது இக்காலத்தில் அருகிவிட்ட நிலையில் தாங்கள் தங்களது ஆசிரியருக்குச் சூட்டியுள்ள புகழாரம் முற்றிலும் பொருத்தமானது. ஆசிரியரான தாங்களே ஆசிரியருக்கு மனம் திறந்து பாராட்டியுள்ளது தங்களின் பெருமனதைக் காட்டுகிறது. தங்கள் ஆசிரியர் உடல் நலத்துடன் வாழ எல்லாம் வல்ல இறையருளைப் பரவுகின்றேன். தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்கள் அவருக்கு இன்னும் துணை நிற்கும்.

  பதிலளிநீக்கு
 24. தங்கள் குருபக்திக்கு என் பாராட்டுகள்
  தங்கள் குரு நீடூழி வாழ என் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 25. புத்தக திருவிழா... வாழ்த்துக்கள்! தங்கள் குரு வந்தனம் மிக நன்று.

  பதிலளிநீக்கு
 26. நல்ல ஆசிரியரால் நல்ல மாணவரை உருவாக்கமுடியும்
  நல்ல மாணவரால் நல்ல ஆசிரியராக உயரமுடியும்

  என்ற பொன்மொழிக்கு தங்கள் ஆசிரியரும் தாங்களும் தக்க முன்மாதிரிகள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 27. குருவுக்கு வந்தனம் செய்து அவரைப் பற்றியும் அவருக்கு வைத்தியம் செய்த மருத்துவரைப் பற்றியும் விரிவாக விளக்கி சிறபித்த பதிவு அருமை! நன்றி!

  பதிலளிநீக்கு
 28. anbulla jayakumar

  vanakkam. avar enakkum guruthaan, tharisiten. avasiyam santhikka vendum.

  பதிலளிநீக்கு
 29. உன்னால் தானன்றோ நான் இந்நிலையில் இருக்கின்றேன் என்று
  ஆசான்களை முன்னிறுத்தி சொல்லப்பட்ட அற்புதமான பதிவு ஐயா...
  அத்தகைய சீர்மிகு ஆசான் விரைவில் குணமடைய என் பிரார்த்தனைகளும்.
  ===
  மதுரை பதிவர் திருவிழாவில் உங்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களை மதுரையில் சந்தித்த நினைவுகள் நெஞ்சில் நிலைத்திருக்கின்றன நண்பரே
   நன்றி

   நீக்கு
 30. ஆசான் ஒரு ஆலயம் என்பதைப்போல அருமையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 31. காலனைக் காலால் உதைத்த உங்கள் ஆசான் போற்றுதலுக்கு உரியவர். தாமதமான வரவுக்கு மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாமதமானால் என்ன சகோதரியாரே
   தங்களின் நல் வருகைக்கு நன்றி

   நீக்கு
 32. குருவிற்கு ம‌குடம் சூட்டி தமிழாபரணங்கள் அணிவித்து அழகாய் வணக்கம் செலுத்தி விட்டீர்கள்! என் மனம் நிறைந்த் வாழ்த்துக்கள்!!

  'இயற்கை தனக்கு வைத்தியம் பார்க்க அவரை அழைத்துக்கொண்டது!' மிக அழகிய வரி!

  பதிலளிநீக்கு
 33. காலனை வென்ற குருவிற்கு எனது வந்தனம்.....

  அருமையான பகிர்வு.....

  த.ம. +1

  பதிலளிநீக்கு
 34. தங்கள் ஆசானின் மேல் தாங்கள் வைத்திருக்கும் மதிப்பையும் அன்பையும் பார்க்கும்போது இப்படியொரு மாணாக்கனைப் பெற்ற அவர் பாக்கியவானா? அப்படியொரு ஆசானைப் பெற்ற தாங்கள் பாக்கியவானா? என்று பட்டிமன்றம் நடத்துகிறது மனம். ஒரு ஆசிரியராய் வாழும் தாங்கள், தங்களுடைய ஆசிரியரைப் போற்றும் உன்னதமான செயல் மூலம் தங்கள் மாணாக்கர்களுக்கு நல்லதொரு தடத்தை வழிகாட்டிச் செல்கிறீர்கள். மனம் நிறைந்த பாராட்டுகள் ஐயா. தங்கள் ஆசானுக்கு எங்கள் அனைவரின் அன்பான வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

  பதிலளிநீக்கு
 35. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  நம் இருவருக்கும் மட்டுமல்ல பல ஆயிரக்கணக்கான மாணவச் செல்வங்களின் மனதில் மறக்கப்படாமல் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நம் ஆசான் புலவர்.திருமிகு.சிவ.திருஞானசம்பந்தம் அவர்களிடம் முதலில் என் மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்ற 31.10.2014 அன்று நம் பள்ளிக்கு வந்த இருபது வருடங்களுக்கு முன் படித்த மாணவர் திரு.சாமிநாதன் அவர்கள் என்னிடம் ’நம்முடைய எஸ்.டி.சார் எப்படி இருக்கிறார்?’ என்று கேட்டார். உடனே அந்த வினாவிற்கு விடையளிக்கும் நோக்கத்தில் நான் தொலைபேசியில் அய்யாவினைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து விட்டு அந்த மாணவரிடம் தொலைபேசியைக் கொடுத்து அய்யாவுடன் பேச வைத்தேன். இருவருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பார்த்து எனக்கு மிகவும் மகிழ்வாக இருந்ததை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை. சிறந்த ஆசானுக்கு தாங்கள் ஒரு சிறந்த மாணவராக இந்தப் பதிவின் மூலம் நன்றி செலுத்தியது மிக சிறந்த செயலாகும். தங்களுடன் பல ஆயிரக்கணக்கான மாணவர்களும் இணைந்துக் கொள்கிறோம். நன்றி.

  பதிலளிநீக்கு
 36. உங்கள் ஆசிரியர் நீண்டகாலம் வாழ ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்

  பதிலளிநீக்கு
 37. பெயரில்லா13 நவம்பர், 2014

  மகிழ்ச்சி ஐயா. ஆசிரியர் மீது தாங்கள் வைத்திருக்கும் பக்தி, பதிவில் தெரிகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளின் அருமை பெருமையை நாம் இன்னும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ‘புற்றுநோய்க்கு மருந்தே இல்லை’ என்னும் ஆங்கில மருத்துவத்துடன் ஒப்பிடும்போது, ‘நிச்சயம் குணப்படுத்தி விடலாம்’ என்னும் நமது சித்த வைத்தியம் ஆயிரம் மடங்கு உயர்வானது ஐயா. மறைந்த, மருத்துவர் தெய்வநாயகம், ஒருமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியில், சித்த வைத்தியத்தால் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்று உறுதிபடக்கூறியதை கண்டிருக்கிறேன் ஐயா. காலனை வென்ற தங்கள் ஆசிரியர், மேலும் பலப்பல ஆண்டுகள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் ஐயா.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு