28 மே 2015

கசப்பு


ஆண்டு 1887. செப்டம்பர் 12 ஆம் நாள், இரவு மணி 8.00. அந்த இளைஞனின் வயது 19. பத்தொன்பது வயதிலேயே, வாழ்ந்தது போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் அந்த இளைஞன்.

வாழ்வு முழுவதும் துன்பம், துன்பம், துன்பம். ஒரு நாள் கூட மகிழ்வினைச் சந்தித்திராத, வாழ்வாக அல்லவா, என் வாழ்வு அமைந்து விட்டது.

     பத்து வயதிலேயே தாய், தந்தையின் மறைவு. உறவென்று மீதமிருந்தவர் பாட்டி மட்டுமே. அரை வயிற்றுச் சாப்பாட்டிற்குக் கூட வழியில்லை.


     பன்னிரெண்டாவது வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி, வேலை தேடித் தேடி, அலைந்து, அலைந்து, கலைத்ததுதான் மிச்சம். வேலையும் வயிற்றிற்குச் சிறிது உணவும் எட்டாக் கனியாகவே இருந்தது.

     தொழிலாளர்கள், உழவர்கள், சமூக விரோதிகள், குடிகாரர்கள் என அனைத்துத் தரப்பினரோடும் பழிகியாகிவிட்டது.

     மூட்டை தூக்கி, வேட்டையாடி, செறுப்பு தைத்து, பழங்களை கூவிக் கூவி விற்று, மண் பாண்டங்கள் கூட செய்து பார்த்தாகிவிட்டது. ஆனாலும் வறுமை விலகிச் செல்வதாகத் தெரியவில்லை. வயிறும் நிரம்பியதே இல்லை.

     ஏனிந்த வாழ்க்கை. வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறோம். வாழ்ந்தது போதும். சாவிலாவது வறுமை அடங்காதா? வயிற்றுப் பசி தீராதா?

     ஒரு முடிவுக்கு வந்தவனாய், துப்பாக்கியை எடுத்து, தன்னைத் தானே சுட்டுக் கொண்டான். உடலெங்கும் ஒரே வலி, பசியையும் மிஞ்சும் வலி. சில நொடிதான். பின் உலகே இருளத் தொடங்கியது.

     சில நாட்கள் கடந்த நிலையில், அந்த இளைஞனுக்கு, கண் கூசியது. வெளிச்சத்தை உணர்ந்தான். வலி மெல்ல, மெல்ல மீண்டும் தலை தூக்கிப் பார்த்தது.

     படுத்திருந்தவன் மெதுவாய், தன் தலையைத் தூக்கிப் பார்த்தான். நான் சாகவில்லை. குண்டு துளைத்தும், என் உயிர் போகவில்லையே. என்ன இடம் இது? பிறகுதான் புரிந்தது. மருத்துவ மனையல்லவா.

      யாரோ என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். என்னைக் காப்பாற்றுவதாய் நினைத்து, வறுமை என்னும் அரக்கனிடம், மீண்டும் பத்திரமாய் ஒப்படைத்திருக்கிறார்கள்.

     குண்டு துளைத்த காயம் ஆறும் வரை, மருத்துவ மனையில் படுத்தே கிடந்த, அந்த இளைஞனிடம், மெதுவாய், மிக மெதுவாய் ஓர் எண்ணம். வாழ்ந்துதான் பார்ப்போமே. வறுமையை விட்டு விலகி, வேகமாய் ஓடித்தான் பார்ப்போமே.

நான் மட்டுமா வறுமையில் உழல்கிறேன். என் நாடே அல்லவா, வறுமையில், வறுமையில் மட்டுமா, பெரும் அடிமைத் தனத்திலும் அல்லவா சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

ஏதாவது செய்தாக வேண்டுமே.

     உள்ளத்தில் ஓர் உறுதியோடு, மருத்துவ மனையில் இருந்து வெளியேறினான். ஓர் வேலையும் கிடைத்தது. வேலை என்ன தெரியுமா?

     மயானத்தில், அதாவது சுடுகாட்டில், பிணங்களின் தலைமாட்டில், அமர்ந்து, விடிய விடிய பிரார்த்தனை செய்யும் வேலை.

     ஓர் பிணத்தின் தலைமாட்டில், விடிய விடிய அமர்ந்திருந்தால், விடிந்ததும் 25 ரூபிள் காசு கிடைக்கும்.

      ஒன்றல்ல, இரண்டல்ல, ஆறு மாதங்கள் இதே வேலை. இதனால் வறுமை அகன்றதோ இல்லையோ, அந்த இளைஞனின் உள்ளத்தில் இருந்த பயம் முழுவதுமாய் அகன்றது. மனதில் ஓர் உறுதி குடியேறியது.

     இறந்தவர்களுக்காகப் பிரார்த்தித்தது போதும், இனி உயிருடன் இருப்பவர்களுக்காக, ஏதேனும் செய்வோம் என்று எண்ணி, பிரார்த்தனை புத்தகத்தை கீழே வைத்து விட்டு, எழுதுகோலை எடுத்து எழுதத் தொடங்கினான்.

     வாழ்வில் இதுவரை சந்தித்த வேதனைகள், சோதனைகள் எல்லாம், எழுதுகோலின் முனை வழியே, வார்த்தைகளாய் வெளிப்பட்டு, வெள்ளைத் தாட்களில் வழிந்தோடியது.

     சமரா கெஜட் என்னும் நாளிதழில் பணியும் கிடைத்தது. ஊள்ளுர் நிர்வாகத்தின் ஊழல்கள், இவ்விளைஞனின் பேனா வழியாக, வெளிப்பட, வெளிப்பட, அரசோ கடுப்படையத் தெடங்கியது, கொதிக்கத் தொடங்கியது.

      இளைஞனின் எழுத்தாற்றலை, இலக்கிய அறிவை புகழ்ந்து பாராட்டியது மேல்தட்டு வர்க்கம். நமது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்த, இதோ ஒருவன் வந்துவிட்டான் என, தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, ஆனந்தக் கூத்தாடியது, கீழ்த்தட்டு வர்க்கம்.

1902 இல் இவர் எழுதிய
அதல பாதாளம்
(The Lower  Depths)
என்னும் நாடகம், ரஷ்ய எல்லைகளைக் கடந்தும், இவரது புகழினைப் பரப்பியது.

     1905 இல் ஜார் மன்னருக்கு எதிராக, அவர்தம் மாளிகையை நோக்கி ஓர் ஊர்வலம். பாதுகாப்புப் படையினர் கண் மூடித்தனமாகச் சுட்டதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இக்கொடுமைமிகு செயல் கண்டு, கொதித்தெழுந்த,
இந்த இளைஞனின் உணர்வுகள், ஓர் நாடகமாக வெளிப்பட்டது.
சூரியப் புத்திரர்கள்
(Children of the Sun)

    நாடகம் மேடையேறும் ஒவ்வொரு முறையும், இவ்விளைஞன் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப் பட்டார். நாடகம் மேடையேறிக் கொண்டே இருந்தது. இவர் கைது செய்யப்பட்டுக் கொண்டே இருந்தார். சிறைக்குச் சென்று கொண்டே இருந்தார்.

ஒரு எழுத்தாளன், உழைக்கும் மக்களிடம் இருந்து பிரிந்து, தன்னைத் தனிமைப் படுத்தி நிற்பதன் மூலமும், மக்களுடைய போராட்டங்களில் இணையாமல், அந்தப் போராட்டங்களைப் பார்த்தும் பாராமல் இருப்பதன் மூலமும், அவன் மக்களிடம் இருந்து அந்நியமாகி விடுகிறான். இதனால் அவன் தன்னுடைய ஆளுமையை இழக்கிறான். அவனுடைய எழுத்துக்கள் வலிமையற்றுப் போய்விடுகின்றன
என்று கூறி, மக்களுக்காக, மக்களோடு இணைந்து நின்று போராடிய, எழுத்து என்னும் பேராயுதம் ஏந்திப் போராடிய, இந்த எழுத்தாளர் யார் தெரியுமா?

மனித வாழ்வையும், மனித நேயத்தையும்
முதன் முதலாக எனக்குப் போதித்தவர்
எனது பாட்டிதான்
என்று கூறி,
தனது பாட்டியின் சாயலில்,
ஓர் தாயை உருவாக்கியவர்.

ரஷ்யாவின் அக்டோபர் புரட்சியில் முக்கிய பங்கு வகித்த பெருமைக்கு உரிய நாவலைப் படைத்தவர். நாவல் என்பது கூட தவறு, ஓர் காவியம் படைத்தவர். அந்த அமர காவிம்தான்
தாய்

மழைக்குக் கூட பள்ளியின் பக்கம் ஒதுங்காதவர்,
வாழ்வின் அனுபவங்களை,
சோதனைகளை, வேதனைகளை
எழுத்தாக்கிக் காவியம் படைத்தவர்.

அலெக்ஸி மாக்ஸிமூவிச் பெஷ்கோவ்

இதுதான் இவரது இயற்பெயர்.


இவர், தனக்குத் தானே வைத்துக் கொண்ட பெயர்
கார்க்கி
மாக்ஸிம் கார்க்கி.

ரஷ்ய மொழியில் கார்க்கி என்றால் கசப்பு என்று பொருள். வாழ்வில் வேதனைகளை மட்டுமே சந்தித்தவர் அல்லவா.

     1936 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 18 ஆம் நாள், எழுதுகோலை கீழே வைத்துவிட்டு, இயற்கையோடு இரண்டறக் கலந்தார்.

     

இவரது மறைவு பற்றி, இன்றளவும், அனைவராலும், ஒப்புக் கொள்ளப் பட்ட உண்மை ஒன்றுண்டு.


மாக்ஸிம் கார்க்கியின்
மரணம்
இயற்கையானது அல்ல.

எழுத்தின் வலிமையை
உலகிற்கு உணர்த்திய
மாக்ஸிம் கார்க்கி அவர்களின்
நினைவினைப் போற்றுவோம்.