பனிப் பிளவு
சற்றுமுன் கேட்ட சத்தம் என்ன என்றும்
முதலில் புரியவில்லை.
கர்னல் அவர்களும், அவருடன் பயணித்த
இருவரும், வண்டியில் இருந்து கீழே இறங்கினர்.
பனிக் காற்று அவர்களின் காட்சியை
மறைத்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து, பனிக் காற்று மெல்ல மெல்ல விலகிய
பொழுது, தொலைவில், இரண்டாவது வண்டியின் ஒரு சிறு பகுதி மட்டும், பனித் தரைக்கு
மேலே தெரிந்தது. மீதிப் பகுதியைக் காணவில்லை.
பதறியபடி மூவரும் ஓடினார்கள். வண்டியின்
அருகில் செல்வதற்குள், காரணம் தெரிந்து விட்டது. ஓட்டத்தை உடனடியாக நிறுத்தினார்கள்.
ஓடக் கூடாது, ஓடினால் ஆபத்து என்பதும்
புரிந்து விட்டது. இனி கவனமாகத்தான் காலடியினை எடுத்து வைக்க வேண்டும்.
பனிப் பிளவு.
கர்னல் அவர்களைப் பின் தொட்ர்ந்து சென்ற வண்டி அல்ல இது |
பனிப் பிளவுகளின் அகலமும், நீளமும், ஆழமும்,
சில அடிகளில் இருந்து சில கிலோ மீட்டர்களை வரை இருக்க வாய்ப்பு உண்டு.
பனிக் காற்றின் போது, இப் பனிப் பிளவுகள்
மூடப்பட்டு விடும். மூடப்பட்ட நிலையில் இருக்கும் பனிப் பிளவுகள் அதிக ஆபத்தானவை.
காரணம் இவை கண்களுக்குத் தெரியாமல்
மறைந்திருக்கும்.
தவறி இவற்றின் மீது
கால் வைத்தால், முழுதாய் உள்ளே போய்விட வேண்டியதுதான்.
அப்புறமென்ன, பனிச் சமாதிதான்.
நல்ல வேளையாக, வண்டி விழுந்த இடத்தில்,
பனிப் பிளவு அதிக ஆழமில்லை.
முதலில் வண்டியில் இருந்த ஆட்களை மெதுவாக
மீட்டார்கள்.
அடுத்து கடற்கரையில் காத்திருந்த
கப்பலுக்குத் தகவல் தெரிவித்தார்கள். சிறிது நேரத்தில், தொழில் நுட்ப
உபகரணங்களையும், வல்லுநர்களையும் சுமந்தபடி, ஒரு ஹெலிகாப்டர் வந்தது. வண்டி
மீட்கப் பட்டது.
,---
இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், கர்னல்
கணேசன் குழுவினரைத் தனிமையில் விட்டு விட்டு, நான்காவது குளிர்காலக் குழுவினர்,
தாயகம் நோக்கிப் புறப் பட்டனர்.
1988 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல்,
கர்னல் குழுவினரின் தனிமை வாழ்க்கை, தொடங்கியது.
சூரியனும் இருளைப் பரிசாய் வழங்க, மெல்ல
மெல்ல மறையத் தொடங்கினான்.
ஒவ்வொரு நாளாய் நகர்ந்து, வாரங்கள் கடந்தன.
வாரங்கள் மாதங்களாகின.
இந்தியாவின் சுதந்திர நாளும் வந்தது.
நண்பர்களே, ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாய் 50
நாடுகள், தங்களது ஆய்வுக் கூடங்களை அண்டார்டிகாவில் நிறுவியுள்ளன.
ரஷ்யா, கிழக்கு ஜெர்மனி, தென் அமெரிக்காவின் சேன், பிரிட்டன், ஜப்பான்
போன்ற நாடுகள், இந்தியாவின் ஆய்வுத் தளத்துடன் ரேடியோ தொடர்பில் இருக்கும்
நாடுகளாகும்.
கர்னர் கணேசன் அவர்கள் உறை பனியாய்
இருந்தால் என்ன?, கடும் குளிர்தான் வாட்டினால் என்ன? சுதந்திரத் திருநாளை சிறப்பாக
கொண்டாடுவது என்று முடிவு செய்தார்.
ஆய்வுத் தளத்தின் வெளியே, உறை பனியில்
மேடை அமைத்தார். கலியான பீப்பாய்களை அழுகுற அடுக்கி, இந்தியாவின், பல ஆய்வு
அமைப்புகளின் கொடிகளையும் பாங்குற பறக்க விட்டார்.
சுதந்திர தின விழா என்றால் சிறப்பு
விருந்தினர்கள் இருந்தாக வேண்டுமல்லவா?
ரஷ்யா மற்றும் கிழக்கு ஜெர்மனியின்
ஆய்வுக் குழுவின் தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களாய் கலந்து கொள்ள, தேசியக்
கொடியை ஏற்றினார் கர்னல் கணேசன்.
சுதந்திர தின விழாவிற்குப் பின், ஒரு மாதம்
நன்றாகத்தான் நகர்ந்தது,
செப்டம்பர் 19 ஆம் தேதியும், வழக்கம்
போல்தான் நகர்ந்து கொண்டிருந்தது. பிற்பகல் 3.00 மணி வரை.
யாரோ ஒருவர் குறைவது போல் தோன்றியது.
யாரிடமும் சொல்லாமல், ஆய்வுத் தளத்தின் உள்ளே, ஒரு முறைக்கு இரு முறையாய்,
சுற்றிச் சுற்றி வந்தார்.
வெளியிலோ, கடந்த ஐந்து நாட்களாகத்
தொடர்ந்து, ஓய்வின்றி வீசிக் கொண்டிருக்கும் பனிப் புயல். ஆய்வுத் தளத்தின்
கதவினைத் திறந்தே பல நாட்களாகி விட்டன.
உள்ளே இருப்பவர்களை, ஒவ்வொருவராக
எண்ணினார்.
தொடரும்.