20 அக்டோபர் 2015

ஜன்னல் ஓரத்து நிலா




தாய் போற்ற தான் உயர
தரணியெங்கும் புகழ் பரவ
கல்வியே தாரக மந்திரம் என்று
கல்லூரி வாசலில் நுழைந்தேன் ...

துப்பாக்கி சப்தம் கேட்டதடா
செல் வந்து விழுந்ததடா
பாதி வழியினிலே
குத்துயிராய் குலையுயிராய்...

அங்க அவயங்கள் சிதற
வெள்ளை நிற சிறகினிலே
இரத்தக்கறை படிந்ததடா...

     நண்பர்களே, படிக்கப் படிக்க மனம் பதறுகிறது அல்லவா? நமது தொப்புள் கொடி உறவுகளான, ஈழத்து உறவுகளின் நிலைமை பற்றி, செய்தித் தாட்களிலே படித்திருப்போம், உள்ளம் வேதனையில் வாட துவண்டிருப்போம்.


     ஆனால் அதன் வலியும், உண்மைத் துயரும், அங்கு வாழ்ந்து பார்த்தால் அல்லவா, அந்த வாழ்வை அனுபவித்துப் பார்த்தால் அல்லவா தெரியும், புரியும்.

      இலங்கை மண்ணில் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, புலம் பெயர்ந்து, மலேசிய மண்ணில் வாழ்வு தொடர்கிறது. உடலோ மலேசிய மண்ணில், மனமோ இலங்கை மண்ணில், தாய் மண்ணில்.




கவிஞர் தவ.ரூபன் அவர்களின்
ஜன்னல்  ஓரத்து  நிலா


தொலைந்து போனவர்களைக் காண்பதா......?
தொலைத்து விட்டவர்களைத் தேடுவதா....?
விடை தெரியாமல்
கடல் அலை போல்
மனம் ரணமாக சுழல்கிறது.

     படிக்கப் படிக்க, நமது மனமும் காயப் பட்டுத்தான் போகிறது. ரூபனின் எழுத்தின் தன்மை அப்படிப் பட்டது.

கோயிலுக்குப் போனால் கோபுரங்கள்
சாய்ந்து விழும் – வீதிக்குப் போனால்
நடந்த தடம் கூட இல்லை
எங்கள் விதியினை யாரிடமும் சொல்லி
யாரும் கரிசனை காட்டியதில்லை.

கல்லாய் இருக்கும் தெய்வம் கூட
கண்ணை மூடிக்கொண்டு வாழ்கிறார்
தெய்வமே இப்படி என்றால்
எங்கள் கதிதான் என்ன ...?

     நியாயமான கேள்விதானே. தெய்வம் கூட கண்ணைத்தானே மூடிக் கொண்டு விட்டது. தெய்வம் கண் திறந்து பார்த்திருக்க வேண்டாமா? கயவர்களை நெற்றிக் கண் திறந்து பொசுக்கி இருக்க வேண்டாமா?

இரவென்றும் பகலென்றும் பாராமல் – நீ
பட்ட துன்பத்தை நான் அறிவேன் தாயே
நானறிவேன் – என்னை
இளமை வரை வளர்த்து விட்டாய் – ஆனால்
உன்னை முதுமை வரை பார்க்க
நீ இருக்கவில்லையே தாயே

     தாயை இழந்த மகனின் ஏக்கம், ஒவ்வொரு சொல்லிலும், அதன் ஒவ்வொரு எழுத்திலும் நம் நெஞ்சைப் பிழிகிறது.

ஈரக்காற்றை இதமாக சுவாசித்த மலையக தேசம்
இன்று உதிரக் காற்றை சுவாசிக்கிறது ....

லயன அறைகளில் லயித்த வாழ்க்கை
இன்று மண்ணில் சங்கமித்தது



எம் உறவுகளின் உயிர்
பச்சிளம் பாலகன்
வயது முதிர்ந்த தாத்தாக்கள்

பழங்கால வரலாற்றை
சொல்லிப் புகட்டிய பாட்டிமார்கள்


ஆராரோ ஆரிராரோ
தாலாட்டுப் பாடிய தாய்மார்கள்

வாழ்வில் திருமணம் என்னும் வசந்தத்தை
தழுவ இருந்த இளைஞர்கள் யுவதிகள்


மெல்ல மெல்ல வழி திறந்து
ஆதவன் சிகப்பாகி வருகையில்

புதைகுழியில் விதைத்தாள் நிலமகள்
மலையக தேசம் எங்கும் சோக கீதங்கள்


காலமெனும் நீரோடையில்
காவியம் தழுவிய உறவுகளே
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்

     வேதனை வரிகளில் நெஞ்சம் கரைந்துதான் போகிறது. என்று விடிவு கிட்டும், என்று வெளிச்சம் தெரியும் என்று மனது ஏங்கத்தான் செய்கிறது.

கவிஞர் தவ.ரூபனின்
ஜன்னல் ஓரத்து நிலா

    படித்துப் பாருங்கள். படிக்கப் படிக்க, நிலா மெல்ல மெல்ல நெருங்கி, ஜன்னல் கம்பிகளின் இடையே நுழைந்து, உங்கள் அறைக்குள், மெல்ல வரும். பிறகு மெல்ல மெல்ல, உங்கள் மனக் கதவைத் திறந்து, உங்கள் உள்ளத்தில் நிரந்தரமாய் தங்கும்.

கவிஞர் தவ.ரூபன் அவர்களுக்கு
நமது
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

தொடர்ந்து கவி புனையுங்கள் நண்பரே, தங்களின் எண்ணங்களை எழுத்தாக்கி, வெள்ளைத் தாளில் இறக்கி வையுங்கள். சிகரம் இதோ, இதோ தொட்டுவிடும் தூரத்தில் தஙகளுக்காகக் காத்திருக்கிறது.



சன்னல் நிலவைக் கன்னல் தமிழில்
காட்டும் ரூபனார், பாட்டுப் புலவோர்
போற்றிப் புகழ்வோர், ஆற்றின் வளத்தால்
செழிக்கும் ஊராய்க் கொழித்த புகழில்
செம்மைப் புலவன் கம்பன் போன்றே
வாழ்க வளர்க சூழ்க அருளே.
                      கவிஞர் கி.பாரதிதாசன்,
                    தலைவர், கம்பன் கழகம், பிரான்சு



வெளியீடு
இனிய நந்தவனம் பதிப்பகம்,
17, பாய்க்கார தெரு,
உறையூர், திருச்சி- 620 003
அலைபேசி 94432 84823
மின்னஞ்சல் nandavanam10@gmail.com

விலை ரூ.80

----------------------
நண்பர்களே,
இன்றைய 20.10.2015 
தின மணி இதழில்
இளைஞர் மணியில்
எனது வலைப் பூ