26 ஜூலை 2016

நூலும் விருதும்




வாழி தமிழ்த்தாய் வளர்க தமிழ்க் கலைகள்
வாழி கரந்தைத் தமிழ்ச் சங்கம்- வாழி புகழ்
பாரோங்கு வண்தமிழ வேள் உமாம கேசுவரன்
சீரோங்கு தொண்டாற் செழித்து

தண்டமிழ் காத்த தொண்டர், செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களின் திருப் பெயர் தாங்கி நிற்கும்,
உமாமகேசுவர மேனிலைப் பள்ளியும்
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியும்
தோற்றம் பெற்று ஆண்டுகள் 75 நிறைவடைந்திருக்கின்றன.


சங்கம் நிறுவிய துங்கனெ னத்தமிழ்ச் சங்கமதை
தங்கக் கரந்தையில் தான்முத லாகச் சமைத்தளித்தோன்
எங்கும் சிறந்தோன் இராதா கிருட்டினப் பாவலனை
பொங்கும் புகழ்நிறை பொற்குணத் தானையே போற்றுவமே

     சங்கம் நிறுவிய துங்கன் த.வே.இராதாகிருட்டினன் பெயர் தாங்கி நிற்கும், இராதாகிருட்டினத் தொடக்கப் பள்ளி தொடங்கப் பெற்று ஆண்டுகள் நூறு நிறைவடைந்திருக்கின்றன.

    நினைத்துப் பாருங்கள் நண்பர்களே,

    ஒரே வளாகத்தில், நூறாண்டுகளைக் கடந்த கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தில், ஒரு கல்வி நிலையம் நூறாண்டுகளையும், மற்றும் இரு கல்வி நிலையங்கள் 75 ஆண்டுகளையும் எட்டிப் பிடித்திருக்கின்றன.

      இதுமட்டுமல்ல நண்பர்களே,

      கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவரான, தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்கள், நீதிக் கட்சியின் அசைக்க முடியாத தூண்களுள் ஒருவராய் விளங்கியவர்.

     ஆங்கிலேய ஆட்சியின்போது, 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு, மகத்தான வெற்றி பெற்று, ஒன்றல்ல இரண்டல்ல, தொடர்ந்து பன்னிரெண்டாண்டுகள் தஞ்சை வட்டக் கழகத் தலைவராய் செம்மாந்தப் பணியாற்றியவர் உமாமகேசுவரனார்.

      தஞ்சையில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கையை 40 இல் இருந்து 170 ஆக உயர்த்தியவர். தஞ்சை மாவட்டத்தில் இருந்த சத்திரங்களை எல்லாம், மாணவர் உண்டு உறையும் விடுதிகளாய் உரு மாற்றம் செய்தவர்.

     திருவையாற்று வடமொழிக் கல்லூரியில் வடமொழிக்கு நிகராய் தமிழுக்கும் இடம் பெற்றுத் தந்து, அக் கல்லூரியின் பெயரை அரசர் கல்லூரி என மாற்றியவர்.

     உமாமகேசுவரனார் தன் உயிரினும் மேலாய் போற்றிய, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் நீதிக் கட்சியின் நூற்றாண்டும் இவ்வாண்டே ஆகும்.

      எனவே 75 ஆம் ஆண்டு விழாக்களையும், நூற்றாண்டு விழாக்களையும் கொண்டாட வேண்டுமல்லவா, பார் போற்றும் வகையில் சீரோடும் சிறப்போடும் மகிழ்வோடும் கொண்டாட வேண்டுமல்லவா.

     கடந்த 2.7.2016 மற்றும் 24.7.2016 வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பவள விழாக்களும் நூற்றாண்டு விழாக்களும் சீரோடும் சிறப்போடும் கொண்டாடப் பெற்றன.

     உமாமகேசுவர மேனிலைப் பள்ளி மற்றும் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின் பவள விழாக்கள், 22.7.2016 வெள்ளிக் கிழமை காலை, சங்கத் தமிழ்ப் பெருமன்றத்தில் அரங்கேற்றம் கண்டன.


இவ்விழாவின்போது, நானும், நண்பரும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களும் இணைந்து எழுதிய
இராமநாதம்
என்னும் நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

      காரைக்குடி, அழகப்பா பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் வி.பாலச்சந்திரன் அவர்கள் நூலினை வெளியிட, இராதாகிருட்டினத் தொடக்கப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர், தேசிய நல்லாசிரியர் புலவர் சிவ.பாலசுப்பிரமணியன் அவர்கள், நூலின் முதற் படியினைப் பெற்றுக் கொண்டார்.

     இராதாகிருட்டினத் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா 24.7.2016 ஞாயிற்றுக் கிழமை காலை நடைபெற்றது.

     விழாவின் முதல் நிகழ்வாக, சங்கம் நிறுவிய துங்கன் த.வே.இராதாகிருட்டினனின் திருவுருவச் சிலையின் திறப்பு விழா நடைபெற்றது.




பாரதியி ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் திரு இல.கணேசன் அவர்கள், இராதாகிருட்டினனின் திருவுருவச் சிலையினைத் திறந்து வைத்தார்.

     
சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு இர.சிங்காரவேலன்

அடுத்ததாக, கரந்தைக் கலைக் கல்லூரி இணைப் பேராசிரியர் முனைவர் கோ.சண்முகம் அவர்களும் பேராசிரியர் எஸ்.அனந்தராவ் அவர்களும் இணைந்து எழுதிய Kingpin of Karanthai Tamil Sangam என்னும் நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

     

நூலினை திரு இல.கணேசன் அவர்கள் வெளியிட, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகப் பேரவை உறுப்பினர் திரு சுந்தர.செந்தமிழ்ச் செல்வன் அவர்கள் முதற்படியினைப் பெற்றுக் கொண்டார்.

       அடுத்த நிகழ்வாக விருது வழங்கும் விழா.


சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்
திரு இர.சிங்காரவேலன் அவர்களுக்கும்,


சென்னை, வருமானவரித் துறை மூத்த ஆலோசகர்
திரு கே.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும்

சட்டமேதை அம்பேத்கர் விருதினையும்,


கரந்தை நிறைவேற்றுக் கழக உறுப்பினர்
திரு கே.இராசமன்னார் அவர்களுக்கும்,


தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி இணை பேராசிரியர்
முனைவர் கோ.சண்முகம் அவர்களுக்கும்,


உமாமகேசுவர மேனிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்
திரு மு.பத்மநாபன் அவர்களுக்கும்


எனக்கும், ஆமாம் நண்பர்களே, எனக்கும்

இராதாகிருட்டின விருது வழங்கப் பெற்றது.

         தொடர்ந்து தலைமையுரையாற்றிய திரு இல.கணேசன் அவர்கள், தஞ்சையைச் சேர்ந்த நான், தஞ்சைப் பிரகதீசுவரத்தை நன்கறிவேன், தஞ்சை சரசுவதி மகாலை நன்கறிவேன், ஆனால் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைப் பற்றி உமாமகேசுவரம் என்னும் நூலின் வழியாக, இரண்டொரு நாட்களுக்கு முன்னர்தான் நன்கறிந்தேன் என்று கூறி மகிழ்ந்தார்.

        நானும், நண்பர் திரு வெ.சரவணன் அவர்களும் இணைந்து எழுதி, சில மாதங்களுக்கு முன்,வெளியிட்ட
உமாமகேசுவரம்
நூலினைப் புகழ்ந்ததும், அந்நூலில் இருந்து பல மேற்கோள்களைச் சுட்டிக் காட்டிப் பேசியதும் எங்களுக்குப் பெரு மகிழ்வினைத் தந்தது.

     அன்று மாலையே, நீதிக் கட்சியின் நூற்றாண்டு விழா, திராவிடர் கழகத் தலைவர் மானமிகு டாக்டர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

    

திராவிடர் கழகத் தலைவர் அவர்கள், மொழிப் போர் வீரர் திரு எல்.கணேசன் அவர்களுக்கு சுயமரியாதைச் செம்மல் என்னும் விருதினை வழங்கித் தலைமையுரையாற்றினார்.

     திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் தன் உரையில், மகாத்மா காந்திக்கே சுயமரியாதையினைப் பெற்றுத் தந்தது  நீதிக் கட்சிதான் என்று குறிப்பிட்டார்
     



கரந்தை ஜெயக்குமார் அவர்களும் கரந்தை சரவணன் அவர்களும் இணைந்து உமாமகேசுவரம் என்னும் நூலினை வெளியிட்டுள்ளார்கள், இந்நூல் அனைத்து நூலகங்களிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல், அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் என்றார்.
      மேலும், 16.6.1927 அன்று மகாத்மா காந்தி அவர்கள் தஞ்சைக்கு வந்தபொழுது, நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வு, நீதிக் கட்சியினைச் சார்ந்த சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களும், தமிழவேள் உமாமகேசுவரனாரும் காந்தியைச் சந்தித்த நிகழ்ச்சியாகும்.

      இச்சந்திப்பின்போது காந்தியார் அவர்கள், தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களை நோக்கி, சில ஆண்டுகளுக்கு முன், நான் சென்னை வந்தபொழுது, எஸ். சீனிவாச ஐயங்கார் வீட்டின் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்திருந்தேன். இப்பொழுது அவர் வீட்டினை, என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன். என் மனைவி அவர்களுடைய அடுப்பங்கரை வரை செல்கிறார் என்று இந்த உமாமகேசுவரம் நூலிலே குறிப்பிடப்பட்டுள்ளது,

        அன்றைய சுதேசமித்திரன் நாளிதழில் வெளியான செய்தியை அப்படியே எடுத்து, இதன் ஆசிரியர்கள் இந்நூலில் வெளியிட்டுள்ளனர்.

       இந்த செய்தி நமக்கு உணர்த்தும் செய்தி என்னவென்றால், சில ஆண்டுகளுக்கு முன்வரை  சீனிவாச ஐயங்கார் வீட்டின் தாழ்வாரம் வரை மட்டுமே அனுமதிக்கப் பட்ட மகாத்மா காந்தி, இன்று அவரது வீட்டை தன் வீடாகவே நினைத்துப பழகுகிறார், காந்தியாரின் மனைவி  ஐயங்கார் வீட்டின் அடுப்படி வரை செய்கிறார் என்றால், இம்மாற்றத்திற்குக் காரணம் நீதிக் கட்சியின் அயரா உழைப்பும், இந்த  நீதிக் கட்சி தமிழகத்து மக்கள் மனங்களில் ஏற்படுத்திய மாற்றமும்தான் காரணம். எனவே மகாத்மா காந்திக்கே சுயமரியாதையினை மீட்டுத்த தந்த இயக்கம் நீதிக் கட்சிதான் என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் பெருமையுடன் குறிப்பிட்டார்.
     மகிழ்ந்து போனோம் நண்பர்களே ,மகிழ்ந்து போனோம்

     காலை நிகழ்விலும், மாலை நிகழ்விலும், எங்களது உமாமகேசுவரம் நூலும், அந்நூலின் செய்திகளும் சுட்டிக் காட்டப்பெற்றது எங்களுக்குப் பெரு மகிழ்வைத் தந்தது. நெகிழ்ந்து போனோம்.
     உமாமகேசுவரன் பெயர் தாங்கி நிற்கும் பள்ளியில் மாணவர்களாய் பயின்று, ஆசிரியர்களாய் பணியாற்றும் எங்களுக்கு இதைவிடப் பெருமை வேறு என்ன வேண்டும்.



    
,