முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு
முன் ஓர் விடுமுறை நாள்.
தஞ்சாவூர், கரந்தை, வடவாற்றின் பாலத்தின்,
அகன்ற கைப் பிடிச் சுவற்றில் ஏறி நிற்கின்றேன்.
சற்றே தலை குனிந்து பார்க்கின்றேன். ஆற்றில்
வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு நொடி தயங்கினேன், ஒரே ஒரு நொடிதான்,
அடுத்த நொடி, ஆற்றிற்குள் பாய்ந்தேன்.
தண்ணீரில் விழுந்த வேகத்தில், தண்ணீரைக் கிழித்துக்
கொண்டு வெகுவேகமாய் உள்ளே, உள்ளே சென்றேன். மூக்கில் தண்ணீர் புகுந்து திக்குமுக்காடிப்
போகிறேன்.
கால் தண்ணீருக்கு அடியில் தரைப் பகுதியைத் தொடுகிறது.
மெதுவாக காலைத் தரையில் உந்தி, மெல்ல மெல்ல மேலே வருகிறேன்.
தலை மெல்ல தண்ணீர் பரப்பிற்கும் மேலே வருகிறது.
வேகமாய் மூச்சு விடுகிறேன். ஒரு நொடிதான், தண்ணீர் வெகுவேகமாய் என்னை உள்ளே இழுக்கிறது.
நீரில் மூழ்கி உள்ளே சென்ற நான், மீண்டும் காலைத்
தரையில் ஊன்றி, உந்தி எழும்பி மேலே வருகிறேன், வந்த வேகத்தில் மீண்டும் உள்ளே செல்கிறேன்.
வாய் வழியே ஆற்று நீர் வெகுவேகமாய் உள்ளே சென்று
கொண்டிருக்கிறது. வாயோ அணிச்சைச் செயலாய் தண்ணீரைக் குடித்த வண்ணம் இருக்கிறது. ஆற்று
நீரைக் குடிப்பதை உணர்ந்த பிறகும், தண்ணீர் குடிப்பதை நிறுத்த, வாயை மூட வேண்டும் என்ற
எண்ணம் கூடத் தோன்றாமல், உடலோடு சேர்ந்து, மனமும் மரத்துப் போய்விட்டது,
ஆற்றின் நீரைக் குடித்தபடி மேலே வருவதும், பின்
மூழ்குவதுமாய் ஒரு சில நிமிடங்கள் கரைகின்றன.
ஆற்றின் கரையில் நின்றபடி, என் நிலையினைக்
கவனித்த, என் நண்பன் இராசேந்திரன், வேகமாய் ஆற்றில் குதித்து, வெகு லாவகமாய் நீத்தி,
என் பின் புறம் வருகின்றான்.
நான் தண்ணீர் மட்டத்திற்கும் மேலே, மேலெழுந்து
வரும் பொழுது, என் முதுகில் வை வைத்து, எவ்வளவு வேகமாய் முடியுமோ, அவ்வளவு வேகமாய்
ஒரு தள்ளு தள்ளுகிறான்.
அவன் தள்ளிய அழுத்தமான தள்ளலில், தண்ணீர்
மட்டத்தின் மேல், தலை கவிழ்ந்து, முன்புறம் கவிழ்ந்து படுத்த நிலைக்கு வந்த நான், திடீரென்று
சுய நினைவை அடைந்தவனாய், இரு கைகளையும் மாற்றி மாற்றி முன் புறம் கொண்டு வந்து, மெதுவாய்
நீச்சல் அடிக்கத் தொடங்குகிறேன்.
நண்பன் இராசேந்திரன் என் பின்புறம் தொடர்ந்து
வந்து, மேலும் இரு முறை என்னை முன்னோக்கித் தள்ள, வாயைத் திறந்த படி, மேல் மூச்சு,
கீழ் மூச்சு வாங்க, ஆற்றின் கரையில் கால் பதித்து மெல்ல எழுந்து நிற்கின்றேன்
உடம்பின் படபடப்பு அடங்கவே வெகு நேரமாகிறது.
போன உயிர் திரும்பி வந்தது.
அன்று என் உயிரைக் காப்பாற்றியவன் என் நண்பன்
இராசேந்திரன்.
கால ஓட்டத்தில், என் உயிர் காத்த நண்பன் இராசேந்திரனைச்
சந்தித்து, இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது.
என்றாவது
ஒரு நாள் சந்திப்போம் என்ற நம்பிக்கை மட்டும் மனதில் உறுதியாய் இருக்கிறது.
கரந்தையின் வடவாறு, நான் ஆசிரியராய் பணியாற்றும்,
உமாமகேசுவர மேனிலைப் பள்ளியை, ஒட்டி, உரசியபடிச் செல்லும் வடவாறு, ஒவ்வொரு நாளும்,
இந்நினைவை எனக்குள் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது,
அன்று மூழ்கியிருந்தால், இன்று வாழ்வில் எதிர்
நீச்சல் போடும் வாய்ப்பு இயலாமல் போயிருக்கும்.
மாநிலம், நாடு என்ற எல்லைகளைக் கடந்து இன்று
பெற்றிருக்கும் எண்ணற்ற இணைய வழி உறவுகளின், வலை உலகத் தோழமைகளின் பாசமிகு வார்த்தைகளைப்
படிக்காமலேயே, நேசமிகுச் சொற்களைக் கேட்காமலேயே, என் நாடித் துடிப்பு ஒடுங்கியிருக்கும்.
இராசேந்திரா, என் நண்பா, உன்னை ஒரு நாள் சந்திக்க
வேண்டும், மீண்டும் ஒரு முறை நன்றி சொல்ல.
-----
சகோதரி தேனம்மை லட்சுமணன் அவர்களின்
வலைப் பூவின்
பகுதியில் இடம் பெற்ற, என் இளமைக் கால அனுபவப்
பகிர்வு.
நன்றி சகோதரியாரே