15 ஜூலை 2017

நாகையில் ஒரு உலக அதிசயம்




     ஆண்டு 2004.

     இந்தோனேசியா

     சுமத்ரா தீவுகள்

     டிசம்பர் மாதம் 26 ஆம் நாள்.

     ஞாயிற்றுக் கிழமை, காலை மணி 6.29

     ஒரு நிமிடத்திற்கு முன்பு வரை, அமைதியாய் காட்சியளித்த, கடலுக்கு அடியில், திடீரென்று ஒரு கொந்தளிப்பு.


      பூமியின் அடுக்குகள், கோபம் கொண்டு, ஒன்றின் மேல் ஒன்று உரசின, ஒன்றை ஒன்று அழுத்தின.

      பூமி அதிர்ந்தது.

      கடலுக்கு அடியில், ஒரு பெரும் பூகம்பம்

     ரிக்டர் அளவு கோலில், எண் 9 ஐத் தொட்டது.

     சீறி எழுந்த அலைகள், ஒன்றல்ல, இரண்டல்ல, 14 நாடுகளைப் பதம் பார்த்தன.

     14 நாடுகளிலும், கடற்கரைகளையும் தாண்டி, பெருங் கோபத்துடன், அளப்பரிய சீற்றத்துடன், அலைகள் ஊருக்குள் நுழைந்தன.

     ஆயிரக் கணக்கில் உயிர்களையும், இலட்சக் கணக்கில் விலங்கினங்களையும், கோடிக் கணக்கில் வாழ்வாதாரங்களையும் வாரிச் சுருட்டி விழுங்கியபின், ஏதுமறியா பிள்ளை போல், ஆழிப் பேரலைகள், கடலுக்குத் திரும்பின.

      காலை மணி 9.12

      நாகப்பட்டிணம்

     ஆழிப் பேரலையால் உருக்குலைந்து போனது.

     முதல் ஆழிப் பேரலையினைக் கண்டு, சுதாரிப்பதற்குள், அடுத்த 45வது நிமிடத்தில், முன்னிலும் கோபமாய், முன்னிலும் வேகமாய் இரண்டாவது ஆழிப் பேரலை உக்கிரத் தாண்டவமாடியது.

     ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரு நூறு இரு நூறல்ல, முழுதாய், நிச்சயமாய், உறுதியாய் 6,065 பேர், நாகையில் மட்டும் மாண்டு போயினர்.

     இவர்களுள் 1776 பேர் சிறுவர்கள், குழந்தைகள்.

     887 சிறுவர்கள்

     889 சிறுமியர்கள்

     பொய்கை நல்லூர்

     தெற்குப் பொய்கை நல்லூர்

     நாகையின் கடற்கரை கிராமம்.

     இந்தச் சிற்றூருக்கு இருபுறமும் உள்ள, கடற்கரை கிராமங்களில், வசித்த மக்கள், ஆயிரக் கணக்கில், சுனாமிக்கு இரையாகி, பெற்றோர்களை, குழந்தைகளை அனாதைகளாக்கி தவிக்க விட்ட நிலையில், இந்த தெற்குப் பொய்கை நல்லூரில் மட்டும், ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.

      வீறு கொண்டு எழுந்த ஆழிப் பேரலை, தெற்குப் பொய்கை நல்லூரில், தோல்வி கண்டு மிரண்டு, கடலுக்குள் ஓடி ஒளிந்தது.

     காரணம், ஒரு உலக அதிசயம்.

     இதுநாள் வரை, உலகு அறியா, உலக அதிசயம்.

     தெற்குப் பொய்கை நல்லூர் மக்கள் கூட, உணராத ஒரு உலக அதிசயம்.

     எத்துனை வேகமாய், எத்துனை வலுவாய், சுனாமி ஆர்ப்பரித்து வந்தபோதும், அதனினும் வலுவாய், அதனினும் உறுதியாய், மேரு மலையென, இந்த உலக அதிசயம், சுனாமியை எதிர் கொண்டு தடுத்தது.

      என்னிடமா மோதுகிறாய், வா வந்து மோதிப்பார், என நெஞ்சம் நிமிர்த்தி போருக்கு அழைத்து, சுனாமியை புறமுதுகு காட்டி ஓடச் செய்தது.

     நாகையில் ஒரு உலக அதிசயம்.

     மதில் சுவர்

     ஆழிப் பேரலைகளால் தகர்க்க முடியாத மதில் சுவர்.

     60 அடி உயரத்தில், ஆறு கிலோ மீட்டர் நீளத்திற்கு, நீண்டு நெடிதுயர்ந்த, ஒரு மதில் சுவர்.

     வியப்பாக இருக்கிறது அல்லவா?

     மதில் சுவர்

     கருங்கற்கள் கொண்டு எழுப்பப் பெற்ற மதில் சுவர் அல்ல.

     மணலால் ஆன மதில் சுவர்.

      என்ன? மணலால் ஆன மதில் சுவரா?

      இது எப்படி சாத்தியமாகும்?

      நீங்கள் வியப்பது புரிகிறது.

      ஆனாலும் மணலால் ஆன மதில் சுவர்தான்.

      கிழக்குத் தொடர்ச்சி மலை போல், மேற்குத் தொடர்ச்சி மலை போல், தொடர்ச்சியாய் ஒரு மணல் சுவர்.

      நமது முன்னோர்களின் கை வண்ணம்.

      நமது முன்னோர்களின், உயர் சிந்தனையின் செயல் வடிவம்.

      ஒரு முறை இழப்பு ஏற்பட்டால், மறுமுறை அவ்விழப்பு ஏற்படுவதற்குள், அதனை எதிர் கொண்டு, நேருக்கு நேராய் சந்திக்க, என்ன செய்ய வேண்டும், ஏது செய்ய வேண்டும், என்று அறிவுப் பூர்வமாய் சிந்தித்து, ஆக்கப் பூர்வமாய் வியூகம் வகுத்து, செயல்படுத்தி, வெற்றி கண்ட, நம் முன்னோரின், முயற்சியின் அடையாளமாய், ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும், நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறது, இந்த மணல் சுவர்.

பொய்கை நல்லூர் மணல் மேடுகள்.

     காவிரிப் பூம்பட்டிணப் பேரழிவிற்குப் பின், நம் முன்னோர், ஏது செய்ய வேண்டும் என்று யோசித்தனர்.

     கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தொலைவில், பனை ஓலைகளை வெட்டி, வரிசையாய் அரண் போல் நட்டனர்.

     கடல் அலையானது, ஒவ்வொரு முறையும், மணலினைக் கரையை நோக்கித் தள்ளும் குணம் வாய்ந்தது.

     இவ்வாறு கடல் அலையால் தள்ளப்படும், கடல் மணல், பனை ஓலைகளில் மோதி, மோதி, அதன் அடியில் விழுந்து, சிறு குன்றாய் குவியத் தொடங்கியது.

      வருடங்கள் ஆக ஆக, குன்றின் உயரம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

       கிழக்குத் தொடர்ச்சி மலைபோல், கடற்கரையில், நீண்ட நெடிய மணல் தொடர்ச்சி மலைகள் உருவாயின.

      

இம் மணல் மேடுகளில், ராவணன் மீசை, புன்னை, தாழை, குதிரைக் குளம்பு போன்ற தாவரங்களை நட்டு, வளர்த்தனர் நம் முன்னோர்.

       இத்தாவரங்களை ஆங்கிலத்தில் Soil Buinders என்று அழைப்பர்.

       இத்தாவரங்கள் மணலை இறுகப் பிடித்து, மணல் கோட்டையினை, கற்கோட்டை போன்ற, எஃகுக் கோட்டையாய் மாற்றின.

      ஆனாலும், இதன் பெருமையறியா, தற்கால மக்கள், நாகரிகம், வளர்ச்சி என்னும் பெயரில், மேடுகளைத் தகர்த்து, ஆலைகள் அமைத்தும், சாலைகள் அமைத்தும் ஆனந்தமடைந்தனர்.

       இன்று மிஞ்சி இருப்பதோ, ஆறு கிலோ மீட்டர் தொலைவிற்கான, தெற்குப் பொய்கை நல்லூர் மணல் மேடு மட்டும்தான்.

      இன்று, மாபெரும் சுனாமியைச் சந்தித்த பின்பும், நாம், இந்த மணல் மேடுகளின் அருமையினை, பெருமையினை அறியாதவர்களாய் இருப்பதுதான், வேதனையிலும் வேதனை.

-----.

     கடந்த 17.5.2017 புதன் கிழமை, பிற்பகல் 2.30 மணியளவில், பொசுக்கும் மணலில், தகிக்கும் வெயிலில், தெற்குப் பொய்கை நல்லூர் மணல் மேட்டில், கால் பதித்து நின்றேன்.

     நெஞ்சம் பெருமையால் விம்முகிறது.

     நம் முன்னோரின் பாதம் தொட்டு வணங்க மனம் விழைகிறது.

     நானும், நண்பரும், கரந்தைக் கலைக் கல்லூரி ஆய்வக உதவியாளருமாகிய திரு க.பால்ராஜ், நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி, ஓவிய ஆசிரியருமான திரு  சு.கோவிந்தராஜ் மூவரும், மகிழ்வுந்தில், பொய்கை நல்லூரை அடைந்த பொழுது மணி பிற்பகல் 1.30.

     மணல் மேடுகளைக் காண வந்திருக்கிறோம், வழி காட்டுங்கள் என்று, எதிரில் வந்த ஒவ்வொருவராய் விசாரித்தோம்.

     ஒருவருக்குமே தெரியவில்லை.

     சற்று சோர்ந்துதான் போனோம்.

     ஒரே ஒருவர் மட்டும், இடது புறம் திரும்பி, நேரே செல்லுங்கள், கொஞ்ச தூரம் மட்டுமே காரில் செல்ல முடியும், பின் நடந்துதான் செல்ல வேண்டும் என்றார்.

     அவர் சுட்டிய பாதையில் பயணித்தோம்.

     குறுகிய சாலை.

     ஒரு திருப்பத்தில், சாலை முடிந்தே போனது.

     அதற்கு அப்புறம் மணல் சாலை.

     மகிழ்வுந்தில் இருந்து இறங்கி நடக்கத் தொடங்கினோம்.

     





      உச்சி வெயில்.

      நடக்க விடாமல், காலை பின்ன வைக்கும் மணல்.

     சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்திருப்போம்.

    மூவருக்கும் நாக்கு உலர்ந்து போனது.

     மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத் தொடங்கியது

     ஒரு மேடு, மணல் மேடு கண்ணில் பட்டது.

     உடலின் சோர்வு பறந்தே போனது

     மூவரின் நடையிலும் வேகம் கூடியது

     மணல் மேட்டினை நெருங்கி, மெல்ல மெல்ல மேலே ஏறினோம்.

     சுடு மணல், எங்களை ஏற விடாமல் தடுத்தது. பிடிமானமில்லா மணல், எங்கள் கால்களை சறுக்க வைத்தது.

      மணல் மேட்டின் உச்சிக்கு வந்த போதுதான், கடல் தெரிந்தது.

      ஐம்பது மீட்டர் தொலைவில் கடல்.

      நீண்டு செல்லும் மணல் சுவர்.

      மணல் மேடெங்கும் மரங்கள்.

      பனை மரங்கள் மற்றும் பலவித மரங்கள் வளர்ந்து, உயர்ந்தோங்கி நின்றன.

      மனமெங்கும் மகிழ்ச்சி அலை மோத, மணல் மேட்டிலேயே நின்றோம்.

     














ஒரு மாபெரும் உலக அதிசயத்தில் நிற்கின்றோம் என்ற உணர்வு., உள்ளத்தை நெகிழச் செய்தது.

      உலகிலேயே மூன்றே மூன்று இடங்களில் மட்டும்தான், இது போன்ற மணல் மேடுகள் உள்ளன.

     

       ஒன்று டென்மார்க்.

     

      இரண்டாவது ஹாலந்து

     மூன்றாவது நமது பொய்கை நல்லூர்

     மெல்ல மணல் மேட்டிலிருந்து இறங்கி, கடற்கரையினை அடைந்தோம்.

     கடற்கரையில் இருந்து, திரும்பிப் பார்த்தால், நீண்டு செல்லும் மலைத் தொடராய் மணல் மேடு.

      மணல் மேட்டினை மூடியவாறு, அடர்த்தியாய் மரங்கள்.

      நமது முன்னோரின் அற்புதக் கோட்டை, மணல் கோட்டை, சுனாமியையே எதிர்கொண்டு வீழ்த்தும் வல்லமை வாய்ந்த எஃகுக் கோட்டை, கண் முன் விரிந்து, பரந்து நிற்கிறது.

     மெய் மறந்து நின்றோம்.

    பின் மெல்ல சுய நினைவு வந்து, கடற்கரையை நோக்கினோம்.

      கடற்கரையெங்கும் காலணிகள்.

     






நூற்றுக் கணக்கானக் காலணிகள் பரவிக் கிடக்கின்றன.

     இத்துனை காலணிகள் எப்படி?

     சுனாமி அலையில் மூழ்கி, பல்வேறு பகுதிகளில் உயிர் துறந்தவர்களின் காலணிகள் இங்கு கரை சேர்ந்திருக்க வேண்டும்.

     சிறிய காலணிகள், பெரிய காலணிகள், கடற்கரையெங்கும் சிதறிக் கிடக்கின்றன.

     மனதில் வேதனை குடியேறுகிறது.

     நம் முன்னோர் முயன்று உருவாக்கிய, மணல் மேடுகளைச் சிதைக்காமல், அழிக்காமல் காத்திருப்போமேயானால், உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம் அல்லவா?

      ஆறு கிலோ மீட்டர் தொலைவிற்கான மணல் மேடு மட்டுமே மீதமிருக்கிறது.

       வளர்ச்சி என்னும் பெயரில், இது போன்ற மணல் மேடுகளைத் தகர்த்து, சொந்த செலவில், சூனியம் வைத்துக் கொள்ளாமல், மீதமிருக்கும் மணல் மேடுகளையாவது, காத்திடவேண்டுமே என்ற கவலை நெஞ்சில் குடி கொள்கிறது.

      மீண்டும் கடற்கரையெங்கும் சிதறிக் கிடக்கும் காலணிகளைப் பார்க்கிறோம்.,

      இந்தக் காலணிகளால் சுமக்கப் பட்ட, உடல்கள், உயிர்கள், பெரியவர்கள், சிறியவர்கள், இன்று மண்ணோடு மண்ணாய் புதைந்து போயிருக்கும்.

    காலணிகள் மட்டுமே, உயிரிழந்தோரின் சாட்சியாய், மௌன சாட்சியாய் மீதம் இருக்கின்றன.

      கனத்த இதயத்தோடு, மெல்ல மகிழ்வுந்தினை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

     

அலைபேசி  வழி, தமிழ் மணத்தில் வாக்களிக்க