பின் தென் கிழக்காய் திரும்பி, திண்டுக்கல்,
மதுரை மாநகர், சிவகங்கை வழியாக, இராமநாதபுரம் மாவட்டத்துள் நுழைந்து, வங்காள விரிகுடாவின்,
பாக் நீரிணைப்பில் கலந்து, தன் பயணத்தை நிறைவு செய்கிறது, இந்தப் பெரு நதி.
வைகை
ஆறு
வைகை ஆற்றின் நீளம் 258 கி.மீ.
பொதுவாக வடகிழக்குப் பருவ மழைக் காலங்களில் மட்டுமே,
நீர் நிரம்பியோடும் ஆறு, இந்த வைகை ஆறு.
ஒரு சிறு குழுவினர், 2013–14 ஆம் ஆண்டில், வைகை
ஆற்றின் ஆதி முதல் அந்தம் வரை, நதியின் இருகரைகளிலும் தங்கள் ஆய்வைத் தொடங்கினர்.
ஆற்றின் இரு புறமும் 8 கி.மீ சுற்றளவிற்கு, ஒரு
அடியைக் கூட விடாது, ஆய்வு செய்தனர்.
ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் ஐநூறு கிராமங்களை
ஆய்ந்தனர்.
500 கிராமங்களில், 293 கிராமங்களில், தொல்லியல்
தடயங்களைக் கண்டனர்.
293 கிராமங்களையும் மீண்டும், அலசி ஆராய்ந்து,
இவற்றுள் 90 கிராமங்கள், இன்று நேற்றல்ல, 2000 ஆண்டுகளுக்கு முன்னரே, மக்கள் வாழிடப்
பகுதிகளாக இருந்தவை என்பதை உணர்ந்தனர்.
90 கிராமங்களையும் மேலும், மேலும்
துருவித் துருவி ஆராய்ந்து, சல்லடை போட்டுச் சலித்து, ஒரே ஒரு கிராமத்தை மட்டும் தேர்வு
செய்தனர்.
அகழாய்வைத் தொடங்கினர்.
தோண்டத் தோண்ட, மேலெழுந்து வந்தது, நம் நாகரிகம்.
வைகை நதிக்கரை நாகரிகம்
தமிழர் நாகரிகம்
சங்க காலத் தமிழர் நாகரிகம்
தமிழின் தொன்மையை, பழமையை, பெருமையை, சங்ககால
இலக்கியங்களை ஆதாரமாக வைத்தே, நெஞ்சம் நிமிர்த்தி, முழங்கி வந்த நமக்கு, முதன் முதலாக,
சங்ககாலத் தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப் பட்ட,
74 பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன.
பானை
ஓடுகள்
கல்வெட்டுக்களில் அல்ல, பானை ஓடுகளில்,
அதுவும் தமிழ் பிராமி எழுத்துக்கள், சங்ககால எழுத்துக்கள், 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட
எழுத்துக்கள், பொறிக்கப் பட்ட பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன.
கல்வெட்டுகள், அரசர்களால் நிறுவப் படுபவை.
ஆனால் பானை ஓடுகளில் எழுத்துக்கள்
என்பது, பொது மக்களைச் சார்ந்ததாகும். மேலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், பானைகள்
என்பவை, பெரும்பாலும் பெண்களோடு தொடர்புடையவை.
எனவே சங்ககால மகளிர் கல்வியில் சிறந்து விளங்கினர்
என்பதற்கு இப்பானை ஓடுகளே சிறந்த சாட்சிகளாக விளங்குகின்றன.
மேலும் பானை ஓடுகளில் எழுதப் பயன்படும்
எழுத்தாணிகளும் கிடைத்திருக்கின்றன.
இவையெல்லாம் நம் சங்க கால மக்கள் வாழ்ந்த, வளமான,
செழுமையான வாழ்விற்கு ஆதாரங்களாகும்.
வணிக நோக்கில் பயன்படுக் கூடிய, சுடுமண்ணால் ஆன முத்திரைகள் கிடைத்திருக்கின்றன.
ஆந்திரா,
மகாராஷ்டிரா, இலங்கை மற்றும் ரோமானிய நகரங்களோடு,
சங்ககால மக்கள் தொடர்பில் இருந்ததற்கான எண்ணற்ற ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.
அகலாய்வு மேற்கொள்ளப்படுகின்ற இடங்களில், செங்கல்
கட்டுமானங்கள், கண்டுபிடிக்கப் பட்டால்தான், இன்றைய அறிஞர்கள், அவ்விடங்களில், நகர
நாகரிகம் இருந்ததாக ஏற்றுக் கொள்கின்றனர்.
இதுநாள் வரை, வட நாட்டினரும்,
பிற நாட்டினரும், தமிழ் நாட்டில் இருந்தது நகர நாகரிகமே அல்ல, அரைப் பழங்குடி நாகரிகமே
என்றே கூறி வந்துள்ளனர்.
இவர்களுடைய கூற்றை முற்றிலுமாய் தகர்க்கும் வகையிலும்,
சங்ககால இலக்கியங்களுக்கு வலு சேர்க்கும் வகையிலும், புறந்தள்ள இயலாத, சங்ககாலக் கட்டிடங்கள்,
சுட்ட செங்கற்களால் ஆன, நகர நாகரிகம், வணிக நாகரிகம் இருந்ததற்கானப் பெரும் பெரும்
கட்டிடங்களின் அடித்தளங்கள் கிடைத்துள்ளன.
வைகை நதியானது, ஆண்டிற்கு நான்கு மாதங்கள் மட்டுமே,
நீர் நிரம்பியோடும் நதியாகும்.
இந்நதிக்கரையில் வாழ்ந்த மக்கள், இந்த சங்ககால
மக்கள், நான்கு மாதங்கள் மட்டுமே கிடைக்கும், நீரினைக் கொண்டு, வருடம் முழுவதும் எப்படி
வாழ்வை நகர்த்தியிருப்பார்கள் என்பதற்கான ஆதாரங்கள், நீர் மேலாண்மையில், சங்ககால மக்கள்,
எந்தளவிற்குச் சிறந்து விளங்கி இருக்கிறார்கள், என்பதற்கான ஆதாரங்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு
வந்து கொண்டே இருக்கின்றன.
10 ஏக்கர் நிலத்தில், நான்கரை கிலோ மீட்டர் சுற்றளவில்,
102 அகழாய்வுக் குழிகள் தோண்டப் பெற்றுள்ளன.
முதலாண்டில் 43 அகழாய்வுக் குழிகளும், இரண்டாமாண்டில்
59 அகழாய்வுக் குழிகளும் தோண்டப்பட்டுள்ளன.
102 அகழாய்வுக் குழிகள் தோண்டப் பட்டிருப்பது,
தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும்.
இந்த 102 அகழாய்வுக் குழிகள் மூலம் கிடைத்திருக்கும்,
சங்ககாலப் பொருட்களின் எண்ணிக்கை, நமக்குப் பெரு வியப்பை ஏற்படுத்தும்.
ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரு நூறு இரு நூறல்ல, முழுதாய்
5,500 சங்ககாலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
ஆனால் வேதனை என்ன தெரியுமா?
இந்த 5,500 பொருட்களில் இருந்து, ஆய்ந்து ஆய்ந்து,
அதி முக்கியமான இருபது பொருட்களை மட்டும் தேர்வு செய்து, இப்பொருட்களின் காலத்தை, வயதை
நிர்ணயிக்கும் Carbon
Dating பரிசோதனைக்கு அனுப்ப
வேண்டி, நடுவண் அரசிடம், தொல்லியல் துறையினர் அனுமதி கேட்டபோது, இரண்டே இரண்டு பொருட்களை,
அனுப்பிட மட்டுமே அனுமதி கிடைத்திருக்கின்றது.
வடநாட்டில் சரசுவதி நதியினைத்
தேடி கோடிக் கணக்கில் செலவிடும் மத்திய அரசுக்கு, தமிழ் நாட்டு அகழாய்விற்குப் பணம்
ஒதுக்க மனமில்லாத நிலை.
கீழடி
மதுரை மாவட்டமும், சிவகங்கை மாவட்டமும்
இணையும் இடத்தில், வைகை நதியில் இருந்து, முக்கால் கி.மீ தொலைவிற்குள், அமைந்திருக்கும்
சிற்றூர்.
நகரமயமாக்கலில் உருமாற்றம் பெறாமல், பழமையினைப்
பேணிக் காக்கும், தென்னந் தோப்புகள் நிறைந்த இடம்.
கீழடி
பெங்களூர்
அகழாய்வு மையத்தின் கண்காணிப்பாளர்,
திரு அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்களை
கீழடியில்
அகழாய்வு நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே, அஸ்ஸாமுக்கு பணிமாற்றம் செய்திருக்கிறார்கள்.
தமிழர்களின் சங்ககால நாகரிகம்,
மெல்ல மெல்ல, ஆதாரத்துடன் மேலெழும்பி வெளிச்சத்திற்கு வருவதற்குள், இருட்டிலேயே, முடக்கிப்
போடுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப் படுகின்றன.
சூரியனின் ஒளியினை குடை பிடித்தா மறைக்க முடியும்.
---
கடந்த 30.6.2017 ஞாயிற்றுக் கிழமை, காலை
11.30 மணியளவில், கீழடியில், அகழாய்வுக் குழிகளைப் பார்த்தவாறு, மெய்மறந்து நிற்கின்றோம்.
நானும், நண்பர் திரு க.பால்ராஜ் அவர்களும்.
கடந்த ஓராண்டாகவே, கீழடிக்குச்
செல்ல வேண்டும் என்ற ஆவல் இருந்த போதிலும், சூழல் பிடிகொடுக்காமல், நழுவிச் சென்று
கொண்டே இருந்தது.
கடந்த 17.6.2017 திங்கள் முதல் 21.6.2017 வெள்ளி
வரையிலான ஐந்து நாட்களுக்கு, பட்டதாரி நிலை, கணித ஆசிரியர்களுக்கான, பணியிடைப் பயிற்சி
தஞ்சையில் நடைபெற்றது.
இப்பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுள் நானும்
ஒருவன்.,
கணித ஆசிரியரல்லவா,
இப்பயிற்சியின்போது, 19.7.2017
புதன் கிழமை பிற்பகல், காவல் கோட்டம் என்னும்
மாபெரும் வரலாற்று நூலை, பத்தாண்டுகள் ஆய்வு செய்து, தமிழுலகிற்கு வழங்கியவரும், இந்நூலுக்காகவே,
சாகித்திய அகாதமி விருது பெற்றவருமான,
எழுத்தாளர் திரு சு.வெங்கடேசன் அவர்கள்,
திடீரென வருகை புரிந்து, எங்களுக்கெல்லாம் இன்ப அதிரச்சியினை வாரி வழங்கி, அரியதொரு
உரையாற்றினார்.
ஒருவர் கூட கை உயர்த்தவில்லை.
சற்று சங்கடமாகத்தான் போய்விட்டது.
அன்றே முடிவு செய்தேன், விரைவில் கீழடிக்குச்
சென்றாக வேண்டும் என்று.
இதோ, கீழடியில்.
சதுரமாய், செவ்வகமாய், பல்வேறு அளவுகளில், பல்வேறு
ஆழங்களில் அகழாய்வுக் குழிகள்.
கீழடியைச் சேர்ந்த திரு திலீப், அகழாய்விற்கு நிலம் அளித்தவர்களுள் ஒருவர் |
நாள் ஒன்றுக்கு, பத்து செ.மீ ஆழத்திற்கு வெட்டினாலே,
பெரிய சாதனை என்கிறார்கள். ஏனென்றால் கடப்பாறைகளையோ, இயந்திரங்களையோ பயன்படுத்தி, இவர்களை
குழிகளை தோண்டுவதில்லை.
சிறு சிறு கருவிகளைக் கொண்டு, கைக்கு அடக்கமான
கருவிகளைக் கொண்டு, பார்த்துப் பார்த்து, பொறுமையாய், நிதானமாய் தோண்டுவார்களாம்.
ஏனெனில் புதையுண்டு, பூமிக்குள் மறைந்திருக்கும்,
பழங்காலப் பொருட்கள், சேதமாகிவிடக் கூடாதல்லவா.
வயல்களில் இருக்கும் வரப்பு போல், நடப்பதற்கு
இடம் விட்டு, தொடர்ச்சியாய் குழிகளைத் தோண்டியிருக்கிறார்கள்.
தலை குனிந்து பார்க்கிறோம்.
கீழே, நமது சங்ககால நாகரிகம்,
நம்மைத் தலை நிமிர்ந்து பார்க்கிறது.
உடலும், உள்ளமும் ஒரு சேரச் சிலிர்க்கிறது.
நம் முன்னோர் வாழ்ந்த பூமி.
நான்கு மாதங்களே கிடைக்கும், வைகை
ஆற்று நீரை, வருடம் முழுதும், பயன்படுத்தும் நுட்பம் அறிந்த, நீர் மேலாண்மைத் திறம்
மிகுந்த, நம் சங்ககால முன்னோர் வாழ்ந்த பூமி.
ஏரி, ஆறு, குளம், வெட்டி வழி காட்டிய அவர்கள்
எங்கே? அவர்களை அமைத்துத் தந்த, நீர் நிலைகளை எல்லாம், தூற்று, வீடு கட்டி, அடுக்ககம்
அமைத்து, நகர மயமாக்கம் என்று பெருமை பொங்க மார்தட்டிக் கொண்டு, தண்ணீருக்காக, அலையாய்
அலையும் நாம் எங்கே?
அகழாய்வுக் குழியினுள் தெரியும், உறைக் கிணற்றைப்
பார்த்துக், கரம் கூப்பி வணங்கத் தோன்றுகிறது.
அகழாய்வுக் குழிகளில் இருந்து
எடுக்கப் பட்ட, பானை ஓடுகள், கழுவி சுத்தம் செய்யப் பட்டு, தனித்தனியே பிரித்து வைக்கப்
பட்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு, அகழாய்விற்காகத் தோண்டப்பெற்ற
குழிகளை எல்லாம், மீண்டும் மண் கொண்டு மூடிவிட்டார்கள்.
மனதுள் இனம் புரியாத ஒரு வேதனை வந்து அமருகிறது.
இதுவே, வேறொரு நாடாக இருக்குமானால், எம் நாட்டின்
தொன்மை பாரீர், எம் நாட்டின் பழமை பாரீர் என, விடாது முழங்கி, அகழாய்வு நடைபெற்ற இடங்களை
எல்லாம், அப்படியே போற்றிப் பாதுகாத்து, உன்னத ,உயரிய சுற்றுலாத் தலமாக அல்லவா மாற்றியிருப்பார்கள்.
இங்கோ,
அகழாய்வுக் குழிகளை மட்டும் அல்ல, குழிக்குள் இருந்து, மேலெழுந்து வந்த, நமது சங்ககால
நாகரிகத்தையும் அல்லவா, திரையிட்டு மறைக்கப் பார்க்கிறார்கள்.
கண் முன்னே காணும் அகழாய்வுக் குழிகள் எல்லாம்,
திடீரென்று, அகல வாய் திறந்து, வேதனையோடு, பேசுவதைப் போன்ற ஓர் உணர்வு.
நீங்கள்
அடுத்தமுறை, வருவதற்குள், எங்களையும் மண் கொண்டு மூடிச் சமாதியாக்கியிருப்பார்கள்.
யாதும் ஊரே, யாவரும் கேளிர்