11 நவம்பர் 2017

யாரது, யாரது, தங்கமா?




     ஆண்டு 1950.

     கும்பகோணம்.

     தாராசுரம் புகை வண்டி நிலையம்.

     சிறுவர்கள்

     பதினைந்து வயதுள்ள சிறுவர்கள் பலர், புகை வண்டி நிலையத்தின், அகன்று விரிந்த, மரங்களின் நிழலில் அமர்ந்திருக்கிறார்கள்.


     இவர்கள் அனைவரும் சித்திரக் கலாசாலை மாணவர்கள்.

      சித்திரக் கலாசாலை

      ஓவியப் பயிற்சிப் பள்ளி.

      அக்காலத்தில், தமிழ் நாட்டில், இரண்டே இரண்டு, அரசு ஓவியப் பயிற்சிப் பள்ளிகள்தான் இருந்தன.

        ஒன்று சென்னையில்.

        மற்றொன்று கும்பகோணத்தில்.

        இவர்கள் அனைவரும் கும்பகோணத்து மாணவர்கள்.

        தாராசுரத்தில் இருக்கும் புகழ்பெற்ற, ஐராவதீசுவரர் கோயில் சிற்பங்களைப் பார்த்து, வரைந்து, பயிற்சி எடுப்பதற்காக வந்திருக்கிறார்கள்.

         காலை நேரப் பயிற்சி முடிந்தவுடன், அருகில் இருக்கும், தாராசுரம் புகை வண்டி நிலையத்தில் அமர்ந்து, மதிய உணவினை, சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

         ஒரு மாணவன் மட்டும் உணவு கொண்டு வரவில்லை.

         இன்று மட்டுமல்ல, ஐராவதீசுவரர் கோயிலில் பயிற்சியில் ஈடுபட்ட நாள் முதல், இன்று வரை, உணவு கொண்டு வந்ததே இல்லை.

         மற்ற மாணவர்கள், உணவு உண்பதற்காக உட்கார்ந்தவுடன், இம் மாணவன் மட்டும், நீங்கள்  சாப்பிடுங்கள், நான் அந்த டீ கடைக்குப் போய், சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்று கூறி, மெல்ல புகை வண்டி நிலையத்தை விட்டு வெளியே வருகிறான்.

        மற்ற மாணவர்களின் பார்வையில் இருந்து அகன்றவுடன், டீ கடைக்கு, எதிர் திசையில் வேகமாய் நடக்கிறான்.

        சற்று தொலைவில் ஒரு கிணறு.

        இளநீரைப் போல் சுவை தரும் நீர் நிரம்பியக் கிணறு.

        அக்கிணற்றில் இருந்து, நீரை இறைத்து, வயிறு முட்ட முட்டக் குடிக்கிறான்.

        பின்னர், சிறிது நேரம், அங்கிருக்கும் மரத்தின் நிழலில் அமர்ந்துவிட்டு, பின் மெல்ல நடந்து மற்ற மாணவர்களுடன் இணைகிறான்.

         டீ கடையில் இன்று அருமையான சாப்பாடு.

        சாப்பிட்டது போலவே நடிக்கிறான்.

        சாப்பாட்டிற்கு வழி இல்லை.

        ஏழ்மை.

        சாதாரண ஏழ்மை அல்ல, வாட்டி வதைக்கும் ஏழ்மை.

       பல நாட்கள், இவனது தாயார், இவனுக்கு, மிக மலிவாய் கிடைக்கும், வாழைப் பழங்களை வாங்கிக் கொடுத்துவிட்டு, அவற்றின், தோலைத் தின்று தன் வயிற்றை நிரப்பிக் கொண்டவர்.

       விரைவில் வேலைக்குச் செல்ல வேண்டும்.

       அன்புத் தாயின் பசியாற்ற வேண்டும்.

       இதே நினைவோடு ஓவியம் கற்றான்.

       ஓவியக்கலை இவன் உதிரத்தோடு, உதிரமாய் ஒன்றெனக் கலந்தது.

---
     
      கடந்த 1.11.2017 புதன் கிழமை மாலை 6.30 மணியளவில், நானும், முனைவர் பா.ஜம்புலிங்கம் ஐயா அவர்களும், தஞ்சாவூர், மாரியம்மன் கோயில் சாலையில், அமைந்திருக்கும், ஞானம் நகரில் இருக்கும், ஓவியரது இல்லத்தில் அமர்ந்திருக்கின்றோம்.
      

வயது 80 ஐத் தொட்டுவிட்ட போதிலும், எட்டு வயதுச் சிறுவன் போல் சிரிக்கிறார், மகிழ்வாய் பேசுகிறார்.

       இன்னும் சிறிது நேரம், பேசமாட்டாரா என நம்மை ஏங்க வைக்கும் பேச்சு.

      பேச்சு முழுவதும், இவரது வாழ்க்கை அனுபவங்கள், அலைகடலென ஆர்ப்பரித்து எழுந்து, நம்மை வியக்க வைக்கின்றன.

       பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, ஒரு வெள்ளைத் தாளினை எடுத்து, எழுதுகோலைத் திறந்து, சிறு சிறு கோடுகள் வரையத் தொடங்கினார்.
      



ஆகா, படம் அல்லவா, வரைந்து காட்டுகிறார் என்பதை உணர்ந்து, இருக்கையில் இருந்து எழுந்து, காணொலியாய் பதிவு செய்வதற்காக, அலைபேசியை எடுப்பதற்குள், பாதி படத்தை வரைந்து முடித்து விட்டார்.

      மின்னல் வேகம்.

      ஒரே ஒரு நிமிடத்திற்குள், வெள்ளைத் தாளில், உயிரோவியமாய், பகுத்தறிவுப் பகலவன், உதித்த, பொன்னானக் காட்சியினைக், கண்ணாரக் கண்டு, வியந்து போனேன்.

       நண்பர்களே, தமிழகத்தின் பல இடங்களில், சில உணவுக் கூடங்களில் கூட, இந்திய மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும், சுஷ்ருதா அவர்கள், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு நோயாளிக்கு, தலையில், மூளையில், அறுவை சிகிச்சை செய்யும் காட்சி, பெரும் படமாக மாட்டப் பெற்றிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

       நீங்களும் பார்த்திருக்கலாம்.
      

இவரது இல்லத்திற்கு வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். அந்த ஓவியத்தை வரைந்ததே இவர்தான் என்பதை.

       போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரிய பெரியவர் இவர்.

---

      பொன்னியின் செல்வன்.

      இவ்வுலகில் வாழும், எழுதப் படிக்கத் தெரிந்த, அத்துனைத் தமிழ் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட, அற்புத நாவல், பொன்னியின் செல்வன்.

      அமரர் கல்கியின், தெளிந்த, நீரோட்டம் போன்ற எழுத்துக்களுக்கு, உயிர் கொடுத்து, உரு கொடுத்து, பொன்னியின் செல்வன் முழுவதையும், சித்திரக் கதையாய் உருவாக்கும், உன்னதப் பணியில், அயராது முயன்று வருகிறார், இந்த 80 வயது இளைஞர்.


பொன்னியின் செல்வன்
சித்திரக் கதை

      இதுவரை இரண்டு பகுதிகளை வெளிக் கொணர்ந்தவர், தற்பொழுது, மூன்றாம் பகுதியை, கண்கவர் சித்திரங்களால், உருவாக்கி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகளை, வெள்ளைத்தாளில், திரைப்படம் போல் ஓட விட்டிருக்கிறார்.

      பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை, மூன்று பகுதிகளாய் வெளியிட்டிருக்கிறார்.

       அடுத்தப் பகுதிக்கானப் பணியினை, ஒரு சிறு குழந்தையின், குதூகலத்துடன் தொடங்கி இருக்கிறார்.

       மூன்று பகுதிகளும் சேர்த்து, 327 பக்கங்கள்.

       பக்கத்துக்குப் பக்கம், கடந்தகால வரலாற்றுக்குள் நம்மையும் கைபிடித்து அழைத்துச் செல்லும் ஓவியங்கள்.



பொன்னியின் செல்வன்
சித்திரக் கதை

       நண்பர்களே, பொன்னியின் செல்வன் சித்திரக் கதையின், மாபெரும் ஓவியச் சுழலுக்குள் மூழ்கியதால், ஓவியரின் பெயரைச சொல்ல, மறந்தே போய்விட்டேன். 

மனித வாழ்க்கையில் மிஞ்சுவது என்ன?
என்ற கேள்வியை,
பலமுறை மனதிற்குள் கேட்டுப் பார்த்து,
தனது வாழ்க்கையில்,
ஏதாவது அழுத்தமானச் சுவடுகளைப் பதித்துச் செல்ல வேண்டும்
என்று முடிவெடுத்துச்
செயலில் இறங்கியவர் இவர்.

இதோ,
இப்பூமிப் பந்து சுழன்று கொண்டிருக்கும் வரையில்,
நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்த
உன்னதப் படைப்பை,
தமிழ்கூறும் நல்லுலகிற்குக்
காணிக்கையாய் வழங்கி இருக்கிறார்.

இவரது நண்பர் ஒருவர்,
இவரைப் பார்க்கும் பொழுதெல்லாம்,
இப்படித்தான், ராகத்தோடு, பாடலாய் பாடி அழைப்பாராம்.

யாரது,   யாரது,  தங்கமா


ஆம், இவர்தான்
ஓவியர் தங்கம்.



26 கருத்துகள்:

  1. முனைவர் ஐயா பதிவிலும் இவர்பற்றி படித்திருக்கிறேன். இங்கும் வேறொரு கோணத்தில் படித்துத் தெரிந்து கொண்டேன்.போற்றுதலுக்கு உரியவர்.

    தம +1

    பதிலளிநீக்கு
  2. வியக்க வைத்த விடயங்கள்
    நானும் இந்த ஓவியத்தை அபுதாபியில் இந்தியரின் மருத்துவமனையில் பார்த்து இருக்கிறேன் இப்பொழுதுதான் இதன் பின்புலம் அறிந்தேன் நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. பொன்னியின் செல்வனுக்கு ஓவியத்தில் உயிர் கொடுத்த தங்கம் அய்யா நீடூழி வாழ எங்கள் வாழ்த்துகள். அவரது இந்த பதிவு தமிழர் வரலாற்றில் என்றும் நிலைத்து இருக்கும். ஆசிரியருக்கு பாராட்டுகள் ... உங்களிடம் நாங்கள் கற்கவேண்டியது நிறைய இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  4. அருமை ஐயா, ஓவியர் பற்றிய யதார்த்தமான பதிவு, எளிமையான நடை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. தங்கம் அண்ணனிடம் பேசப் பேச ஆசையாக இருக்கும். அக்கால நினைவுகள் தொடங்கி அனாயசமாகப் பேசுவார். பேச்சில் நேர்மறைப் பண்பு அதிகம் காணப்படும். எவரைப் பற்றிப் பேசினாலும் நிறைவாகவே பேசுவார். உங்களுடன் சென்று அன்று அவரை அவரது இல்லத்தில் சந்தித்தது மனதில் பதிந்துவிட்டது. அவருக்கு நீங்கள் சூட்டிய புகழாரம் முற்றிலும் பொருத்தமானதே. அவர் பெரியார் படத்தை ஒரு நிமிடத்திற்குள் நம் கண் முன் வரைந்தபோது வியந்தேன். நீங்கள் அதனைப் பதிவிட்டது அவருடைய சிறப்பை அனைவரும் அறிந்துகொள்ள உதவியாக உள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அருமையானதொரு ஒவியர் குறித்து எப்பவும் போல் தங்கள் பார்வையில்...
    நல்ல பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
  7. ஓவியர் தங்கம் அவர்களைப் பற்றிய தகவல்களையும், அவர் உங்கள் முன்னே சட்டென வரைந்த நேரடி செயல்முறையை வீடியோவாகவும் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அவரைப் பற்றிய சிறப்பான தகவல்கள் உங்கள் மூலம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  9. இவரைக் குறித்து ஏற்கெனவே படித்திருக்கேன். பொன்னியின் செல்வன் சித்திரக் கதை குறித்தும் அறிந்திருக்கிறேன். ஆனால் இத்தனை விபரங்களை அளித்த தங்களுக்கு என் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நன்றி இவ்வளவு திறமைசாலியை பெரிய நோக்கத்துடன் வாழ்ந்துவருபவர் பற்றி குறிப்பை மிக அழகாக தொகுத்து கொடுத்தமைக்கு

    பதிலளிநீக்கு
  11. நல்ல பதிவு! எனக்குப் பொன்னியின் செல்வன் மிகவும் பிடிக்கும். அதைச் சித்திரக்கதையாக்குவதென்பது சிறப்பான முயற்சி! ஐயா அவர்களின் முயற்சி முழுமையாக நிறைவேறச் சிறுவனின் பணிவன்பான நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துகள் நண்பரே!
    என்னைப் பற்றி படித்த தங்கம் அவர்கள் எனது பிறந்த ஊரான சன்னாநல்லூர் சென்று விசாரித்த பொழுது கணேசன் என்று யாரும் இந்த ஊரில் இல்லை என்று சொல்லிவிட்டார்களாம்.

    இந்த குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவரா இம்மாபெரும் இந்தியத்திரு நாட்டின் ஆய்வுத்தள தலைவராக தென் துருவம் சென்று வந்தார் ? என்று ஆச்சரியப்பட்ட தங்கமுத்து அவர்கள் எப்படியாவது அவரை சந்திக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்
    Thoughts are dynamic and vital.Thoughts are creative.
    Thoughts actually change conditions.
    என்பது ஒரு சத்திய வாக்கு.எண்ணங்கள் வலிமை பொருந்தியவை.
    காலம் என்னை அவர் முன்னே கொண்டுவந்து நிறுத்தியது மட்டுமல்லாமல் எண்ணற்றோர் எனது செயல்பாடுகள் பற்றி தெரிந்துகொள்ளவும் வைத்தது.
    வாழ்க தங்கம் அவர்கள்.

    பதிலளிநீக்கு
  13. அருமை. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. தங்கம் அவர்கள் ஒரு பிறவி ஓவியர் என்றே தோன்றுகிறது. நம்மூரில் உள்ள இரவி வர்மாவைப் பற்றி நமக்குத் தெரியாமல் போயிற்றே. ஏழமை என்பது ஒரு தடைக்கல் இல்லை என்பது அவர்தம் வாழ்வு நமக்குப் கற்றுத்தரும் பாடமாகும். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்திய அறுவை சிகிச்சை முறையை தன் கைவண்ணத்தில் நம் கண் முன்னே நிறுத்தியிருப்பது வியப்பாக உள்ளது. அவர்தம் கனவுத் திட்டம் நிறைவேற வாழ்த்துகிறேன்.
    சலனப்படம் அருமை.

    பதிலளிநீக்கு
  15. பெயர்மட்டுமல்ல அவர் ஓவியமும் தங்கம்தான்

    பதிலளிநீக்கு
  16. தஞ்சை கொடுத்த தங்கம்
    பெருமிதம் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. மிக அருமை.. பொன்னியின் செல்வன் சித்திரம்.. அதுபற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. அவ்ளோ நன்று.

    பதிலளிநீக்கு
  18. முனைவர் ஐயா பதிவில் ஓவியர் தங்கம் அவர்களைப் பற்றி படித்து இருக்கிறேன்.
    விரிவாய் இன்னும் அதிக செய்திகள், அறிந்து கொண்டேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  19. ஒவியர் தங்கம் பற்றிய செய்தியை அறிந்து வியந்தோம். பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  20. எல்லோருக்கும் கலை வந்து விடாது போற்றப்பட வேண்டியவர்கள்

    பதிலளிநீக்கு
  21. அருமை ஐயா

    ஓவியர் தங்கம் பற்றிய பொக்கிச செய்திகளை அறிந்துக் கொண்டேன்...

    பதிலளிநீக்கு
  22. அந்த ஓவியர் தங்கத்தை அறிந்து கொண்டேன் நன்றி!!! அருமை...

    பதிலளிநீக்கு
  23. அறியாத தகவல்களை அழகாக தொகுத்திருக்கிங்க .
    அருமையான பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  24. அந்த இளைஞருக்கு என்
    சிரந்தாழ்ந்த வணக்கங்களும்
    வாழ்த்துக்களும்,,/

    பதிலளிநீக்கு
  25. மிகவும் அருமை!

    ஓவியரின் திறமை அறிந்து ஓவியர் என்ற முறையில் பெருமிதம் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு