கரந்தை.
மாலை 5.30 மணி
24.12.2017 ஞாயிற்றுக் கிழமை
மூன்று சக்கர வாகனம் ஒன்று, கரந்தைத் தமிழ்ச்
சங்க வளாகத்திற்குள் நுழைந்து, தமிழ்ப்பெரு மன்றத்திற்கு அருகில் வந்து நிற்கிறது.
வாகனத்தில் இருந்து முதலில், ஒரு ஊன்று கோல்
வெளிவருகிறது. ஊன்று கோலைப் பற்றியவாறு, 80 வயதினையும் கடந்துவிட்ட ஒரு மூதாட்டி, மெல்ல
இறங்குகிறார்.
நாற்பது வயதினை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த
அன்பர், எங்கிருந்தோ ஓடிவந்து, குனிந்து, அம் மூதாட்டியின் பாதம் தொட்டு வணங்கி வரவேற்கிறார்.
சற்றேரக்குறைய முப்பது வருடங்களுக்கு
முன், அந்த அன்பருக்குத், தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாய் இருந்தவர்.
சிறுவயதில் தன் கரம் பற்றி, அ, ஆ என எழுதச் சொல்லிக்
கொடுத்த, ஆசிரியையின் கரம் பற்றி, மகிழ்வோடு அழைத்துச் சென்று, விழா அரங்கில் அமர வைக்கிறார்.
சிறு வயது நினைவுகள், மனதில் திரைப்படம் போல்
ஓடுவதை, அன்பரின் முகம், பளிச்செனக் காட்டுகிறது.
முகத்தில் அத்துனை ஆனந்தம்.
முன் இருக்கையில், வயது முதிர்வின் காரணமாக,
ஒத்துழைக்காத கால்களுடன், அன்பும், தமிழும் தவழும் முகத்தோடு, புலவர் பெருமகனார் அமர்ந்திருக்கிறார்.
இப்புலவர் பெருமகனார், அன்பருக்கு மட்டுமல்ல,
எனக்கும் ஆசான்.
இன்று வலைப் பூவில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்
என்றால், அவ்வெழுத்துக்களின் தூண்டுகோல் இவர்தான்.
கணித ஆசிரியரான எனது கரங்களில், தமிழ் எழுதுகோலைத்
திணித்தப் புலவர் இவர்.
ஒரு இருக்கையினை, மகிழ்வுந்திற்கு
அருகில் வைத்து, புலவரை பூப்போல் மகிழ்வுந்தில் இருந்து இறக்கி, இருக்கையில் அமர வைக்கின்றனர்.
பின்னர் இருக்கையோடு புலவரையும் சேர்த்து,
விழா மேடைக்குத் தூக்கிச் செல்கின்றனர்.
வயது முதிர்வு உடலுக்குத்தானே தவிர, தமிழையே
என்றென்றும் சுவாசமாய் சுவாசிககும் எனது உள்ளத்திற்கு அல்லவே, என் இதயம் என்றும் இளமைதான்
என்பதுபோல், தமிழ்ப்பெரு மன்ற மேடையில் அமர்ந்ததும், ஒரு மகிழ்ச்சி, ஒரு எழுச்சி, ஒரு
பெருமிதம் புலவருக்கு.
நூல் வெளியீட்டு விழா
மும்பை, இவர் வாழிடமாய் மாறிப்
பல்லாண்டுகள் கடந்துவிட்ட போதிலும், தனது நூலினை, தான் பிறந்து, தவழ்ந்த கரந்தையில்,
தான் பயின்ற கரந்தை மண்ணில் வெளியிட வேண்டும், சங்கத் தமிழ்ப்பெரு மன்ற மேடையில்தான்
வெளியிட வேண்டும், வெளியிட்டேத் தீர வேண்டும், என்ற அளவிலா ஆர்வத்தோடு, களமிறங்கி,
சாதித்தும் காட்டியிருக்கிறார், இந்த அன்பர், என் நண்பர்.
தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிவாளர்
முனைவர் எஸ்.முத்துக்குமார் அவர்கள். வரலாற்று
ஆய்வாளர், குடவாயில் பாலசுப்பிரமணியன்
அவர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் திரு இரா.சுந்தரவதனம் அவர்கள், பொருளாளர் புலவர் ம.பாலசுப்பிரமணியன் அவர்கள், கரந்தைக் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இராசாமணி அவர்கள்,. கலைக் கல்லூரி
ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ.சண்முகம்
அவர்கள், வலைப் பூ எழுத்தாளரும்., ஓய்வு பெற்ற, தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைப் பதிவாளருமாகிய
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், என ஒவ்வொருவராய் விழா அரங்கிற்கு வருகை தர. விழா
களை கட்டத் தொடங்கியது.
தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிவாளர்
முனைவர்
எஸ்.முத்துக்குமார் அவர்கள்,
இந்தியாவின்
மகள்,பாகம் 2
நூலினை வெளியிட,
குடவாயில்
பாலசுப்பிரமணியன் அவர்கள்
விழா நிகழ்வுகளை, இவரது நண்பர் திரு கோதண்டராமன் அவர்களின் மகளும், மற்றும் கோதண்டராமனின் உறவினர் மகளும் ஆகிய செல்வி திவ்ய பாரதி மற்றும் செல்வி அபிராமி ஆகியோர் சுவைபட தொகுத்து வழங்கினர்.
இவ்விழாவானது வெறும் நூல் வெளியீட்டு விழாவாக மட்டும் அமைக்காமல், தான் பயின்ற பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் விழாவாக, தனக்குப் பாடம் போதித்த ஆசிரியர்களுக்குப் பெருமிதம் சேர்க்கும் விழாவாக, பள்ளிக்கால தோழமைகளை ஒன்றிணைக்கும், சங்கம விழாவாக, உணர்வுப் பூர்வ விழாவாக, அரங்கேற்றி, அனைவரையும் நெகிழ வைத்துவிட்டார், நண்பர் மும்பை இரா.சரவணன் அவர்கள்.