27 ஏப்ரல் 2018

ஆசிரியரைப் போற்றியவர்





     ஆசிரியர் என்றாலே, அவர் சகல விசயங்களிலும் நேரடியான அனுபவம் உள்ளவர், அது குறித்து ஆழ்ந்து சிந்திப்பவர் என்றுதான் பொருள்.

     எனவே ஆசிரியர்கள் தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

     ஒவ்வொரு ஆசிரியரும், தன்னை ஒரு கலைஞனாகவே மதிக்க வேண்டும்.


     எப்படி ஒரு பாடகன், தன்னுடைய பாட்டுத் திறனைத் தினமும் வளர்த்துக் கொள்வாரோ, அப்படி, கற்றுத் தருவதை நுட்பமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

     ஒரு கிராமப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர், அந்தக் கிராமத்தின் வளர்ச்சியே தன் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்ற பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும்.

     மாறாக வகுப்பறையே தனது உலகம் என்று சுருங்கிவிடக் கூடாது.

     பள்ளியில் சேர்ந்து படிக்க இயலாத குழந்தைகளுக்கு, பள்ளிக்கு வெளியில் கற்றுத் தருவதற்கு ஆசிரியர்கள் முன்வர வேண்டும்.

      அலங்காரமான ஆடைகளை அணிந்து, ஆசிரியர்கள் பகட்டுத் தனமாக நடந்து கொள்ளக் கூடாது.

       ஆசிரியர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும். விளையாட்டில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்.

       ஆசிரியர்களின் பணி என்பது ஒரு வகையில், போர் வீரனை விடவும் சவால் நிறைந்தது. எனவே ஆசிரியர்களது அன்றாடத் தேவைகளை, குறிப்பாக ஆசிரியர்களது குடும்பத்திற்கானத் தேவைகளை, அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

       பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே வேலை செய்கிறோம் என்று உணரும்போதுதான், கல்வி  நலிவடையத் தொடங்குகிறது. இது மாற்றப்பட வேண்டும்.

      பொது மக்களிடம் ஆசிரியர்கள் மீது எப்போதுமே ஒரு இளக்காரம், கேலி உள்ளது.

      இது மாற வேண்டும்

       மக்கள் ஆசிரியர்களை மதிக்க வேண்டும்

       ஒரு ஊருக்குள் வரும் கான்ஸ்டபிளுக்குக் கிடைக்கும் மரியாதை, ஆசிரியருக்குக் கிடைப்பதில்லை.

        போலிஸ்காரர் குற்றவாளியைப் பிடிக்க வருகிறார். அவரை நாம் வரவேற்று மரியாதை செய்கிறோம்.

         ஆசிரியர், நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்த்து எடுக்க முயற்சிக்கிறார்.

         அவரை நாம் மதிப்பதேயில்லை.

         இது மாற வேண்டும்

          முதலில் ஆசிரியர்கள் மதிக்கப்பட வேண்டும்

          குறிப்பாக ஆசிரியர்களுக்கு எதிராக, எவரும் கை நீட்டிப் பேசவோ, பரிகாசம் செய்யவோ கூடாது.

          எப்படி, காவல் நிலையத்தைக் கண்டவுடன், எவ்வளவு பெரிய ரௌடியும், அடங்கி ஒடுங்கி, அமைதியாய் போகிறானோ, அது போலப் பள்ளியைக் கண்டதும், அது அறிவு நிலையம் என மதித்து நடக்க வேண்டும்.

        நண்பர்களே, படிக்கப் படிக்க வியப்பு மேலிடுகிறது அல்லவா?

        ஆசிரியர்களின் நிலையினை, ஆசிரியர்கள் போற்றப்பட வேண்டியதன் அவசியத்தை, முக்கியத்துவத்தை எடுத்துரைத்த இவர் யார் தெரியுமா?

        அதைவிட முக்கியம், எப்போது கூறினார் தெரியுமா?

        இவர் இறந்தே, 114 ஆண்டுகள் ஆகிவிட்டன.

        இவர் ஒரு மருத்துவர்.

        அதனினும் மேலாய் எழுத்தாளர்.

        அதனினும் மேலாய், ஆவணப்படுத்துதலின் நாயகர்.

        இவர் எழுதிய ஐயாயிரத்திற்கும் மேற்பட்டக் கடிதங்கள், இன்று, இவரது காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன.

         இவருக்கு வாசகர்கள் எழுதிய, ஏழாயிரத்திற்கும் அதிகமானக் கடிதங்களும், முறையாக, தேதி வாரியாகத் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப் பட்டுள்ளன.

          தனது கையெழுத்துப் பிரதிகள், கதைகள் வெளியான இதழ்கள், டயரிகள், நோயாளிகளின் குறிப்பேடு, மருத்துவக் குறிப்புகள், பயணக் குறிப்புகள், வாசித்தப் புத்தகப் பட்டியல், நாடக நிகழ்வின் விளம்பரங்கள் என தனது வாழ்க்கைத் தொடர்பான அத்துணை ஆவணங்களையும், முறையாகப் பராமரித்துப் பாதுகாத்து வந்தவர் இவர்.

இவர்தான்
மாபெரும் ரஷ்ய எழுத்தாளர்


ஆண்டன் செகாவ்.