12 அக்டோபர் 2018

முத்தன் பள்ளம்





     ஒரு திருப்பத்தில் நான்கு ஆண்கள், தலைக்கு மேலாகக் கட்டிலைத் தூக்கிக் கொண்டு விரைந்து வந்து கொண்டிருந்தார்கள். நான்கு பேரும், கட்டிலின் நான்கு கால்களைப் பிடித்திருந்தார்கள்.

      அவர்களுக்குப் பின்னே இரண்டு பெண்கள், தலைவிரி கோலமாக ஓடி வந்தார்கள். அவர்களின் தலைமயிர்கள் கலைந்து விரிந்து கிடந்தன. அவர்களின் அழுகுரல் அத்தனை தூரம் தாண்டியும் சன்னமாகக் கேட்டது.


     நான் நடையை நிறுத்தி, அருகிலிருந்த ஒரு கருவேல மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு நின்றேன். அவர்கள் இடுப்பளவு தண்ணீரைக் கிழித்துக் கொண்டு என்னை நோக்கி வந்தார்கள்.

     அவர்கள் என்னை மிகவும் அருகினில் நெருங்கியிருந்தார்கள்.

     நான் அவர்களின் முகத்தைப் பார்த்தேன்.

      முகத்தில் பதற்றம் தெரிந்தது.

      கட்டிலில் ஒரு பருவப் பெண் படுத்திருந்தாள்.

     அவள் மீது ஒரு போர்வை கிடந்தது

     பாதங்கள் வெள்ளையாக இருந்தன.

     வெளியே நீண்டு கிடந்த கைகளில், களிமண் உலை காய்ந்தும், காயாமலும் இருந்தது.

     என்ன நடந்தது?

     கட்டிலின் முன்னம் கால்களைப் பிடித்திருந்தவர்களிடம் கேட்டேன்.

     அவர் நடையில் முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்ததால், நான் கேட்டிருந்த கேள்விக்கான பதில், பின் கால்களைப் பிடித்திருந்த ஒருவரிடமிருந்து வந்தது

     பாம்பு தீண்டிருச்சு ……

     என்ன பாம்பு

     நல்லது

     எங்கே கொண்டுக்கிட்டுப் போறீங்க ….?

     லைலன் கோன் பட்டிக்கு

     ஆஸ்பத்திரி இருக்கா?

     மந்திரிக்க …

----

     படிக்கப் படிக்க வேதனை மனதைக் கவ்விப் பிசைகிறது.

     இக்காலத்தில் இப்படியும் ஒரு கிராமமா?

     முத்தன் பள்ளம்

     தஞ்சாவூர், புதுக்கோட்டை சாலையில், அமைந்திருக்கும் கந்தர்வக் கோட்டைக்கு அருகில், இப்படியும் ஒரு கிராமம்.

     அறிவியல் வளர்ச்சியின் வாசனையினைத் துளியும் அறியாத கிராமம்.

     மனித வாழ்விற்குரிய அடிப்படை வசதிகள், ஏதுமற்ற ஒரு கிராமம்.

     நம்புவதற்கு மனம் மறுக்கிறது

     ஆனாலும் இது உண்மை, இப்படியும் ஒரு கிராமம் இருக்கிறது, என அடித்துச் சொல்கிறார் ஆசிரியர்.

     அதுமட்டுமல்ல,

முத்தன் பள்ளம் கிராமத்திற்கு ஒரு சாலை வசதி, மழைக்கும் வெயிலுக்கும் ஒழுகாத கூரை, பருவப் பெண்களுக்கேனும் ஒரு பொதுக் கழிப்பறை, குடியிருப்பதற்குப் பட்டா, அங்காடி, அங்கன் வாடி, பள்ளிக் கூடம், தேர்தல் காலத்திலேனும் வேட்பாளர்கள் வந்துபோக, ஒரு பொது வழிப்பாதை, வாழும் சந்ததியினருக்கு குறைந்தபட்ட மரியாதை, ஒன்றிய வரைபடத்தில் தனித்த இடம், இவற்றில் ஒன்றேனும், இக்கிராம மக்களுக்குக் கிடைக்க, யாரேனும் ஒருவர் காரணமாக இருப்பாராயின், அவரது திருவடிக்கு …..

     தன் நூலைப் படைத்திருக்கிறார்.

அண்டனூர்
சு.ராஜமாணிக்கம்



அண்டனூர் சுரா

நண்பரின் எழுத்தால்,
முத்தன் பள்ளம், முதன் முறையாக வெளிச்சம் பெற்றிருக்கிறது

நல்லது ஏதேனும் நடக்கட்டும்

வாழ்த்துகள் நண்பரே