06 ஜனவரி 2019

வலையுலக உறவுகளுக்கு …..




வலையுலக உறவுகளுக்கு அன்பு வணக்கம்.

     நலம்தானே.

     வலையுலகின் இன்றைய நிலை பற்றிச் சற்று நேரம், உங்களோடு உரையாட விரும்புகின்றேன்.


     வலைப் பூவில் எழுதுபவர்களின் எண்ணிக்கையும், வலைப் பூவின் வாசத்தை சுவாசிக்க, நேசிக்க வருபவர்களின் எண்ணிக்கையும், குறைந்து கொண்டே வருவதை நாம் அனைவருமே அறிவோம்.

     ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை, காலை நேரத்தில், கணினியைத் திறந்தால், பதிவுகள் மலை, மலையாய் கொட்டும்.

     அன்று வலையில் பிறந்தப் பதிவுகளைப் படிக்கவே நேரம் போதாது.

     மாலையில் வந்து பார்த்தாலோ, பகல் பொழுதெல்லாம் அருவியாய்  கொட்டியப் பதிவுகள், பெரும் ஏரியாய் ததும்பிக் கொண்டிருக்கும்.

     ஆனால் இன்று???

---

     தமிழ் மணம்

     வலைப் பூவின் மகோன்னதத் திரட்டி

     யாருக்கு எத்தனை வாக்கு?

      இம்மாதம் யார் முதலிடம்?

      இவ்வாரம் யார் முதலிடம்?

      பெரும் போட்டியே நடந்தது.

      ஆனால் இன்றும் தமிழ் மணம் இருக்கிறது.

      வாக்குரிமையற்ற வாக்காளர்களைக் குடிமக்களாகக் கொண்ட தமிழ்மணம் இன்றும் இருக்கத்தான் செய்கிறது.

       இருப்பினும் வாக்குரிமைப் பறிப்பால், தன் பழைய பொலிவை இழந்து, தன் பழைய வலுவினையும் இழந்து, இன்றும் ஏதோ இருக்கத்தான் செய்கிறது.

       வலைச்சரம்

       ஒவ்வொரு நாளும், புதுப்புதுப் பதிவர்களை அறிமுகம் செய்து வைக்கும் உன்னதப் பணியினைப் பெருமையாய் மேற்கொண்ட வலைச்சரம்.

      வலைச்சரத்தில் எழுத வாய்ப்புக் கிடைப்பதே, குதிரைக் கொம்பாய் இருந்த காலம், ஒரு காலம்.

      வலைச்சர அறிமுகத்தில் இன்று நம்மை யாரேனும் அறிமுகம் செய்து, நம் பதிவை வெளி உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டமாட்டார்களா, என ஏங்கிய காலம் ஒரு காலம்.

      வலைச்சரம் இன்று வாடிப் போய்விட்டது.

      ஏன் இந்த நிலை?

      நான் சற்றேரக்குறைய ஐநூறு வலைப்பதிவர்களின் பதிவுகளை, அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறேன்.

      ஆனால், நான் தொடரும் பதிவர்கள், கொஞ்சம் கொஞ்சமாய், வலையை விட்டு விலகிப் போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

      ஏன் இந்த நிலை?

       நேரமின்மை

       வாழ்வியல் பிரச்சனைகள் என ஏராளமானக் காரணங்கள் இருக்கலாம்.

      ஆனாலும், என் மனதில் ஒரே ஒரு காரணம் மட்டுமே முன் வந்து நிற்கிறது.

      எழுதுபவர்களை உற்சாகப்படுத்தத் தவறிவிட்டோம்.

      பாராட்ட மறந்து விட்டோம்.

      சபாஷ்

      பலே

      அருமை

      ஒரே ஒரு வார்த்தை போதும், எழுதுபவர்களுக்கு உற்சாகம் ஊட்ட, மேலும் மேலும் எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை ஊட்ட.

      பாராட்டுகள் குறைந்து விட்டன

      கை தட்டல்கள்  ஒலி இழந்து விட்டன.

      வலைப் பூவின் கருத்துரைப் பெட்டியில் ஐம்பது, நூறு எனக் குவிந்தப் பாராட்டுரைகள், கை தட்டல்கள், இன்றோ பத்து, இருபது என இளைத்துப் போய்விட்டன.

      வலையில் எழுதுபவர்கள்கூட, மற்றப் பதிவர்களை உற்சாகப் படுத்தத் தவறுகிறார்களோ என்ற எண்ணம், மேலெழுந்து நிற்கிறது.

      நண்பர் ‘ஸ்ரீராம் அவர்களின் எங்கள் பிளாக் போன்ற, ஒரு சில வலைப் பூக்கள் மட்டுமே, எனக்குத் தெரிந்தவரை, தங்களுக்கென ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு, மலர்ந்து மணம் வீசுகின்றன.

     இதற்குக் காரணம், நண்பர் ஸ்ரீராம் போன்றவர்கள், தங்கள் வலை உறவுகளிடம் காட்டும் தனி நேசம், பாசம்.

      வலையில் கோலேச்சியவர்கள் பலர், இன்று முகநூலின் கரையில் ஒதுங்கிவிட்டனர்.

      காரணம். ஒரு சிறு பதிவு, ஒரு ஒற்றை வார்த்தை, ஒற்றைப் படம் முக நூலில், முகம் காட்டிய அடுத்த நொடி, லைக்குகள் மலை மலையாய் குவிகின்றன.

      முக நூல் பதிவர்களுக்கு இந்தப் பாராட்டுகள் உற்சாகத்தை வாரி வழங்குகின்றன.

       முக நூல் மலந்து கொண்டே இருக்கிறது

       வலைப் பூ வாடி வதங்கிக் கொண்டே இருக்கிறது.

---

    

வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன்

     வலைப் பதிவர்களின் உற்சாக பாணம்

     வலைப் பதிவர்களைப் பாராட்டுவதற்கென்றே அவராதம் எடுத்த அற்புத மனிதர்.

      இவரால்தான் என் போன்ற பலர், இன்னும் வலைப் பூவில் ஒட்டிக் கொண்டிருக்கிறோம்.

      அன்று முதல் இன்று வரை, இவர் தன் கரங்களால் கை தட்டிக் கொண்டே இருக்கிறார்.

      நாமும் இவரோடு சேர்ந்து, நம் கரங்களையும் இணைத்து ஒலி எழுப்பினால், இணையமே அதிருமல்லவா?

      புத்துணர்ச்சி பிறக்குமல்லவா?

       புது ரத்தம் சுரக்குமல்லவா?

       என்ன செய்யப் போகிறோம்???????????