11 ஏப்ரல் 2019

நில மகள் 4
      உன்னால் முடியும், எழு, நட

     தமிழ் ஆணையிட்டது.

    கைப் பிடித்துத் தூக்கி விட்டது.

    மெல்ல, மெல்ல நடக்கலானார்.

    பள்ளி செல்லலானார்.


    மாணவியாய் பள்ளி சென்றவர், செம்மையாய் படித்துத், தன் தந்தையைப் போலவே ஆசிரியரும் ஆனார்.

     பிறந்தது முதலே, தமிழோடு தவழ்ந்ததால், தமிழோடு வளர்ந்ததால், இயற்கைக்கும், அறிவியலுக்கும் உள்ள தொடர்பைத், தமிழால் உணர்ந்தார்.

     பாழ்பட்ட நிலங்களை மீட்கும் வழிமுறைகளை தமிழால் அறிந்தார்.

     2004 இல் ஆழிப் பேரலை, நாகையை கபளீகரம் செய்தது.

     விளை நிலங்கள் எல்லாம், உவர் நிலங்களாய் மாறின.

     வயல்வெளி எங்கும் உப்பின் அடர்த்தி வெகு வேகமாய் உயர்ந்தது.

     தொழில் நுட்பக் குழுவினர் வந்தனர்.

     ஆய்வு செய்தனர்.

      கோடி கோடியாய் செலவு செய்தாலும், விளை நிலங்களை மீட்க குறைந்தது பத்து ஆண்டுகளாவது ஆகும் என கணித்தனர்.

      ஆண்டுகள் பத்து கடந்தாலும், முழு உத்திரவாதத்திற்கு இடமில்லை என நழுவினர்.

      அரசு திகைத்தது..

      இந்நிலையில்தான், விளை நிலங்களை மீட்டுத் தருகிறேன் என தமிழ் மகள் களமிறங்கினார்.

      ஆனால் ஆதரிக்கத்தான் யாரும், தயாராக இல்லை.

       பழந்தமிழரின் வேளாண்மை முறையினைப் பயன்படுத்தி, இந்நிலங்களை மீட்க இயலும், நமது இலக்கியங்களில் இதற்கான வழி முறைகள் கூறப்பட்டுள்ளது, வழி இருக்கிறது என்றார்.

        அரசாங்கத்தினர் தயங்கினர்

         மக்களோ, வாருங்கள், விளை நிலங்களை. மீட்டுத் தாருங்கள், எங்கள் வாழ்வாதாரத்தைச் செம்மையாக்கி, சீர்படுத்தித் தாருங்கள் என அழைத்தனர்.

       நாகை மாவட்ட ஆட்சியருக்கு, இவரிடத்தில் ஓர் நம்பிக்கை பிறக்க, ஒரு சிறு பகுதியில் செயல்படுத்திக் காட்டுங்கள். பின்னர் மற்ற பகுதிகளுக்கும் விரிவு படுத்துவோம் என்றார்.

       பொய்கை நல்லூர்.

        நாகையை அடுத்த பொங்கை நல்லூர் என்னும் சிற்றூர், தமிழ் மகளை இருகரம் நீட்டி அழைத்தது.

         வயலில் இறங்கினார்.

          பணியைத் தொடங்கினார்.

          தமிழ் மகளின் ஒவ்வொரு செயலுக்கும், மீட்டெடுக்கும் முயற்சிக்கும், இயற்கை உடனிருந்து உதவியது.


        

விளை நிலங்களை,உயர் நிலங்களாய் உருமாற்றிய அதே இயற்கை, தன் மனம் மாறி, அழைக்கும் பொழுதெல்லாம், மழையாய் பொழிந்து, விளை நிளங்களையும், மக்கள் மனங்களையும், குளிர வைத்தது.

         மழை பெய்தால் பணி சிறக்குமே, மண் செழிக்குமே என தமிழ் மகள் நினைக்கும் பொழுதெல்லாம், மேகம் மழையாய் மாறி, மகிழ்வோடு அரவணைத்தது.

        விதையிட்டிருப்பதால், ஒரு வாரத்தற்கேனும், மழையின்றி இருப்பின், பயிர் செழிக்குமே, தழைக்குமே என்று எண்ணினால், மழையும் விடுமுறை எடுத்து, வேறு திசை சென்று காத்தது.

       தமிழ் மகளுடன், மழை மகளும் கைகோர்க்க, பிறகென்ன வெற்றிதான்.

       மூன்றே மாதங்களில் 3,000 ஏக்கர் நிலம் மீட்கப் பட்டது.

       செய்தியறிந்து நாளிதழ்களும், வார இதழ்களும், தொலைக் காட்சிகளும் நாகையில் முகாமிட்டன.

        செய்தி மெல்ல மெல்ல பரவியது.

        உலகே வியந்து போய் மூக்கில் விரல் வைத்து அமர்ந்தது.

        

இளைஞர்களின் எழுச்சி நாயகர், முன்னார் குடியரசுத் தலைவர் மேதகு ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் நாகைக்கு வந்தார்.

         பார்த்தார்

      உவர் நிலங்கள், விளை நிலங்களாய் மாறிய, அதிசயத்தை, அற்புதத்தைக் கண்ணாரக் கண்டார்.

        மகிழ்ந்து, உள்ளம் நெகிழ்ந்து பாராட்டினார்.

        வாஷிங்டன், இறக்கைக் கட்டிப் பறந்து வந்து, நாகையில் இறங்கியது.

       ஆம். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், நாகைக்கே வந்தார்.

        நாகையோடு நின்று விடாதீர்கள்.

         சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் வாருங்கள்,வாருங்கள் என அழைத்தும் ‘சென்றார்.

       2006 இல் இந்தோனேசியா

       2007 முதல் 2009 வரை இலங்கை.

        இந்தியாவில் மட்டும், இதுவரை இவர் பயணித்திருக்கும் தூரம் இரண்டு இலட்சத்து, ஐம்பதாயிரம் கிலோ மிட்டர்.

       இதுவரை பதினோறு இலட்சம் விவசாயிகளை நேரில் சந்தித்திருக்கிறார்.

        பண்டைத் தமிழரின், இயற்கை வேளாண்மை முறைகளை, இவர்களிடத்தில் விதைத்திருக்கிறார்.

தமிழ் மகள்
நில மகள்
இளம் பிள்ளை வாதக் கால்
தேயத் தேட
வயல் வெளிகளில்
நடந்து கொண்டே இருக்கிறார்.

இவர் பாதம் பட்ட
பூமி எல்லாம்
பசுமையாய்
செழுமையாய்
வளமையாய்
மாறிக் கொண்டே இருக்கிறது.

இவர்தான்,
நம்
தமிழ் மகள்
நம்
திரு மகள்
நம்
நில மகள்திருமதி மா.இரேவதி.

இவரை வாழ்த்த, தகுந்த வார்த்தைகள் இல்லை என்னிடத்தில்
இவரைப் போற்ற போதிய வார்த்தைகள் இல்லை என்னிடத்தில்,
இருப்பினும்,
மனமார வாழ்த்துவோம்
நெஞ்சாரப் போற்றுவோம்
தமிழ் போல் வாழ்க வாழ்க
என
வாழ்த்துவோம்,    போற்றுவோம்23 கருத்துகள்:

 1. படிக்க படிக்க கண்கள் பணிக்கின்றன நண்பரே. இவர் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன் .

  பதிலளிநீக்கு
 2. இவர் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க பிறந்த பெண்மணியே...
  வாழ்க பல்லாண்டு.

  பதிலளிநீக்கு
 3. அவர் நீடூழி வாழட்டும்.... அவரது திறமைக்குத் தலைவணங்குகிறேன்...

  மிகச் சிறப்பாக சொல்லிய உங்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 4. மனமார வாழ்த்துவோம் நெஞ்சாரப் போற்றுவோம் தமிழ் போல் வாழ்க வாழ்க என வாழ்த்துவோம், போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 5. இதுவ‌ரை அறிந்திராத செய்தி! ஆனால் மனதை நெகிழச் செய்த செய்தி! ஊனமுற்ற மனங்களிடையே உடற்குறையை வென்று சாதனைகளும் அற்புதங்களும் புரிந்து வரும் இந்தப்பெண்மணியை போற்றுகிறேன். ஒரு பெண்ணாய் இங்கு பெருமிதமடைகிறேன்! இவர் பல்லாண்டுகள் வாழ்ந்து நற்பணிகள் ஆற்றிட மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்!

  மிக நல்லதொரு தகவலை அளித்த உங்களுக்கும் இனிய நன்றி!

  பதிலளிநீக்கு
 6. அற்புதமான ஒருவரை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. இப்படி ஒருவரை பெற்றெடுத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்! இவர் உழைப்பு அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும்!

  பதிலளிநீக்கு
 7. நிலமகளைப் பற்றிய, வழக்கமான உங்கள் பாணியில், ஆழமான செறிவான பதிவு. போற்றுதற்குரியவரை அறிமுகப்படுத்துகின்ற உங்களது பணி சிறக்க வாழ்த்துகள். அனைவருக்கும் அவர் ஒரு முன்னுதாரணம்.

  பதிலளிநீக்கு
 8. நிலமகளை வணங்க வேண்டும். பாராட்ட வேண்டும்.

  காணொளி மிக அருமை.
  அவர் பேச்சு நம்பிக்கையான பேச்சு. விவசாயிகளுக்கு ஒரு வரபிரசாதம்.

  பதிலளிநீக்கு
 9. திருக்குறளில் இருக்கிறது எல்லாம் என்பது திண்டுக்கல் தனபாலனுக்கு மகிழ்ச்சியை தரும்.

  பதிலளிநீக்கு
 10. அவர்களின் பேச்சு அனைவரும் கேட்க வேண்டும்.
  உங்களுக்கு மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. நான் வழமையாகச் சொல்வதுதான். உங்கள் பக்கம் வந்தால் எதையாவது பெறாமல் செல்ல மாட்டேன். நானும் இப்பெண்மணியை போற்றுகின்றேன்

  பதிலளிநீக்கு
 12. அருமையா ஒருவரை அடையாளம் காட்டியதற்கு மிக்க நன்றி.

  எங்கள் வணக்கங்கள், பாராட்டுகள்
  உங்களுக்கும் நன்றியுடன் பாராட்டுகள் இப்படிச் சிறப்பான ஒரு நிலமகளை அறிமுகம் செய்தமைக்கு

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 13. உங்கள் பாணியில் நில மகளை அடையாளம் காட்டியதற்கு நன்றி ஐயா.
  அவரைப் போற்றி வணங்குவோம்

  பதிலளிநீக்கு
 14. காணொளி இணைப்பில் உரை கேட்டேன்.
  இப்போது நாம் சொல்லலாம்: தமிழனென்று

  பதிலளிநீக்கு
 15. தொடரட்டும் இவர் பணி உறு துணையாய் இருக்க விவசாயிகள் முனையட்டும்

  பதிலளிநீக்கு
 16. சிறப்புக்குரிய நிலமகள் இவர். வணங்கவும் போற்றவும் தக்கவர். என்னுடைய அன்பும் பாராட்டும் இவருக்கு

  பதிலளிநீக்கு
 17. அருமையான பதிவு. நன்றி. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 18. படிக்கும் போதே புல்லரித்துப்போகிறது!

  பதிலளிநீக்கு
 19. அறிந்திராத செய்தி! நிலமகளுக்கு வாழ்த்துகள். நீடூழி வாழ்க!

  பதிலளிநீக்கு
 20. தமிழ் போல் வாழ்க வாழ்க என வாழ்த்துவோம், போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 21. நல்லவர்களை அறிமுகம் செய்வதில் உங்கள் பணியே தனித்தன்மை உடையது. பாராட்டுகள்.

  முதல்முறையாக இவரைப் பற்றிக் கேள்விப்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
 22. பெருமைக்குரிய பெண்ணைப் போற்றுவோம் பெறுமதியான ஆக்கம். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு