திருக்குறள்
உலகப் பொதுமறை
இது உலகமே ஏற்றுக் கொண்ட கருத்து
ஆனால் திருவள்ளுவர்
திருவள்ளுவர் யார்?
தமிழரா?
கிறித்துவரா?
சமணரா?
பல்வேறு விதமான விவாதங்கள் நடக்கத்தான் செய்கின்றன.
இந்த விவாதங்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க
வேண்டுமல்லவா?
அதற்கான முயற்சி அரங்கேறியது
1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி
சென்னை, எல்டாம்ஸ் சாலை
கிறித்துவக் கலையைரங்கு
36 அறிஞர்கள் ஒன்று கூடினர்
பண்ணாராய்ச்சி வித்தகர் சுந்தரேசனார், பன்மொழிப்
புலவர் கா.அப்பாதுரையார், மூதறிஞர் வ.சுப.மாணிக்கம், தவத்திரு குன்றக்குடி அடிகளார்,
ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி, புலவர் குழந்தை, பேராசிரியர் மா.நன்னன், எஸ்.எம்.டயஸ்,ஐ.ஏ.எஸ்.,
க.த.திருநாவுக்கரசு, வெள்ளை வாரணனார், திருக்குறள் முனுசாமி போன்ற பேரறிஞர்கள்
ஒன்று கூடினர்.
விவாதித்தனர்
விரிவாய் விவாதித்தனர்
போர் செய்தனர்
சொற்போர் புரிந்தனர்
சொற்போரின் நிறைவில், கூட்டத் தலைவர், வாதப்
பிரதிவாதங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து, தெளிந்த ஆய்வுரையினை வழங்கித், தன் தீர்ப்பினை
வழங்கினார்.
ஆண்டான்றுதோறும்,
நாடுதோறும், அறிஞர்கள், ஞானிகள் தோன்றுவது உண்டு. அவர்களுக்குத் தோன்றும் கருத்துக்கள்,
சிந்தனைகள், சமூகத்தைப் பிரதிபலிப்பதாக, மாந்தர்களை வழி நடத்துவதாக இருப்பது இயல்பு.
இதில் ஞானிகளிடையே ஒத்திசைவுக் கருத்தும் இருக்கலாம்.
காலப் பொருத்தத்தைக் கொண்டு, வள்ளுவர் கிறித்துவர்
என்பதை ஒதுபோதும் ஏற்க இயலாது.
திருவள்ளுவர் தனித்துவமிக்க சிந்தனையாளர்.
இந்தத் தமிழ் மண்ணின் மகான்.
திருவள்ளுவர் சந்தேகத்திற்கு இடமின்றி, ஒரு தமிழர்தான்
என்றத் தெள்ளத் தெளிவானத் தீர்ப்பை, ஒரு கிறித்துவக் கலையரங்கில் வழங்கியவர் யார் தெரியுமா?
ஒரு கிறித்துவர்
பெயர்
தேசநேசன்
கவிபாடும் திறமை பெற்றதால், கவிவாணன் என்ற பட்டம்
பெற்றவர்
தேவநேசக் கவிவாணன்
சொல்லாராய்ச்சி அறிஞர்
நாற்பதிற்கும் மேலான மொழிகளின் சொல் இயல்புகளைக்
கற்றுத் தேர்ந்த, பன்மொழி வித்தகர்
மறைமலை அடிகளாரின் வழியின் நின்று, தனித் தமிழ்
இயக்கத்திற்கு, அடிமரமாய், ஆழ் வேராய் விளங்கியவர்
தேவநேசக் கவிவாணன்
இவர்தான்
தேவநேயப் பாவாணர்
---
நண்பர்களே, ஓலைச்சுவடிகளில் உயிர் வாழ்ந்திருந்த திருக்குறள், அச்சு வாகனம்
ஏறி, புது உரு பெற்றது எப்பொழுது தெரியுமா?
இன்றைக்கும் 208 ஆண்டுகளுக்கும் முன்.
1812 இல் திருக்குறள் ஓலையில் இருந்து, தாளுக்குத்
தாவி, நூலானது.
திருக்குறளினை முதன் முதலில் அச்சேற்றியவர் யார்
தெரியுமா?
தஞ்சையைச் சார்ந்தவர்
ஆம், தஞ்சையைச் சார்ந்தவர்
எனது தஞ்சையைச் சார்ந்தவர்
அச்சு வாகனம் ஏறி, 77 ஆண்டுகள் கடந்த நிலையில்,
திருக்குறளுக்கு ஒரு சோதனை வந்தது.
1889 ஆம் ஆண்டு ஆங்கிலேயரான ஸ்காட் வடிவில் ஒரு சோதனை வந்தது.
தமிழ் கற்று, தமிழின்பால் தீராதக் காதலில் வீழ்ந்த,
ஆங்கிலேயரான ஸ்காட் என்பார், திருக்குறளுக்கு உரை எழுதி அச்சிட்டும் வெளியிட்டார்.
எழுசீர் வெண்பா வகையில் இருந்த குறளை, எதுகை
மோனை வடிவில் மாற்றி எழுதி வெளியிட்டார்.
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி
பகவன் முதற்றே உலகு
என்னும்
குறளை
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி
முகர முதற்றே உலகு
என
எதுகை மோனை வடிவில் மாற்றினார்.
ஒவ்வொரு குறளையும் இதுபோல் மாற்றினார்
தொன்மை வாய்ந்த குறளுக்கு இது ஆபத்தல்லவா என்பதை
உணர்ந்த, பாலவந்தம் ஜமீன்தார், மதுரைத் தமிழ்ச்
சங்கத்தை நிறுவியப் பெருமைக்கு உரிய, பாண்டித்துரை தேவரும், அவருடைய சகோதரர் பொன்னுசாமி தேவரும் கொதித்து எழுந்தனர்.
அச்சேறிய
அத்துணைப் பிரதிகளையும் விலை கொடுத்து வாங்கினர்
அத்துணை பிரதிகளையும், ஆங்கிலேயர் ஸ்காட் முன்னிலையிலேயே,
தீயிலிட்டு அழித்தனர்.
வியப்பாக இருக்கிறதல்லவா?
திருக்குறள் பற்றிய எண்ணற்ற அரிய செய்திகளை,
தன்னகத்தே கொண்ட, ஒரு சீரியக் கட்டுரையினைப் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.
படித்துப் படித்து நெகிழ்ந்து போனேன்
திருக்குறள் போற்றுதும், திருக்குறள்
போற்றுதும்
இக்கட்டுரையினைத் தாங்கிய நூல்
திருச்சி, ரயில்வே
காவல் கண்காணிப்பாளர்
முனைவர் த.செந்தில்குமார் அவர்களின்
பெரிதினும் பெரிது
கேள்.