28 டிசம்பர் 2020

தமிழவள் இருக்கை

 


     ஆண்டு 1944.

     மார்ச் மாதம் 28 ஆம் நாள்.

     தஞ்சாவூர்.

     இராஜகோபாலசாமி கோயில் தெரு.

     2659 என்ற எண்ணுள்ள மாடி வீடு.

     வீட்டுத் திண்ணையில், மறுநாள் நடக்க இருக்கும் தேர்விற்கான நுழைவுச் சீட்டில், தங்கள் கல்லூரி முதல்வரிடம் கையொப்பம் பெறுவதற்காக வந்த, மாணவர்கள் சிலர் காத்திருக்கின்றனர்.

     மாடியில் உள்ள தாழ்வாரத்தில், கிழக்கு நோக்கி இருந்த நாற்காலியில், மிகுந்த களைப்புடன் அமர்ந்திருக்கிறார் முதல்வர்.

   

  தமிழுக்காகவே வாழ்ந்து வரும் இவரைத் தேடி வந்து, இருபது ஆண்டுகளுக்கும் முன், இவரிடம் அடைக்கலமானது ஆஸ்துமா.

     கடந்த 16 வருடங்களாக, நல்ல பிள்ளையாய் அடங்கி, ஒடுங்கி ஒளிந்திருந்த ஆஸ்துமா, கடந்த நான்கு வருடங்களாக, பொல்லாப் பிள்ளையாய் மாறி, இழைப்பையும், இருமலையும் பரிசாய் கொடுத்து, முடிந்தவரை, இவரைப் பாடாய் படுத்தியது.

     பார்க்காத மருத்துவமில்லை.

     ஆனாலும் பலனில்லை.

     இவர் ஒரு நாவலர்.

     சொற்பொழிவில் வித்தகர்.

     மேடையேறி சொற்பெருக்காற்றத் தொடங்கிவிட்டால், ஆஸ்துமா அலறியடித்துக் கொண்டு ஓடிவிடும்.

     தமிழின் முன் எத்துன்பமும் இவருக்கு ஒரு பொருட்டல்ல.

     ஆனாலும் இன்று சற்று களைப்பு அதிகமாய் தெரிய, அமைதியாய் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.

     திண்ணையில் அமர்ந்திருந்த மாணவர்களுள், ஒரு மாணவன் மட்டும், வீட்டிற்குள் நுழைந்து, படியேறி மாடிக்குச் செல்கிறார்.

     நாற்காலியில் அமைதியாய் முதல்வர்.

     அம்மாணவனும், குரல் கொடுத்து, அமைதியைக் கலைக்காமல், அருகில் போய் நிற்கிறார்.

     சிறிது நேரத்தில், முதல்வரின் தலை மெல்லப் பின்னோக்கி சாய்கிறது.

     முதல்வர் உறக்கத்தில் இருக்கிறார் என்று எண்ணிய, அம்மாணவன் மெதுவாய், ஆசிரியரின் பின் சென்று, தலையினைத் தாங்கிப் பிடித்துக் கொள்கிறார்.

     முதல்வர் தூக்கம் கலையாமல் ஓய்வெடுக்கடும் என்று தலையைப் பிடித்த  வண்ணம் நிற்கிறார்.

     திருவையாற்றில் இருந்து, முதல்வரைக் காண்பதாற்காக வந்த, சேதிராயர் என்பவர், முதல்வர் மாடியில் இருப்பதை அறிந்து, படியேறி மாடிக்கு வருகிறார்.

     முதல்வரைப் பார்க்கிறார்.

     சாய்ந்த தலை.

     தலையைத் தாங்கியபடி ஒரு மாணவன்.

     சேதிராயரின் உள்ளுணர்வு, ஏதோ எச்சரிக்க, அலறி அடித்துக் கொண்டு ஓடி, மருத்துவரை அழைத்து வருகிறார்.

     மருத்துவர் வந்த பொழுது, உடல் மட்டுமே மீதமிருந்தது.

     தமிழும், உயிரும் உடலை விட்டுப் பிரிந்திருந்தது.

---

     இவர், தனது, நக்கீரர், கபிலர் போன்ற நூல்களினால் உரைநடைக்கு ஒரு இலக்கணம் நிறுவியவர்.

     சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு, திருவிளையாடற் புராணம் ஆகிய பெருநூல்களுக்கும், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி முதலான குறு நூல்களுக்கும் உரை கண்டவர்.

     அகத்தியர் தேவாரத் திரட்டிற்கு உரை திருத்தம் செய்தவர்.

     வேளிர் வரலாறு ஆராய்ச்சி, கண்ணகி வாழ்வும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் கண்டவர்.

     பல்லவர்கள் மற்றும் சோழ மன்னர்களின் வழி வந்தவர்களே, கள்ளர்கள் என்பதைத் தகுந்த தரவுகளை முன்னிறுத்து மெய்ப்பித்துக் காட்டி, தான் பிறந்த கள்ளர் மரபின் வரலாற்றுப் பெருமையை, உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நன்நோக்கில் கள்ளர் சரித்திரம் படைத்தவர்.

     இத்தகு பெருமை வாய்ந்த இந்தத் தமிழறிஞர், திருச்சி எஸ்.பி.ஜி., கல்லூரியில், அதாவது இன்றைய பிஷப் ஹீபர் கல்லூரியில், தலைமைத் தமிழாசிரியராய் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், 1912 ஆம் ஆண்டில், திருச்சி மலைக்கோட்டை, வன்னியடித் தெருவில் இருந்த, இவரது இல்லம் தேடி வருகிறார் ஒரு பெருங்கவிஞர்.

     இடுப்பிலே வேட்டி.

     மேல் சட்டையின்றி, ஒரு போர்வையைப் போற்றியவாறு வருகிறார்.

     சிலப்பதிகாரத்தில் சில சந்தேகங்கள், தொல்காப்பியத்தில் பல ஐயங்கள் எனக்கூறி, ஒவ்வொன்றாய் முன்வைக்கிறார்.

     நொடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணிகளாகி, பல மணி நேரங்கள் நகர்கின்றன.

     நற்றமிழ் வித்தகரும், நா வன்மையில் நாவலருமாகிய, தலைமைத் தமிழாசிரியரிடமிருந்து, அருவியாய் கொட்டிய பதில்களில், கவிஞரிடம் அதுநாள் வரை ஒடிக்கொண்டிருந்த, தீர்க்க இயலா சந்தேகங்களும், உள்ளத்தை வாட்டிய ஐயங்களும் கரைந்து போகின்றன.

     பெருங்கவிக்குப் பெரு மகிழ்வு.

     பெரிதாய் வணங்கி, வாழ்த்தி விடைபெறுகிறார்.

     பலமணி நேரம், வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, இருபெரும் தமிழ் மலைகள் பேசிய பேச்சுக்களில் மயங்கிய, அந்தத் தெருவாசிகளுக்கு ஒரு சந்தேகம்.

      மேல் சட்டையின்றி, போர்வையைப் போர்த்தியவாறு வந்த இம் மனிதர் யார்?

     இவரை எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே என்ற ஓர் ஐயம்.

     வாய்விட்டுக் கேட்டனர்.

      திரும்பி வந்த பதில் கேட்டுத் திகைத்தனர்.

     சிலப்பதிகாரத்திலும், தொல்காப்பியத்திலும் தனக்கேற்பட்ட ஐயங்களைக் களைய, இத்தமிழாசிரியரைத் தேடிவந்தவர்,


மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

ஆம், மகாகவி பாரதியார்.

---

      தமிழாசிரியராய், தலைமைத் தமிழாசிரியராய், பேராசிரியராய், முதல்வராய் என, பல நிலைகளில் பணியாற்றி, இணையில்லா நயமும், நாவன்மையும் கொண்ட, செந்தமிழ்ச் சொற்பொழிவாளராய், உரையாசிரியராய், தமிழாய்வாளராய், தமிழ்க் கடலாய், கல்விக் கடலாய் வாழ்ந்த இவர், பள்ளி சென்று படித்தது என்னவோ, வெறும் நான்காம் வகுப்பு வரை மட்டும்தான்.

     வியப்பாக இருக்கிறதல்லவா?

     நம்ப முடியவில்லை அல்லவா?

     உண்மை.

     நம்பித்தான் ஆக வேண்டும்.

     தானே படித்தார்.

     கற்றுத் தேர்ந்தார்.

     ஒரு முறை, இவரது இல்லத்திற்கு வந்த, திரு ஐ.சாமிநாத முதலியார் என்பார், மதுரையில் தமிழ்ச் சங்கம் ஒன்று நடைபெற்று வருகிறது. அச்சங்கத்தின் சார்பில், தமிழ்ப் புலமையில் சிறந்த அறிவாளிகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக, பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் என மூன்று தேர்வுகளை நடத்தி வருகிறார்கள். நீங்கள் அத்தேர்வுகளை எழுத வேண்டும்.

     ஒவ்வொரு தேர்விற்கும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தின், சேதுபதி செந்தமிழ்க் கலாசாலையில், இரண்டு இரண்டு ஆண்டுகள் படித்தாக வேண்டும்.

     முழுதாய் ஆறு ஆண்டுகள் படித்தாலும், இம்மூன்று தேர்வுகளில் வெற்றி காண்பது என்பது எளிதானது அல்ல.

     மிகவும் சவாலானது.

     ஏனெனில் அதன் பாடத் திட்டம் அப்படிப்பட்டது.

     இத்தேர்வுகளை, இக்கலாசாலையில் பயிலாத மாணவர்களும், நேரடியாக எழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.

     தேர்வு எழுத மதுரைக்குத்தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

     திருச்சியிலும் எழுதலாம் என்றார்.

     இவர் அப்பொழுதே தேர்வுகளை எழுதுவது என்று முடிவு செய்தார்.

     வீட்டில் இருந்தே, படித்து, தேர்வுகளை எழுதுவது என்று முடிவு செய்தார்.

     அந்நொடி முதல், அந்நிமிடம் முதல் , தமிழே இவரது சுவாசமய் மாறிப் போனது.

     இவரது தந்தையார், இவர் படிப்பதற்கென்றே, வீட்டின் மாடியில் இருந்த ஒரு அறையை, இவருக்காக ஒதுக்கிக் கொடுத்தார்.

     தமிழவள் இருக்கை.

     தன் அறைக்குக் கூடத் தனித் தமிழில் சூட்டினார்.

     தமிழவள் இருக்கையில் அமர்ந்து, நேரம் மறந்து, காலம் மறந்து படிக்கத் தொடங்கினார்.

     ஆறு ஆண்டு காலத் தேர்வுகளை, மூன்றே மூன்று ஆண்டுகளில் எழுதினார்.

     1905 ஆம் ஆண்டு பிரவேச பண்டிதர்.

     1906 ஆம் ஆண்டு பால பண்டிதர்.

     1907 ஆம் ஆண்டு பண்டிதர்.

     இதற்காக, 1906 ஆம் ஆண்டில், தொடங்கப் பெற்ற, தன் திருமண ஏற்பாடுகளைக் கூட, தள்ளி வைத்தார்.

     முதலில் தேர்வு.

     பின்னரே திருமணம்.

     உறுதியாய் நின்றார்.

     வென்றார்.

      மூன்று வருடங்களில், மூன்று தேர்வுகளிலும், முதல் மாணவனாய் தேறினார்.

     பண்டிதர் ஆனார்.

     இம்மூன்று தேர்வுகளிலும் முதன்மையாளராய் வருபவர்க்குத் தங்கப் பதக்கத்தினையும், கையில் அணியும் தங்கத் தோடாவையும் பரிசாய் வழங்கி பெருமைப்படுத்தி வந்தது மதுரைத் தமிழ்ச் சங்கம்.

     1907 ஆம் ஆண்டு நடைபெற்ற பரிசு வழங்கு விழாவிற்குத் தலைமையேற்றவர், புதுக்கோட்டை மன்னருடைய தம்பியாகிய, தட்சிணாமூர்த்தி துரைராஜா அவர்கள்.

     இருப்பினும், விழாத் தலைவர் அவர்கள் பரிசளிக்க எழுந்தபோது, மதுரைத் தமிழ்ச் சங்கம் கண்ட, பாண்டித்துரை தேவர் அவர்கள், தானே விரைந்து எழுந்து, தன் கரங்களாலேயே, தங்கப் பதக்கத்தினையும், தங்கத் தோடாவினையும் அணிவித்து மகிழ்ந்தார்.

     இவர் மூன்று தேர்வுகளிலும் முதன்மையாளராய் வந்து, தங்கப் பதக்கத்தையும், தங்கத் தோடாவையும் வென்றதை அறிந்த, கவியோகி சுத்தானந்த பாரதி அவர்கள், தன் கவி வரிகளால் இவரை வாழ்த்தினார்.

வேங்கடசாமி நாட்டார் வித்தகருள் வேந்தர்

பாங்குடனே பாடுபட்டுப் பைந்தமிழைக் கற்றார்

ஓங்குபுகழ் பாண்டித்துரை ஒண்பரிசு நல்க

தாங்கு புகழ் மேவியவர் தனக்குவமை யில்லார்.

ஆம், இவர்தான்

பண்டித, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்.

தஞ்சையின் நடுக்காவேரியில்

பிறந்தவர்.

நான்காம் வகுப்புவரை மட்டுமே பள்ளியில் பயின்றவர்.

திருச்சி பி.எஸ்.ஜி., கல்லூரியில்

தமிழாசிரியராய்

தலைமைத் தமிழாசிரியராய்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்

பேராசிரியராய்.

பணியாற்றியவர்.

தன் பணி ஓய்விற்குப் பிறகு,

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்

கரந்தைப் புலவர் கல்லூரியின்

முதல் முதல்வராய்

நான்காண்டுகள்

ஊதியம் ஏதுமின்றி,

தன் இறுதி மூச்சு உள்ளவரை

பணியாற்றியவர்.

 

1911 ஆம் ஆண்டு

கரந்தைத் தமிழ்ச் சங்கம்

தோற்றம் பெற்ற பொழுது,

அதன்

தொடக்க விழாவிற்குத்

தலைமையேற்றவரும்

இவர்தான்.

---

தமிழையே

தன் தவ வாழ்வாய்

வாழ்ந்து

தன் இறுதி நாள் வரை

தமிழுக்காகவும்

கல்விக்காகவும்

துடித்திட்ட

பண்டித, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்களின்

இதயம்.

1944 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 28 ஆம் நாள்,

தன் துடிப்பை நிறுத்தி,

ஓய்வெடுக்கத் தொடங்கிய செய்தி,

தமிழ்கூறும் நல்லுலகத்தையே

துடிதுடிக்கச் செய்தது.

நடுக்காவேரி கண்ணீரால் நனைந்தது.

நாவலர் நாட்டார் ஐயா அவர்களின்

பொன்னுடல்

பூமியினுள்

வித்தாய்

இறங்கிய

மறுநாளே,

பணிகள் தொடங்கின.

அவ்விடத்தில்

விருட்சமாய்

எழுந்தது

ஒரு கற்றளி .

தமிழகத்துத் தற்காலத் தமிழறிஞர்

ஒருவருக்காக

முதன் முதலில்

எழுப்பப்பெற்ற கற்றளி.

இன்றும்

நாட்டார் ஐயா திருக்கோயிலாய்

தமிழ்போல்

தலை நிமிர்ந்து நிற்கிறது.

---

பண்டித நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள்,

தமிழ் பயின்ற

தமிழவள் இருக்கையினையும்,

நாட்டார் ஐயா திருக்கோயிலையும்

கண்ணாரக் கண்டு மனதார வணங்கி மகிழவேண்டும் என்ற நெடுநாள் கனவிற்கு உரு கொடுக்க, கடந்த 26.12.2020 சனிக் கிழமை காலை, நானும், நண்பர் திரு பா.பால்ராஜ் அவர்களும், தஞ்சாவூர் திருவையாறு சாலையில் பயணித்து, கண்டியூரில் இடதுபுறம் திரும்பினோம்.

      சரியாக 7 கி.மீ., தொலைவில் நடுக்காவேரி.


     



இதோ நாட்டார் ஐயா அவர்களின் இல்லம். கடந்த 250 ஆண்டுகளாக பூட்டப்படாத கதவுகளைக் கொண்ட,  பூட்டுவதற்கான தாழ்பாள் என்ற அமைப்பே பொருத்தப் படாத, நாட்டார் ஐயா அவர்களின் இல்லம்.

     நாட்டார் ஐயாவின் திருமகனார் திரு வே.நடராஜன் அவர்கள், தன் மகனுக்கு, தன் தந்தையின் பெயரினையே சூட்டி மகிழ்ந்திருக்கிறார்.

    


நாட்டார் ஐயா அவர்களின் பெயரன், திரு வேங்கடசாமி ஐயா அவர்களின் அன்பு மனையாள், திருமதி மல்லிகா அவர்கள், எங்களை மகிழ்வோடு வரவேற்றார்.

     தேநீர் வழங்கி மகிழ்ந்தார்.

     பின்னர் படியேறி மாடிக்குச் சென்றோம்.

     இதோ, தமிழவள் இருக்கை.

    



சில நிமிடங்கள் அமைதியாய் அவ்வறையில் அமர்ந்திருந்தோம்.

     தமிழன்னையின் மடியில் அமர்ந்திருப்பதைப் போன்ற ஓர் உணர்வு.

     மெல்ல எழுந்து, நாட்டார் ஐயா திருக்கோயிலைப் பார்க்க வேண்டுமே என்றோம்.

     கோயில் பொறுப்பாளரை, அலைபேசி வழி அழைத்து, எங்களுடன் அனுப்பி வைத்தார்.

     நன்றி கூறி புறப்பட்டோம்.

     குடமுருட்டி ஆற்றின் தென் கரையில், பரந்து விரிந்த, தென்னந் தோப்பு ஒன்றில், இதோ நாட்டார் ஐயா திருக்கோயில்.

    




கோயில் கருவறையினுள், நாட்டார் ஐயா அவர்கள் பூமியினுள் துயில் கொள்ளும் இடத்திற்கு நேர் மேலே, ஒரு சிவலிங்கம்.

     சிவலிங்கத்திற்குப் பின்புறம், நாட்டார் ஐயா அவர்களின் படம்.

     வணங்கி நின்றோம்.