24 பிப்ரவரி 2021

நெடுங்குன்ற வாணர்

குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை

கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை

நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்

உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும்

அமைபவன் நூலுரை யாசிரி யன்னே.

     ஓர் ஆசிரியர் என்பவர், உயர்  குடியில் பிறந்தவராகவும், பல நூல்களைக் கற்றறிந்த அறிவும், அவ்வறிவை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில், எடுத்துக் கூறத் தகுந்த ஆற்றல் உடையவராகவும், நாவன்மை கொண்டவராகவும், நிலத்தையும், மலையையும், தராசுவையும், மலரையும் ஒத்த குணங்கள் உடையவராகவும், உலக ஒழுக்கத்தை உணர்ந்தவராகவும், உயர்ந்த குணங்கள் பலவற்றை உடையவராகவும் இருக்க வேண்டும் என்பது நன்னூலாரின் கருத்தாகும்

    

இவர் இப்படித்தான் இருந்தார்.

     இதனினும் மேலாகவும் இருந்தார்.

     மாணவர்களுக்குத் தமிழை மட்டுமன்று, வாழ்வியலையும் கற்றுக் கொடுத்தார்.

     இவர் ஏழைமையின் கொடுமையை, வறுமையின் சொல்லொணா துயரை முழுமையாய் அனுபவித்தவர்.

     இவரது தாயார், தன் தாலியினை விற்றுத்தான், கல்லூரியில் இவரைத் தமிழ்ப் படிக்க வைத்தார்.

     இவர், திருவையாற்றுக் கல்லூரியில் பயிலும் போது, காவிரியாற்று நீரையே, உணவாய் ஏற்று, உயிர் காத்து, தமிழ் பயின்றவர்.

     எனவே, தன் மாணவர்களை, தன் பிள்ளைகளாய், தன் நிழலிலேயே வளர்த்தார்.

     இவர் நிழலில் வளர்ந்தவர்கள் இன்று, தமிழாசிரியர்களாய், பேராசிரியர்களாய், தமிழறிஞர்களாய், அரசு அலுவலில் உயர் பதவியினராய், பல நிலைகளில், தமிழ் கூறும் நல்லுலகு முழுவதும் பரந்து விரிந்துப் பரவியுள்ளனர்.

ஊதியம்தான் பணிகள் என்றே

     எண்ணாது தமிழ்மொ ழிக்கே

ஊழியம்செய் என்று சொல்லி

     ஊக்கமூட்டிச் செயல்ப டுத்தும்

தந்தையடா தந்தை – எங்கள்

     தந்தையடா தந்தை

எனப் புலவர் செல்லக் கலைவாணன் போன்றே, இவரது மேனாள் மாணவர்கள் இவரைத் தந்தையாகவே போற்றினர்.

     தந்தையாக மட்டுமல்லர், இவரிடத்துப் பயின்ற மாணவர்களுக்கு இவர்தான் தாய், இவர்தான் ஆசான், ஏன் ஆண்டவனும் இவர்தான்.

     தமிழாசிரியராய், விரிவுரையாளராய், பேராசிரியராய், முதல்வராய் கல்விப் பணியில் உயர்ந்து உச்சம் தொட்டபோதும், இறுதி நாள் வரை, தமிழ்ப் போராளியாகவே வாழ்ந்தவர் இவர்.

கெடல் எங்கே தமிழின் நலம், அங்கெல்லாம்

தலையிட்டுக் கிளர்ச்சி செய்க

என்னும் பாவேந்தரின் பாடல் வரிகளுக்கு ஏற்பத் தன் வாழ்வை, தகவமைத்துக் கொண்டவர்.

     மூன்றே மூன்று ஆண்டுகள், சென்னைப் பல்கலைக் கழகத்தின், பேரவை உறுப்பினராய் அமர்ந்து, 39 தீர்மானங்களைக் கொண்டு வந்து, பல்கலைக் கழகத்தையே, திக்குமுக்காடச் செய்தவர்.

     Doctina Vim Promovet Insitam என்னும் லத்தீன் மொழித் தொடரோடு, அதுநாள் வரை விளங்கிய, சென்னைப் பல்கலைக் கழக இலச்சினையில், கற்றனைத் தூறும் அறிவும், ஆற்றலும் என்னும் சீர்மிகுத் தமிழ்த் தொடரையும், போராடி இணைத்தவர்.

     ஆங்கிலத்தில் மட்டுமே பல்கலைக் கழகங்கள், பட்டச் சான்றிதழ்களை வழங்கி வந்தமையைக் கண்டு வெகுண்டு எழுந்து, போராடி, பட்டச் சான்றிதழ்களில் அருந் தமிழுக்கும் இடம் பிடித்துக் கொடுத்தவர்.

     தமிழுக்காகவே வாழ்ந்தவர், தமிழாய் வாழ்ந்தவர், தன் சுவாசம் துறந்து, ஓய்வெடுக்கத் தொடங்கியபோது, தமிழுலகும், இவர்தம் மாணவர் உலகும் திகைத்துத்தான் போனது.

 

முதுகுன்றப் பெயரிய நெடுங்குன்ற வாணரே

தரங்குன்றாத் தமிழே, தலைதாழாத் தமிழா

என் தலை வணக்கம் ஏற்றருள்க.

 

காலஞ் சென்றவர்கள் எல்லாம் கண்ணில்

தெரியாராம், சொல்கிறார்கள் தலைவா

 

யார் சொன்னது?

யார் சொன்னால்தான் என்ன?

 

பொய், அது பொய்.

பொய்யே சொல்லிப்

பொழுதைக் கழிக்கின்ற புலவர்கள்

புகன்ற பொம்மல் வாசகம்.

 

சாவாம், இறப்பாம், சமாதியாம்

இவையெல்லாம் யாருக்கு?

 

சோற்றுத் தடியர்கள்தாம் சாவார்

சரித்திரம் ஆகிவிட்ட உனக்கேதையா சாவு.

 

சரிதானே தலைவா, என் அறச்சீற்றம்.

 

நீங்கள் மாண்டிருந்தால் – இந்நேரம்

உலகவர் உம்மை மறந்திருப்பாரே.

 

உம் உயிர்த் தோழனாம் என் நெஞ்சம் விட்டும்

நீங்கியிருப்பீரே

 

இவையெல்லாம் நிகழவில்லையே

பின்பு எப்படி நம்புவது

நீங்கள் மறைந்தீர்கள் என்பதை.

 

இதோ, நான் நினைக்கிறேன்

ஆம், நீள நினைக்கிறேன்

நின்று நினைக்கிறேன்

சிறிது சென்றும் நினைக்கிறேன்

என் எதிரே நிற்கிறாய்

என் கண்கள் காண நிற்கிறாய் – ஓங்கி

உலகளந்த உத்தமனாய்

விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விளங்க நிற்கிறாய்.

என்று பாடிய புலவர் இரா.கலியபெருமாள் அவர்களின் அறச்சீற்றம், இன்று மெய்யாகிப் போனது.

 

மாண்டவர் மீண்டெழுந்து

இதோ

நேர்கொண்ட பார்வையோடும்

திமிர்ந்த ஞானச் செருக்கோடும்

நிற்கிறார்.

சிலையாய்

வெண்கலச் சிலையாய்

நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறார்.

 



இவரிடத்துப் படித்த

மேனாள் மாணவர்களின் முயற்சியால்

உலகப் பெருந்தமிழர்

முதுகுன்றனார்

பேராசிரியர் பி.விருத்தாசலனார் அவர்கள்

சிலையாய்

வானுயர்ந்து நிற்கிறார்.

 

ஆசிரியர் மாணவர் உறவின்

உன்னத அடையாளமாய்

உயர்ந்து நிற்கிறார்.

 

வைகறைவாணன்

முனைவர் மு.இளமுருகன்

முனைவர் செந்தலை கௌதமன்

தமிழக அரசின், கலை பண்பாட்டுத் துறையின்

மேனாள் உதவி இயக்குநரும்

முதுகுன்றனாரின் மேனாள் மாணவருமான

முனைவர் இரா.குணசேகரன் அவர்களோடு,

பெரியார் பல்கலைக் கழக

தமிழ்த் துறை பேராசிரியர்

முனைவர் மோ.தமிழ்மாறன்

முனைவர் இரா.திராவிடமணி

முனைவர் சி.கலைமகள்

புலவர் இரா.செயலட்சுமி

முனைவர் கோ.சித்ரா

முனைவர் மு.கவிதா

புலவர் செல்ல.கலைவாணன்

முனைவர் சோம.கண்ணதாசன்

முனைவர் பழ.பிரகதீசு

புலவர் மா.கந்தசாமி

முனைவர் மாதவன்

முனைவர் கலைவேந்தன்

முனைவர் தங்க.திலீப் குமார்

புலவர் ந.மா.மனோகரன்

முனைவர் சி.கண்மணி

பொறியாளர் பு.விசுவநாதன்

இராம.சந்திரசேகரன்

பொறியாளர் வி.விடுதலை வேந்தன்

எனத் தமிழாய்ந்தப் புலவர் கூட்டம் ஒன்று கூடி, தங்கள் தோழமைகளையும் இணைத்துக் களமிறங்கி சாதித்திருக்கிறது.

 


இவர்கள்

தங்கள் ஆசானுக்குச்

சிலை வடித்த நல் மாணவர்கள்

என்னும் பெரும் பேற்றைப் பெற்றிருக்கிறார்கள்.

மேலும்

சிலைத் திறப்புவிழா மலர்

ஒன்றினையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

 

தமிழுக்குத் தனையீந்த தலைவர்

பேராசிரியர் அய்யா

பி.விருத்தாசலனார்

சிலை திறப்பு விழா மலர்,

சென்னை, பொன்னி பதிப்பக உரிமையாளர்

வைகறைவாணன் அவர்களின்

சீரிய மேற்பார்வையில்

தமிழ்ப் பெட்டகமாய்

மலர்ந்திருக்கிறது.

 

தங்கள் உழைப்பாலும்

தங்கள் பொருளாலும்

தங்கள் ஆசானுக்குச்

சிலை எடுத்த

இந்த நவீன செங்குட்டுவர்களின்

கரங்களைப் பற்றி

கண்களில் ஒற்றி

வாழ்த்துவோம், போற்றுவோம்.