திருவள்ளுவர்
படம்.
திருவள்ளுவர்
படத்திற்கு ஒரு மாலை.
மங்கல நாண்.
மணமாலை இரண்டு.
பெற்றோர்களுக்கான
மாலை நான்கு.
குத்து விளக்கு
ஒன்று.
விளக்கிற்கான
எண்ணெய், திரிகள்.
மெழுகுவர்த்தி
ஒன்று.
தீப்பெட்டி ஒன்று.
உதிரிப் பூக்கள்.
பட்டியல்
அவ்வளவுதான்.
தமிழ் வழியில், குறள் நெறியில் திருமணம் அரங்கேறத் தேவையானப் பொருட்கள் அவ்வளவுதான்.
-
மணமகனின்
தந்தைக்குத் தன் மகனின் திருமணத்தை, தமிழ் வழி நின்றே நடத்திட வேண்டும் என்றத் தணியாதத்
தமிழார்வம்.
அதுவும் தமிழ்க்
கடல், செந்தமிழ் அந்தணர் அவர்களே முன்னின்று, செந்தமிழால் முழங்கி, திருமண நிகழ்வினை
செய்துவைத்திட வேண்டும் என்ற பெருவிருப்பம்.
திருமண நாள்
குறித்தாயிற்று.
தமிழ்க் கடலின்
ஒப்புதலும் பெற்றாகிவிட்டது.
திருமண அரங்கிற்கும்
பதிவு செய்தாகிவிட்டது.
உற்றார்,
உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்தாகிவிட்டது.
ஆனால் அழையா
விருந்தாளியாய், உள் புகுந்த கொரோனா கொக்கரித்தது.
உலகே முடங்கிப்
போனது.
குறித்தத்
தேதியில் திருமணத்தினை நடத்தியாக வேண்டும் என்று உறுதி பெற்றோருக்கு.
ஆனால், திருமணத்தை
நடத்தி வைத்திட ஒப்புதல் அளித்திருந்த, தமிழ்ப் பெருமகனாரால் பயணிக்க இயலா நிலை.
கொரோன கட்டுப்பாடுகள்
ஒரு புறம், பயணிக்க வேண்டிய தொலைவு மறுபுறம்.
ஒரு நூறு,
இரு நூறு அல்ல.
ஓராயிரம்,
ஈராயிரம் அல்ல.
முழுதாய்
பதினான்காயிரம் கிலோ மீட்டர்களுக்கும் மேல் கடந்தாக வேண்டும், பறந்தாக வேண்டும்.
தமிழ்க்
கடல் இருப்பதோ மதுரையில்.
மணமக்கள்
இருப்பதோ அமெரிக்காவில்.
அமெரிக்க
வாழ் தமிழ் இல்லத் திருமணம்.
என்ன செய்வது?
யோசித்தவர்,
ஒரு முடிவிற்கு வந்தார்.
தமிழகத்தில்
இருந்தபடியே, அமெரிக்காவில் திருமணத்தை நடத்தி வைத்தார்.
தான் பறக்காமல்,
தன் உருவையும், குரலையும், இணைய வழி பறக்கச் செய்து, திருமண அரங்கத் திரையில் இறங்கச்
செய்து, திருமண நிகழ்வினை இனிதாய், தமிழோடும், குறளோடும், இனிமையாய், செம்மையாய் நடத்தி,
மணமக்களையும், உற்றார் உறவினர்களையும் மகிழச் செய்திருக்கிறார், நெகிழச் செய்திருக்கிறார்.
எனக்குத்
தெரிந்து, நிகழ் நிலை வழி ( On line) நடைபெற்ற
முதல் திருமணம் இதுதான்.
இவர் அன்னைத்
தமிழுக்கென்றே, தன் வாழ்வை தகவமைத்துக் கொண்டவர்.
திருக்குறள்
வழியில் தன் வாழ்வை வடிவமைத்துக் கொண்டு, வாழும் வள்ளுவராகவே வாழ்பவர்.
இதுநாள்வரை,
இவர் தமிழ் வழியில், குறள் நெறியில் செய்துவித்தத் திருமணங்களின் எண்ணிக்கை எவ்வளவு
தெரியுமா?
சொன்னால்
நம்பமாட்டீர்கள்.
4,642.
தமிழ் நாடு முழுவதும் வாழும், தமிழறிர்கள் பலருக்கும்
இவ்வழியில் பயிற்சி அளித்து, தன் காலத்திற்குப் பிறகும், தமிழ் வழித் திருமணங்கள் தொடர
ஆவண செய்திருக்கிறார்.
இவர் இதுவரை
எழுதி, அன்னைத் தமிழுக்கு அணியாய் வழங்கியுள்ள நூல்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
460.
கடந்த
30.1.2021 சனிக்கிழமையன்று, இந்தத் தமிழ்க் கடல், தனது 94 ஆவது அகவையில், காலடியை,
தன் தமிழடியை எடுத்து வைத்திருக்கிறார்.
இத்தமிழ்ப்
பெருமகனாரை, அவர்தம் பிறந்த நாளன்று, அவர்தம் இல்லத்திற்கே சென்று, காண்பதற்கு ஓர்
அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
தமிழ் இலக்கிய,
இலக்கணப் பாடல்கள் ஒரு இலட்சத்தை, தன் நினைவுப் பெட்டகத்தில் பதிவேற்றி, வாய் திறக்கும்
பொழுதெல்லாம், சங்கப் பாடல்களை அருவியாய் கொட்டி, கேட்போரை, தமிழ்ப் பெருமழையில் நனையவிட்டு,
திக்குமுக்காடச் செய்யும், பெரும்புலவர்
அவர்களுடனும்,
செந்தமிழ்ச்
சான்றோர்களுக்குப் பணி செய்வதையே, தன் வாழ்நாள் பணியாய் செய்துவரும்,
அவர்களுடனும்,
தஞ்சை மண்ணின்
சிறந்த அச்சகமாய், கடந்த நாற்பது ஆண்டுகளாக, செம்மாந்தப் பணியாற்றிவரும், மாணிக்கம்
அச்சக உரிமையாளரும், தஞ்சாவூர், உலகத் திருக்குறள் பேரவையின் ஆற்றல்மிகு செயலாளரும்,
குறள் வழியில், குறள் நெறியில், தன் வாழ்வை அமைத்துக் கொண்டு, தமிழ்ப் பணியாற்றிவருபவரும், அண்மையில் தமிழக அரசின்
தமிழ்ச் செம்மல் விருது பெற்றவருமாகிறய,
அவர்களுடனும்,
இருபதாண்டுகளுக்கும்
மேலாக, சிங்கப்பூரில் தமிழ்ப் பேராசிரியராய் செம்மாந்தப் பணியாற்றியவருமான,
அவர்களுடனும்
சேர்ந்து பயணிக்கும், ஒரு பொன்னான வாய்ப்பு கிட்டியது.
மகிழ்வுந்தில்
நான்கு தமிழறிஞர்கள்.
நடுவில் நான்.
குடைக்குள்
மழை என்பார்கள், அதுபோல் மகிழ்வுந்திற்குள், தமிழ் வெள்ளம், பெரு வெள்ளம்.
மூழ்கி, மூச்சுத்
திணறித்தான் போனேன்.
பூவோடு சேர்ந்த
நார் போல, தமிழறிஞர்கள் நால்வரோடு இணைந்து சென்று, மதுரையில், தமிழ்க் கடலைக் கண்டேன்.
கை கூப்பி
வணங்கினேன்.
தமிழ்க் கடல்.
தமிழாசிரியராய்
தன் வாழ்வைத் தொடங்கியவர்.
நூலாசிரியர்,
பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர்.
இலக்கண வரலாறு,
தமிழிசை இயக்கம், தனித் தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி, யாப்பருங்காலம்.
புறத் திரட்டு, திருக்குறள் மரபுரை, காக்கை பாடினியம், தேவநேயம் முதலான நூல்கள் என்றென்றும்
இவர்தம் தமிழ்ப் பணிக்கு அரண் சேர்ப்பவையாகும்.
திருவள்ளுவர்
தவச்சாலை அமைத்துத் திருக்குறளுக்குக் கோயில் எழுப்பியவர்.
பாவாணர் பெயரில்
நூலகம் கண்டவர்.
இவர்தான்,
முதுமுனைவர்
இரா.இளங்குமரனார்.
இன்னும் ஒரு நூறாண்டு
வாழ வாழ்த்துவோம்.