30 மே 2021

உமாமகேசுவர விரதம்


     ஆண்டு 1924.

     அந்த இளைஞனின் வயது 22.

     நகராட்சி அலுவலகத்தில் உடல் நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் (Sanitory Inspector) பணி.

     பணியில் அமர்ந்து ஆறு மாதங்கள் கடந்துவிட்டன.

     ஆனாலும் மனதில் நிம்மதியில்லை.

    

தமிழை முழுமையாகப் பயின்று, தமிழ்ப் பேராசிரியராய் உயர வேண்டும் என்பதே, இந்த இளைஞனின் இலட்சியம்.

     காரணம், இவரது பள்ளித் தமிழாசிரியர் சீகாழி கோவிந்தசாமி ரெட்டியார்.

     தமிழோடு, தமிழுணர்வையும் சேர்த்தே ஊட்டியிருந்தார்.

     ஆயினும், குடும்பச் சூழல்  படிக்க விடாமல் தடுத்தது.

     தந்தையின் மறைவு.

     தமையனாரின் பொறுப்பில் குடும்பம்.

     தானும், ஏதேனும் ஓர் அலுவல் பார்த்து, பொருளீட்ட வேண்டிய நிலை.

     நகராட்சிப் பணியில் சேர்ந்த்ர்.

     ஆனாலும், மனம் பணியில் ஒட்ட மறுத்தது.

     இலட்சியம் இவரைப் படி, படி என்று அலுவலகத்தை விட்டு இழுத்தது.

     படிப்பது என்று முடிவு செய்தார்.

     பணியினைத் துறந்தார்.

     தான் தமிழ் பயிலுவதற்கு ஏற்ற இடம், தமிழவேள் உமாமகசுவரனார் தலைவராக இருக்கும், கரந்தைத் தமிழ்ச் சங்கமே என்று முடிவு செய்தார்.

     கரந்தையை அடைந்தார்.

     ஒருவரைப் பார்த்த அளவிலேயே, அவரின் திறமையை அளந்தறியும் ஆற்றல் பெற்ற தமிழவேள் அவர்கள், இந்த இளைஞனுக்கு, தமிழ்ச் சங்கப் பள்ளியில் ஆசிரியர் பணியும், சங்க நூலகப் பணியினையும் வழங்கினார்.

     பணியாற்றுங்கள்.

     பணியாற்றிக் கொண்டே பயிலுங்கள் என்றார்.

     திரிபின்மை நீக்கிய விசேடம், இயைபின்மை நீக்கிய விசேடம் என்ற இடங்களில் எங்கள் ஐயத்தைத் தமிழவேள் போக்கினார். இதுபோல் பல சமயங்களில், எங்கட்கு ஆசிரியராகவும், சிக்கல்களில் நடுவராகவும் இருந்தார்.

     1924 ஆம் ஆண்டிலேயே இதைச் செய்தார்.

     அவரிடத்து மீளா அடிமையாகக் கூடிய மனப்பான்மை எங்கட்குத் தோன்றியது.

     அவர் தமிழில் பேசிய பேச்சுக்கள், எங்களைக் கவர்ந்தன.

     அவர் பேச்சில் வேற்று மொழி கலக்கவே கலக்காது.

     எங்களைத் தமிழில் படிக்க ஊக்குவித்தவர் அவரே.

     இவர் ஐந்தாண்டுகள், கரந்தையிலேயே தங்கினார்.

     ஆசிரியப் பணி, ஏடு பெயர்த்து எழுதும் பணி, தமிழவேள் முதலான அறிஞர்களுடன் அவ்வப்போது உடன் சென்று உதவும் பணி முதலியவற்றிற்கு இடையே, வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம், கரந்தைக் கவியரசுவிடமும், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆகியோரிடமும் தமிழ் பயின்றார்.

     1930 ஆம் ஆண்ட சென்னைப் பல்கலைக் கழகத்தில் வித்துவான் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.

     இவர், பிற்காலத்தில், பேராசிரியப் பெருந்தகை, சித்தாந்த கலாநிதி, உரைவேந்தர் முதலானப் பெரும் புகழ் பெற்றமைக்கு அடித்தளமிட்டது கரந்தைத் தமிழ்ச் சங்கமே ஆகும்.

     இதனையும் இவரே கூறுகிறார், கேளுங்கள்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் என் வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி, வளமான புலமைக்கும், நலமான வாழ்வுக்கும் வழிகோலியது.

     கரந்தையில் மூவர் எனக்கு உறுதுணையாயினர்.

     ஒருவர் என்னைப் போற்றிப் புரந்த, தமிழவேள்.

     மற்றொருவர் என் பேராசான் கரந்தைக் கவியரசு.

     மூன்றாமவர், என் வாழ்விலும், தாழ்விலும் பங்கேற்று, நானும் எனது நிழலும் போல, நாங்கள் உடலால் பிரிந்திருந்தாலும், உள்ளத்தால் இணைந்திருந்த சிவ.குப்புசாமிப் பிள்ளை.

     இவர் இணையற்ற பேராசிரியர் மட்டுமன்று, ஈடற்ற நூலாசிரியரும் ஆவார்.

     தம்கோள் நிறுவவும், தம் பெயர் பரப்பவும், தம் வாழ்வு வசதி பெறவும் நூல் இயற்றுவோர் பலர் உண்டு.

     ஆனால், தமிழ் மொழியின் உயர்நிலையில் உள்ள குறையை நிறைவு செய்யவும், அதன் நூல் வளம் பெருகவும், நூல் இயற்றுவோர் ஒரு சிலரே.

     அந்த ஒரு சிலரில் முதன்மையானவர் இவர்.

     ஐங்குறுநூறு உரை, புறநானூறு உரை, பதிற்றுப் பத்து உரை, நற்றினை உரை, திருவருட்பா பேருரை என 34 நூல்களின் ஆசிரியர்.

     பிற்காலத்தில் தன்னைப் பெற்றெடுத்த அன்னை இறந்தபோது கூடக் கண்ணீர்  சிந்தாத இவர், தமிழவேள் உமாமகேசுவரனார் இயற்கை எய்தினார் என்ற செய்தியினைக் கேட்டதுமே, துடி துடித்துப் போனார். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.

தாயாகி உண்பித்தான், தந்தையாய்

     அறிவளித்தான், சான்றோ னாகி

ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்

     அவ்வப்போ தயர்ந்த காலை

ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்

     இனியாரை யுறுவோம், அந்தோ

தேயாத புகழான்தன் செயல் நினைந்து

     உளம்தேய்ந்து சிதைகின் றேமால்.

     உளம் உருகி கவி எழுதியதோடு, தன் இறுதிக் காலம் வரை, தன் இறுதி மூச்சு இருந்தவரை, உமாமகேசுவரனாரின் நினைவினைப் போற்றும் வகையில், ஒவ்வோர் ஆண்டும், உமாமகேசுவரனாரின் நினைவு நாளன்று, உண்ணாமல், நீர் கூட அருந்தாமல், உமாமகேசுவர விரதம் இருந்தவர் இவர்.

இவர்தான்,

திண்டிவனத்திற்கு அருகில் உள்ள

ஔவையார் குப்பத்தில் பிறந்தவர்.

பேராசிரியப் பெருந்தகை, சித்தாந்த கலாநிதி


உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி பிள்ளை

 

அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால்

     அடடாவோ ஈதென்ன விந்தை, இங்கே

புதியதொரு ஆண்ஔவை எனவி யப்பான்

     பூரிப்பான், மகிழ்ச்சியிலே மிதப்பான், மற்றோர்

அதிமதுரக் கருநெல்லிக்  கனிகொ ணர்ந்தே

     அளித்துங்கள் மேனியினைக் காதலிக்கும்

முதுமைக்குத் தடைவிதிப்பான், நமது கன்னி

     மொழிவளர்க்கப் பல்லாண்டு காத்திருப்பான்.

-                  கவிஞர் மீரா.

 

 

நண்பர்களே, வணக்கம்.

 

      எனது  இரு நூல்கள் புதிதாய் அமேசான் தளத்தில் இணைந்திருக்கின்றன.

     இவ்விரு நூல்களையும் நாளை 31.5.2021 திங்கட்கிழமை பிற்பகல் முதல் 2.6.2021 புதன் கிழமை பிற்பகல் வரை, கட்டணம் ஏதுமின்றி தரவிறக்கம் செய்து வாசித்து மகிழலாம்.

     வாசித்துத்தான் பாருங்களேன்.



 

என்றென்றும் பேரன்புடன்,

கரந்தை ஜெயக்குமார்