காங்கோ.
மத்திய ஆப்பிரிக்காவின் நடுப் பகுதி.
காங்கோ காட்டில், குரங்குகளைக் கணக்கெடுக்கும்
பணி தொடங்கியது.
ஒரு சில நாட்களிலேயே ஆய்வாளர்கள் அதிர்ந்தனர்.
ஒன்றல்ல, இரண்டல்ல.
ஒரு நூறு, இரு நூறு அல்ல.
முழுதாய் ஐந்தாயிரம் சிம்பன்சிகளைக் காணவில்லை.
சென்ற முறை கணக்கெடுப்பின்போது இருந்தவை, திடீரென்று மாயமாய் மறைந்தது எப்படி என ஆய்ந்தனர்.
ஏன் காணவில்லை?
மரணம் அடைந்துவிட்டனவா?
அப்படியானால், ஏன் மரணமடைந்தன?
வேறு ஏதேனும் காரணம் உண்டா?
நோய்வாய்ப் பட்டதா?
நோய் வரும் என்று அறிந்து சிதறிப் போய்விட்டனவா?
ஆய்வாளர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே,
ஆய்வாளர்களில், பலர் இறக்கத் தொடங்கினர்.
மக்கள் மடியத் தொடங்கினர்.
ஆய்வு துரிதப் படுத்தப்பட்டது.
இறந்து போன ஒரு சிம்பன்சி கிடைத்தது.
அது நோய்வாய்ப்பட்ட விதம், சிம்பன்சியின் உடலில்
இருந்த கிருமிகள், மனிதன் நோய்வாய்ப்பட்ட விதம், மனித உடலில் இருந்த கிருமிகள், ஒப்பிட்டுப்
பார்த்தனர்.
எபோலா.
எபோலா வைரஸைக் கண்டுபிடித்தனர்.
விலங்கு மூலமாக, வைரஸ் வந்ததை ஆராயத் தொடங்கினர்.
விலங்கு மூலமாக என்பதே தவறு.
இத்துணை ஆண்டுகளாக, இந்த சிம்பன்சிகள் இருந்து
கொண்டுதானே இருந்தன.
இப்பொழுது மட்டும் ஏன்?
யோசிக்க வேண்டும்.
---
இந்தோனேசியா.
இந்தோனிசிய அரசாங்கம், ஒரே நாளில், ஒரு பெரிய
முடிவினை, மிகச் சாதாரணமாய் எடுத்தது.
காடுகளில் யாருக்கும் பயன்படாமல் கொட்டிக் கிடக்கும்,
இயற்கை வளங்களைத் தோண்டி எடுத்து, நாட்டை வளப்படுத்துவது என்று முடிவெடுத்தது.
காட்டை கொளுத்தினர்.
மனித இனம் தோன்றுவதற்கு முன்பிருந்தே, பல இலட்சம்
ஆண்டுகளாக, இந்தோனேசியக் காடுகளில், மரங்களின் கிளைகளில் தொங்கிக் கொண்டிருந்த, கோடிக்
கணக்கான பழந்திண்ணி வௌவால்கள், ஒரே நொடியில்,
தங்கள் இல்லங்களை இழந்தன.
பல இலட்சம் வௌவால்கள் நெருப்பில் சிக்கி சாம்பலாயின.
மற்றவை நெஞ்சில் அடித்துக் கொண்டு, கதறிப் பறந்தன.
காட்டைத் துறந்து, நகரப் பகுதிகளில் நுழைந்தன.
பதட்டத்தில் வௌவால்களின் நாள்கள் கடந்தன.
வௌவால்களின் மனப் போராட்டத்தின் விளைவாய், அதன்
உடலில் ஏற்பட்ட, உடலியக்க ஹார்மோன்களின் தாறுமாறான செயல்பாடுகளால், அதுநாள் வரை, வௌவால்களின்
வாயில், அமைதியாய் குடி கொண்டிருந்த, வைரஸ்கள், உரு மாறின.
குணம்
மாறின.
நிப்பா
வைரஸ் பிறந்தது.
பிரச்சனை வௌவால்களில் இல்லை.
அவற்றின் இடத்தைக் கொளுத்தி நாம் உருவாக்கியப்
பதட்டம்.
வைரஸ்களின் குணத்தை மாற்றின.
நிப்பா வைரஸ்.
---
அண்மையில் ஒரு குழுவினர், அண்டார்டிகாவிற்குப் பயணித்தனர்.
திரும்பி வந்ததும் சொன்னார்கள்.
அண்டார்டிகா பச்சை, பசேல் என்று உள்ளது.
பச்சையாக இருந்தால், அது அண்டார்டிகாவே இல்லை.
பச்சை படருகிறது என்றால், வெப்பநிலை மெல்ல, மெல்ல
உயர்ந்து பூஜ்ஜியத்தைத் தொட்டுவிட்டது என்று பொருள்.
தாவரங்கள் வளருவதற்காக சூழல் பிறந்துவிட்டது
என்று அர்த்தம்.
சூழலியலில் மிகப் பெரும் மாறறம் தோன்றுவதற்கான
முன்னோட்டம்.
குழுவினர் திரும்பிய, நில நாள்களிலேயே, ஒரு பனிப்
பாறை உருகி தண்ணீராய் மாறியது.
170 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட ஒரு பனிப் பாறை, உருகி இருந்த இடம் தெரியாமல், கரைந்து
போனது.
நினைத்துப் பாருங்கள்.
170 சதுர கி.மீ., பரப்பளவு உள்ள பனிப் பாறை.
இவ்வளவு
பெரிய பனிப் பாறை, கரைகிறது என்றால்,
இலட்சோப இலட்சம் ஆண்டுகளாக, இந்தப் பனிப் பாறையின், கீழ் இருந்த, நுண்ணுயிரிகள், வைரஸ்கள்,
கடல் வாழ் உயிரினங்கள் என எத்துணை இலட்சம் உயிர்கள் இடமற்றுப் போயிருக்கும்.
தங்கள் வாழ்விடம் இழந்து, இடம் பெயரும், இந்த
உயிரினங்களால், சூழலியலில் என்னென்ன மாற்றங்கள் வரும்?
அனுபவிக்கப் போகிறோம்.
---
டென்மார்க்.
டென்மார்க்கில் அதிகம் வளர்க்கப்பட்ட விலங்கு
மிர்.
பெண்களின் கைப் பை தயாரிப்பதற்காகவே வளர்க்கப்
பட்டது.
அவற்றுள் ஒரு மிர் விலங்கிற்கு கொரோனா.
டென்மார்க் பதறியது.
ஒட்டு மொத்தமாய், மிர் என்னும் அவ்வுயிரினத்தை
முழுவதுமாய் அழித்தது.
---
தமிழகத்தில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரு சிங்கத்திற்கு கொரோனா.
மனிதனிடம் இருந்து சிங்கத்திற்கு, அதாவது ஒரு
விலங்கிற்கு, கொரோனா சென்றால், அதன் பெயர் என்ன தெரியுமா?
Reverse
Zoonosis
விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு வந்த தொற்று,
மீண்டும் மனிதனிடமிருந்து விலங்கிற்குச் செல்லுமானால், அது Reverse Zoonosis.
நாம் நினைப்பதைக் காட்டிலும், இது பேராபத்து.
மனிதனிடமிருந்து, தொற்று விலங்கிற்குச் செல்லும்
பொழுது, விலங்கின் உடலியலில், இயக்கவியலில்
பலப் பல மாற்றங்கள் நிகழும்.
பின்னர் விலங்கின் எச்சம், உமிழ் நீர், வியர்வை
வழியாக மண்ணிற்குச் சென்று, அம்மண்ணைக் கையாளும் மனிதன் மூலமாகவோ, அல்லது உணவிற்காக
அம்மண்ணைத் தொடும் ஒரு காகமோ, பறவையோ பாதிக்கப்படுமானால், பாதிப்பு தொடரும், பேராபத்தாய்
விரியும்.
---
மனித இனமானது, தனது வளர்ச்சிக்காக, உலகில் பல்வேறு
உயிரினங்களைக் கொன்று குவித்து, அவற்றின் சம நிலை வாழ்வைச் சிதைப்பது என்பது, ஏதோ இன்று
நேற்று தொடங்கியது அல்ல.
கடைசி சிம்பன்சி மனிதனாக, உரு மாறி, என்று எழுந்து
நின்று, நகரத் தொடங்கியதோ, அன்றே தொடங்கியது.
முதல் மனித இனம், கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து,
மத்திய ஐரோப்பா, இங்கிலாந்து, கிரீஸ்லாந்து, ஐஸ்லாந்து, கனடா, பின் ஆஸ்திரேலியா வரை,
நகர, நகர, பல்வேறு உயிரினங்களும் பேராபத்தை, பெரு அழிவைச் சந்தித்தன.
மடகாஸ்கர் பகுதியில் யானைப் பறவை என்று ஒரு விலங்கினம் இருந்திருக்கிறது.
இன்றும் இதன் தடங்கள் கிடைக்கின்றன.
இந்த யானைப் பறவை, இன்று ஒன்று கூட இல்லை.
இந்த யானைப் பறவை அழிந்த காலமும், மனித இனம்,
இப்பகுதியில் நுழைந்த நேரமும் ஒன்றாக இருக்கிறது.
இதோபோல், இங்கிலாந்தின், வட ஸ்கேண்டிநேவியன் பகுதியில், இருந்த ஒரு
பெரும் விலங்கு, மமூத்.
யானையை விட வல்லமை வாய்ந்த விலங்கு.
முற்றாய் அழிந்து போய்விட்டது.
மமூத் அழிந்த காலமும், மனித இனம் வட ஸ்கேண்டிநேவியாவில்
அடியெடுத்து வைத்து நுழைந்த காலமும் ஒன்றாக இருக்கிறது.
மனிதன்தான் அழித்தான் என்பதற்கு சான்றுகள் இல்லை
எனினும், மனித இனம் இப்பகுதிகளில் நுழைந்த காலமும், இவ்விலங்குகள் அழிந்த காலமும் ஒன்றாகவே
தொடருவதுதான் வேதனை.
ஆனாலும் மனித இனம் வளர்ந்து, நகரத் தொடங்கிய
காலம் தொடங்கி, இன்று வரை, காலம் காலமாக, பிற உயிரினங்களுக்கு அச்சுறுத்தல்கள் இருந்து
கொண்டேதான் இருக்கினறன.
அந்த நகர்வின் நீட்சிதான், இன்றைய கொரோனா.
--
நலம்.
Health for
all by 2000 A.D.
1979 ஆம் ஆண்டு, உலக சுகாதார மையம், முன்னெடுத்த தீர்மானம் இது.
2000 வது ஆண்டில் அனைவருக்கும் நலம்.
நலம் என்பது உடல் நலன் மட்டுமே சார்ந்தது அல்ல.
மன நலமும் சேர்ந்ததுதான் என்று அறிவித்தார்கள்.
1950 களிலேயே, மன நலம் பற்றிய பேச்சு எழுந்த
போதிலும், ஒருமித்த நலம் என்பது, உடல் நலம்,
மன நலம் மற்றும் சமூக நலம் மூன்றும் இணைந்ததாக இருக்க வேண்டும் என்று அறிவித்தார்கள்.
நலம் என்பது நோய் வந்ததும் கொடுக்கும் மருந்து
அல்ல.
நோய் வராமல் தடுப்பதற்கு உரிய அனைத்து முன் எடுப்புகளையும்
சார்ந்ததுதான் நலம் என்று உரத்து முழங்கினார்கள்.
மருந்து என்பதற்கான வரையறையும், அப்பொழுதுதான்
முடிவு செய்யப் பட்டது.
ஆனால், 1600 வருடங்களுக்கும் முன்பே, வெளிவந்த,
ஐந்தாம் நூற்றாண்டுத் தமிழ் நூலான, திருமந்திரம்,
மருந்திற்கான இலக்கணத்தை தெள்ளத் தெளிவாய் விளக்குகிறது.
மறுப்பதுடல் நோய் மருந்தெனலாகும்
மறுப்பதுள நோய் மருந்தெனச் சாலும்
மறுப்பதினி நோய் வாராதிருக்க
மறுப்பது சாவை மருந்தெனலாமே
மறுப்பது உடல் நோய்.
மறுப்பது உள நோய்.
மறுப்பது இனி நோய் வாராதிருக்க.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான், இவ்வுலகில்
உள நோய் பற்றிய விவாதமே தொடங்கி இருக்கிறது.
ஆனால் உள நோயை முன்பே அறிந்து உணர்ந்திருக்கிறது,
நம் தமிழினம்.
நலம்.
நலம் என்பதை, மனிதனைச் சார்ந்து சிந்திக்கக்
கூடாது.
உலகின் ஒட்டுமொத்த இயக்கத்தையும், மனிதனை மையப்
படுத்திய இயக்கமாக மாற்றியதுதான் பிழை என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட ஆண்டுதான்
2020.
கொரோனா பெருந்தொற்றிற்கானக் காரணம் மனிதன்தான்.
மனிதன் சூழலியலில், நேரடியாகவும், மறைமுகமாகவும்
நடத்திய வன் முறைகளின் விளைவுதான், இப்பெருந்தொற்று.
நான் மட்டும் நலமாக இருக்க வேண்டும்.
எனக்குரிய வசதிகள் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும்,
என,
எனக்கு,
எனக்கு என மனித இனத்தின் வளர்ச்சிக்காக, உலகின்
பல்வேறு உயிரினங்களைக் கொன்று குவித்து, அவற்றின் சமநிலை வாழ்வைக் குலைத்து, சிதைத்ததன்
விளைவுதான் வைரஸ்கள், பெருந் தொற்றுகள்.
---
பதினைந்து ஆண்டுகளுக்கு முன், Centres for Disease Control and Prevention,
நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் ஆண்டனி ஸ்டீபன் பவுசி என்பவர், அமெரிக்க அதிபரிடம் கூறினார்.
நீங்கள் தவறு
செய்கிறீர்கள்.
நீங்கள் முழுக்க
முழுக்க, சருமத்தின் வளவளப்பான அழகிற்கும்,
உங்களுடைய கேசத்தின அழகிற்கும் ஆய்வுகளைக் குவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
பெரிய அளவில், ஒரு தொற்று நோய் கூட்டம் வந்துவிடும்.
நாம் தொற்று
நோய் ஆய்வில், மிகவும் பின்தங்கி இருக்கிறோம்.
தொற்று நோய்க்கான
ஆய்வை, அதிக எண்ணிக்கையில் முன்னெடுக்க வேண்டும்.
இல்லையேல்,
நம் அமெரிக்காவும்,
பிற நாடுகளும், பெரிய அளவில் நோய்வாய்ப் படுவதற்கான சாத்தியம் இருக்கிறது.
தயவுசெய்து,
அறிவியலாளர்கள், உயிரியல் ஆய்வாளர்கள், தொற்று நோய் குறித்த ஆய்வில் ஈடுபடுங்கள்,
குறிப்பாக, சூழலியல்
வன்முறைகள், நிகழ்ந்து கொண்டிருக்கிற இக்காலத்தில், தொற்றுகள் வராமல் பார்த்துக் கொள்வதற்கும்,
வந்தால், ஆயத்த நிலையில் இருப்பதற்கும், நம் ஆய்வுகள் முடுக்கிவிடப் படவேண்டும்.
அவர் பேச்சு எடுபடவில்லை.
ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
---
அபரிமிதமான அறிவியல் வளர்ச்சி என்கிற பெயரால்,
சூழலியலில் நடத்தப்படுகிற வன்முறைகள், நம் உணவில் நடந்த மாற்றங்கள், நம் உணவுப் பயிரில்
நடந்த மாற்றங்கள், இவையெல்லாம் தொற்றாக, நம் வாழ்வியலில் வந்து சேர்ந்திருக்கின்றன.
இதே காலகட்டத்தில் வளர்ச்சி என்கிற பெயரில் பூமியைப்
பாழாக்கியது, மண்ணைப் பாழாக்கியது, காற்றைப் பாழாக்கியது, இவையெல்லாம் பிற உயிரினங்களுக்கு
அசாதாரணமாக சூழலை உருவாக்கியதால், அவையெல்லாம் மாற்றம் பெற்று, தொற்றாக உரு மாறி வருகின்றன.
---
United
Nations Development Programme – UNDP என்னும் ஓர் அமைப்பு, ஓர் அறிக்கையினை அளித்திருக்கிறது.
இனியும்,
இவ்வுலகில், ஆறு இலட்சம் வைரஸ்கள் வரலாம்.
இவற்றுள் எத்தனை வைரஸ்கள், கோரோனா போன்ற பாதிப்பை
ஏற்படுத்தும்?
எப்பொழுது வரும்?
எவ்வளவு காலம் நீடிக்கும்?
தெரியாது.
ஆனால் வரும்.
வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
இது அறிவியல் ரீதியிலான உண்மை.
இதுபோன்ற வைரஸ்கள் தொடர்நது வராமல் இருப்பதற்கு,
பரவாமல் தடுப்பதற்கு, மனித இனம், இனியேனும் தன்னைக் காத்துக் கொள்வதற்கு, ஒரு ஒரு வாய்ப்புதான்
இருக்கிறது.
ஒரே நலம்.
நாம் நலமாக இருக்க
வேண்டும் என்றால், இந்த பிரபஞ்சத்தில் உள்ள, உயிர்கள் அனைத்தும் நலமாக இருக்க வேண்டும்.
அவை எல்லாம்,
நலமாக இருந்தால்தான், அமைதியாக இருந்தால்தான், நாம் நலமாக இருக்க முடியும்.
ஒரே நலம்.
மனிதர்களே மாறுங்கள்.
இனியாவது நம்மை மட்டுமே மையப்படுத்திக் கொள்ளாமல்,
சூழலை மையப் படுத்திய வாழ்விற்கு மாற வேண்டும்,
நகர வேண்டும்.
ஒரே நலம்.
இயற்கைக்கு
இசைவான வாழ்க்கை.
சூழலுக்கு உகந்த வாழ்க்கை.
உணவுப் பழக்க வழக்கங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும்.
ஒரே நலம்.
---
நன்றி
மக்கள் சிந்தனைப் பேரவை
கடந்த 9.8.2021 திங்கள்
கிழமையன்று
மக்கள் சிந்தனைப்
பேரவையின்
சிந்தனை அரங்கில்
ஒரே நலம்
என்னும் தலைப்பில்
இணைய வழி ஆற்றியப்
பொழிவின்
சில துளிகள்.