அன்பார்ந்த ஐயா,
நமஸ்காரம்.
எனக்கும், என் குடும்பத்தாருக்கும், கடவுளையும்,
தங்களையொத்த உண்மை தேசாபிமானிகள் சிலரையும் தவிர, இவ்வுலகத்தில், வேறு தஞ்சம், ஒருவரிருக்கிறதாக
எனக்குத் தெரியவில்லை.
நான் இனிமேல், அதிக காலம், ஜீவித்திருப்பேனென்று திடமாக நினைக்க வழியில்லை.
எனது குடும்ப நிலையையும், தாங்கள், முன்னின்று, என் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய காரியங்களையும், இதன் கீழே தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் கீழ்வரும் காரியங்களை செய்து முடித்துக்
கொடுத்து, என் குடும்பத்தைக் காப்பாற்றி அருளும்படியாக, தங்களை சாஷ்டாங்கமாக
நமஸ்கரித்து கேட்டுக் கொள்கிறேன்.
மகாஸ்ரீ அசெ.சு.கந்தசுவாமி ரெட்டியார் அவர்களுக்கு,
எழுதப்பெற்ற, உயிலின் தொடக்கம் இது.
உயிலில் சொத்தைத்தான் எழுதுவார்கள்.
தன் கடன்களையே உயிலாய் எழுதியவர், இவர் ஒருவராகத்தான் இருக்க
முடியும்.
இவர் ஒரு வழக்கறிஞர்.
இவரது அப்பா வழக்கறிஞர்.
இவரது பெரியப்பா வழக்கறிஞர்.
இவரது தாத்தா வழக்கறிஞர்.
மூன்று தலைமுறை வழக்கறிஞர் குடும்பம்.
செல்வத்தில் திளைத்த குடும்பம்தான்.
ஆனாலும், இறுதி காலத்தில், கடன்களுக்காக உயில்
எழுத வேண்டிய துர்பாக்கிய நிலை.
சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து கேட்டுக் கொண்டவர் யார் தெரியுமா?
தூத்துக்குடியில் ஒரு பெரும் போராட்டத்தை முன்னெடுத்து,
ஆங்கிலேயரை அலறச் செய்தவர் இவர்.
ஆண்டு 1906.
கோரல் மில்.
உரிமையாளர் ப்ராங்க்ளின் ஹார்வி.
ஆங்கிலேயர்.
ஒரு நாளைக்கு, குறைந்த பட்சம் 12 மணி நேரம் வேலை.
கைரேகை
பார்த்து ஓட்டுதல் என்ற நடைமுறையை உருவாக்கியவர்.
அதிகாலை சூரியன் உதிக்கும் பொழுது, கை ரேகை கண்ணுக்குத்
தெரியும்போது, மில்லுக்குச் சென்றுவிட வேண்டும்.
சூரியன் மறைந்து கைரேகை பார்க்க முடியாதபடி இருட்டும்
வரை வேலை பார்க்க வேண்டும்.
ஞாயிறு விடுமுறை என்பது கிடையாது.
மதிய நேரத்தில், உணவு இடைவேளை என்பது கிடையவே
கிடையாது.
பணியாற்றும்பொழுது, விபத்து ஏற்பட்டாலோ, கை கால்
உடைந்தாலோ, உயிரே போனாலோ, நஷ்ட ஈடு என்பது கனவிலும் கிடையாது, கேட்பதும் கூடவே கூடாது.
மாத ஊதியம் என்ற பெயர்தான் இருந்ததே தவிர, ஊதியம்
எப்பொழுது கிடைக்கும் என்று தெரியவே தெரியாது.
எப்பொழுது கிடைக்கும் என்று கேட்கவும் முடியாது.
கேட்பதற்கும் ஆள் கிடையாது.
தொழிற் சங்கங்கள் தொடங்கப் படாத காலம்.
விழிப்புணர்வு ஏதுமின்றி, தங்கள் நிலையை, தங்கள்
உரிமையை, தொழிலாளர்கள் உணராத காலம்.
மூன்றாவது தலைமுறை வழக்கறிஞரான இவர், தொழிலாளர்
நிலை கண்டு கொதித்துப் போனார்.
தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்.
ஒன்று திரட்ட வேண்டும்.
முடிவு செய்து களம் இறங்கினார்.
1906 பிப்ரவரி 23 ஆம் நாள் முதல் கூட்டம்.
பிப்ரவரி 26 ஆம் நாள் இரண்டாவது கூட்டம்.
வழக்கறிஞரும் அவரது நண்பரும் மேடையேறி முழங்கினார்கள்.
2000 தொழிலாளர்கள்.
உரைகேட்டுப் பொங்கி எழுந்தனர்.
உணர்வு பெற்று கிளர்ந்து எழுந்தனர்.
அடுத்த நாளே, பிப்ரவரி 27 இல் போராட்டம் தொடங்கியது.
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
இந்தியா மட்டுமல்ல, உலகே இப்போராட்டதைக் கண்டு
வியந்து போனது.
ஒரு வாரம்
ஒரே வாரம்.
ஆங்கிலேய அரசு இறங்கி வந்தது.
போராட்டம் முடிவிற்கு வந்தது.
150 சதவிகிதம் சம்பளம்.
ஞாயிறு விடுமுறை.
மதிய உணவு உண்ண, அரை மணி நேரம் இடைவேளை.
15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியம்.
விபத்து நேர்ந்தால், உடனடி மருத்துவம்.
தொழிலாளர்கள் மகிழ்ந்து பணிக்குத் திரும்பினர்.
ஆங்கிலேய அரசோ, போராட்டத்தைத் தூண்டிய வழக்கறிஞரையும், அவர் நண்பரையும், எப்படியாவது பிடித்து
உள்ளே தள்ளிவிட வேண்டும் என்று துடியாய் துடித்தது.
போராட்டம் முடிவுற்ற சில நாள்களிலேயே, இருவரையும்
விசாரணைக்காக அழைத்தது.
விசாரணைக்காக இருவரையும் அழைத்த செய்தி, காட்டுத்
தீ போல் பரவியது.
திருநெல்வேலியும், தூத்துககுடியும் கொதிக்கத்
தொடங்கியது.
மக்கள் வீதிக்கு வந்தனர்.
தொழிலாளர்கள் வெளியே வந்தனர்.
வன்முறை வெடித்தது.
சர்வ நாசம்.
திருநெல்வேலி நகராட்சிக்குச் சொந்தமான, மண்ணெண்ணெய்
கிடங்கு, முழுதாய் மூன்று நாள் எரிந்தது.
கலவரம் பரவியது.
துப்பாக்கிச் சூடு நடந்தது.
நான்கு பேர் மரணம்.
கலவரத்தை அடக்கவே முடியவில்லை.
செய்தி உலகு முழுவதும் பரவியது.
ஆங்கிலேய அரசை அசைத்து, நெருக்கடிக்கு ஆளாக்கி,
தொழிலாளர் போராட்டதை, அரசியல் போராட்டமாய் மாற்றி, வெற்றி வாகை சூடியவர்கள் யார் தெரியுமா?
விசாரணைக்காக அழைத்துச் சென்றதை அறிந்து, மக்கள்
பொங்கியது யாருக்காகத் தெரியுமா?
சுதேசி
கப்பல் கம்பெனி.
சுதேசி பண்டக சாலை.
சுதேசி நூற்பாலை நடத்திக் கொண்டிருந்த,
வ.உ.சிதம்பரனார்.
ஒன்றல்ல, இரண்டு கப்பல்களை வாங்கி வந்து, கடலில்
ஓடவிட்டு, ஆங்கிலேயரை தள்ளாட வைத்தவர் அல்லவா.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யுடன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப் பட்டவர், அவரது
நண்பர் சுப்பிரமணிய சிவா.
விசாரணைக்காக அழைக்கப் பட்டவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
தேச துரோகக் குற்றம் சுமத்தப் படுகிறது.
மாவட்ட
கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரணையைத் தொடங்குகிறது.
நீதிபதியாய் அமர்ந்து விசாரணையை நடத்தியவர்,
ஆங்கிலேயர் எச்.டி.வாலஸ்.
இவர், நீதிமன்றத்தில், வ.உ.சி.யின் வழக்கறிஞருக்குத்
தகுந்த மரியாதை கொடுக்க மறுக்கிறார்.
கொதித்து எழுகிறார் வ.உ.சி.
எதிர்வாதம் புரியாமல், நீதி மன்றத்தையே புறக்கணிக்கிறார்.
நீதிபதியும் வேறு வழியின்றி, அமர்வு நீதி மன்றத்திற்கு வழக்கை மாற்றுகிறார்.
நீதியரசர்கள் அர்னால்ட் மற்றும் மன்றோ விசாரிக்கிறார்கள்.
தீர்ப்பும் வழங்குகிறார்கள்.
தேச
துரோகக் குற்றத்திற்காக 20 ஆண்டுகளும், சுப்பிரமணிய சிவாவிற்கு உதவிய பாவத்திற்காக
20 ஆண்டுகளும், என நாற்பது ஆண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக சிறையில் கழிக்க வேண்டும்.
இது வ.உ.சி. அவர்களுக்கு.
சுப்பிரமணிய
சிவா அவர்களுக்கு 20 ஆண்டுகள்.
கடுமையான தண்டனை.
தீர்ப்பின்
கடுமையை ஆங்கில நாட்டினரே கண்டித்தனர்.
இந்திய விவகாரங்களுக்கான, இங்கிலாந்து அமைச்சர்,
மார்லி என்பார், இந்திய வைஸ்ராய் மிண்டோவிற்கு ஒரு கடிதம் எழுதினார்.
நாம் இந்தியர்களை அடக்கி வைக்க வேண்டியதுதான்.
அடக்காவிட்டால், மிஞ்சி விடுவார்கள் என்பதும் உண்மைதான்.
ஆனால், நம்முடைய, இங்கிலாந்தினுடைய நீதிக்கு
மாறாக, நியாயமற்று நடக்கக் கூடாது.
வ.உ.சி., அவர்களுக்கும் சுப்பிரமணிய சிவாவிற்கும்
கிடைத்திருக்கும் தண்டனை நியாய விரோதமானது.
இதன் விளைவை நாம் அனுபவிப்போம்.
இந்த தண்டனையை ஏற்க முடியாது.
இது குண்டுகளாகவும், துப்பாக்கிகளாகவும் எதிர்வினையாற்றும்.
மார்லி சொன்னது பலித்தது.
வாஞ்சிநாதனுடைய துப்பாக்கியில் இருந்து குண்டு
வெளிவந்தது.
வ.உ.சி., மேல்முறையீடு செய்தார்.
சென்னை உயர்நீதி மன்றம் விசாரித்தது.
வ.உ.சி.யின் தண்டனைக் காலம் 10 ஆண்டுகளாகக் குறைக்கப்
பட்டது.
தேசதுரோகக் குற்றத்திற்காக 6 ஆண்டுகள்.
சுப்பிரமணிய சிவாவிற்கு உதவியதற்காக 4 ஆண்டுகள்.
ஆனால் ஒரே நேரத்தில், இரு தண்டனையினையும் அனுபவிக்கலாம்.
ஆறு ஆண்டு தண்டனையை அனுபவிக்கும்பொழுதே, 4 ஆண்டு
தண்டனையினையும் அனுபவிக்கலாம்.
ஒரே நேரத்தில் இரண்டும்.
எனவே மொத்த தண்டனைக்காலம் 6 ஆண்டுகள் ஆனது.
சுப்பிரமணிய சிவாவிற்கு4 ஆண்டுகள்.
ஆனாலும வ.உ.சி., நான்கரை ஆண்டுகளிலேயே விடுதலை
செய்யப் பட்டார்.
நன்னடத்தைக்காக ஒன்றரை ஆண்டுகள் தண்டனை குறைக்கப்
பட்டது.
ஆனால் அதற்குள் அவர் அனுபவித்த கொடுமைகள் சொல்லி
மாளாது.
சிறையில் வ.உ.சி., செக்கிழுத்ததோடு ஓய்ந்து விடவில்லை.
தமிழோடு வாழ்ந்து கொண்டிருந்தார்.
எழுதுகோல் எடுத்து எழுதிக் கொண்டிருந்தார்.
மெய்யறம்.
மெய்யறிவு.
கடவுள் ஒருவரே.
அரசியல் பெருஞ்சொல்.
திருக்குறள் உரை.
இன்னிலை உரை.
சிவஞான போதம் உரை
அகவற்பாவில் தனது சுயசரிதை.
இவை தவிர , ஜேம்ஸ் ஆலன் என்பவரால் எழுதப் பெற்ற,
As a man thinketh.
Out from the Heart.
From Poverty to Power என்னும் நூலின் முதற்பகுதி,
The Part of Prosperity
இரண்டாம் பகுதி
The Way to Peace முதலிய நூல்களை,
மனம் போல் வாழ்வு
அகமே புறம்.
வலிமைக்கு மார்க்கம்.
சாந்திக்கு மார்க்கம் என மொழி பெயர்த்தார்.
ஆனாலும்,
வேளாளன்
சிறை புகுந்தான் தமிழகத்தின்
மன்னனென
மீண்டான் என்றே
கேளாத
கதை விரைவிற் கேட்பாய் நீ
என வ.உ.சி., சிறைபுகுந்தபோது, பாரதி பாடிய பாடல் பொய்த்துத்தான் போனது.
விசாரணைக்காக
அழைத்து செல்லப் பட்டபோது, கொதித்து எழுந்த தமிழகம், பின்னர் வ.உ.சி.யை முற்றாய் மறந்தே
போனது.
இரண்டரை ஆண்டுகள்
சேலம் சிறை.
இரண்டு ஆண்டுகள்
கண்ணனூர் சிறை, என நான்கரை ஆண்டுகள் சிறையில் கழித்து, சொல்லொன்னா துன்பங்களை அனுபவித்து,
விடுதலையாகி, வெளியே வந்தபோது, வ.உ.சி.,யை
வரவேற்றவர்கள், மொத்தமே ஏழு பேர்தார்.
வ.உ.சி.யின் மனைவி
பிள்ளைகள் இருவர்.
வ.உ.சி.யின் மைத்துனர்.
சாமி. வள்ளிநாயகம்
கணபதி
சிறையில் பட்ட துன்பத்தால், தொழுநோயைத் தன் உடலில்
சுமந்த சுப்பிரமணிய சிவா.
அவ்வளவுதான்.
இந்த உலகு, வ.உ.சி.,
யை மறந்தே போனது.
காந்தியைப் பற்றிய நூல்கள் மொத்தம் 98 தொகுதிகள்
உள்ளன.
காந்தி பேசியது, எழுதியது 90 தொகுதிகள்.
காந்தி வாழ்வில்
தொடர்புடைய மனிதர்களைப் பற்றி 8 தொகுதிகள்.
மொத்தம் 98 தொகுதிகள்.
இந்த 98 தொகுதிகளின்,
எந்தவொரு பக்கத்திலும், இந்தியா முழுவதும் அறியப்பட்டவரான, வ.உ.சி., என்ற மூன்றெழுத்து
இல்லவே இல்லை.
சீதாராமைய்யா எழுதிய காங்கிரஸ் மகா சபை சரித்திரத்தில், திலகரால், என் பிள்ளை என்று போற்றப்பெற்ற,
வ.உ.சி., அவர்களைப் பற்றி, ஒரு வார்த்தை, ஒரு வரி இல்லை.
அகில இந்திய
வரலாற்றின் பக்கங்களில் வ.உ.சி., மறைந்தே போனார்.
மறைக்கப் பட்டார்.
விடுதலைப் போரில் தமிழகம் என்ற இரண்டு தொகுதிகளை
மா.பொ.சி., எழுதியிரா விட்டால், வ.உ.சி.,
யைப் பற்றி, தமிழகம் இப்பொழுது, பெயரளவிற்குப் பேசுவது கூட இல்லாமல் போயிருக்கும்.
கப்பலோட்டிய தமிழன்.
செக்கிழுத்த செம்மல்.
காங்கிரஸ் கட்சியின்
கிளையை, தமிழ் நாட்டிலேய முதன் முதலாய் 1898 இல் ஒட்டபிடாரத்தில் தொடங்கியவர்.
1900 இல் தூத்துக்
குடியில் துவங்கியவர்.
கப்பல் வாங்குவதற்காக,
பம்பாய் சென்ற பொழுது, அவரைத் துரத்திக் கொண்டே ஒரு தந்தியும் சென்றது.
முத்த மகன் இறந்து விட்டான், திரும்பி வா
என்று தந்தி அழைத்த போது, எல்லாவற்றையும் கடவுள்
பார்த்துக் கொள்ளுவார். எனக்கு என் மகனைவிட, நாடுதான் முக்கியம் என, பம்பாயிலேயே
தங்கி கப்பலோடு திரும்பியர்.
சிறையில் இருந்து
மீண்டபின், தன் வாழ்வில் சந்தித்ததெல்லாம் வறுமை, வறுமை, வறுமை.
சென்னையில்,
வடசென்னையில், அரிசிக் கடையில் வேலை பார்த்தார்.
பின் மண்ணென்ணெய்
வியாபாரம் செய்தார்.
கோவை சென்றார்.
தொழிலாளர் கூட்டுறவு
சேமிப்பு வங்கியில் பணியாற்றினார்.
கிடைத்த வேலைகளை
எல்லாம் செய்தார்.
தனது இறுதி நாட்கள்
நெருங்கி வருவதை உணர்ந்து, 1936 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 26 ஆம் நாள், தன் உயிலை
எழுதினார்.
உயிலில் தன் கடன்களை
எல்லாம் பட்டியலிட்டு எழுதினார்.
தன் குடும்பத்தைக்
காக்க வேண்டினார்.
எல்லாம் வல்ல இறைவன் அருளால், மேற்கண்ட காரியங்கள்
எல்லாம், தாங்கள் இனிது செய்து முடித்து அருள் புரிக, என உயிலை நிறைவு செய்தார்.
நாட்டுக்காக
உழைத்ததால், நமக்காகப் பாடுபட்டதால், இறுதியில், தன் குடும்பத்தைக் காக்கப் போராடும்
நிலை.
நமக்காக உழைத்த உத்தமரை, நாம் மறந்துதான் போனோம்.
இனியாகிலும்
நினைவில் வைத்துப் போற்றுவோம்.
கப்பலை
ஓட்டினான்
கடுங்காவல்
தண்டனை அடைந்தான்.
உப்பில்லா
கூழ் குடித்தான்
உடல்
மெலிந்தான்
ஒப்பிலா
செந்தமிழ்ச் செல்வன்
சிதம்பரனை
அன்போடு
உள்ளத்தில்
நினை
தினம்.
-
நாமக்கல் கவிஞர்
---
கடந்த 12.9.2021 ஞாயிறன்று,
ஏடகம்
ஞாயிறு
முற்றம்
சொற்பொழிவு
தஞ்சாவூர், பூண்டி புட்பம் கல்லூரி
வணிகவியல் துறைத் தலைவர்(ஓய்வு)
வ.உ.சி.யின் 150 ஆம் ஆண்டு சிறப்புச் சொற்பொழிவாக
வ.உ.சி.,யின்
போராட்ட வாழ்க்கை
என்னும் தலைப்பிலான,
அருவியென
கொட்டும் சொல் கேட்டு,
அலையென
எழுந்து ஆர்ப்பரிக்கும் உரைகேட்டு,
எரிமலையென
குமுறும் குரல் கேட்டு
ஏடக அரங்கே, இதயம் கனத்துத்தான் போனது.
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழக
உதவிப் பதிவாளர்(ஓய்வு)
தலைமையில்
நடைபெற்ற, இப்பொழிவிற்கு வந்திருந்தோரை,
ஏடகம் அமைப்பின் புரவலர், பொறுப்பாளர்
கரந்தை ஜைன ஆலய அறங்காவலர்
வரவேற்றார்.
ஏடகப் புரவலர் மற்றும் பொறுப்பாளர்
நன்றி கூற
விழா இனிது நிறைவுற்றது.
தஞ்சாவூர், பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
இளநிலை தமிழ் மூன்றாமாண்டு மாணவி
நிகழ்வினை
சுவைபடத் தொகுத்து வழங்கினார்.
பேராசிரியப் பெருந்தகையின்
ஆற்றல்மிகு பொழிவின் வழி,
கப்பலோட்டியத் தமிழனை
செக்கிழுத்தச் செம்மலை
தஞ்சைக்கு அழைத்து வந்து,
தமிழர்தம் மறதிக்கு
மருந்திட்டு,
ஒப்பில்லா சிதம்பரனை
எந்நாளும்
நினைக்க வைத்திட்ட,
ஏடக நிறுவுநர், தலைவர்
போற்றுவோம், வாழ்த்துவோம்.