தூத்துக்குடி நேசனல் பேங்க் ஆப் இந்தியா லிமிடெட்டுக்கு,
ஐந்து மாத வீட்டு வாடகை ரூ.135 தரவேண்டி இருக்கிறது.
தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் கடையில், ஜவுளி
வாங்கிய வகையில் ரூ.30 நிலுவை தரவேண்டும்.
வன்னியஞ் செட்டியார் எண்ணெய் கடைக்கு ரூ.30 தர
வேண்டும்.
சில்லறைக் கடன்கள் ரூ.60 மீதமிருக்கினறன.
இன்ஸ்பெக்டர் பிள்ளைக்கு ரூ.20
சோமநாத்துக்கு ரூ.16
வேதவல்லிக்கு ரூ.50 பாக்கி இருக்கிறது.
சுயநினைவிழந்து சுற்றிக் கொண்டிருக்கும், எனது தம்பி மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு சாப்பாடு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இப்பொழுது செய்ய வேண்டிய அவசர காரியம் ஒன்று
இருக்கிறது.
என் இரு மகள்களில் மூத்தவராகிய, சௌபாக்கியவதி
ஆனந்தவல்லி அம்மாளுக்கு விரைவில் கலியாணம் செய்து வைக்க வேண்டும்.
சரியான மாப்பிள்ளை கிடைக்காததால் தாமதம்.
இப்போது சுமார் ரூபாய் ஐநூறுக்கு அவளிடத்தில்
நகைகள் இருக்கின்றன. இன்னும் ரூபாய் ஐநூறுக்கு அவளுக்கு நகை போட வேண்டும்.
கலியாணப் பந்தல் செலவு, ஒரு வருஷத்துக்கு சீர்
சிராட்டு செய்யவும் வேண்டும்.
இவற்றிற்கு ஒரு கம்பெனி இன்ஸ்யூரன்ஸ் பணம் ரூ.1000
மும் சரியாய் போகும்.
இளைய மகள் சௌபாக்கியவதி மரகதவல்லி அம்மாள் கலியாணத்தை
இன்னும் இரண்டு வருஷம் கழித்து நடாத்தி வைக்கலாம்.
அவளுக்கும் அவளிடமிருக்கிற நகைகளை சேர்த்து,
ரூபாய் ஆயிரத்துக்கு நகை போட வேண்டும்.
ஒரு வருஷத்துக்கு சீர் சிராட்டும் செய்ய வேண்டும்.
இவற்றிற்கு மற்றொரு கம்பெனியின் இன்ஸ்யூரன்ஸ்
பணம் ரூபாய் 1000 மும் சரியாய் போகும்.
என் குடும்பத்திற்கு வரக்கூடிய இந்த தொகைகளை
எல்லாம், தாங்களே வாங்கி வைத்திருந்து, கோவாப்பிரேட்டிவ் சொஸைட்டியில் கொடுக்கிற, கரண்ட்
டிபாஸிட் வட்டி போட்டு கொடுத்து வரவேண்டும்.
இந்நிலையில் என் மனைவி மக்களுடைய அன்ன, வஸ்திர,
கல்வி செலவுகளுக்கு யாதொரு ஐவேசுமில்லை.
அதற்கு ஒரு நிதியுண்டு பன்ன நான் முயலுகிறேன்.
1936 ஆம் ஆண்டு,
அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி எழுதப்பெற்று, தூத்துக்குடி திரு அ.செ.சு.கந்தசுவாமி ரெட்டியார் வசம் ஒப்படைக்கப்பட்ட உயிலின் ஒரு
பகுதி இது.
தாங்கள் கீழ்வரும் காரியங்களை செய்து முடித்துக்
கொடுத்து, என் குடும்பத்தைக் காப்பாற்றி அருளும்படியாக, தங்களை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து
கேட்டுக் கொள்கிறேன்.
இவர் இப்படித்தான்,
தன் உயிலைத் தொடங்குகிறார்.
சொத்துக்களை
பிரித்துக் கொடுக்கததான் உயில் எழுதுவார்கள்.
இவரோ, தன் கடன்களுக்காகவே உயில் எழுதியிருக்கிறார்.
இவ்வுயிலினை
எழுதியவர், இதனை எழுதிய 22 ஆம் நாள் இவ்வுலக வாழ்வு துறந்தார்.
படிக்கப் படிக்க
மனதை வேதனை வாட்டுகிறது அல்லவா?
இரு மகள்களின்
திருமணத்திற்கு, இரண்டே இரண்டு இன்ஸ்யூரன்ஸ் பாலிசிகள்.
அப்பாலிசிகளுக்கும்,
பலமாத பிரிமியம் தொகை கட்டப்படாமல் நிலுவையில் இருக்கும் நிலை.
எதிர்காலத்தில்,
இவர் குடும்பத்தினர் உண்ணுவதற்கும், உடுத்துவதற்கும் கூட வழி இல்லாத நிலை.
இவர் வசதியற்றவர் அல்ல.
பெரும் செல்வந்தர்.
பெரும் செல்வந்தராய்
இருந்தவர்.
நாடு, நாடு என
அள்ளி அள்ளிக் கொட்டியவர்.
இருந்ததையெல்லாம்
இழந்து, வறுமையில் வாடியபோது, தமிழ் நாட்டு மக்கள் இவரை மறந்தே போனார்கள்.
இறந்தபிறகு போற்றுவதும்,
புகழ்வதும், என் சமூகத்தைச் சார்ந்தவர் என்று கொண்டாடித் தீர்ப்பதும்தானே, நமக்குத்
தெரியும்.
இவரையும் முழுமையாய்
மறந்தோம்.
இவரே வறுமையில்
வாடினார்.
கிடைத்த வேலைகளை
எல்லாம் செய்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றப் போராடினார்.
இவர் யார் தெரியுமா?
ஒன்றல்ல, இரண்டு
கப்பல்களை கடலில் ஓடவிட்டு, ஆங்கிலேயருக்குத் தண்ணி காட்டியவர்.
நமக்காகச் செக்கிழுத்தவர்.
ஆம், இவர்தான்
கப்பலோட்டிய
தமிழன்
செக்கிழுத்த
செம்மல்
(கடந்த 12.9.2021 ஞாயிறன்று,
ஏடகம் ஞாயிறு முற்றத்தில்
பேராசிரியர்
கோ.விஜயராமலிங்கம் அவர்கள்
பொழிந்த பொழிவின் ஒரு துளி)