திருநெல்வேலி
அம்பலவாணக் கவிராயர்
அ.முத்துசாமி
பிள்ளை
புதுவை
நயனப்ப முதலியார்
முகவை
இராமாநுசக் கவிராயர்
களத்தூர் வேதகிரி முதலியார்
மழவை
மகாலிங்கனார்
தாண்டவராய
முதலியார்
திருத்தணிகை
க.விசாகப் பெருமாளையர்
திருத்தணிகை
க.சரவணப் பெருமாளையர்
திருவேங்கடாசல
முதலியார்
சந்திரசேகர
கவிராச பண்டிதர்
திரிசபுரம்
வி.கோவிந்தபிள்ளை
கொட்டையூர்
த.சிவக்கொழுந்து தேசிகர்
காஞ்சிபுரம்
மகாவித்துவான் சி.எஸ்.சபாபதி முதலியார்
யாழ்ப்பாணம்
கோப்பாய் அம்பலவாண பண்டிதர்
யாழ்ப்பாணம்
வட்டுக்கோட்டை அம்பலவாண நாவலர்
யாழ்ப்பாணம்
மானிப்பாய் அருணாசல சதாசிவம் பிள்ளை
தொண்டை
மண்டலம் இராசநல்லூர் இராமச்சந்திர கவிராயர்
மகாவித்துவான்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
யாழ்ப்பாணம்
நல்லூர் க.ஆறுமக நாவலர்
வடலூர்
இராமலிங்க அடிகள்
பாளையங்கோட்டை
எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை
சோடசாவதானம்
வீ.சுப்பராய செட்டியார்
கோமளபுரம்
இராசகோபாலப் பிள்ளை
யாழ்ப்பாணம்
உடுப்பிட்டி கு.கதிரைவேற் பிள்ளை
புதுவை
சவராயலு நாயகர்
பொன்னம்பல
சுவாமிகள்
தொழுவூர்
செ.வேலாயுத முதலியார்
காயல்பட்டினம்
செய்கு அப்துல்காதிரு நயினார் லப்பை ஆலிம்
யாழ்ப்பாணம்
புலோலியூர் நா.கதிரைவேற் பிள்ளை
யாழ்ப்பாணம்
வடகோவை சபாபதி நாவலர்
யாழ்ப்பாணம்
சுண்ணாகம் குமாரசாமிப் புலவர்
யாழ்ப்பாணம்
வல்வெட்டித்துறை வயித்தியலிங்கம் பிள்ளை
யாழ்ப்பாணம்
அச்சுவேலி தம்பிமுத்துப் பிள்ளை
திருகோணமலை
த.கனகசுந்தரம் பிள்ளை
எதிர்கோட்டை
அ.நாராயணையங்கார்
பின்னத்தூர்
அ.நாராயணசாமி ஐயர்
காஞ்சி
நாகலிங்க முனிவர்
சோழவந்தான்
அரசஞ் சண்முகனார்
மகாவித்துவான்
இரா.இராகவையங்கார்
வி.போ.சூரியநாராயண
சாஸ்திரியார்
மு.சி.பூர்ணலிங்கம்
பிள்ளை
வேதாந்தி
கோ.வடிவேலு செட்டியார்
திருமணம்
தி.செல்வக்கோசவராய முதலியார்
யாழ்ப்பாணம்
சிறுப்பிட்டி வை.தாமோதரம் பிள்ளை
வடக்குப்பட்டு
த.சுப்ரமணியப் பிள்ளை
காவேரிப்பாக்கம்
ரா.நமச்சிவாய முதலியார்
வ.உ.சிதம்பரம்
பிள்ளை
கயப்பாக்கம்
ர.சதாசிவ செட்டியார்
காஞ்சிபுரம்
ர.கோவிந்தராச முதலியார்
ஈக்காடு
இரத்தினவேலு முதலியார்
பூவை
கல்யாணசுந்தர முதலியார்
மகாவித்துவான்
மு.இராகவையங்கார்
திட்டாணிவட்டம்
வே.இராஜகோலாலையங்கார்
இ.வை.அனந்தராமையர்
கே.கிருஷ்ணமாச்சாரியார்
அ.சக்கரவர்த்தி
நயினார்
திருவாரூர்
வி.கல்யாண சுந்தரனார்
நாவலர்
ந.மு.வேங்கடசாமி நாட்டார்
திருநெல்வேலி
கா.சுப்பிரமணிய பிள்ளை
டி.கே.சிதம்பரநாத
முதலியார்
இராவ்
பகதூர் ச.பவானந்தம் பிள்ளை
கரந்தைக்
கவியரசு அரங்க.வேங்கடாசலம் பிள்ளை
புன்னைலைக்
கட்டுவன் சி.கணேசையர்
ஔவை
சு.துரைசாமிப் பிள்ளை
திருக்கண்ணபுரம்
திருமாளிகைச் சௌரி பெருமாளரங்கனார்
ச.சோமசுந்தர
தேசிகர்
மாங்காடு
வடிவேலு முதலியார்
மகாவித்துவான்
மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை
பேரா
மு.சண்முகம் பிள்ளை
பேராசிரியர்
உ.வே.சாமிநாதையர்
இப்பெரும் பெயர்ப் பட்டியலைப் படிக்கப் படிக்க,
இவர்கள் எல்லாம் யார்? என்ற கேள்வி உள்ளத்தே எழுந்திருக்கும்.
ஆனாலும், இறுதியில், உ.வே.சாமிநாதையரைக் கண்டவுடன், பட்டியலில் இருப்போர், யார் எனப் புரிந்திருக்கும்.
ஆம், இவர்கள் எல்லாம், பழந்தமிழ்ச் சுவடிகளை,
செல்லரித்து, கிழிந்து கிடந்த சுவடிகளை எல்லாம், நுணுகி ஆராய்ந்து, நம் தமிழை, நம்
பழந்தமிழை, நமக்கு மீட்டுக் கொடுத்த மீட்பர்கள்.
திரு வி.க., அவர்களை
சிறந்த, தமிழ்ப் பேச்சாளராக, தமிழறிஞராகத்தான் நம் அறிவோம்.
ஆனால்,
இவர் இரு அச்சகங்களை நிறுவி, பெரிய புராணத்திற்குக் குறிப்புரையும், வசனமும் எழுதிப்
பதிப்பித்ததோடு, பெரிய புராணப் பதிப்பையும் வெளியிட்டவர் என்பது பலரும் அறியாத செய்தியாகும்.
வ.உ.சிதம்பரனாரைக்
கப்பலோட்டியத் தமிழனாக, செக்கிழுத்தச் செம்மலாகத்தான் நாம் அறிவோம்.
ஆனால், வ.உ.சி.,யோ திருக்குறள் மணக்குடவர் உரை,
தொல்காப்பியம் பொருளதிகாரம்- இளம்பூரணர் உரை, இன்னிலை ஆகிய நூல்களைப் பதிப்பித்தப்
பெருமைக்குரிய, பதிப்புச் செம்மலாகவும் விளங்கியவர் என்பது, நன்கு கற்றறிந்த பலரும்
கூட அறியாத செய்தியாகும்.
இவர்கள் எல்லாம், தமிழ்ச் சுவடிப் பதிப்பாசிரியர்கள்.
ஏற்கனவே, சுவடி வடிவில் எழுதப்பெற்று, வெளி உலகம்
அறியாமல், மாபெரும் புதையலாய், மறைந்து கிடக்கும், ஓலைச் சுவடிகளை நுணுகி ஆய்ந்து,
இன்றைய உலகிற்கு உகந்த அளவில், எடுத்துக் காட்டுவதற்கான, வழிமுறைகளை, நெறிமுறைகள் கூர்ந்து
ஆய்ந்து, வெளிப்படுத்தக் கூடிய திறமை வாய்ந்தவர்களே, பதிப்பாசிரியர் என அழைக்கப்படுவர்.
ஏடு படித்தல் என்பது ஒரு கலை
எல்லோரும் ஏடுபடித்தல் இயலாது.
அதற்குத்தக்க நூற்பயிற்சி பெரிதும்
உழைத்துப் பெறுதல் வேண்டும்.
செல்லும் பூச்சியும் ஏட்டைச் சிதைக்கும்
ஏடுகள் ஒடிந்தும் கிழிந்தும் இருக்கும்.
மெய்யெழுத்துகள் புள்ளி எய்தா
ஒற்றைக் கொம்பும் சுழியின் கொம்பும்
வேறுபாடின்றி ஒத்து விளங்கும்.
காலும் ரகரமும் ஒன்றே போலும்
பகர யகரம் நிகருறத் திகழும்.
கசதநற என்பவை வசதியாய் மாறி
ஒன்றன் இடத்தை மற்றொன்று கவரும்.
எழுதுவோர் பலப்பல பிழைகளைப் புரிவர்
பக்கங்கள் பலப்பல மாறிக் கிடக்கும்.
சீரும் தளையும் செய்யுள் வடிவம்
சரிவரத் தெரியா வரிகள் விடுபடும்.
இத்தகு நிலைகளால் எத்தனையோ
பல குழப்பமும்
கலக்கமும் விளைந்து நிற்கும்.
படிக்கும்பொழுதே, நமக்குத் தலை சுற்றுகிறதல்லவா?
சுவடி பதிப்பில், இத்தனை குழப்பங்கள் வருமா,
என்னும் கேள்வி பிறக்கிறதல்லவா?
அத்துணைத் தடைகளையும், இடர்பாடுகளையும் கடந்துதான்,
சுவடிப் பதிப்பாசிரியர்கள், பதிப்புப் பணியினைச்
செய்து, தமிழை மீட்டிருக்கிறார்கள்.
தமிழ்ச் சுவடிப் பதிப்புப் பணியின் தொடக்க நூல்
எது தெரியுமா?
திருக்குறள்.
உலகப் பொதுமறையாய் போற்றப்படும் நம் திருக்குறள்.
1812 ஆம் ஆண்டின், அம்பலவாணக் கவிராயரின், திருக்குறள் பதிப்புதான், சுவடிப் பதிப்பு வரலாற்றில், முதல் பதிப்பு நூலாகும்.
சுவடியில் இருந்து, அச்சுக்குத் தாவிய முதல் நூல் திருக்குறள்.
பதிப்பித்தவர் அம்பலவாணக் கவிராயர்.
வெளியிட்டவர், தஞ்சையைச் சார்ந்தவர்.
தஞ்சை நகர, மலையப்பப் பிள்ளையின் குமாரர் ஞானப் பிரகாசன்.
சென்னையின், மாசச் தினச் சரிதையின் அச்சுக் கூடத்தில்
அச்சிடப் பெற்று இருக்கிறது.
இத்தகைய தமிழ்ப் பதிப்புத் துறைக்கு அடிக்கல்
நாட்டியவராக, நல்லூர் ஆறுமுக நாவலர் போற்றப்படுகிறார்.
ஆறுமுக நாவலரின் அடிக்கல்லின் மேல், சுவர் எழுப்பியப்
பெருமைக்கு உரியவர் சி.வை.தாமோதரனார்.
சுவற்றின் மேல் கூரை வேய்ந்து, அழகுபடுத்தி,
மெருகேற்றிய வித்தகர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர்
அவர்களாவார்.
ஒரு பதிப்பு வெளிவர வேண்டும் என்றால், அப்பணியில்
ஆழங்கால் பட்டு, நுணுக்கங்களைக் கற்றவர்கள், அதில் ஏற்படக்கூடிய சிக்கல்களை உணர்ந்து,
தாங்களே, சொந்தமாக அச்சகத்தையும் தொடங்கி இருக்கிறார்கள்.
அன்று இருந்தவை, டிரெடில் எனப்படும், காலால்
மிதித்து இயக்கக்கூடிய, அச்சு இயந்திரங்களாகும்.
எழுத்துக்களை ஒவ்வொன்றாகத் தேடித் தேடி எடுத்துக்
கோர்க்க வேண்டும்.
அதிலும், எழுத்துக்களை தலைகீழாக அடுக்க வேண்டும்.
எனவே அச்சுக் கோர்ப்பவர் என்பவர், இப்பணியில்
வல்லமை பெற்றவராக இருக்க வேண்டும்.
இவ்வாறு, ஒவ்வொரு எழுத்தாய், தேடித் தேடி, அச்சுக்
கோர்க்கப் பெற்றப் பக்கங்களை, பிழை திருத்தம் செய்வது என்பதே, ஒரு தனி கலையாகும்.
பலமுறை பிழை திருத்தி, திருத்தி நூலைச் செம்மையாக்க
வேண்டும்.
பொதுவான நூல்கள் வெளிவருவதற்கும், பதிப்பு நூல்கள் வெளி வருவதற்குமான வேறுபாடு, மிகப் பெரியதாகும்.
இதுமட்டுமல்ல, ஒரு பதிப்பை வெளியிட்ட பிறகு,
அந்நூல் மக்களைச் சென்று சேர்ந்த பிறகு, அந்நூலைப் புரிந்து கொள்வதில், மக்களுக்கு
ஏற்படும் சிக்கல்களை, அப்பதிப்பாசிரியர் உற்று நோக்கி, உணர்ந்து, அறிந்து, அடுத்தப்
பதிப்பில், அந்த சிக்கல்களை, குறைபாடுகளைக் களைவதற்கான வழி முறைகளைக் கண்டு தெளிய வேண்டும்.
1812 ஆம் ஆண்டு, முதன் முதலாக, அச்சு வாகனம்
ஏறிய திருக்குறள், எப்படி இருந்தது என்று பார்த்தீர்களேயானால். வியந்து போவீர்கள்.
ஓலைச் சுவடியில் என்ன மாதிரியான எழுத்துக்கள்
இடம் பெற்றிருந்தனவோ, அவை கொஞ்சமும் மாறாமல், அச்சு எழுத்தாய் மாறி நூலாகி இருந்தது.
புள்ளி இல்லை.
இடையின ரகரம், துணைக்கால் வேறுபாடு இல்லை.
ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு வேறுபாடு இல்லை.
ஓலையின் மறுவடிவமாய், தாளில் வெளிவந்தது, அவ்வளவுதான்.
சுவடிப் படிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே, படிக்கக்
கூடிய நிலையில்தான் வெளிவந்தது.
பொது மக்களிடத்தில் வரவேற்பு இல்லை.
என்ன செய்யலாம்?
யோசித்தார்கள்.
புள்ளி வைத்தார்கள்.
சொல்லைப் பிரித்தார்கள்.
யாப்பை பிரித்தார்கள்.
ஆனாலும பயன் இல்லை.
எவ்வளவு பேருக்குப் பொருள் புரியும்.
எனவே உரையைத் தேடினார்கள்.
பாட்டு, உரை, பாட்டு, உரை என வரிசையாய் அச்சிட்டார்கள்.
புதிய பதிப்பு வந்தது.
மூலமும், உரையும் ஒரே மாதிரியான எழுத்தில் வெளிவந்தது.
எது மூலம்?
எது உரை? எனப் படித்தோருக்குப் புரியவில்லை.
யோசித்தார்கள்.
மூலத்தை ஒரு வகை, எழுத்திலும், உரையை வேறு வகையான
எழுத்திலும், அதாவது, மூலத்தை பெரிய எழுத்திலும், உரையை சிறிய எழுத்திலும் அச்சாக்கி
வெளியிட்டார்கள்.
வரவேற்பு கிடைத்தது.
மூலம், உரை இவற்றோடு, பதிப்பாசிரியர்கள், தங்கள்
கருத்தையும், சேர்க்க விரும்பினார்கள்.
அடிக்குறிப்பு பிறந்தது.
பதிப்பு செய்பவர்கள், தங்களின் ஆய்வுக் கண்ணோட்டத்தை,
அடிக் குறிப்பில் வெளியிட்டார்கள்.
உ.வே.சா., அவர்களின் பதிப்பைப் பார்த்தால், கீழே
ஒரு கோடு இருக்கும்.
கோட்டிற்கு கீழே இருப்பதெல்லாம் அவருடைய கருத்து.
உ.வே.சா., அவர்கள் ஒவ்வொரு நூலை வெளியிடுவதற்கும்,
மனதளவிலும், பொருளளவிலும், எவ்வளவு சிரமப்பட்டுள்ளார் என்பதை, அவரது, என் சரித்திரம் நூலின் வாயிலாக அறியலாம்.
பதிப்பாசிரியர்கள் ஒவ்வொருவரும், தங்களது தனிப்பட்ட
துயர்களைப் பொருட்படுத்தாமல், மனதளவில் தளராமல், பாடுபட்டதன் விளைவாகத்தான், இன்று,
நம் மொழி, தமிழ் மொழி, தன்னிகரற்ற மொழியாக உயர்ந்து நிற்கிறது.
பதிப்புப் பணிமூலம், நூல் உரு பெற்று, உயிர்த்தெழுந்த
41 நூல்களைக் கொண்டே, நம் மொழி, தமிழ் மொழி, செம்மொழித் தகுதியைப் பெற்றிருக்கிறது
என்றால், ஓலைச் சுவடிகளிலேயே இன்றும் உறங்கிக் கொண்டிருக்கும், எண்ணற்ற தமிழ் இலக்கண,
இலக்கியங்கள் எல்லாம், தன் துயில் கலைந்து, நூல் உரு பெறுமானால், நம் மாழி, தமிழ் மொழி, மேலும் மெருகேறும், செழுமை பெறும்
என்பது திண்ணம்.
இதுநாள் வரை, பதினைந்து சதவீத தமிழ் ஓலைச் சுவடிகளே,
தாளுக்குத் தாவியிருக்கின்றன.
மீதமிருக்கும் எழுபத்து ஐந்து சதவீத தமிழ் இலக்கண,
இலக்கியங்கள் அனைத்தும், ஓலைச் சுவடிகளில், மீளா உறக்கத்தில், உறங்கிக் கொண்டே இருக்கின்றன.
----
கடந்த 12.12.2021 ஞாயிறு அன்று
ஏடகம்
ஞாயிறு முற்றத்தின்
ஐம்பதாவது பொழிவு
பொன்விழாப் பொழிவு
அரங்கேறியது.
தஞ்சாவூர், அரசர் மேனிலைப் பள்ளியின்
மேனாள் தலைமையாசிரியர்
தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்வில்,
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகப்
பதிவாளர் (பொ) மற்றும் ஓலைச் சுவடித் துறைத் தலைவர்
பழந்தமிழ்ச் சுவடிப்
பதிப்பாசிரியர்கள்
என்னும் தலைப்பில்
உரையாற்றி,
பதிப்பாசிரியர்கள் பட்ட துன்பங்களையும்,
அவர்களின் தன்னலமற்ற உழைப்பையும்
கேட்போர் நெகிழும்படி எடுத்துரைத்தார்.
முன்னதாகப் பொழிவிற்கு வந்திருந்தோரை
ஏடகப் பொறுப்பாளர்
வரவேற்றார்.
ஏடகச் சுவடியியல் மாணவி
நன்றி கூற
விழா இனிது நிறைவுற்றது.
வல்லம், தூய சவேரியார் நடுநிலைப் பள்ளி ஆசிரியை
விழா நிகழ்வுகளைத் திறம்படத்
தொகுத்து வழங்கினார்.
ஒன்றல்ல
இரண்டல்ல
முழுதாய்
ஐம்பது பொழிவுகளை
ஏடகம்
எட்டிப் பிடிக்க
எந்நேரமும்
அயராது
தளராது
பாடுபட்ட
ஏடக நிறுவுநர், தலைவர்
போற்றுவோம், வாழ்த்துவோம்.