மறதி.
மறதி ஒரு மாமருந்து என்பார்கள்.
ஒருவன் தன் வாழ்வில் நிகழும், அத்துணை நிகழ்வுகளையும்,
நினைவுகளாய் பத்திரமாய் பாதுகாப்பான் எனில், அவன் விரைவில் மனநல மருத்துவரை நாட வேண்டிய
அவசியம் வரும்.
ஆனால், அதே சமயம், ஒருவன், தான் நினைவில் வைத்திருக்க வேண்டிய, நினைத்து, நினைத்து மகிழக்கூடிய, பெருமைப்படக் கூடிய நிகழ்வுகளையும், மாமனிதர்களையும் மறந்துபோவதுதான் வேதனை.
மேதையின் சிறந்தன்று கற்றது மறவாமை.
கல்வியில் பெரிய மேதையாய் வல்லமை பெற்று இருப்பதைவிட,
கற்றவற்றை, கற்றவரைக்கும், மறவாமல் இருப்பதும், அதன் படி நடப்பதும் சிறந்தது என உரைக்கிறது
முதுமொழிக் காஞ்சி.
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயர் நட்பு.
மாசற்றவர்கள் உறவையும், நாம் துன்பத்தில் இருந்தபோது,
நம்மை விட்டு விலக நினைக்காதவர்கள் நட்பையும், ஒரு நாளும் மறக்க வேண்டாம், துறக்க வேண்டாம்
என வலியுறுத்துகிறது வள்ளுவம்.
ஆனாலும், மறதி இன்று ஒரு தேசிய வியாதியாகிவிட்டது.
மறக்கத் தொடங்கினார்கள்.
ஒரு மாமனிதரின் நினைவுகளை, அவர்தம் அயராப் பணிகளை,
மெல்ல மெல்ல மறந்து, ஒரு காலகட்டத்தில் முற்றாய் மறந்தே போனார்கள்.
ஆம்,
கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோன்றிய நாள்
தொடங்கி, முப்பதாண்டுகள் முழுதாய், தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும், சங்கத்திற்கே
உரிமையாக்கி, உழைத்த உன்னத மனிதரை, சங்கத் தலைவரை, செந்தமிழ்ப் புரவலரை, தமிழவேளை,
உமாமகேசுவரனாரை, அவர் வாழ்ந்த மண்ணிலேயே,
அவர் மறைந்த இருபதே ஆண்டுகளில் மறந்துதான் போனார்கள்.
இந்நிலையில், கரந்தைப் புலவர் கல்லூரியில், பேராசிரியராய் நுழைந்த ஒருவர் மட்டும், இந்நிலையினைக்
கண்டு, மனம் வெதும்பினார்.
எப்படியேனும் இந்த வருந்தத் தக்க நிலையினை மாற்ற
வேண்டும் என்று துடியாய் துடித்தார்.
உமாமகேசுவரனாரின் நினைவினைப் புதுப்பிக்க என்ன
செய்யலாம்? என்று யோசித்தார்.
உலகப் பெருந்தலைவர்களைப் பற்றி, நாம் படிக்கத்
தொடங்கினால், நம் மனக்கண் முன், முதலில் எழுந்து நிற்பது அவர்களது உருவம்தான்.
காந்தி என்று நினைக்கும் பொழுதே, அவரது பொக்கை
வாய் சிரிப்பு, நம் மனதில் மலர்கிறது அல்லவா.
எனவே, உமாமகேசுவரனாரின் நினைவுகளைப் புதுப்பிக்க,
முதலில், அவர்தம் உருவத்தை, மாணவர்கள் மனதிலும், சங்க அன்பர்கள் உள்ளத்திலும் புகுத்த
வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அதற்காக உமாமகேசுவரனாரின் திருஉருவப் படத்தினை,
அனைவரும் பார்க்கும் வகையில் வைக்க விரும்பினார்.
அடுத்த கேள்வி பிறந்தது?
எங்கு வைப்பது?
மனதில் மின்னலாய் விடை வெட்டியது.
சங்கத் தமிழ்ப் பெருமன்றத்து, பெருமன்ற மேடை, இவர்முன் வந்து நின்றது.
இவர் பணியாற்றிய காலத்தில், 1960 களில், கரந்தைத்
தமிழ்ச் சங்க வளாகத்தில், இராதாகிருட்டின இளையோர்
அடிப்படைத் தொடக்கப் பள்ளி, உமாமகேசுவர உயர்நிலைப் பள்ளி மற்றும் கரந்தைப் புலவர் கல்லூரி என மூன்று கல்வி
நிலையங்கள் இயங்கி வந்தன.
இம்மூன்று கல்வி நிலைய மாணவர்களும், மாணவிகளும்,
நாள்தோறும் காலையும், மாலையும், தமிழ்ப் பெருமன்றத்தில் ஒன்று கூடி, வரிசை வரிசையாய் நின்று, கூட்டு வழிபாடு செய்வார்கள்.
எனவே, தமிழ்ப் பெருமன்ற மேடையில், பெரிய அளவிலான,
உமாமகேசுவரனாரின் படத்தினை நிறுவினால், சங்க மாணவர்கள், தினமும் காலையும், மாலையும், உமாமகேசுவரனாரின் திருஉருவினைக்
காண்பார்கள்.
உமாமகேசுவரனாரின் திருஉரு மனதில் ஆழப் பதியும்
என்று எண்ணினார்.
அக்காலத்தில் ஒரு சிறு படத்தினை, ஏழு, எட்டு
அடி உயரத்திற்கு, பெரிய அளவினதாய் மாற்றுவதற்கான வசதி, தஞ்சையில் இருந்ததாகத் தெரியவில்லை.
எனவே, உமாமகேசுவரனாரின் திருஉருவினை, ஓவியமாய்
தீட்டி, மன்றத்தில் வைக்க முடிவு செய்தார்.
அன்றைய, உமாமகேசுவர உயர்நிலைப் பள்ளி, ஓவிய ஆசிரியர் திரு எஸ்.சந்திரன் என்பார்,
ஓவியங்களை உயிரோட்டமாய் வரைவதில் வல்லவர்.
உமாமகேசுவரனாரை ஓவியமாய் வரைந்து, உயிர் கொடுக்க முன் வந்தார்.
ஆனால், இதற்கு ஆகும் பொருட் செலவிற்கு என்ன செய்வது?
யாரை அணுகுவிது?
அம்மாபேட்டை, திருமதி சி.வெ.த.செங்கம்மாள் ஆச்சி என்பார், முழுச் செலவினையும் ஏற்க முன்வந்தார்.
திருமதி சி.வெ.த.செங்கம்மாள் ஆச்சி.
இவர் பெண் கல்வியின் அருமையை, பெருமையை அறிந்தவர்,
உணர்ந்தவர்.
இதனாலேயே பெண்கள் கல்வி கற்க வருவதை வரவேற்க
வேண்டும், ஊக்குவிக்க வேண்டும், உற்சாகப்படுத்த வேண்டும் என்னும் பெருநோக்குடன், கரந்தைப்
புலவர் கல்லூரியிலும், உமாமகேசுவர உயர்நிலைப் பள்ளியிலும் பயிலும், மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்காக, ஒரு பெரும்
பரிசு நிதியை ஏற்படுத்தியவர்.
பிறகென்ன, பணி தொடங்கியது.
பேராசிரியரின் மேற்பார்வையில், ஓவியர் எஸ்.சந்திரன்
அவர்கள், உமாமகேசுவரனாரின் ஒரு சிறு படத்தினை, கையில் வைத்துக் கொண்டு, முழுமனதோடு,
தன் முழு திறமையினையும் காட்டி, உமாகேசுவரனாரை எட்டு அடி உயர, உயிரோவியமாய் உருவாக்கினார்.
தமிழ் ததும்பும் முகம்.
அருள்
ஒளி வீசும் கண்கள்.
சிலப்பதிகாரம், திருக்குறள், தேவாரம் இம்மூன்று
நூல்களும் வீற்றிருக்கும், ஒரு சிறு வட்ட வடிவ மேசையில், தன் வலது கையை ஊன்றி, இடது
கையை தன் இடுப்பில் வைத்தவாறு, எழிலார்ந்த தோற்றத்துடன் நிற்கும் உமாமகேசுவரனாரை, ஓவியம்
என்பதனையும் மறந்து, பார்த்தவுடன், நம்மையும் அறியாது, கைகூப்பி வணங்கும் வகையில்,
படைத்து மகிழ்ந்தார்.
1961 ஆம் ஆண்டு, அக்டோபர் திங்கள் 18 ஆம் நாள், தமிழவேள் த.வே.உமாமகேசுவரனாரின் திருஉருவப் படம், தமிழ்ப்பெரு மன்ற மேடையில் குடியேறி நிலைத்து நின்றது.
இன்றும் நிற்கிறது.
நாளையும் நிற்கும்.
என்றென்றும் நிற்கும்.
தமிழவேளின் திருஉருவை மக்களின் மனங்களில் புகுத்த,
பதிய வைக்க பெருமுயற்சி மேற்கொண்டு வெற்றிபெற்றப் பேராசிரியர் யார் தெரியுமா?
இவர்தான்,
கரந்தைப் புலவர் கல்லூரியின்
மேனாள் பேராசிரியர்
மேனாள் முதல்வர்
இவர்
தமிழக அரசின்
தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி
ஆணையத்தின்
மொழி பெயர்ப்பாளராக,
புதுச்சேரி அரசின் சட்டத்துறை
மொழி பெயர்ப்பு அலுவலராக,
செம்மொழி தமிழாய்வு நடுவண்
நிறுவனத்தின்
ஆய்வறிஞராக,
புதுவை மொழியியல் நிறுவனத்தின்
முதுநிலை ஆய்வறிஞராக,
சென்னைப் பல்கலைக் கழகத்தின்
பேரகரமுதலி சீராய்வுத்
திட்டத்தின்
பதிப்பாசிரியராகப்
பணியாற்றியவர்.
இந்திய அரசுக்காக
இந்திய அரசமைப்பு (அதிகாரமுறைத் தமிழாக்கம்)
மொழிபெயர்ப்பினைச் செய்தவர்.
புதுவை அரசின்
சட்ட- ஆட்சியச் சொற்களஞ்சிய
அகராதிகளை உருவாக்கியவர்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்
தமிழவேள் உமாமகேசுவரனார் விருது,
தமிழ்நாட்டு அரசின்
தேவநேயப் பாவாணர் விருது,
செம்மாழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின்
கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ்
விருது,
முதலான
எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர்.
---
பேராசிரியர் கு.சிவமணி.
கடந்த 2016 ஆம் ஆண்டு, நானும், நண்பரும், உமாமகேசுவர
மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன்
அவர்களும் இணைந்து, கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவராய், முதல் முப்பதாண்டுகள், உமாமகேசுவரனார்
ஆற்றிய அரும் பணிகளைத் தொகுத்து,
உமாமகேசுவரம்
என்னும் பெயரில்.
நண்பர் கேப்டன் ராஜன் அவர்களின்
பொருளுதவியால்,
தனியொரு நூலாக வெளியிட்டோம்.
இந்நூலின் ஒரு படியை, பேராசிரியர் கு.சிவமணி
ஐயா அவர்களுக்கு அனுப்பி வைத்தேன்.
அதுநாள்வரை, பேராசிரியர் கு.சிவமணி ஐயா அவர்கள்
என்னை அறியார்.
ஆனால், நூலினைப் படித்தவுடன், தன் தமிழ் இதயத்துள்
எனக்கும் ஓரிடம் கொடுத்து மகிழ்ந்தார்.
கடிதம் ஒன்றும் எழுதினார்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்துடன், தங்கள் வாழ்வும், வளமும், பணியும், தொண்டும் ஒன்றியிருப்பதன் வெளிப்பாடே, உமாமகேசுவரம் என்பதை அறியும்போது, நான் அறிந்திராத நீங்கள், எங்கிருந்தாலும் வாழ்க, வளர்க என்று என் மனம், உங்களை வாழ்த்தி மகிழ்கிறது.
நெகிழ்ந்து போனேன்.
அன்று முதல், பேராசிரியர் ஐயா அவர்கள், கரந்தைக்கு
வரும் பொழுதெல்லாம், கண்டு வணங்கி மகிழ்வேன்.
கடந்த சனவரி மாதம், ஐயா அவர்களை இறுதியாய் சந்தித்தபோது எடுத்தப் படம் |
பேராசிரியர் கு.சிவமணி ஐயா அவர்கள், பேசத் தொடங்கினால், பேசிக் கொண்டே இருப்பார்.
பல மணிநேரம், இடைவிடாது, சற்றும் அயராது, வெண்கலக்
குரலில் பேசிக் கொண்டே இருப்பார்.
பல நாட்கள், பல முறை இப்படிப் பேசி இருக்கிறார்.
கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.
வயது வித்தியாசம் பாராது பேசக் கூடிய, பழகக்
கூடிய மாமனிதர்.
இத்தகு மனிதர்
தமிழ் மறவர்
தமிழ்க் கிழவர்
தனது 90 ஆம் அகவையில்,
கடந்த 12.8.2022
அன்று மாலை,
தனது புதுச்சேரி இல்லத்தில்
இயற்கையோடு இணைந்தார்.
என்ற
செய்தியறிந்து
தமிழுலகே துடித்துத்தான் போனது.
கடந்த மாதம்
தமிழ் நாட்டு அரசின்
இலக்கிய மாமணி
விருது பெற்ற,
தமிழ்க் கடல் முனைவர் இரா.கலியபெருமாள்
ஐயா அவர்கள்
இவரது மாணவர் ஆவார்.
தமிழ்க் கடலோடும், பேராசிரியரின் மற்றொரு மாணவரான புலவர் மா.கந்தசாமி அவர்களோடும், புதுச்சேரிக்குச் சென்று, இறுதியாய் ஒருமுறை, பேராசிரியர் கு.சிவமணி ஐயா அவர்களின், திருமுகம் காண, ஒரு வாய்ப்பு கிட்டியது.
சென்றேன்.
புதுச்சேரியில்,
தன் இல்லத்தில்
கணணாடிப் பேழைக்குள்
மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருந்த
பேராசிரியர் பெருமகனாரைக் கண்டு
வணங்கி நின்றேன்.
அறை முழுவதும் புத்தகங்களாலும், விருதுகளாலும், பரிசுப் பொருட்களாலும் நிரம்பி வழிந்தது.
ஒரு புத்தக அடுக்கில் இருந்து, எங்களது, உமாமகேசுவரம் நூல், என்னை எட்டிப் பார்த்தது.
பேராசிரியரின் வாழ்த்து நினைவிற்கு வந்தது.
கண்கள் கலங்கின.
ஒன்றல்ல, இரண்டல்ல,
முழுதாய் எழுபது ஆண்டுகள்,
கல்வியாளராய்
பெருங் கவிஞராய்
நாடக ஆசிரியராய்
நாவலாசிரியராய்
எழுத்தாளராய்
ஆராய்ச்சியாளராய்
திறனாய்வாளராய்
மொழி பெயர்ப்பாளராய்
பன்முகத் திறனுடன்
ஓய்வின்றி உழைத்த மனிதர்,
மாமனிதர்
இதோ கண்ணாடிப் பேழைக்குள் ஓய்வெடுக்கிறார்.
ஓய்வெடுங்கள் ஐயா.
(இன்று
கரந்தைத் தமிழ்ச் சங்க நுழைவு வாயிலில், எழிலார்ந்த தோற்றத்துடன் நிற்கும், உமாமகேசுவரனாரின் திருஉருவச் சிலையானது, பேராசிரியர்
பெருமுயற்சி எடுத்து, தமிழ்ப்பெரு மன்ற மேடையில் அமைத்த, திருஉருவப் படத்தினை அடிப்படையாகக்
கொண்டு, 1973 ஆம் ஆண்டு நிறுவப் பெற்றதாகும்)