24 செப்டம்பர் 2022

மாமனாரும், மருமகனும்



     ஆண்டு 1906.

     திருவல்லிக்கேணி.

     சுக்குராம செட்டித் தெருவில், தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்த அம்மனிதர், ஒரு நாள் பட்டணம் நோக்கிச் சென்ற பொழுது, வழியில் ஒரு பெரிய வீட்டைப் பார்க்கிறார்.

     இந்தியா என்னும் வார இதழின் உரிமையாளர் திருமலாச்சாரியார் வீடு என்பதை அறிகிறார்.

      இதழின் உரிமையாளரைச் சந்திக்க எண்ணி, வீட்டிற்குள் நுழைகிறார்.

      அவர் மாடியில் இருக்கிறார் என்கிறார்கள்.

      மாடிக்குச் செல்கிறார்.

      உரிமையாளரைச் சந்திக்கிறார்.

      தனது ஊரையும், பெயரையும் கூறுகிறார்.

      மகிழ்ந்து போன உரிமையாளர், மாடியின் உள் பக்கம் நோக்கி, உங்கள் ஊரார் ஒருவர் வந்திருக்கிறார், வந்து பாருங்கள் என யாரையோ அழைக்கிறார்.

     

ஒருவர் வருகிறார்.

     இவர்தான் இந்தியா இதழின் ஆசிரியர் என அறிமுகம் செய்து வைக்கிறார்.

      உங்கள் தகப்பனார், என் தகப்பனாரின் அத்தியந்த நண்பர். அவர்களை நன்றாகத் தெரியும், உங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன் என்கிறார் வந்தவர்.

     முதல் சந்திப்பு.

     பேச்சு தொடர்கிறது.

     முதல் சந்திப்பிலேயே இருவரும் மனமொத்த நண்பர்களாய் மாறினர்.

     பார்க்கப் போனவர், பின்னாளில் இப்படி எழுதுகிறார்.

     அப்பேச்சு, அவரை கம்பராகவும், என்னைச் சோழனாகவும், நான் நினைக்கும்படிச் செய்தது.

     மீண்டும், மீண்டும் இருவரும் சந்திக்கின்றனர்.

     அலுவலகத்திலும், மாலை நேரங்களில் கடற்கரையிலும் பேச்சைத் தொடர்கின்றனர்.

     கம்பரும் சோழனுமாய் பழகியவர்கள், உள்ளத்தால் மாமனாரும், மருமகனுமாய் மாறிப் போனார்கள்.

ஒருவர்

திருநெல்வேலி ஜில்லா, எட்டயபுரத்தில் பிறந்தவர்

மற்றொருவர்

தூத்துக்குடி, ஒட்டப்பிடாரத்தில் பிறந்தவர்.

இவ்விரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்டத் தொலைவு 30 கி.மீ,தான்.

இருப்பினும், இருவரும் தங்கள் சொந்த ஊர்களில்

சந்தித்துக் கொண்டேதே இல்லை.

இவர்கள்


சுப்பிரமணிய பாரதி.

வ.உ.சிதம்பரனார்.

     அன்று முதல் அவர் என் வீட்டிற்கு வரவும், என்னோடு உண்ணவும், உறங்கவும், நான் அவர் வீட்டிற்குப் போகவும், அவரோடு உண்ணவும், உறங்கவும் ஆகியிருந்தோம்.

     ஆசிரியரும் நானும் முறையே கம்பரும சோழனுமாகி, மாமனாரும், மருமகனும் ஆயினோம் என எழுதுகிறார் வ.உ.சி.

அஞ்சாமை, கல்வி, அடக்கம், கருணை

எஞ்சாமல் நிரம்பிய என் வள்ளி நாயகம்

இலகுநம் தேயம் இன்புற புழைக்குந்

திலவன், அரவிந்தன், கப்பர்தி, மூஞ்சி

சீனிவாசன், பாரதி செப்பரும் பிற்சிலர்

நானிவண் உணர்ச்சியால் நட்ட நண்பினர்.

     வ.உ.சி., சிறையில் இருந்தபோது பரலி சு.நெல்லையப்பர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, முழுவதும் அகவற்பாவினால் எழுதப்பட்ட தன் சுயசரிதையில், மாண்பு நிறைந்த நண்பர்கள் என்னும் தலைப்பில் இவ்வாறு எழுதினார்.

     பாரதி மறைந்த செய்தி கேட்டு, துடிதுடித்த வ.உ.சி., இவ்வாறு எழுதுகிறார்.

ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதியாரைப்

பற்றிய சில குறிப்புகள்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை எழுதியது.

    




பின்னர் நான், சுதேசமித்திரன் ஆபீஸ்க்குப் போயிருந்த சில சமயங்களில், என் அருமை மாமாவைக் கண்டு பேசியிருக்கிறேன்.

     கடைசியாக மாமா, வானுலகம் சென்றார் என்று கேட்டு, துக்கக் கடலில் ஆழ்ந்து கரையேறினேன்.

     அவர் இவ்வுலகைவிட்டுப் போய்விட்டாலும், அவருடைய தேசிய கீதங்களும், மற்றைய பாடல்களும், கதைகளும் இவ்வுலகம் உள்ள அளவும், நிலை நிற்குமென்பதில் ஐயம் இல்லை.

     அவருடைய பெயர் தேசாபிமானிகளுடைய சரித்திரத்தில் மட்டுமல்லாமல், கவிகளுடைய சரித்திரத்திலும் முதன்மையான இடத்தைப் பெறும்.

     அவருடைய பாடல்களின் அருமையையும், பெருமையையும் சிறிது இயம்ப வேண்டுமென்று நினைத்தேன்.

      ஆற்றலின்மையாலும், அவகாசமின்மையாலும், அவ்வேளையில் புகாது நின்றேன்.

      பாரதியாரின் பாடல்களையே, நம் தேசத்து மக்கள் படிக்க வேண்டுமென்று கோருகிறேன்.   

     பாரதி மறைந்த பிறகும், பாரதி, பாரதி எனப் பாரதியையும், பாரதியின் எழுச்சிமிகுப் பாடல்களையும் தன் நெஞ்சில் சுமந்து வாழ்ந்தவர் வ.உ.சி.,

     வ.உ.சி., தன் இறுதி நாட்களில் ஒரு கரண்டி தண்ணீர் குடிக்க கூட இயலாமல் தவித்த வேளையிலும், கை சாடை காட்டினார்.

     பாரதியாரின் சுதந்திர உணர்ச்சி ததும்பும் பாடல்களைச் செவி குளிர கேட்க வேண்டும் என்று சைகை காட்டினார்.

     காங்கிரஸ் தொண்டர் சிவகுருநாதன் என்பார் என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்றப் பாடலைப் பாடப் பாட, அப்பாடலைக் கேட்டவாறே, கண்மூடியவர் வ.உ.சி.,

      வ.உ.சி மட்டுமல்ல, பாரதியும் இப்படித்தான் மாறியிருந்தார்.

      வ.உ.சி.,யின் நட்பைப் பெற்ற நாளில் இருந்து, பாரதியின் கவிதைகள் சீற்றம் மிகுந்த, எரிமலையாய் வெடிக்கத் தொடங்கின.

       தன் பாடல்களில், வ.உ.சி.,யை மறைமுகமாகவும், நேர்முகமாகவும் வைத்துக் கொண்டாடினார் பாரதி.

     ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான கோரல் ஆலையின், தொழிலாளர் போராட்டத்திற்குத் தலைமையேற்று, நாள்தோறும் கூட்டங்களைக் கூட்டி, ஆயிரக் கணக்கானவர்களை ஒன்றிணைத்து, உணர்ச்சியூட்டியபோது, திருநெல்வேலி ஆட்சியர் எல்.எம்.விஞ்ச் அவர்கள் அழைத்து, மிரட்டியபோதும் சிறிதும் பின்வாங்க மறுத்தவர் வ.உ.சி.,

     இந்நிகழ்வினை, வ.உ.சி., விஞ்ச் உரையாடலையே கவிதையாக்கி, பாடலாய் பாடி, இதழில் வெளியிட்டவர் பாரதி.

நாட்டிலெங்கும் சுதந்திர வாஞ்சையை

     நாட்டினாய் கனல் மூட்டினாய்

வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே

     மாட்டுவேன் வலி காட்டுவேன்.

 

கூட்டங் கூடிவந் தேமா தரமென்று

     கோஷித்தாய் எமைத் தூஷித்தாய்

ஓட்ட நாங்க ளெடுக்க வென்றே கப்பல்

ஓட்டினாய் பொருள் ஈட்டினாய்.

 

கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள்

     கூறினாய் சட்ட மீறினாய்

ஏழைப் பட்டிங் கிறத்த லிழிவென்றே

     யேசினாய் வீரம் பேசினாய்.

 

அடிமைப்பேடிகள் தம்மை மனிதர்கள்

     ஆக்கினாய் புன்மை போக்கினாய்.

மிடிமை போதும் நமக்கென்றிருந் தோரை

     மீட்டினாய் ஆசை யூட்டினாய்.

 

தொண்டென் றெதொழி லாக்கொண் டிருந்தோரைத்

     தூண்டினாய் புகழ் வேண்டினாய்

கண்ட கண்ட தொழில்கற்க மார்க்கங்கள்

     காட்டினாய் சோர்வை யோட்டினாய்.

 

எங்கு மிந்த ஸ்வராஜ்ய விருப்பத்தை

     ஏவினாய் விதை தூவினாய்

சிங்கம் செய்யுந் தொழிலைச் சிறுமுயல்

     செய்யவோ நீங்கள் உய்யவோ?

 

சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திடச்

     சொல்லுவேன் குத்திக் கொல்லுவேன்

தட்டிப் பேசுவோ ருண்டோ? சிறைக்குள்ளே

     தள்ளுவேன் பழி கொள்ளுவேன்.

     ஆட்சியரின் மிரட்டலுக்கு அஞ்சாத வ.உ.சி., உரைத்த மறுமொழியை, பாரதியின் வரிகளில் கேளுங்கள்.

சொந்த நாட்டிற் பரார்க்கடிமை செய்தே

     துஞ்சிட்டோம் இனி யஞ்சிடோம்

எந்த நாட்டினு மிந்த அநீதிகள்

     ஏற்குமோ? தெய்வம் பார்க்குமோ?

 

வந்தே மாதர மென்றுயிர் போம்வரை

     வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம்

எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்

     ஈனமோ? அவ மானமோ?

 

பொழுதெல்லா மெங்கள் செல்வங்கொள்ளை கொண்டு

     போகவோ? நாங்கள் சாகவோ?

அழுதுகொண் டிருப்போமோ? ஆண்பிள்ளைகள்

     அல்லமோ? உயிர் வெல்லமோ?

 

நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்

     நாய்களோ? பன்றிச் சேய்களோ?

நீங்கள் மட்டு மனிதர்க ளோவிது

     நீதமோ? பிடி வாதமோ?

 

பார தத்திடை யன்பு செலுத்துதல்

     பாபமோ? மனஸ் தாபமோ?

கூறு மெங்கள் மிடிமைத் தீர்ப்பது

     குற்றமோ? இதிற் செற்றமோ?

 

ஒற்றுமை வழி யொன்றே வழியென்ப

     தோர்ந்திட்டோம் நன்கு தேர்ந்திட்டோம்

மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெலா

     மலைவுறோம் சித்தம் கலைவுறோம்.

 

சதையைத் துண்டுதுண் டாக்கினு முன்னெண்ணம்

     சாயுமோ? ஜீவன் ஓயுமோ?

இதையத்துள்ளே யிலங்கு மஹாபக்தி

     யேகுமோ? நெஞ்சம் வேகுமோ?

     தேசதுரோக வழக்கில், சிறைப்பட்டு, வ.உ.சி., செக்கிழுத்தபோது, பாரதியின் ஜன்ம பூமியில், 1909 இல் வ.உ.சி.,யை மனதில் வைத்து எழுதியப் பாடலைப் பாருங்கள்.

தண்ணீர்விட் டோவளர்த்தோம்? சர்வேசா, இப்பயிரைக்

கண்ணீராற் காத்தோம், கருகத் திருவுளமோ?

 

எண்ணமேலா நெய்யாக, எம்முயிரி னுள்வளர்ந்த

வண்ணவிளக் கிஃது மடியத் திருவுளமோ?

 

ஓரா யிரவருட மோய்ந்து கிடந்தபினர்

வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?

 

தர்மமே வெல்லுமெனுஞ் சான்றோர்சொற் பொய்யாமோ?

கர்ம பிளைவுகள்யாங் கண்டதெல்லாம் போதாதோ?

 

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்

நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?

 

எண்ணற்ற நல்லோ ரிதயம் புழுங்கியிரு

கண்ணற்ற சேர்போற் கலங்குவது காண்கிலையோ?

   வ.உ.சி., அவர்கள் கோயமுத்தூர் சிறையில் இருந்தபொழுது, புதுவையில் இருந்து அவரைக் காணச் சென்ற, பரலி சு.நெல்லையப்பரிடம், பாரதி மூன்று பாடங்களை எழுதிக் கொடுத்து அனுப்பினார்.

     மூன்றில் ஒரு பாடல் மட்டுமே, இன்று தப்பிப் பிழைத்து உயிர் வாழ்கிறது.

வேளாளன் சிறை புகுந்தான், தமிழகத்தார்

     மன்னனென மீண்டான் என்றே

கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ,

     வருந்தலையென் கேண்மைக் கோவே

தாளாண்மை சிறிது கோலோ யாம்புரிவேம்?

     நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி

வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே

     வாழ்த்துது நீ வாழ்தி வாழ்தி

     இந்திய விடுதலைப் போராட்டத்தின், ஒரே காலகட்டத்தில், ஒரே அரசியல் பின்னனியில், ஒன்றாகவே வெளிச்சத்திற்கு வந்தவர்கள் வ.உ.சியும், பாரதியும்.

     இருவருக்கும் இடையிலான நட்பு காவிய நட்பாகும்.

---

கடந்த

17.9.2022 சனிக் கிழமை மாலை.

தஞ்சாவூர், பெசன்ட் அரங்கில்,

திருவையாறு

பாரதி இலக்கியப் பயிலகம்,

பாரதி இயக்கம்

சார்பில்

பாரதி இலக்கியப் பயிலக இயக்குநர்


பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் அவர்கள்

தலைமையில் நடைபெற்ற

வ.உ.சி., பிறந்த 150 ஆம் ஆண்டு நிறைவு விழாவில்,

வ.உ.சி., ஆய்வாளர்


திரு ரெங்கையா முருகன் அவர்கள்

வ.உ.சி.,யும் பாரதியும்

என்னும் தலைப்பில் ஆற்றிய உரையினைக் கேட்டு, வ.உ.சி., பாரதி இருவருக்குமான நட்பினை அறிந்து மனம் நெகிழ்ந்துதான் போனது.

     இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே, முதன் முதலாக, தமிழில் பேசியது பெருங்குற்றம் என குற்றப்பத்திரிக்கை போடப்பட்டது வ.உ.சி.,யின் மேல்தான்.

     காரணம், இவர் பேச்சு அப்படிப்பட்டது.

பாரதியின் பாட்டும்

வ.உ.சி., யின் பேச்சும் கேட்டால்

செத்த பிணம் கூட உயிர் பெற்று எழும்

புரட்சி ஓங்கும்

என, தன் தீர்ப்புரையிலேயே எழுதியிருக்கிறார் ஆங்கிலேய நீதிபதி பின்ஹே.

 

பாட்டும், பேச்சும் இணைந்தது.

சுதந்திரக் கனலை மூட்டியது.

 

வாழ்க பாரதி.

வாழ்க வ.உ.சி.,