அம்மா
பசி இல்லாமல் இருப்பதற்காக, வேலை தேடிச் சென்ற மகன்.
எப்படியாவது தன் செல்வங்களை உயர்ந்த நிலைக்குக்
கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைத்து, வாழைப் பழங்களைத், தன் செல்வங்களுக்கு உணவாக்
கொடுத்துவிட்டு, அதன் தோல்களைத் திண்று, தன் பசியாற்றிக் கொண்ட தாய்.
இதுதான் இவரது வாழ்வின் தொடக்கம்.
ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக் கல்வி.
ஆறாம் வகுப்பில் சேருவதற்கோ பணமில்லை.
தையல் கடையில் வேலை.
மளிகைக் கடையில் எடுபிடி.
பின்னர், கும்பகோணம் சித்திரகாலா சாலையின் தலைமையாசிரியர்
திரு குப்புசாமி ஐயரின் கருணையால், சித்திரகலா சாலை மாணவர் ஆனார்.
வழிகாட்டியவர் இவரது மாமா.
சிறுவனின் வாழ்க்கை மாறியது.
ஓவியமே உலகம் என்றானது.
தினத்தந்தியில் கருத்துப் படங்கள்.
தினத் தந்தி இதழில் வெளிவந்த, கருப்புக் கண்ணாடி,
இவள் இல்லை எனும் இரு சித்திரக் கதைகளுக்குப் படம் வரைந்தார்.
மெல்ல உயர்ந்தார்.
தினத்தந்தி இதழுக்கு, கலங்கரை விளக்கு சின்னத்தை வரைந்து கொடுத்தவரே இவர்தான்.
தினகரன் நாளிதழில் வீரசோழன் என்னம் பெயரில்,
மாமன்னன் இராஜராஜ சோழனின் வீர வரலாற்றை சித்திரக் கதையாய் தொடர்ந்து ஏழு ஆண்டுகள்
வரைந்து வெளியிட்டவர் இவர்தான்.
இவருக்கு ஓர் ஆசை.
கல்கியின் பொன்னியின் செல்வன் முழுவதையும்,
சித்திரக் கதையாய் தீட்ட வேண்டும் என்ற தணியாத தாகம்.
முடியுமா?
தன்னால் முடியுமா?
யோசித்துப் பார்த்தார்.
கட்டடம் கட்டுவதற்கு முன் மண்ணின் தரத்தை சோதித்துப்
பார்ப்போம் அல்லவா?
அதுபோல், பொன்னியின் செல்வனைத் தொடங்குவதற்கு
முன் ஒரு சோதனை முயற்சியை செய்து பார்க்க விரும்பினார்.
இராஜகம்பீரன் என்னும் பெயரில் வரலாற்றுச்
சித்திரக் கதையினை வரைந்து தனியொரு நூலாய் வெளியிட்டார்.
முடியும்.
தன்னால் முடியும்.
புத்துணர்ச்சி எழுந்தது.
தன்னம்பிக்கை பிறந்தது.
இருபத்து நான்கு மணி நேரமும், பொன்னியின் செல்வன்,
இவரது மனதை முழுமையாய் ஆக்கிரமித்துக் கொண்டது.
பத்து தொகுதிகள்.
1050க்கும் மேற்பட்டப் படங்கள்.
2016 ஆம் ஆண்டு தொடங்கி, 2021 ஆம் ஆண்டு வரை,
ஆறு ஆண்டுகள் முழுமையாய், இவரது சிந்தனை, செயல் அனைத்தும் பொன்னியின் செல்வன், பொன்னியின்
செல்வன் என்றே கரைந்து போனது.
பொன்னியின் செல்வன் சித்திரக் கதையினைத் தொடங்கியபோது
இவரது வயது 79.
நினைத்தாலே வியப்பாக இருக்கிறது அல்லவா?
நாமெல்லாம் 79 ஐத் தொடுவோமா? என்பதே சந்தேகத்திற்கிடமாக இருக்கின்ற இன்றைய சூழலில்,
இவர் 79 இல்தான் தன் பணியினையே தொடங்கியிருக்கிறார்.
பொன்னியின் செல்வன் சித்திரக் கதை நிறைவு
பெற்ற பொழுது இவரது வயது 85.
பொன்னியின் செல்வனை வரைந்து முடிப்பதற்காகவே, காத்திருந்தவரைப் போல, 86 ஆம் வயதில், கடந்த 27.10.2022 வியாழக் கிழமை இரவு, உறங்கச் சென்றவர் எழவேயில்லை.
ஓயாது வரைந்து வரைந்து, ஓய்ந்த கை ஓய்வெடுக்கத்
தொடங்கியது.
ஓவியர் தங்கம் மறைந்தார்.
---
ஐந்து
ஆண்டுகளுக்கும் முன், பௌத்த ஆய்வாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களால், இம்மாபெரும்
ஓவியரைச் சந்திக்கும் ஒரு நல் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
அன்றுமுதல் இவர்தம் அன்பில் மூழ்கித்தான் கிடந்தேன்.
ஒருமுறை, எழுத்தாளர் ஹரணி அவர்களோடு இவர்தம்
இல்லம் சென்று, இவரைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, தன் பெயர், முகவரி அச்சிட்டத்
தாளினை எடுத்து, கோடு போடத் தொடங்கினார்.
முழுதாய் ஒரு நிமிடம்கூட ஆகவில்லை.
வெள்ளைத் தாளில் என் உருவம் என்னைப் பார்த்துச்
சிரித்தது.
வியந்து போனேன்.
சிரித்துக் கொண்டே, உங்களுக்கு என் அன்புப்
பரிசு எனக் கொடுத்தார்.
ஒரு மகாகலைஞனின் உன்னதப் பரிசினைப் பெற்ற நாள், என் வாழ்வின் மகத்தான நாள்.
அக் கலைஞன், மகாகலைஞன் இன்று இல்லை.
ஆனாலும் அவர் வரைந்த, பொன்னியின் செல்வன், இவ்வுலகு
உள்ளவரை, இவர்தம் பெயரைச் சொல்லிக் கொண்டே இருக்கும்.
பொன்னியின் செல்வனைக் காணப் புறப்பட்டுப் போயிருப்பாரோ?