23 பிப்ரவரி 2023

கலைஞரைக் காணப் புறப்பட்டவர்

 


     ஆண்டு 2023.

     பிப்ரவரி 19 ஆம் தேதி.

     ஞாயிற்றுக் கிழமை.

     காலை 9.00 மணி.

     இவருக்கு வயது 81.

     மனைவியை இழந்தவர்.

     வாழவேண்டிய வயதுள்ள மகனையும் இழந்தவர்.

     ஒரு மகள்.

     பிரிவுத் துயர் வாட்டியபோதும், தமிழால் வாடாமல் வாழ்ந்து வருபவர்.

     இன்னும் சற்று நேரத்தில், இவரது தங்கையின் பெயரனுக்குத் திருமணம்.

முதல் நாள் இரவு மண்டபத்தில் இருந்து, பணிகளை மேற்பார்வை இட்டவர், தாமதமாகத்தான் வீட்டிற்குத் திரும்பினார்.

     காலையிலே எழுந்து, இதோ மண்டபம் செல்வதற்குத் தயாராகிவிட்டார்.

      நிழலாய் என்றும் எப்பொழுதும் உடனிருக்கும் தன் அன்பு உதவியாளர் பேரருள் ஜோதியை அலைபேசி வழி அழைத்துச் சில பணிகளைச் செய்யச் சொல்லுகிறார்.

     அடுத்து, தன் மகிழ்வுந்து ஓட்டுநரை அழைத்து, மகிழ்வுந்தைக் கொண்டவரச் சொல்கிறார்.

     மடிப்பு கலையாத வெள்ளை வேட்டி.

     தூய வெள்ளைச் சட்டை.

     சட்டையின் முழுக் கையினை மடித்துவிட்டவாறு, நாற்காலியில் அமர்கிறார்.

     நாற்காலியில் அமர்ந்த, அடுத்த நொடி, தலை கவிழ்கிறது.

     உயிர் பிரிகிறது.

     மகிழ்வுந்து ஓட்டுநர், மகிழ்வுந்து காத்திருக்கிறது எனச் சொல்ல வந்தபோது, உடல் மட்டுமே, நாற்காலியில் அமர்ந்திருந்தது.

---

     எளிய குடும்பத்தில் பிறந்தவர்.

     ஓயாது உழைத்தவர்.

     வணிகம் செய்து, மெல்ல மெல்ல முன்னேறி, ஓர் உயர்ந்த இடத்தை அடைந்தவர்.

     சுயமரியாதைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில், தன்னை இணைத்துக் கொண்டவர்.

     தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் என மூவரின் அன்பையும் ஒருங்கே பெற்றவர்.

     25 ஆண்டுகால கழகப் பணி.

     நான்கு முறை சட்ட மன்ற உறுப்பினர்.

     ஒரு முறை, ஐந்தாண்டு காலம், வணிகவரித் துறை அமைச்சர்.

     வணிகர்.

     அரசியல்வாதி.

     எனினும் தமிழுணர்வு மிகுந்தவர்.

     வாய் திறந்தால் போதும், தமிழறிஞர்களே வியக்கும் வகையில், திருக்குறளும், தேவாரமும், திருவாசகமும் அருவியாய் கொட்டும்.

     தஞ்சையின் தமிழ் இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைத்து வழி நடத்தியவர்.

     குறிப்பாக, உலகத் திருக்குறள் பேரவை, முற்றமிழ்ச் சுவைஞர் முற்றம், தமிழிசை மன்றம் முதலான அமைப்புகளுக்குப், பெரும் புரவலராய் இருந்து நல் வழிகாட்டியவர்.

     தஞ்சையின் அனைத்து இலக்கியக் கூட்டங்களுக்கும் அமைதியாய் வந்து, முதல் வரிசையில் அமர்ந்து, செவிகொடுத்து தமிழமுதம் பருகித் திளைப்பவர்.

     தன்னை நாடி வருபவர்களுக்கு, இல்லை என்று, ஒருபோதும் சொல்லாது, வாரி வாரிக் கொடுத்து, பாரி வேள் என்றே போற்றப் பெற்றவர்.

---

     கடந்த 2017 ஆம் ஆண்டு, நிகழ்ந்த என் சித்தப்பா, நல்லாசிரியர் திரு சி.திருவேங்கடனார் அவர்களின் எதிர்பாரா மரணம், என்னுள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

     மறைந்த என் சித்தப்பா அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில், ஏதேனும் செய்திட வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.

     அப்பொழுது, என் சித்தப்பாவின் நண்பர், சிறு வயதுத் தோழர், திருவையாறு தமிழிசை மன்றம் தோன்ற வித்தாய் விளங்கியவர்,  சிலம்புச் செல்வர் அடிப்பொடி, திரு தங்க.கலியமூர்த்தி அவர்கள், சித்தப்பாவின் நினைவாக நூல் ஒன்று வெளியிடலாம் என்றார்.

      சித்தப்பாவின் நண்பர்களைத் தொடர்பு கொண்டு, சித்தப்பா பற்றிய நினைவலைகளை எழுதி வாங்கி, நூலாக்கி, 2018 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள், சித்தப்பாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், சித்தப்பா எனும் நூலினை வெளியிட்டேன்.

     இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த, என் சித்தப்பாவின் நண்பர், புலவர் மா.கோபாலகிருட்டினன் அவர்கள், தமிழறிஞராகவே வாழும், பாரிவேள் அவர்களின் பேரன்பிற்கு உரியவர்.

     பாரிவேளுடன் நிழலாய் பயணிப்பவர்.

     இவர் சித்தப்பா நூலினை, தான் படித்து மகிழ்ந்ததோடு, அமைதியடையாமல், பாரி வேளிடம் கொடுத்திருக்கிறார்.

     படித்துப் பார்த்த பாரி வேள் அவர்களும் மகிழ்ந்திருக்கிறார்.

     தன் சித்தப்பாவிற்காகப் பெருமுயற்சி எடுத்து, இந்நூலினை வெளியிட்டிருக்கும், இந்த கரந்தை ஜெயக்குமார் யார்? அவரைப் பார்க்க வேண்டுமே எனக் கூறியிருக்கிறார்.

     செய்தி அறிந்த, திரு தங்க.கலியமூர்த்தி அவர்கள், என்னை அழைத்துச் சென்று, பாரி வேளிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

     அன்று முதல், கடந்த ஐந்து ஆண்டு காலமாக, எந்த இலக்கிய நிகழ்ச்சியில், என்னைப் பார்த்தாலும், என்ன ஜெயக்குமார் சார், எப்படி இருக்கிறீர்கள்? எனக் கரம் பற்றி, வாஞ்சையோடு விசாரிப்பார்.

     அவரது அன்பில் நெகிழ்ந்து போவேன்.

    


இத்தகு மாமனிதர், எளியேனாகிய, என் மீதும், பேரன்பு காட்டிய, பெரிய மனதிற்குச் சொந்தக்காரர், ஒரு நொடியில் மறைந்தார் என்பதை அறிந்தபோது, உள்ளம் உடைந்து போனது.

    


மறுநாள் காலை, 10.00 மணியளவில், தஞ்சையின் அனைத்து கலை இலக்கிய அமைப்புகளின் சார்பில், இரங்கல் பேரணி நடைபெற்றது.

     வெற்றித் தமிழர் பேரவையின், மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு இரா.செழியன் அவர்களின் தலைமையில், மாவட்டப் பொறுப்பாளர் திரு ஆசிப் அலி மற்றும் முனைவர் மு.இளமுருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற, இரங்கல் பேரணியில், கவிஞர் தஞ்சை இனியன், புலவர் சிவநேசன், கவிஞர், பாடகர் ராகவ் மகேஷ், திருமதி மணிபாலா, திரு ரவிராஜ், பூவை சாரதி, ஐயாறு புகழேந்தி, கவிஞர் வல்லம் தாஜ்பால், புலவர் செல்ல கலைவாணன், கவிஞர் ரங்கசாமி, பாரதி இயக்கக குணா ரஞ்சன், உரத்த சிந்தனை ராஜவேலு, கவிஞர் ஆதி நெடுஞ்செழியன், இயக்குநர் சசி எம்.குமார், முனைவர் இரா.குணசேகரன், எழுத்தாளர் களஞ்சியம், தோழர் காளியப்பன், தோழர் களப்பிரன், திரு துரை.மதிவாணன், திரு இராம.சந்திர சேகர், திரு அகமது கபீர், தோழர் ஜி.கிருஷ்ணன், தோழர் என்.பாலசுப்பிரமணியன், தோழர் ஆர்.பிரபாகரன், தோழர் வே.சேவையா, தோழர் என்.சீனிவாசன், தோழர் எம்.வடிவேலன், தோழர் பி.செந்தில்குமார், தோழர் என்.குருசாமி, திராவிடர் கழக அய்யனார், முனைவர் வி.தமிழ்ச் செல்வன், திரு கோ.துரைசிங்கம்,  திரு வி.விடுதலை வேந்தன், முனைவர் வி.பாரி, பாவலர் தர்மராசு, கவிஞர் ப.திருநாவுக்கரசு, முனைவர் கு.திருமாறன், திரு முகில் கலைவேந்தன், கவிஞர் வெற்றிப் பேரொளி, மருத்துவர் வா.செ.செல்வம், கரந்தை ஜெயக்குமார் மற்றும் எண்ணற்ற இலக்கிய ஆர்வலர்கள் இந்த இரங்கல் பேரணியில் கலந்து கொண்டனர்.

     பேரணியின் நிறைவில், முகத்தில் சிறிதும் சலனமின்றி, அமைதியாய், மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருந்த, பாரி வேளின் திருஉரு முன், தஞ்சையின், அனைத்து கலை இலக்கிய அமைப்புகளின் சார்பில்,



தன் இரங்கல் கவிதையை

கவிஞர் தஞ்சை இனியன் அவர்கள்

வாசித்தபோது,

கவிதைக்குப் பின்னனி இசையாய் எழுந்தது,

இலக்கிய அன்பர்களின்

கட்டுக்கடங்காத அழுகையும், விசும்பல்களும், செருமல்களும் மட்டும்தான்.

 

எங்கள் வானம் விழுந்து விட்டது.

வைகறை இருண்டு விட்டது.

ஆலமாய் நின்ற மனிதனைக் – காலம்

தின்றுவிட்டது.

 

பாரிபோல் வழங்குகின்ற பாங்கினில்

மயக்கமில்லார்.

ஏரிபோல் நிறைந்த அன்பை இறைப்பதில்

தயக்கமில்லார்.

காரி போல் அடர்ந்த மேகக் கருணையில்

களங்கமில்லார்.

மாரி போல் வாழ்ந்த மனிதர்

எங்கள் அண்ணன் உபயதுல்லா.

 

முத்தமிழ்த் துடிப்பு

காணும் முகங்களில் படிப்பு

நித்த நித்தமும் உழைப்பு

மூழ்கி நித்திலக் குளிப்பு.

எந்த சத்தமும் செய்திடாமல்

சாதனைக் குவிப்பு – வாழ்வில்

வெத்தலைப் பாக்கு வைத்து – அந்த வெற்றியே

அழைத்த வியப்பு.

 

பிறந்தது பிறைக் குலத்தில்

பேரறிஞராலே பாதை பிறந்தது

திராவிடத்தில்.

தீதில்லா முப்பாலைக் கறந்தது

வள்ளுவத்தில்.

கரைந்தது

மணிவாசகத்தில்.

துறந்தது

தன்னலத்தை

துறவாதது

தன் மானத்தை.

 

நல்லது நல்லது என்பார்

அல்லதை அறியாச் செல்வர்.

சொல்லவர் சொல்வதைக் கேட்டால்

தொழிலினை விடுவர் கள்வர்.

 

வில் விடும் கணையால் நீந்தி

விழாக்களில் தமிழை மாந்தி

நெல் விழும் மக்கள் மண்ணில்

நிலவிடும் சமயச் சாந்தி.

 

வள்ளலின் இலக்கணம்தான்

வலது கை வழங்கும் போது

இடது கைக்குத் தெரியக் கூடாது என்பார்.

கிள்ளியே கொடுத்திடாமல்

அள்ளியே கொடுத்திட்ட

எங்கள் அண்ணன்

உள்ளங்கை வழங்கும் போது – அது

புறங் கைக்குக் கூடத் தெரிந்தது இல்லையே..

 

புன்னகை காண முடியாதா?

உங்கள் பூமுகம் காண முடியாதா?

சின்ன சின்னதாய் கோவம் வருமே – அந்தச்

சிணுங்களைக் காண முடியாதா?

தமிழைக் காண முடியாதா? – எங்கள்

தலைவனைக் காண முடியாதா?

தமிழ்ச் சபையில் வீற்றிருக்கும் – எங்கள்

தந்தையைக் காண முடியாதா?

 

குறளைக் காண முடியாதா? – கொற்றக்

குடையைக் காண முடியாதா?

அன்பகத்திலே அமர்ந்திருக்கும் – அந்த

அழகைக் காண முடியாதா?

உருவைக் காண முடியாதா?

எங்கள் திருவைக் காண முடியாதா?

 

கட்டிய வேட்டி கசங்காத

கற்பகத் தருவைக் காண முடியாதா?

 

எல்லாம் முடிந்து விட்டது.

இருட்டு படிந்து விட்டது.

எங்கள் மகிழ்ச்சியில்

நெருப்புப் பட்டது – இந்த

மரணம் மகா கெட்டது.

 

இவர்தான்,

இம்மாமனிதர்தான்

முன்னாள் வணிகரித் துறை அமைச்சர்

முன்னாள் தஞ்சை நகர, கழகச் செயலாளர்

மாநில வர்த்தக அணித் தலைவர்

தலைமை செயற்குழு உறுப்பினர்

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் துணைச் செயலாளர்

அண்ணா விருதாளர்

எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

என மேடைதோறும் முழங்குபவர்,

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மீது

அளப்பரியப் பற்றும் பாசமும் கொண்டவர்







பாரி வேள்

குறள் நெறிச் செல்வர்

தமிழ்த்திரு சி.நா.மீ.உபயதுல்லா.