ஐயிரண்டு
திங்களா அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற
போதே பரிந்தெடுத்துச் – செய்யஇரு
கைப்புறத்தில்
ஏந்தி கனகமுலை தந்தாளை
எப்பிறப்பிற்
காண்பேன் இனி.
-
பட்டினத்தார்
சகுந்தலா.
என் தாய்.
84 வயது.
கடந்த 19.4.2023 புதன் கிழமை அதிகாலை, மீளா உறக்கத்தில் ஆழ்ந்து போனார்.
உற்றார், உறவினர், அன்பர்கள், நண்பர்கள், அறிந்தவர்கள், உணர்ந்தவர்கள் அனைவரும், என் தாயை, அடையாளப்படுத்தப் பயன்படுத்தும் ஒற்றை வார்த்தை ஒன்றுண்டு.
உழைப்பாளி.
ஓயாத உழைப்பாளி.
வீட்டில் ஒரு நிமிடம் கூட, சற்று அயர்ந்து அமர்ந்து,
ஓய்வெடுத்ததை, நான் பார்த்ததே இல்லை.
ஏதேனும் ஒரு வேலையைச் செய்து கொண்டே இருப்பார்.
வீட்டில் மட்டுமல்ல, உற்றார், உறவினர் இல்லங்களில்
நடைபெறும் சுப நிகழ்வாக இருந்தாலும், துயர நிகழ்வாக இருந்தாலும், சற்றம் தயங்காது,
தானே முன்னின்று அனைத்து வேலைகளையும் செய்வார்.
முப்பது வருடங்களுக்கு முன், இன்றிருப்பது போல்
மருத்துவமனைகள் பெருகி இருக்கவில்லை.
உணவு விடுதிகளும் அதிகம் இல்லை.
தஞ்சையில், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையினை
விட்டால், வேறு வழியில்லை.
உறவினர்களில்
யாரேனும் ஒருவர், வருடம் முழுவதும், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து,
பல நாட்கள் மருத்துவம் பெறுவார்.
எம் அம்மா, அசராமல், உணவு சமைத்து கொடுத்துக்
கொண்டே இருப்பர்.
பல வேளைகளில், இவரே எடுத்துச் சென்றும் கொடுத்து
வருவார்.
செய்யும் செயல்கள் அனைத்தையும், கொஞ்சமும் முகம்
சுளிக்காமல் முழு மனதோடு செய்வார்.
என் தந்தை, புள்ளியியல் துறையில் பணியாற்றி,
மண்டல துணை இயக்குநர் பதவி வரை உயர்ந்தவர்.
இருப்பினும், எங்கள் குடும்பப் பொருளாதாரம் என்பது,
எப்பொழுதுமே பற்றாகுறை பொருளாதாரம்தான்.
மாத ஊதியம் வந்தவுடன், அப்பா, அம்மாவிடம், பிடித்தம்
போக, மீதித் தொகையினை, முழுமையாய் கொடுத்து விடுவார்.
அடுத்த நாள் முதல், செலவிற்கு அம்மாவிடம் இருந்து
பணம் பெற்றுச் செல்வார்.
எவ்வளவு கொடுத்தோம், நாள்தோறும் அம்மாவிடம் இருந்து
பெற்ற தொகை எவ்வளவு, குடும்பத்திற்கு ஆகும் செலவு எவ்வளவு என கணக்குப் பார்க்கவே மாட்டார்.
ஒவ்வொரு மாதமும் பத்து தேதி கடந்துவிட்டால்,
அம்மா கடன் வாங்கித்தான், மீதி நாட்களை ஓட்டுவார்.
கடன் வாங்கித்தான், அப்பாவிற்குத் தினமும் பணம்
கொடுப்பார்.
அப்பா ஓய்வு பெற்ற பிறகுதான், என் குடும்பம்
கடனில்லா குடும்பமாய் மாறியது.
வேலை, வேலை என்று இருபத்து நான்கு மணி நேரமும்
வேலை பார்த்துக் கொண்டே இருந்த என் அம்மாவின் மூளையில், உற்றார் உறவினர் நலனைப் பெரிதும்
போற்றி வாழ்ந்த எம் அம்மாவின் மூளையில், 20 வருடங்களுக்கு முன், ஒரு கட்டி முளைத்தது.
அறுவை சிகிச்சை செய்து அகற்றியே ஆக வேண்டும்,
இல்லையேல் பேராபத்து என்றார் மருத்துவர்.
தஞ்சாவூர்,
வினோதகன் மருத்துவ மனையில் 45 நாள்கள் இருந்தார் என் தாய்.
என் அப்பாவின் நண்பரின் மகன்தான், மூளை அறுவை
சிகிச்சை நிபுணர் மருத்துவர் சுந்தர்.
என் அம்மாவின்
தலைக்கு மொட்டை அடித்து, மண்டை ஓட்டைப் பிளந்து, மூளையில் இருந்த கட்டியை அகற்றி, மீண்டும்
மண்டை ஓட்டினைப் பொறுத்தி, மருத்துவர் சுந்தர் அவர்கள் என் தாயைக் காத்தார்.
தந்தையின் நண்பர் என்பதால், முழு மருத்துவத்திற்கும்,
அறுவை சிகிச்சை உட்பட, ஒரு பைசா கூட பெற்றுக் கொள்ளவில்லை.
என் அப்பா, அப்பொழுது, பணியில் இருந்து ஓய்வு
பெற்றநிலையில், மருத்துவர் ரவி மற்றும்
மருத்துவர் சுந்தரம் ஆகியோரால் நடத்தப்
பெற்ற பெஸ்ட் மருத்துவ மனையில், நிர்வாக
அலுவலராகப் பணியாற்றி வந்தார்.
இவ்விரு மருத்துவர்களும், என் அம்மாவிற்குத்
தேவையான, முழு மருந்துகளையும், தங்கள் மருத்துவமனையில் இருந்து, விலையின்றிக் கொடுத்தனர்.
அப்பொழுது, சிங்கப்பூரில் விரிவுரையாளராகப் பணியாற்றிக்
கொண்டிருந்த என் அத்தான், கவிஞர் ப.திருநாவுக்கரசு
அவர்கள், ரூபாய் இருபதாயிரம் கொடுத்தார்.
நான் பணியாற்றிய, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்
அன்றைய செயலாளர் கரந்தைத் தமிழ்ச் செம்மல்
திரு ச.இராமநாதன் அவர்கள், மருத்துவ மனைக்கு வந்து, ரூபாய் இருபதாயிரம் கொடுத்தார்.
என்
மனைவி, தன் நகைகளைக் கொடுத்தார்.
இவ்வாறாக, அன்பர்களின் மாசற்ற அன்பினாலும், உதவியினாலும்,
மருத்துவக் கட்டணமே பெற்றுக் கொள்ளாத, மருத்துவரின் திறமையான மருத்துவத்தாலும், என்
அம்மா, மறு பிறவி எடுத்தார்.
அறுவை சிகிச்சைக்குப் பின், கடந்த இருபது ஆண்டுகளாக
முழு உடல் நலத்துடன்தான் இருந்தார் என் அம்மா.
என் தந்தையார் திரு சி.கிருட்டினமூர்த்தி அவர்கள், 2018 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 28 ஆம்
நாள், ஒரு நாள் கூட படுக்கையில் வீழாது, மரணத்தைத் தழுவியது, குடும்பத்தையே நிலை குலையச்
செய்தது.
எந்தையின் பிரிவு, எங்களைவிட, என் தாயாரிடம்
மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது.
உடல் மெலிந்தது. பின் மெல்ல வளைந்தது, கூன் விழுந்தது.
மிகப் பெரும் அறுவை சிகிச்சையினைத் தாங்கித்
திறமையுடன் செயல்பட்ட என் தாயின், மூளை, மெல்ல மெல்ல தன்னிலை மறக்கத் தொடங்கியது.
அவ்வப்போது என்ன செய்கிறோம் என்பதை அறியாது, செயல்படத்
தொடங்கினார்.
பிறந்தது முதல் வேலை, வேலை என்ற பழகியே வளர்ந்ததால்,
மூளை சமநிலையை இழந்த நிலையிலும், வேலையை மட்டும் விட முடியவில்லை.
துடைப்பானை எடுத்து, வீட்டினைச் சுத்தம் செய்யத்
தொடங்கினால், வீடு முழுவதும் கூட்டி, வீட்டின் வெளிப் புறத்தை, நாற்புறமும் கூட்டுவர்.
தெருவில் இறங்கினார் என்றால், எங்கள் வீடு, அடுத்த
வீடு, அதற்கடுத்த வீடு என முழுத் தெருவையும் கூட்டத் தொடங்கிவிடுவார்.
பார்த்து அழைத்துவர வேண்டும்.
அம்மாவால் இச்செய்கையில் இருந்து வெளிவர முடியவில்லை.
எனவே, வீட்டின் சுற்றுச் சுவர் கதவுகளைப் பூட்டத்
தொடங்கினோம்.
இரவு இரண்டு மணிக்கு எழுந்து, முதல் நாள் பயன்படுத்திய
பாத்திரங்களை எல்லாம், எடுத்துச் சென்று, கொல்லைப் புறத்தில், துலக்கத் தொடங்கிவிடுவார்.
பாத்திரத்தின் ஒலி கேட்டு, விழித்துக் கேட்டால்,
மணி ஐந்தாகி விட்டது என்பார்.
சமையல் அறைக்குப் புதிதாய் கதவு போட்டுப் பூட்டத்
தொடங்கினோம்.
நாள்கள் செல்லச் செல்ல, உடல் மேலும் தளர்ந்தது.
நடக்க இயலா நிலை.
இரு கைகளையும் தரையில் ஊன்றி, மெல்ல, மெல்ல நகர்ந்து
வருவார்.
அவருக்குத் தேவையான அனைத்தையும், அவர் இருக்கும்
அறையிலேயே கொடுக்கத் தொடங்கினோம்.
நாட்கள் செல்லச் செல்ல, முழுமையாய் நினைவினை
இழந்துபோனார்.
கடந்த ஆறு மாதங்களாக, என்னையே அவருக்கு அடையாளம்
தெரியவில்லை.
ஒரு சமயம், என்னை, என் அப்பாவாக, அதாவது, தன்
கணவர் என்று எண்ணிப் பேசுவார்.
வாங்க,
சாப்பிட்டீங்களா, தோசை ஊற்றித் தரட்டுமா என்பார்.
ஒரு சமயம், தன் அண்ணன் என்று எண்ணிப் பேசுவார்.
நான்
உங்கள் மகன் குமாரு என்று சொன்னால், ஆமாம்
குமாரு என்பார், ஆனால் அடுத்த நொடி மறந்து போவார்.
ஒரு சில நிமிடங்கள் அவரைத் தனிமையில் விட்டாலும்,
எழுந்து நிற்க முயன்று, கீழே விழுந்து, தன் தலையினை உடைத்துக் கொள்வார்.
பலமுறை இவ்வாறு உடைத்துக் கொண்டார்,
ஒவ்வொரு முறையும், மருத்துவ மனைக்கு அழைத்துச்
சென்று தையல் போடுவோம்.
வீட்டில், என் தாயின் நகர்தல் என்பது, கழிவறையை
நோக்கியதாக மட்டுமே மாறிப் போனது.
அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, கழிவறைக்குச்
செல்ல வேண்டும் என்பார்.
கை தாங்களாக நடத்தி அழைத்துச் செல்வோம்.
சிறுநீர் வருவதை முன்கூட்டிய உணர முடிந்த என்
தாயால், மலம் வருவதை மட்டும் உணர முடிவதில்லை.
ஒவ்வொரு முறையும், என் மனைவியும், என் மகளும்
சற்றும் அசராமல் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள்.
என் மனைவி, தினமும், என் தாயைக் குளிக்க வைத்து,
உடலைச் சுத்தம் செய்து, துணி மாற்றி விடுவார்.
இரவு நேரத்தில், என் தாயின் அறையின் நிலைக் கதவினை
ஒட்டியே, படுத்துக் கொள்வேன்.
இரவு இரண்டு மணிக்குக் கண் விழித்தால், மீண்டும்
உறங்கவே மாட்டார்.
பலமுறை கழிவறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
உடலைச் சுத்தம் செய்ய வேண்டும்.
கழிவறையில் இருந்து மீண்டும் கைதாங்கலாக அழைத்து
வந்தால், இரவு இரண்டு மணிக்கு, பல் விளக்க
வேண்டும் என்பார்.
பல் விளக்கிய பிறகு, பசிக்கிறது, தோசை கொடு என்பார்.
இவருக்காவே எப்பொழுதும் தோசை தயாராய் இருக்கும்.
பசித்தால் தோசை கொடு என்றுதான் கேட்பார்.
இட்லி, சோறு என்பதை எல்லாம் மறந்து போய்விட்டார்.
ஆனால், இட்லி கொடுத்தாலும், சோறு போட்டாலும்
மறுக்காமல் சாப்பிடுவார்.
காலை, மாலை காபி குடிப்பார்.
சிறிது தாமதம் ஆனாலும், காபி குடு என்று கேட்டு
வாங்கிக் குடிப்பார்.
இறுதி நாள் வரை சாப்பிட்டார்.
என் தம்பியின் பெயர் கி.சுரேஷ் காந்தி.
கட்டிடப் பொறியாளர்.
சுயமாய், வெற்றிகரமாய் தொழில் செய்து வருகிறார்.
என் தம்பியின் வீடு, என் வீட்டில் இருந்து, நான்கு
கி.மீ தொலைவில் உள்ளது.
ஒவ்வொரு மாதமும், என் தம்பி, என் வீட்டிற்கு வந்து, அம்மாவைத் தன்
வீட்டிற்கு அழைத்துச் செல்வார்.
தம்பியும், அவரது குடும்பமும் ஒரு மாதம் பார்த்துக்
கொள்வார்கள்.
இது என் தம்பியே செய்து கொண்ட ஏற்பாடு.
ஒரு
மாதம் முழுதும், இரவில் கண் விழித்த நிலையில், தொடர்ந்து கண் விழித்துப் பார்த்துக்
கொள்வது கடினம், நான் ஒரு மாதம் பார்த்துக் கொள்கிறேன், நீ ஒரு மாதம் பார்த்துக் கொள்
என்றார் என் தம்பி.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாதங்கள் இவ்வாறுதான்
நகர்ந்து சென்றன.
என் மனைவி அடிக்கடி கூறுவார்.
நீங்க
விருப்ப ஓய்வு பெற்றது, உங்கள் அம்மாவிற்குத்தான் பெரிதும் பயன்படுகிறது என்பார்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்னர்தான், என் தம்பி,
அம்மாவைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
19 ஆம் தேதி அதிகாலை, இரண்டு மணிக்கு கழிவறைக்குச்
சென்றிருக்கிறார்.
உடலை சுத்தம் செய்து படுக்க வைத்திருக்கின்றனர்.
படுக்கையில் அமைதியின்றி புரண்டு கொண்டே இருந்திருக்கிறார்.
வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை.
அதிகாலை நான்கு மணி அளவில், அசைவற்றுப் போனார்.
அம்மா, அம்மா என்று அழைத்தபோது பதிலில்லை.
தட்டி எழுப்பியபோது, கண் திறந்து பார்க்கவில்லை.
மீளா உறக்கத்தில் என் தாய்.
உழைப்பின் மறு உருவம் ஓய்ந்து போனது.
ஓய்வெடுக்கத் தொடங்கியது.
---
பணி
ஓய்வு பெற்ற பின், கடந்த ஓராண்டு காலமாக, ஒவ்வொரு நாளும், என் தாயுடன் செலவிட்ட நேரம்தான்
அதிகம்.
எனவே, என் தாயின் எதிர்பாரா பிரிவு மனதைப் பெரிதும்
அழுத்துகிறது.
என் தாய் படுத்திருந்த அறையைக் கடக்கும் பொழுதெல்லாம்,
உள்ளே என் தாய் அமர்ந்திருப்பதைப் போன்ற ஓர் உணர்வு உள்ளத்தே எழுகிறது.
---
என் தாயின் பிரிவுச் செய்தி அறிந்த நட்புகளும்,
உறவுகளும், ஓடி வந்து என்னை அரவணைத்தனர்.
ஆறுதல் வார்த்தைகளால் என்னை நனைத்தனர்.
அலைபேசி வழிவும், சமூக ஊடகங்கள் வழியும் எண்ணற்ற,
நல் இதயங்களின் பாச வார்த்தைகள், எழுந்து வந்து என் கரம் பற்றி ஆறுதல் மொழி கூறின.
நெகிழ்ந்து போய் நிற்கிறேன்.
முத்தாய்ப்பாய், இந்த எளியேன் மீது பேரன்பு காட்டி
வரும், மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களிடமிருந்து,
முகநூல் வழி வந்த வார்த்தைகள் என்னைப் பெரிதும் உருக வைத்தன.
அன்புத்தாய் அகன்றுபோனதாய்க்
கவலையில் ஆழும் ஜெயகுமார்
அத்தாய் இதுவரை
அகத்தும், புறத்துமாய் இருந்தார்.
இப்போதோ
அகத்தாயாகி அகலாதுள்ளார்.
உங்கள்
நெஞ்சில், நினைவில்
நீங்காதிருப்பார்.
விளக்கின் கதை முடியலாம்
வெளிச்சத்தின் வாழ்வு
முடிவதில்லை.
ஆறுதல் பெருக.
அன்னை வாழ்த்துவார்.
வெளிச்சத்தின்
வாழ்வு தொடங்கியிருக்கிறது.