22 ஜூன் 2023

சீதனப் புலவர்

     அவர் ஒரு புலவர்.

     வரகுண பாண்டியனின் அவையை அலங்கரித்தப் புலவர்.

     பாண்டியனுக்குத் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தப் புலவர்.

     பாண்டியனின் மகளுக்கும் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தப் புலவர்.

     பாண்டியனின் பேரன்பைப் பெற்றவர்.

     பாண்டியன் தன் மகளை, சோழனுக்கு, குலோத்துங்கச் சோழனுக்குத் திருமணம் செய்து கொடுக்கிறார்.

     பாண்டியன் மகள் புகுந்த வீட்டிற்குப் புறப்பட்ட பொழுது, பொன்னும், மணியும், வைரமும் அள்ளி அள்ளிச் சீதனமாகக் கொடுத்து அனுப்புகிறார்.

     சீதனத்தோடு சீதனமாய், தனக்கும், தன் மகளுக்கும் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தப் புலவரையும் அனுப்பி வைக்கிறார்.

இதனால், இப்புலவருக்கு, சீதனப் புலவர் என்ற ஒரு பெயரும் உண்டு.

     சீதனப் புலவரின் பெயர்

     புகழேந்திப் புலவர்.

     பாண்டியனின் அவையில் இருந்தவர், சோழனின் அவைக்குச் செல்கிறார்.

     குலோத்துங்கச் சோழனின் அவையில், அவையின் தலைமைப் புலவர், தலைசிறந்தப் புலவர் ஒட்டக் கூத்தரைச் சந்திக்கிறார்.

     புகழேந்திப் புலவர், சோழனின் அவையில் நுழைந்த முதல் நாளில் இருந்தே தொடங்கியது ஒரு போராட்டம்.

     தமிழ்ப் போராட்டம்.

     புகழேந்திப் புலவருக்கும், ஒட்டக் கூத்தருக்கும் ஒரு புலமைப் போராட்டம்.

     ஒருவர் கிழக்கு என்றால், மற்றொருவர் மேற்கு என்பார்.

     ஒருவர் சரி என்றால், மற்றொருவர் தவறு என்பார்.

     இப்படித்தான் நாட்கள் நகர்ந்தன.

     ஒரு நாள் அவையில், கவிதைகளின் இயல்பைப் பற்றியப் பேச்சு எழுந்தபோது, ஒட்டக்கூத்தர் எழுந்தார்.

     மன்னா ஒரு சிறு போட்டி. போட்டி என்றால் விளையாட்டுக்குத்தான். இந்த அவையும் தாங்களும், இப்போட்டியினை ரசிக்க வேண்டும் என்றார்.

     என்ன போட்டி? மன்னர் கேட்டார்.

     ஒரு வெண்பாவின் முதல் இரண்டு அடிகளை நான் பாடுவேன். மீதமுள்ள இரண்டு அடிகளையும் புகழேந்தியார் பாடி  முடிக்க வேண்டும்.

     ஆகா, சரியான போட்டி தொடங்குங்கள்.

     உடனே ஒட்டக்கூத்தர் முதல் இரண்டு வரிகளைப் பாடினார்.

வென்றி வளவன் விறல்வேந்தர் தம்பிரான்  

என்றும் முதுகுக் கிடான்கவம்

     பாடி முடித்த ஒட்டக்கூத்தர், புகழேந்தியை ஒரு பார்வை பார்த்தார்.

     சோழ மன்னன் ஒரு நாட்டின் மீது படையெடுத்தால், மார்புக்குக் கவசம் அணிவானே தவிர, முதுகுக்கு ஒருபோதும் கவசம் அணிந்ததே இல்லை. ஏனென்றால், புறமுதுகு காட்டும் பழக்கமே இல்லை, விழுப்புண் பெறுவதாக இருந்தாலும், மார்பைத்தான் காட்டுவான். எதிலும் வெற்றிதான்.

     அவையோர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

     மகிழ்ந்தனர்.

     புன்முறுவலோடு புகழேந்தி எழுந்தார்.

    மீதுமுள்ள இரண்டு அடிகளைப் பாடினார்.

…………………………………………………………… துன்றும்

வெறியார் தொடைகமழும் மீனவர்கோன் கைவேல்

எறியான் புறங் கொடுக்கின்

     புறமுதுகு காட்டி ஓடும் எந்த மன்னனின் மீதும், பாண்டியன், வேலை எறிவதில்லை. எனவே அந்த நம்பிக்கையோடு, கவசம் அணியாமல் வந்திருக்கிறார் மன்னர்.

     அவையே அமைதியாகிப் போனது.

     ஒட்டக்கூத்தர் தலை குனிந்தார்.

     இதுதான் தமிழ்.

     மரபுத் தமிழ்.

     வெண்பா தமிழ்.

     சோழனின் அவையில், இதே ஒட்டக்கூத்தரும், புகழேந்திப் புலவரும் மோதிக் கொண்ட, மற்றொரு சுவையான நிகழ்வும் உண்டு.

     வெண்பாவிற்கோர் புகழேந்தி என்று போற்றப்பெற்ற புகழேந்திப் புலவர், சோழனின் அவையில், தலைமைப் புலவன் ஒட்டக்கூத்தரின் முன்னிலையில், தான் இயற்றிய நளவெண்பா நூலை அரங்கேற்றுகிறார்.

     அந்திப் பொழுதில் அரங்கேற்றம்.

     எனவே புகழேந்திப் புலவர், அந்திப் பொழுதைச் சிறப்பித்து ஒரு வெண்பா பாடினார்.

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கரும்பு

வில்லி கணைதெரிந்து மெய்காப்ப – முல்லையெனும்

மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே

புன்மாலை அந்திப் பொழுது.

     அந்திப் பொழுதை, மன்னரின் ஊர்வலத்திற்கு இணையாக உவமானம் கூறுகிறார். அந்த அந்தி எப்படி நடந்து வருகிறதென்றால், மல்லிகைப் பூவினை வெண்சாங்காக எண்ணி வண்டுகள் ஊதி ஊதி முழங்குகின்றன.

     சிறந்த கரும்பால் ஆகிய வில்லினை கையில் எடுக்கும் மன்மதன், காம உணர்வினைத் தூண்டும், தன் மலர் கணைகளை விட்டு, காளையர்களுக்கும், மகளிர்க்கும் உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறான்.

     அவ்வேளையில், முல்லை மலர்களால் தயாரிக்கப்பட்ட மாலை, தன் தோளில் அசைந்தாட ஓர் அரசன், மெல்ல மெல்ல நடந்து ஊர்வலம் செல்கிறான்.

     பாடலையும், பாடலின் பொருளையும் புகழேந்தி கூற, அடுத்த நொடி, கடுங்கோபம் கொண்டு எழுந்தார் ஒட்டக்கூத்தர்.

     நிறுத்துமய்யா, உன் கவியை. உன் கவியில் சொற் குற்றம், பொருள் குற்றம் உள்ளது எனச் சீறினார்.

     யாது குற்றம் கண்டீர்?

     மலரின் மேற்புறத்தில் அமர்ந்துதான் வண்டுகள் தேன் உண்ணும். அப்படி அமர்ந்து தேன் உண்ணும் காட்சியைத் தாங்கள், வண்டு சங்கைப் பிடித்து ஊதுவதாக, உவமானமாகக் கூறியுள்ளீர்.

     மலரின் முன்புறத்தில் அமர்ந்து கொண்ட தேன் உண்ணும் காட்சியை, சங்கின் பின்புறத்தை வாயில் வைத்து ஊதும் காட்சியோடு  எப்படி ஒப்பிடலாம்?

     இது காட்சிப் பிழையல்லவா?

     காட்சிப் பிழையோடு கூடிய தங்கள் கவியை, இந்த அவையில் அரங்கேற்றக் கூடாது. தாங்கள்  வெளியேறலாம்.

     அவை அமைதியில் உறைந்தது.

     தொண்டையைக் கனைத்துக் கொண்டு புகழேந்தி பதில் கூறினார்.

     அய்யா, கள் அருந்தியவனின் நிலை என்ன?

     கள் மயக்கத்தில், தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்று அவனுக்குத் தெரியுமா?

     இரண்டு கால்கள் இருந்தும், அவனால் சரியாக நிற்கக்கூட முடிவதில்லையே.

     அதுபோல, அதிகமான, மலர்த்தேனை உண்ட மயக்கத்தில், தான், மலர் என்ற வெண்சங்கின் முன்புறத்தைப் பிடித்து ஊதுகிறோமா, பின்புறத்தைப் பிடித்து ஊதுகிறோமா என்ற சுயநினைவின்றி, வண்டு ஊதிக் கொண்டிருக்கலாம் அல்லவா?

     அவையில், ஆகா, ஆகா என வியப்புக் குரல்களும், மகிழ்ச்சிக் குரல்களும் எழுந்தன.

     சட்டென்றுத் தாவி எழுந்த ஒட்டக்கூத்தர், புகழேந்தியை ஆரத் தழுவிக் கொண்டார்.

---

     நளவெண்பா.

     புகழேந்திப் புலவரால் இயற்றப்பெற்ற நளவெண்பா முழுவதும், ஆகச் சிறந்த வெண்பாக்களால் நிறைந்ததாகும்.

     நளன் தேரிலே சென்று கொண்டிருக்கிறான்.

     தேரில் பூட்டிய குதிரை பாய்ந்து செல்கிறது.

     அப்பொழுது, காற்றிலே அவன் மேலாடை பறந்து போய்விடுகிறது.

மேலாடை வீழ்ந்த தெடுவென்றான் அவ்வளவில்

நாலாறு காதம் நடந்ததே – தோலாமை

மேல்கொண்டான் ஏறிவர வெம்மைக் கலிசூதின்

மால்கொண்டான் கோல்கொண்ட மா.

     நளன் செல்லும் தேரின் வேகத்தைச் சொல்ல வந்தப் புகழேந்திப் புலவர் சொல்கிறார், மேலாடை விழுந்தது எடு என்றான், அதற்குள் நாலாறு காதம் கடந்து விட்டது.

     ஒரு காதம் எனில் இன்றைய அளவில் 10 மைல்.

     ஒரு மைல் என்பது 1.6 கி.மீ.

     நாலாறு காதம்.

     நான்கு ஆறு.

     இருபத்து நான்கு.

     இருபத்து நான்கு காதம்.

     240 மைல்.

     வேகத்தை கற்பனை செய்து பாருங்கள்.

     இதேபோன்ற ஒரு காட்சியை இராமாயணத்தில் கம்பர் காட்சிப் படுத்துவார்.

     இராமன் வில்லை வளைத்ததைப் பற்றிக் கம்பர் கூறுவார்.

இழுத்தது கண்டேன்

விடுத்தது கேட்டேன்.

---

     எட்டயபுரம் சமஸ்தானத்தில், கடிகை முத்துப் புலவர் என்று ஒரு புலவர் இருந்தார்.

     நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடந்தார்.

     பிழைப்பாரா, மாட்டாரா என்பதை அறிய, உறவினர்கள் பால் ஊற்றினார்கள்.

     பாலை முழுங்கிவிட்டால் பிழைத்துக் கொள்வார்.

     துப்பினால், தொண்டைக்குழி அடைத்து விட்டது, அதனால் பால் கசக்கிறது, பிழைக்கமாட்டார் என்று பொருள்.

     கடிகை முத்துப் புலவர் வாயில் பால் ஊற்றினார்கள்.

     உடனே பாலைத் துப்பினார்.

     அருகிருந்த ஒருவார், என்ன புலவரே, பால் கசக்கிறதோ? என்று கேட்டார்.

     கடிகை முத்துப் புலவர் மெல்லத் தலையாட்டிக் கூறினார்.

     பாலும் கசக்கவில்லை, பாலை வடிகட்டிய துணியையும் கசக்கவில்லை.

     சாகும்போது கூட, இப்புலவரின் புலமை கண்டு வியந்து போனார்கள்.

---

     ஒரு புலவர், வறுமையில் உழன்ற ஒரு புலவர், உதவி கேட்பதற்காக, ஒரு செல்வந்தரை நாடிச் சென்றார்.

     புலவரின் வருகையை அறிந்த அந்தச் செல்வந்தர், வேண்டுமென்றே பல மணிநேரம் காக்க வைத்து, பின் அழைத்தார்.

     செல்வந்தரைப் பார்த்துப் புலவர் சொன்னார்.

     நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டீர்களே.

     ஏளனச் சிரிப்போடு, செல்வந்தர் சொன்னார்.

     காசா லேசா.

     கோபப்பட்டப் புலவர், காசா லேசா, காசா லேசா என இருமுறை கூறிவிட்டுப் பொருள் பெறாமலேயே கோபத்துடன் திரும்பினார்.

     சில நாட்களில் சொத்துப் பிரச்சினையில் செல்வந்தர் மனமொடிந்து இறக்கிறார்.

     அப்பொழுது பேசிக் கொண்டார்கள், அந்தப் புலவன், காசா லேசா என்று சொல்லிவிட்டுப் போனான் அல்லவா, அதனால்  இறந்தார் என்றார்கள்.

     காசா லேசா என்னும் வார்த்தையை சிறிது மாற்றிச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் புலவர்.

     காசாலே சா.

     காசாலே சாவு.

     புலவரின் அறச் சீற்றம் செல்வந்தரைக் கொன்றிருக்கிறது.

---

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

மாங்குடி மருதன் தலைவன் ஆக

உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்

புலவர் பாடாது வரைக, என் நிலவரை.

     நான் இந்தப் போரில் வெல்லாமல் போனால், மாங்குடி மருதனாரைத் தலைவராகக் கொண்ட சங்கம், என் நாட்டைப் பாடாமல் ஒழியட்டும் என்கிறான் தலையானங்கானத்து செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன்.

---

சங்கரர்க்கு மாறுதலை, சண்முகர்க்கு மாறுதலை

ஐங்கரர்க்கு மாறுதலை யானதே – சங்கைப்

பிடித்தோர்க்கு மாறுதலை பித்தாநின் பாதம்

படித்தோர்க்கு மாறுதலைப் பார்.

     கவி காளமேகப் புலவரின் பாடல் இது.

     மாறுதலை என்ற சொல்லை, அடுத்தடுத்துக் கவிஞர் பயன்படுத்தும் அழப் பாருங்கள்.

     சங்கரன் தலையில் கங்கை ஆறு உள்ளது.

     ஆறு தலையில் உள்ளது.

     சண்முகனுக்கு, முருகனுக்கு ஆறு தலைகள்.

     ஐந்து கை கொண்ட விநாயகருக்கு மாறுபட்ட யானைத் தலை.

     சங்கைப் பிடித்த திருமாலுக்குப் பத்துப் பிறவிகளிலும் மாறுபட்ட தலை.

     பித்தா நின் பாதம் பிடித்தோருக்கு மாறுதலை அல்ல ஆறுதலைப் பார் என்கிறது இவ்வெண்பா.

---

இழந்த மணிபுறு அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்

பழந் தனம்இழந்தன படைத்தவரை ஒத்தாள்

குழந்தையைஉயிர்த்த மலடிக்கு உவமை கொண்டால்

உழங்கு விழிபெற்றது ஓர் உயிர்ப் பொறையும் ஒத்தாள்.

     இது கம்பராமாயணம்.

     அனுமனிடமிருந்து கணையாழியைப் பெற்று, அனுமன் இராமனிடமிருந்து வந்திருக்கிறான் என்பதை அறிந்தபொழுது, சீதை அடைந்த மகிழ்ச்சியை விவரிக்கிறார் கம்பர்.

     நான்கு வரிகளுள் நான்கு உவமைகள்.

     பாம்பு தவறவிட்ட மணியைப் பெற்றது போலவும்,

     இழந்துவிட்டப் பழைய செல்வத்தை மீண்டும் பெற்றது போலவும்,

     குருடன் விழி பெற்றது போலவும்,

     மலடி குழந்தை பெற்றது போலவும் மகிழ்ந்தாள்.

    இவற்றுள், மலடி குழந்தை பெற்றதைப் போல என்ற உவமைக்கும், மற்ற மூன்று உவமைகளுக்கும் வித்தியாசம் உண்டு.

     மூன்றும் இழந்ததை மீளப் பெறுதல்.

     ஆனால் மலடி குழந்தைப் பெற்றது வேறு.

    தாய்மைப்பேறு அடையாதவர்கள், எவ்வளவு அவமானங்களை எதிர் கொண்டிருப்பார்கள், எவ்வளவு துன்பங்களைச் சுமந்திருப்பார்கள், உற்றார் உறவினர் வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு எத்தனை முறை கூனிக்குறுகி மருண்டிருப்பார்கள்.

     எதற்காக கம்பன் இந்த உவமையைப் பயன்படுத்தி இருக்கிறார்.

     தாய்மைப்பேறு இல்லாதவர் குழந்தையைப் பெற்றவுடன் எதற்காக மகிழ்வார்.

     வாரி அணைக்க ஒரு குழந்தை கிடைத்தது என்பதற்காகவா?

     அல்ல, அல்ல.

     பிறர் வாயை அடைக்க ஒரு குழந்தை கிடைத்ததே என்பதற்காகத்தான்.

     சீதை எதற்காக மகிழ்ந்தார் என்றால், தன்னை கரைசேர்க்கக் கணவன் வருகிறான் என்பதற்காகவா?

     அல்ல, அல்ல.

     தன்  கரையைப் போக்கக் கணவன் வருகிறான் என்பதற்காகத்தான்.

     எவ்வளவு அருமையான உவமையை வைத்திருக்கிறார் பாருங்கள்.

---

     நம் முன்னோர் எழுதிவைத்த இலக்கியங்கள் எல்லாம், மரபுச் சுரங்கங்கள்.

     தோட்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கும் மரபுச் சுரங்கங்கள்.

     ஏன் இப்படி மரபுக் கவிதைகளாகவே எழுதியிருக்கிறார்கள்?

     ஏன் இந்த யாப்பு அமைப்பிலேயே கவிதைகளை வடித்திருக்கிறார்கள்?

     இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், ஒரு கவிஞன் தான் எழுதியதை, அவன்தான் மற்றவர்களுக்குப் படித்துக் காட்ட வேண்டும்.

     பனையோலையில் தான் எழுதிய கவிதையைத் தானே எடுத்துக் கொண்டுபோய், அரசனிடத்தில், மன்னனிடத்தில், செல்வந்தர்களிடத்தில், பாடிக்காட்டி பரிசில்களைப் பெற்றான்.

     அப்படிப் பாடுகின்றபொழுது, கேட்கிறவர்களின் நெஞ்சில் நிறுத்துவதற்காகவும், அப்பாடல்களை மனப்பாடம் செய்வதற்கான எளிய வழியாகவும், மரபு என்கிற இந்த வடிவம் பயன்பட்டிருக்க வேண்டும்.

     நான்கு சீர் இருந்தால் ஒரு அடி. அந்த நான்கு சீர்கள் முடிந்தால், அடுத்த அடி தொடரும்.

     எதுகை, மோனையோடு, ஏதோ ஒரு தொடை நயத்தோடு தொடங்குவதால் படிப்பதும், நினைவில் நிறுத்துவதும் எளிதாகும் என்பதற்காக, இந்த வகையை நம் முன்னோர் கடைபிடித்திருக்க வேண்டும்.

     எட்டுத்தொகை நூல்கள் என்னவென்று கேட்டால், இன்றைக்கு 1,2,3, .. என நாம் பட்டியல் போடுவோம். ஆனால் நம் முன்னோர் இதனையும் ஒரு பாடலாகவே, வெண்பாவாகவே எழுதி வைத்தனர்.

நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தோர் ஏத்தும் கலியோ டகம்புறமென்ற

இத்திறத்த எட்டுத் தொகை

     இதேபோல பத்துப் பாட்டிற்கும் ஒரு வெண்பா வடித்து வைத்தார்கள்.

முருகு பொருநாறு பாண்இரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி – மருஇனிய

கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து

     ஒவ்வொன்றையும் வெண்பாவிற்குள் அடக்கினார்கள்.

     அனைத்திற்கும் வெண்பா.

     நச்சினார்க்கு இனியர், எந்தெந்த நூல்களுக்கு விருத்தியுரை எழுதியிருக்கிறார் என்று கேட்டால், அதற்கும் பதில் சொல்ல ஒரு வெண்பா இருக்கிறது.

பார்த்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கவியும்

ஆரக் குறுந்தொகையுள் ஐந்நான்கும் – சாரத்

திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்

விருத்திநச்சி னார்க்கினிய மே.

     மரபிற்கு அடைப்படை நான்கு பாக்கள்.

     ஆசிரியப்பா.

     வெண்பா.

     வஞ்சிப்பா.

     கலிப்பா.

     இருப்பினும் சங்கப் பாடல்களில் ஆசிரியப்பா அதிகம் இருக்கும்.

     ஏனென்றால் அது மக்களைப் பேசியது.

     மக்களோடு மக்களாக, மக்களுடைய வாழ்க்கையைப் பேசியது.

     பிற்காலத்தில் வந்த நீதி நூல்கள், வெண்பா என்ற வடிவத்தை எடுத்துக் கொண்டன.

     ஏனென்றால், இந்த சமுதாயம், இந்த மனிதர்கள், எவ்வளவு கட்டுப்பாடுகளோடு வாழவேண்டும் என்பதைச் சொல்ல வந்த இலக்கியங்கள் அவை.

     அதனால்தான், கட்டுப்பாடுடைய தளையை எடுத்துக்கொண்டது, யாப்பை எடுத்துக் கொண்டது.

     இன்றைய புதுக் கவிதைகளின், நவீனக் கவிதைகளின் புராதான வடிவம் சங்க இலக்கியங்கள்தான்.

     சங்ககாலம் தொடங்கி இன்று வரை, தொடர்ந்து வரும் கவிஞர்களின் வரிசை மிகவும் நீளமானது.

     தமிழ் மொழி எண்ணிலடங்கா, தமிழ்ப் புலவர்களைக் கொண்ட மொழியாகும்.

     நம் காலப் புலவர்களை, கவிஞர்களை மனதுள் எண்ணினால், முன்னனியில் நிற்பவர் கவியரசு கண்ணதாசன்.

     கண்ணதாசன்.

     கண்ணதாசன் எழுதிய சினிமா பாடல்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அவர் எழுதிய அனைத்தும் மரபுக் கவிதைகள்.

     மரபுக் கவிதைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தவர் கண்ணதாசன்.

     தத்துவம், அழகு, காதல், கண்ணீர், அரசியல் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், அங்கு ஒரு கவிதை இருக்கும்.

விதையிலே சிறியதாய் விளைந்ததும் விருட்சமாய்

வின்னுயர் மரங்களைக் கண்டோம்.

கதையிலும் மரங்களின் வாழ்விலும்

பல்வகைக் கவலைகள் உண்டெனக் கண்டோம்.

முதலிலே பசுமையாய் முடிவிலே பட்டதாய்

மூடுமோர் விறகுமாய் மாறி சிதையிலே

அமர்ந்திருக்கும் மரங்களும் மனிதனும்

தேவனின் லீலைகள் அல்லவோ.

     தாய்மைப்பேறு பெறாத பெண்களின் அவல நிலை குறித்து, கவிமாமணி அப்துல் காதர் எழுதுவார்.

வெண்பாவின் ஈற்றடியில் கூட

பிறப்பு வரும் – இந்தப்

பெண்பாவின் வயிற்றில்

ஒரு பிறப்பு வாராதா.

 

அமாவாசை அடிக்கடி வருகிறது

சிவராத்திரி தினப்படி வருகிறது

பிள்ளையார் சதுர்த்தி மட்டும் – எனக்குப்

பிறப்பதே இல்லை.

 

ஒன்று சொல்கிறேன் உங்களுக்கு

நான் இறந்தால் – என்னை

எரித்து விடாதீர்கள்

புதைத்து விடுங்கள் – அப்பொழுதாவது

என் வயிற்றில்

புழு பூச்சி வைக்கட்டும்.

     கவிஞர் வாலி ஒரு தமிழ்த்தாய் வாழ்த்து எழுதினார்.

உயிரும் மெய்யும்

உன்னிடமுணடு – உன்போல்

அவையும் என்னிடமுண்டு.

கை கால் ஓசை உன்னிடமுண்டு

கண்டிப்பாய் அவை என்னிடமுண்டு.

அகமும் புறமும் உன்னிடமுண்டு

அதுவே போலவே என்னிடமுண்டு.

அகண்ட ஞானம் உன்னிடமுண்டு

அதுதான் தாயே

என்னிடமில்லை.

இல்லாததற்கு எளியேன் உன்னைக்

கல்லாததுதான் காரணமாகும்.

கல்லாததற்கு கற்றோர் பின்னே

செல்லாததுதான் காரணமாகும்.

எல்லா குறையும் என்னிடமிருந்தும்

ஏழை என்றோ உன்பால் வைத்த

நல்லாசையால் வாழத் துணிந்தேன்

நற்றமிழே குற்றம் தவிர்க்கவே.

     புதுக் கவிதைகள் தோற்றம் பெற்று, எழுச்சி பெற்று வளரத் தொடங்கிய அண்மைக் காலத்தில், ஓர் விவாதம் எழுந்தது.

     எவை சிறந்தவை?

     மரபுக் கவிதைகளா?

     புதுக் கவிதைகளா?

     எவை சிறந்தவை?

     இக்கேள்விக்கு, கவிப்பேரரசு வைரமுத்து, தன் கவிதையால் பதில் தந்தார்.

புதுக் கவிதை என்றும்

புகழ் மரபு என்றும்

குதிக்கிறதே – இங்கு

ஒரு கூட்டம்.

எது கவிதை?

வாழும் கவிதை

வடிவத்தில் இல்லையடா

சூழும் தமிழர்க்குச் சொல்.

     பாடலுடைய பொருள் என்னவென்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, அது மரபா, நவீனமா, புதிதா என்று பார்ப்பது தேவையில்லை என்பதும் ஒரு கருத்தியல்.

     ஒரு மொழி, மரபுக் கவிதை எழுதுவதற்கும் வார்த்தைகளைத் தருகிறது. புதுக் கவிதை எழுதுவதற்கும் சொல் வளத்தைத் தருகிறது.

    தமிழ் மொழியானது ஹைக்கூ, சென்றியூ, லிமரிக்கூ என்று சொல்லப்படுகின்ற, இன்றும் வரக்கூடிய கவிதை வடிவங்களை எழுதுவதற்கு கருத்து வளத்தையும் சொற்களையும் தருகிறது, காப்பியங்களை வடிப்பதற்கும் சொற்களைத் தருகிறது.

     தமிழின் பெருமையே இதுதான்.

     எனவே, மரபு, புதிது என்ற கருத்து மோதல் தேவையில்லை.

     அனைவராலும் மருத்துவம் பார்க்க இயலாது.

     அனைவராலும் கட்டடம் கட்ட முடியாது.

     ஆனால், யார் வேண்டுமானாலும், வார்த்தைகளை அடுக்கிக் கவிதை வடிக்கலாம்.

     இதுதான் இலக்கிய ஜனநாயகம்.

---

கடந்த 11.6.2023

ஞாயிற்றுக் கிழமையன்று

ஏடகம்

ஞாயிறு முற்றத்தில்,

மணக்கும் மரபுக் கவிதைகள்

எனும் தலைப்பிலானப் பொழிவில்

ஏடக அரங்கே மணத்துத்தான் போனது.

     ஆர்ப்பரித்து எழும் கடல் அலைபோல, தொடர்ந்து எழுந்த கவி அலைகளால், அரங்கு மகிழ்ச்சியில் மூச்சுத் திணறிப் போனது.

     இவர் ஒரு தேர்ந்த கவிஞர்.

     ஆற்றல் மிகு பேச்சாளர்.

     இளவயது முதலே,  இவரது உதிரத்தில் ஒன்றெனக் கலந்து, உடலுக்குள் ஓயாது ஊர்வலம் போவது கவிதை.

     இவர் வாய் திறந்தால் கவிதைகள் அருவியாய் கொட்டும்.

     மேலும்,

    இவர் வெண்பா எழுதுவதிலும் வித்தகர்.

ஆட்சுமை தாங்கா அலுமினிய ஆமைகளாய்

காட்சிதரும், சாலைகளில் கால்நகரும் – மாட்சிமிக்க

மாநகரப் பேருந்தின் மந்தைக்குள் சிக்கிவிட்டால்

ஈநகர இல்லை இடம்.

     தமிழில் தளை தட்டாத வெண்பாக்களை எழுதுகிற தகுதி படைத்தவர்கள், வைரமுத்து, தஞ்சை இனியன், ஆகாசம்பட்டு சேஷாசலம் என இவர், மாபெரும் எழுத்தாளர் சுஜாதா அவர்களால் பாராட்டப் பெற்றவர்.

     இவரது கவிதைகள் ஒவ்வொன்றும் கருத்துச் செறிவாலும், வார்த்தை நயத்தாலும், படிப்போர் மனங்களைக் கொள்ளை கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவை.

கோடானு கோடி மரங்கள்

கோடரியால் சாய்ந்தன.

கோடரியால் சாய்ந்ததெல்லாம்

கட்டைகளாய் காய்ந்தன.

தனைக் கொன்ற மனிதனைப்

பழிவாங்கக் காய்ந்தன.

மனிதன் செத்து வந்தபோது

விறகுகளாக வேய்ந்தன.

ஆனவரை எரித்துவிட்டு

சாம்பலாகி ஓய்ந்தன.

அதற்குப்பின்தான் – மரங்களின்

வெறி மாய்ந்தன.

மணக்கும் மரபுக் கவிதைகள்

எனும் தலைப்பில்

சொற்பெருக்காற்றி

கவி மழை பொழிந்து

ஏடக அன்பர்களின் மனங்களை மயக்கியவர்


கவிஞர் தஞ்சை இனியன்.

சிங்கப்பூர் மூத்த தமிழாசிரியர்

திரு மாரிமுத்து அபூ கந்தசாமி அவர்களின்

தலைமையில் நடைபெற்ற

இப்பொழிவிற்கு வந்திருந்தோரை

தஞ்சாவூர், பான்செக்கர்ஸ் கல்லூரி

முதுகலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவி


திருமதி சோ.விஜயலட்சுமி அவர்கள்

வரவேற்றார்.

ஏடகம், சுவடியியல் மாணவர்களான

திரு சரவணன், திருமதி மகாலட்சுமி

தம்பதியினரின்

அன்பு மகள்,

மூன்றாம் வகுப்பில் பயிலும்

ஏடகத்தின் செல்லப் பிள்ளை


செல்லி ம.ச.வேணுகாஸ்ரீ அவர்கள்

தன் மழலைக் குரலில் நன்றி கூற

விழா இனிது நிறைவுற்றது.

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழக,

தமிழ்ப் பண்பாட்டு மரபுகளை ஆவணப்படுத்துதல்

மரபுகளை மீட்டெடுத்தல் திட்ட உதவியாளர்


முனைவர் கோ.மதிவாணன் அவர்கள்

விழா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

 

தமிழ் மரபுக்

கவிதைகளின்

பழமையை,

பெருமையை,

அருமையை

ஏடக அரங்கில்

உயிர்ப்போடு

உலா வர

ஆவண செய்திட்ட

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.