09 நவம்பர் 2023

தற்கொலைக்கு முயன்றவர்



தேவகோட்டை சாலை.

     தொடர் வண்டி நிலையைம்.

     அந்த மாணவர் மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன், அந்த தொடர் வண்டி நிலையத்திற்குள் நுழைகிறார்.

     ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறார்.

     எவ்வளவோ யோசித்துப் பார்த்துவிட்டார்.

     வேறு வழி தெரியவில்லை.

தற்கொலைதான் ஒரே தீர்வாகத் தெரிந்தது.

     பள்ளி இறுதித் தேர்வில் தோல்வி.

     வாழ்வே இருண்டு போய்விட்டது.

     இருண்ட உலகில் இருந்து, வெளிச்சத்திற்கு வர வழி தெரியவில்லை.

     இணைந்து, நீண்டு பயணிக்கும் தண்டவாளங்களே, ஒரே தீர்வாகக் கண்களுக்குத் தெரிந்தன.

     வா, வா என்று அழைத்தன.

     இதோ வருகிறேன் என்று வந்துவிட்டார்.

     தொடர் வண்டி நிலையத்தில் கூட்டமே இல்லை.

     நடைமேடையில் கடை வைத்திருந்தவரை அணுகி, ரயில் எப்பொழுது வரும்? எனக் கேட்டார்.

     காலை ரயில் போயிடுச்சி தம்பி, இனி மாலைதான் அடுத்த ரயில் வரும் என்றார் கடைக்காரர்.

     மாலைதான் வருமா?

     அதுவரை என்ன செய்வது?

     எப்படிப் பொழுதைப் போக்குவது?

     மாலை வரை உடலில், உயிரை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

     யோசித்தவரின் கண்களில் காந்தி தென்பட்டார்.

     நடை மேடைக் கடையில், தொங்கிக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தில் இருந்த காந்தி, இம்மாணவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

     சத்திய சோதனை.

     மலிவு விலைப் பதிப்பு.

     விலை ரூ.10.

     தன் சட்டைப் பைக்குள் கைவிட்டுப் பார்த்தார்.

     பத்து ரூபாய்க்கும் மேல் இருந்தது.

     எனவே அம்மாணவர், சத்திய சோதனை நூலை விலை கொடுத்து  வாங்கினார்.

     நடைமேடையில் இருந்த நிழலில் அமர்ந்து, காந்தியைப் படிக்கத் தொடங்கினார்.

     மாலை வரை பொழுதைப் போக்கியாக வேண்டுமே.

     படிக்கப் படிக்க காந்தி, மாணவரின் உள்ளத்திற்குள் மெல்ல மெல்ல இறங்கினார்.

     காந்தி பட்ட துயரங்கள், துன்பங்கள், எதிர்கொண்ட அவமானங்கள் மாணவரின் உள்ளத்தை வருத்தியது.

     எத்துணை துன்பங்கள் வந்தபோதிலும், எத்துணைப் போராட்டங்களைச் சந்தித்த போதிலும், உள்ளம் தளராமல், உறுதியாய் எதிர்த்து நின்றுப் போராடி மகாத்மாவாக உயர்ந்த காந்தியின் வாழ்வு, மாணவரை முழுதாய் புரட்டிப் போட்டது.

     எத்துணை இன்னல்களைக் சந்தித்திருக்கிறார்?

     நான் ஒரே ஒரு தோல்விக்கே, தண்டவாளத்தைத் தேடி வந்திருக்கிறேனே?

     நினைக்கவே அம்மாணவருக்கு, வெட்கமாய் இருந்தது.

    உள்ளத்தில் பிறந்த உறுதியோடு எழுந்தார்.

     வீடு திரும்பினார்.

     படித்தார்,

     அடுத்த தேர்வில் வென்றார்.

     அழகப்பா பல்கலைக் கழகத்தில் பி,ஏ., சேர்ந்தார்.

     படித்தார்.

     முடித்தார்.

     எந்தத் தொடர்வண்டி நிலையத்தில், தன் உயிரை மாய்த்துக் கொள்ள வந்தாரோ, அதே தொடர் வண்டி நிலையத்திற்கு மீண்டும் வந்து, தொடர் வண்டியில் ஏறி, சென்னை சென்றார்.

     சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார்.

     சட்டம் பயின்றார்.

     வென்றார்.

     உழைத்தார்.

     சிறந்த குற்றவியல் வழக்கறிஞராய் ஒளிர்ந்தார்.

     அரசு வழக்கறிஞராய் வளர்ந்தார்.

     1996 ஆம் ஆணடு, சென்னை உயர்நீதி மன்ற நீதியரசராய் உயர்ந்தார்.

     2006 ஆம் ஆண்டு ஜார்கண்ட் உயர்நீதி மன்றம், இவரைத் தன் தலைமை நீதியரசராக்கி அழகு பார்த்தது.

     தேவகோட்டைத் தொடர் வண்டி நிலையைத்தில், தடம் புரண்டிருக்க வேண்டிய வாழ்க்கை, மனம் மாறி, தடம் மாறிப் பயணித்தால், உயர் நீதி மன்றத்திற்கு இவரை அழைத்துச் சென்றிருக்கிறது.

இவர் யார் தெரியுமா?

இவர்தான்


நீதியரசர் கற்பக விநாயகம்.

நன்றி