14 மார்ச் 2024

தொட்டி மீன்கள்

 


இரவில்

எங்கு குழந்தை அழுதாலும்

அவளுக்குப்

பாலூறும் …

தன் வாழ்வை ஒருமுறை நினைவு படுத்திக் கொண்டான்.

     யார் வாழ்வையும் கெடுக்கவில்லை. கெடுக்கவும் நினைத்ததில்லை.

     அப்படியிருக்கத் தன் வாழ்வு கெட யார் வைத்த தீ இது?

     இந்திரா சொல்வது போல் கடவுளா?

     நம்பிக்கையில்லாத தன்னையும் அசைக்கிறதே, கடவுள் எனும் ஒற்றைச் சொல்.

     அதை நம்புவதா? வேண்டாமா?

     ஒருவனை அனாதையாக்கி, அவன் வாழ்வையும் அர்த்தமற்றதாக்குவது எப்படி கடவுளாக இருக்க முடியும்?

     கடவுளின் செயல் இப்படியா இருக்கும்?

     கடவுள் வேறு? விதி வேறா?

     கடவுள் யார்? விதி யார்?

     இரண்டுக்கும் தொடர்பு உண்டா? இல்லையா?

---

     பெரும்பாலும், நாம் அனைவருமே, நம் வாழ்வின் பல தருணங்களில், இந்தக் கேள்வியை நமக்கு நாமே கேட்டிருப்போம்.

     நமக்கு நாமே ஒரு முடிவுக்கு வந்து, ஏதேதோ காரணங்களைக் கூறி, நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டிருப்போம்.

---

     காலம் முழுக்க, தான் யாருன்னே தெரியாத வாழ்க்கையை வாழ வேண்டிய நிர்பந்தத்த ஒரு குழந்தைக்குக் கொடுத்திட்ட சூழலை என்ன பண்ணப் போறேன்.

     ரொம்ப பயமா இருக்கு.

     மனசெல்லாம் நடுங்குது.

     இது வளர்ந்து, ஆளாகி, அதுக்குன்னு ஒரு வாழ்க்கை எப்படி அமையும்?

     யார் அமைச்சுக் கொடுப்பாங்க?

     யார் ஏத்துக்குவாங்க?

---

     நமக்குள்ளும் கேள்விகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. கேள்விகள், கேள்விகளாகவே தொடர்கின்றன. விடை எதுவும் நெருங்கியும் வர மறுக்கிறது.

     இவரே விடையினையும் கண்டுபிடித்துக் கூறுகிறார்.

---

     நாற்பத்து ஐந்து வயதுல இளம்பிறை பிறந்தா … ஐம்பத்தியெட்டு வயசுல ஆளாகி நிக்கறா . . .

     சின்ன வயது.

     அவளுக்கு இது என்னான்னு புரியாது. . .

     சொல்லியும் புரிய வைக்க முடியாது.

     தினமும் பேப்பர்ல வர்ற செய்தியைப் பார்த்தா, அடிவயிறு கலங்குது.

     எந்த நேரமும், கண்கொத்திப் பாம்பா, இளம்பிறையைப் பாத்துக்க முடியுமான்னு சந்தேகம்.

     இப்பவே இந்திராவுக்கு முடியல.

     ஆனா, அவ வயசு சமாளிக்க முடியுது.

     ஆனா, என்னோட வயசு அறுபதை நெருங்குது.

     முந்தி மாதிரி எதையும் செய்ய முடியல.

     உடம்பு பலம் போனது ஒருபுறம் இருந்தாலும், மனது பலம் போயிடுச்சி . . .    

     அடிக்கடி மரண பயம் வருது.

     நாளைக்கு செத்துடுவோமோன்னு ஒரு எண்ணம் தொடர்ந்து வந்துகிட்டே இருக்கு.

     மரணம் பத்திக் கவலையில்லை.

     பிறந்த யாரும் ஒரு நாளைக்கு சாகத்தான் போறோம். ஆனா அதுக்கு முன்னால, ஒவ்வொரு மனுசனுக்கும் சில கடமைகள் இருக்கு.

     அதை சரியா முடிச்சிட்டு சாவணும்.

     ஒருவேளை, நான் இறந்துபோய், இந்திரா மட்டும் இருந்தா?

     அவ நல்லா இருக்குற வரைக்கும் பாத்துக்குவா

     அவளுக்கு அப்புறம் . . .?

     பயமா இருக்குடா

     ரொம்ப பயமா இருக்குடா.

     அதனால, இளம்பிறையை பொறுத்த வரைக்கும் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திட்டோம்.

---

     சங்கரம் பேசப் பேச, நம் மனதுள்ளும் ஒரு பெரும் பாரம் வெகுவேகமாய் இறங்குகிறது, ஆழமாய் அழுத்துகிறது.

     படித்துக் கொண்டிருப்பது ஒரு நாவலை, கதையினை, ஒரு கற்பனைக் கதையினை என்பதை மனம் நம்ப மறுக்கிறது.

     இக் கதையினை எழுதியவருக்கு வேண்டுமானால், இது கற்பனையாக இருக்கலாம்.

     ஆனால், இதுபோன்ற சூழ்நிலையில் எத்தனை, எத்தனைக் குடும்பங்கள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்.

     முடிவெடுக்க இயலாமல், தெரியாமல் எத்துணை பெரிய மனச் சுழலில் தத்தளித்துக் கொண்டிருக்கும்.

     எத்தனை மனிதர்களால், இதுபோல் யோசித்து முடிவெடுக்க முடியும்.

     மூன்று குறு நாவல்கள்.

     மூன்று குறு நாவல்கள் இணைந்த ஒரு நூல்.

     தொட்டி மீன்கள்.

---

     ஒவ்வொரு நாளும் இவரது மனம், ஏதோ ஒன்றைத் தீவிரமாய்ச் சிந்தித்து, அதனைக் கவிதையாகவோ, சிறுகதையாகவோ, நாவலாகவோ எழுத வைத்து விடுகிறது.

     இவரது அன்றாடச் செயல்பாடுகளில், எழுத்தும் ஒன்றாக மாறிவிட்டது.

     அதுவும், பணிநிறைவிற்குக் பின், எழுதுவதே, இவரது தொடர் பணியாகி விட்டது.

     எழுதிக் கொண்டே இருக்கிறார்.

     வாழ்வின் மகிழ்வினை, இன்னல்களை, மனித மனத்தின் பெருமையை என எழுதிக் கொண்டே இருக்கிறார்.

     மனித வாழ்வை அதன் போக்கிலேயே பதிவு செய்வதில் வல்லவர் இவர்.

     அதே நேரத்தில், மனித வாழ்வில், மனித உறவில் ஏற்படும், தீர்க்க இயலா சிக்கல்களுக்கும் ஒரு தீர்வினை முன் வைப்பதில் வித்தகர் இவர்.

     இளம்பிறை முழு நிலாவான பிறகும், நிம்மதியாய் வாழ்வதற்கு ஒரு வழியினையும் காட்டுகிறார் இவர்.

     தொட்டி மீன்கள்.

     படித்த பிறகும், படித்து முடித்த பிறகும், தொட்டி நீரிலேயே நானும் மீனாய் தவித்துக் கொண்டே இருக்கிறேன்.

தொட்டி மீன்கள்


எழுத்தாளர் ஹரணி அவர்களின்


தொட்டி மீன்கள்.

 

புஸ்தகா,

பெங்களூர்

அலைபேசி 7418555884

விலை 180.00