திருவிளையாடல்.
திருவிளையாடல் படத்தினை, நாம் எல்லோருமே பார்த்திருப்போம்.
அப்படத்தில் வரும் அனைத்து காட்சிகளும், நம் மனம் கவர்ந்தவைதான்.
அதிலும் குறிப்பாக தருமி.
தருமியாக நாகேஷ் அவர்களும், சிவபெருமானாக சிவாஜியும் நடித்திருக்கும் அக்காட்சி என்றென்றும், நம் மனதில் நிலைத்து நிற்கும் வல்லமை வாய்ந்தது.
அதில் தருமி ஒரு கேள்வி கேட்பார்.
பிரிக்க
முடியாதது எதுவோ?
உடனே பதில் வரும்.
புலமையும்
வறுமையும்.
ஆம், அக்காலத்தில் புலமையில் உச்சம் தொட்டப்
புலவர்களிடத்தில், விலகாமல் ஒட்டி உறவாடியது வறுமை மட்டும்தான்.
இவரும் அதற்கு விதிவிலக்கல்ல.
இவருக்கு ஒரு விழா.
பட்டமளிப்பு விழா.
இலக்கியச் செல்வர் எனும் எற்ற மிகு பட்டமளிப்பு விழா.
புலவரோடு மேடை ஏறியவர்களுக்கு ஒரு எண்ணம்.
புலவருக்கு ஒரு வீடு கட்டித்தர வேண்டும் என்ற
எண்ணம்.
மேடையிலேயே அறிவித்தார்கள்.
புலவர் வீடு கட்ட நன்கொடைகள் வழங்குகிறோம் என
ஆளுக்கு ஒரு தொகையினை அறிவித்தார்கள்.
இறுதியாய் பேச எழுந்த புலவர் சீறினார்.
என்
புலமையைப் பேசுங்கள்.
வறுமையைப் பேசாதீர்கள்.
எழுதுகோலைக் கையில் எடுத்தவன், வறுமைக்கு அஞ்சக்கூடாது.
என்னைப் படைத்த இறைவனைத் தவிர, யாரிடமும் நான்
கையேந்த மாட்டேன்.
மேடையே அதிர்ச்சியில் உறைந்து போனது.
இவர் ஒரு திரைப்படப் பாடலாசிரியர்.
இவர் ஒரு திரைப்படத்திற்குப் பாடல் எழுதிக் கொடுத்தார்.
அக்காலத்தில், ஒரு பாடலுக்கு ஊதியம் ரூ.300
பெற்றுக் கொண்டார்.
சில காரணங்களால், இவர் பாடல் எழுதிக் கொடுத்த
திரைப்படம், எடுக்கப் படாமலே முடங்கிற்று.
பல ஆண்டுகள் கடந்த நிலையில், நின்று போன திரைப்படத்தை
இயக்க இருந்த இயக்குநர், வேறு ஒரு படத்தினை இயக்கினார்.
அப்படத்திற்கானப் பாடல்கள் எழுதப்பெற்று, ஒலிப்பதிவும்
செய்யப்பட்டு விட்டது.
ஒரே ஒரு பாடல் மட்டும் எழுதப்படாமல் இருந்தது.
பல நாட்கள் கடந்தன.
அப்பொழுது, அந்தப் படத்தின் உதவி இயக்குநர், இயக்குநரிடம்
கூறினார்.
பல வருடங்களுக்கு முன், அந்தக் கவிஞரை வைத்துப்
பாடல் எழுதினோமே, நினைவிருக்கிறதா? அப்படத்தினை எடுக்காமலே விட்டுவிட்டோமல்லவா? அந்தப்
படத்திற்காக, அந்தக் கவிஞர் எழுதிக் கொடுத்தப் பாடலை, நினைவு படுத்திப் பாருங்கள்.
இந்த படத்திற்கும் பொருத்தமாக இருக்கிறதல்லவா? என்றார்.
இயக்குநர் மனதில் மகிழ்ச்சி.
ஆமாம்,
இப்படத்திற்கு அப்படியே ஒத்துப் போகிறதே என வியந்தார்.
அடுத்த நொடி, கவிஞரைப் பார்க்க உதவியாளர்களையும்
அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
சிறு வீடு.
கவிஞர் வரவேற்றார்.
வந்திருந்தோர் உட்காருவதற்குக் கூட வீட்டில்
இடமில்லை.
ஒரே ஒரு அறைதான் வீடு.
அதனையே திரைச் சீலையால் தடுத்து, ஒரு புறம்,
அடுப்படி, மறுபுறம் அமரவும், படுத்துறங்குவதற்கான இடமாய் பிரித்திருந்தனர்.
இயக்குநர், கவிஞரைப் பார்த்துக் கூறினார்.
தாங்கள்
ஏற்கனவே எழுதிக் கொடுத்தப் பாடலை, தற்பொழுது எடுக்கும் படத்தில் பயன்படுத்திக் கொள்ள,
தாங்கள் அனுமதிக்க வேண்டும். அதற்காக இந்தத் தொகையினைத் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்
எனக்கூறி ரூபாய் பத்தாயிரத்தை கவிஞரிடம் கொடுத்தார்.
நான்
எழுதிய பாடலுக்கு, ஏற்கனவே ரூபாய் முந்நூறு ஊதியமாகக் பெற்றுக் கொண்டேனே. ஒரே பாடலுக்கு
எதற்கு இருமுறை பணம் என மறுத்தார்.
தற்பொழுது
ஒரு பாடலுக்கு ரூபாய் பத்தாயிரம் கொடுக்கிறோம், எனவே தாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
வேண்டாம். ஒருமுறை பெற்ற பணமே போதும் என திடமாய் மறுத்துவிட்டார்.
வறுமைக்கு அஞ்சாத மனிதர்.
இவர் கவிஞர் மட்டுமல்ல.
விடுதலைப் போராட்ட வீரர்.
முத்திரைச் சொற்பொழிவாளர்.
தமிழ் தேசிய அரசியல் களப் போராளி.
கதை ஆசிரியர்.
கட்டுரையாளர்.
வரலாற்று ஆய்வாளர்.
கடித இலக்கியம் படைத்தவர்.
சீறாப்புராண உரையாசிரியர்.
திரைப்படப் பாடலாசிரியர்.
திரைப்பட வசனகர்த்தா.
இசுலாமிய இலக்கியப் படைப்பாளி.
ஓலைச் சுவடிகளையும் கல்வெட்டுகளையும் படிக்கும்
ஆற்றல் பெற்றவர்.
படிப்பதற்கே மூச்சு வாங்குகிறதல்லவா?
இவர், எந்த சூழ்நிலையிலும், அறநெறியில் இருந்து
சற்றும் விலகாதவர்.
படிப்பதற்காக பள்ளிக்கூட நிழலில் கூட ஒதுங்காதவர்.
தாய் தந்தையரிடமே படித்துத் தேர்ந்தவர்.
நாமெல்லாம், நம் பெயரின் முன், தலைப்பெழுத்தாக,
தந்தை பெயரின் முதல் எழுத்தைத்தான் இன்றும் பயன்படுத்தி வருகிறோம்.
ஒரு சிலர்
மட்டும்தான், தற்பொழுது, தங்கள் பிள்ளைகளுக்கு தலைப்பெழுத்தாக, தாய் மற்றும் தந்தை
இருவரின் பெயர்களின் முதல் எழுத்துக்களை பயன்படுத்துகிறார்கள்.
பள்ளிக்குச் செல்லாத இவர், அக்காலத்திலேயே, தன்
அறிவுக் கண்களைத் திறந்த, தாய், தந்தையின் பெயர்களின் முதல் எழுத்துக்களை, தன் தலைப்பெழுத்தாக
இணைத்து பெருமிதம் அடைந்தவர்.
இவரது தந்தை காதர்ஷா ராவுத்தர்.
இவரது தாய் முகம்மது இபுறாஹீப்பாத்தம்மாள்.
இவர்தான்,
காதர்ஷா முகம்மது ஷெரீப்.
கா.மு.ஷெரீப்
---
1930 களில் தந்தை பெரியரின் சுயமரியாதை இயக்கத்தின்
மூலம் அரசியலுக்கு வந்தவர்.
1942 இல் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்
கொண்டவர்.
நடந்தே மும்பைக்குச் சென்றவர்.
வழியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, சிறைச்
சாலையினையும் கண்டவர்.
தோள்கள்
விம்முது சதையுந் துடிக்குது
சுதந்திரம் என்றவுடன் – கொலை
வாள்
கொண்டு தாக்கினாற் போன்றே இருக்குது
அடிமையென நினைத்தால் – இதை
ஆள்பவன்
சிந்திக்க வீணாய் மறுக்கிறான்
அதிகாரத் தன்மையினால் – புவி
ஆள்
வதற்காக நாம் ஆத்திரங் கொண்டிடல்
அறமும் முறையுமாகும்
எனக் கொதித்து எழுந்தவர்.
இதுமட்டுமல்ல, மா.பொ.சி., அவர்களின் தமிழரசுக் கழகத்திலும் இணைந்து போராட்டங்களை
முன்னின்று நடத்தியவர்.
ஆனாலும், வேதனை என்ன தெரியுமா?
கவிஞர்
தமிழ் தேசியப் போராளி என்பதே அவர்தம் அழிய முத்திரை. ஆனாலும் மா.பொ.சி., அவர்களை அறிந்தவர்கள்,
அவருடன் பணியாற்றிய கவிஞரை அறியமுடியாமல் போனதுதான் வேதனை என்கிறார் தோழர் மணியரசன்.
இதனினும் பெரிய வேதனை, தான் நிறுவிய தமிழரசு கழகத்தில், பொதுச் செயலாளராகப் பணியாற்றி, வடக்கு எல்லைப்
போராட்டம், தெற்கு எல்லைப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், மன்னர் மானிய ஒழிப்புப்
போராட்டம், மெட்ராஸ் சென்னை பெயர் மாற்றப்
போராட்டம் என அனைத்துப் போராட்டங்களிலும், உடன் நின்றுப் போராடியவரைப் பற்றி, மா.பொ.சி.,
அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்று நூலான எனது போராட்டம் நூலில் ஓரிடத்தில் கூட, ஒரு வரியில்
கூட கவி கா.மு.ஷெரீப் அவர்களைக் குறிப்பிடவில்லை, மறந்தே போனார்.
இதுமட்டுமல்ல, செ.திவான் அவர்கள் எழுதிய விடுதலைப்
போரில் தமிழக முஸ்லிம்கள் எனும் நூலில், ஒரு 12 வரிகளில் மட்டுமே கா.மு.ஷெரீப் முகம் காட்டுகிறார்.
கவி கா.மு.ஷெரீப் அவர்களின் சுதந்திரப் போராட்டப்
பணிகள் பதிவு செய்யப்படாமலே, காற்றில் கரைந்து போனதுதான் கொடுமை.
ஆனாலும், நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, சுதந்திரப்
போராட்டத்தில் பங்கு பெற்ற தியாகிகளுக்கான உதவித் தொகை, இவரையும் நாடி வந்தது.
கவிஞர் அதனைப் பெற மறுத்துவிட்டார்.
நான் செய்த தியாகம் நாட்டுக்காக அன்றி,
காசுக்காக அல்ல.
பின்னாளில், இந்தியத் திருநாட்டில், முஸ்லிம்கள்
பற்றியப் பார்வை மாற்றம் காணத் தொடங்கியபோது, கவி கா.மு.ஷெரீப் கூறிய வார்த்தைகள் நினைவுகூறத்
தக்கவையாகும்.
சிறுபான்மைச்
சமயத்தினரால் தங்களுக்கு ஆபத்து எனப் பெரும் பான்மைச் சமயத்தினர் கூக்குரல் எழுப்புகின்றனர்.
இது முயல் தன்னைக் கொல்ல வருவதாக, சிங்கம் கூறுவதைப் போல் இருக்கிறது.
இவ்வகைக் கூற்றை இந்தியாவில்தான் கேட்க முடியும்.
காரணம், இது மத நம்பிக்கையை வலுவாகப் பற்றி நிற்கும், பாமரர்கள் நிறைந்த நாடு, எனவே
இங்கு மதவெறியைத் தூண்டிவிட முடியும்.
இவ்விடத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களும்,
கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களும் கூறியது நினைவிற்கு வருகிறது.
பிரிட்டிஷாருக்கு
எதிரான உணர்ச்சி, இந்தியாவில் ஏனைய சமூகங்களில் இருப்பதைவிட, முஸ்லிம்களிடம் பலமாக
வேறூன்றியுள்ளது என்றார் நேதாஜி.
காயிதே மில்லத் அவர்களோ, இன்றும் ஒரு படி மேலே சென்று, தாயகம் மீது படையெடுத்து வருபவர்கள் முஸ்லிம்களாயினும்,
முறியடித்துத் துரத்தும் பரம்பரை நாங்கள் என்றார்.
---
கவி கா.மு.ஷெரீப்.
இவர் கவிஞர் மட்டுமல்ல.
சிறந்த வரலாற்று ஆய்வாளர்.
வள்ளல் சீதக்காதி வரலாற்றை நுணுகி ஆராய்ந்து,
சீதக்காதி பிறந்த ஊர் கீழக்கரை என்பதனையும், கீழக்கரையின் பழைய பெயர்தான் கொற்கை என்பதனையும்,
யவனர் என்போரை பல வரலாற்று ஆய்வாளர்கள் கிரேக்க, ரோமானியர்கள் என்று கூறியபோது, இவர்
மட்டுமே யவனர்கள் அராபியர்கள் என்பதனைத் தகுந்த தரவுகளோடும், இலக்கியச் சான்றுகளோடும்
நிரூவித்தார்.
இவரது முதல் கவிதை குடியரசு இதழில் 1933 ஆம்
ஆண்டு வெளியானது.
கவிதை என்றால் என்ன? என்பதற்கும் ஒரு கவிதை எழுதினார்.
சாவைத்
தடுப்பது கவிதை
சாகாதிருப்பது
கவிதை
நல்லதைச்
சொல்வது கவிதை
நன்மையைச்
செய்வது கவிதை.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மீது பேரன்பு
கொண்ட இவர், கலைஞரின் 63 ஆவது பிறந்தநாள் பரிசாக, 63 விருத்தங்களை முரசொலியில் எழுதி
மகிழ்ந்தார்.
இவரைப் பற்றி கலைஞர் கூறுவர்.
நான்
அண்ணா என்று இருவரைத்தான் அழைப்பேன். ஒருவர் அறிஞர் அண்ணா, மற்றொருவர் கவி கா.மு.ஷெரீப்.
பாவலர் என்றால் தினமும் ஒரு பாடலாவது எழுத வேண்டும்
என்பது கவி கா.மு.ஷெரீப் அவர்களின் கொள்கையாகும்.
காலை பசியாறுவதற்கு முன் எதேனும் ஒரு கவிதை எழுதுவது
என்பது இவரது தொடர் பழக்கமாகும்.
ஒன்றோ, இரண்டோ, அரையோ, காலோ எழுதிய நிலையில்,
சாப்பிட வாருங்கள் எனும் வழைப்பு வரும்வரை எழுதுவார்.
இப்படித்தான், ஒரு நாள் அரசியல்வாதிகள் வழங்கும்
வாக்குறுதிகளின் மேல், நாம் வைக்கும் நம்பிக்கையை எள்ளலாக ஒரு கவிதையில் வைத்தார்.
நிலவுக்கு
உன்னை அழைத்துப் போறேன்
வாடி
என்றன் கண்ணே – அங்கும்
ரேசன்
அரிசி சோறு திண்ண
நேருமோ
என் கண்ணே.
அம்புலிக்கு
உன்னை அழைத்துப்
போகப்போறேன்
பெண்ணே – அங்கும்
ஆடையில்லா
சினிமாப் படம்
இருக்குமோடா
என் கண்ணா?
தன்னைப் பற்றியும்கூட, ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
இக்கவிதை இவரது மனத்தூய்மையினையும், மனத் தெளிவினையும் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.
ஏழையாய்
வாழ விரும்புகிறேன் – ஆனால்
இரந்துண்டு
வாழ விரும்பவில்லை.
கோலச்
சிறப்பை விரும்புகிறேன் – ஆனால்
குடிச்சிறப்பு
இழக்கவும் விரும்பவில்லை
ஞாலம்
புகழும் வாழ்வு வேண்டாம் – ஆனால்
நயந்து
எவர்முன்பும் நிற்க வேண்டாம் – ஆனால்
சீலமும்
அன்பும் சீர்மையும் – மற்ற
தெளிவுள
வாழ்வினை விரும்பினேன் தா.
கவி கா.மு.ஷெரீப் அவர்கள் முதன் முதலாக, நாடகங்களுக்குத்தான்
பாடல்களை எழுதினார்.
இந்த நாடகப் பாடல்கள்தான், இவரை திரைத் துறைக்கு
அழைத்துச் சென்றன.
1948 ஆம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் தாயாரிப்பில் வெளிவந்த மாயாவதி எனும் படத்தில்தான், அல்லி மலராக இருந்தேன் எனும் இவரது முதல் திரைப் பாடல் ஒலியாய் வெளிவந்தது,
தொடர்ந்து திரைப்படப் பாடல்களுக்கான அழைப்புகள்
வந்து குவிந்த வண்ணம் இருந்தன.
இவர் எழுதிய ஒரு பாடலைப் பற்றி சிலோன் விஜயேந்திரன் என்பவர் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஒரு தேநீர் கடையில், கவிஞர் எழுதியப்
பாடல் ஒலிக்கிறது.
தேநீர் அருந்த வந்த ஒரு இளைஞர், இப்பாடலைக் கேட்டு
விம்மி விம்மி அழுதிருக்கிறார்.
என் தாயை கவனிக்காமல் திட்டிவிட்டேனே எனக் கூறி
அழுதிருக்கிறார்.
அன்னையின் ஆணை படத்தில் இடம் பெற்ற பாடல் செய்த மாயம்
இது.
பத்துமாதம்
சுமந்திருந்து பெற்றாள்
பகலிரவாய்
விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய்
கல்விபெறச் செய்தாள்
மேதினியில்
நாம் வாழச் செய்தாள்
அன்னையைப்
போல் ஒரு தெய்வமில்லை – அவள்
அடி
தொழ மறுப்பவர் மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை.
துன்பமும்
தொல்லையும் ஏற்றுக் கொண்டே நம்மை
சுகம்பெறச்
செய்திடும் கருணை வெள்ளம்
நாளெல்லாம்
பட்டினியாய் இருந்திடுவாள் – ஒரு
நாழிகை
நம் பசி பொறுக்க மாட்டாள்.
மேலெல்லாம்
இளைத்திட பாடுபட்டே
மேன்மையாய்
நாம் வாழச் செய்திடுவாள்
கேட்போர் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் கரைத்திடும் இப்பாடலின் ஒலிப்பதிவு முடிந்து, அரங்கை விட்டு வெளியே வந்த கவிஞருக்காக, ஒரு தந்தி காத்திருந்தது.
தாயார் மறைந்துவிட்டார்.
இப்படியாகக் கவிஞர் எழுதிய ஒவ்வொரு பாடலுக்குப்
பின்னும், பலரும் அறியாத செய்திகள் ஒளிந்து கிடக்கின்றன.
பிறப்பால் இசுலாமியராக இருந்தபோதிலும், சம்பூர்ண இராமாயணத்தில் பணியாற்றியபொழுது,
அசைவ உணவைத் தவிர்த்தவர், பின் தன் வாழ்நாள் முழுவதும் அசைவத்தின் பக்கம் திரும்பிக்கூடப்
பார்க்கவில்லை.
வள்ளலார் மீது கவிஞர் கொண்டிருந்த பற்றினால்,
சைவமே கவிஞரின் வாழ்நாள் உறுதி நெறியானது.
கவி கா.மு.ஷெரீப் அவர்கள் நானூறு திரைப்படப்
பாடல்களுக்கும் மேல் இயற்றியுள்ளார்.
ஒவ்வொரு பாடலும், தமிழின் சொத்து.
இவர் காலத்தில், சில கவிஞர்கள் எழுதிய இரட்டை
அர்த்தம் தொனிக்கும் பாடல்கள், திரைக்குள் நுழைந்தது கண்டு வெதும்பினார்.
இதுபோன்ற பாடல்கள் வெளிவரும் இடத்தில், இனி நாம்
இருப்பது சரியல்ல என்று எண்ணி, திரைப்படத் துறையினைவிட்டு முற்றாய் விலகினார்.
சினிமா
பாடல் எழுதிய காலத்தில்கூட, நான் யாருக்கும் கட்டுப்பட்டு நடந்ததில்லை. பாடல் எழுத
வேண்டும் என்பதற்காக, நானாக விரும்பி வாய்ப்பு கேட்டுச் சென்றதில்லை.
கீரையோ கீரைன்னு விக்கிற மாதிரி, என் பாட்டைத்
தூக்கிக் கொண்டு அலைய நான் தயாரில்லை. அதுக்கு இன்னிக்கு நிறைய பேர் வந்துட்டாங்க.
கவிஞன் என்பவன், ஒரு தாய் மாதிரி, பத்தியம் இருக்கனும்.
ரசிகனை அவன் புள்ள மாதிரி நேசிச்சி, எதைக் குடுக்கனும், எதைக் குடுக்கக்கூடாதுன்னு
ஒரு பொறுப்போட எழுதனும்.
இவர்தான்
கவி கா.மு.ஷெரீப்
கவிஞர் பல நூல்களை எழுதியிருந்த போதிலும், இஸ்லாமும் ஜீவகாருண்யமும், இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?, தமிழிரின் சமய நெறி ஆகிய மூன்று நூல்களும், இன்றைய உலகிற்கு மிகவும் பயன் தருபவையாகும்.
இஸ்லாமும் ஜீவகாருண்யமும் நூலின் முன்னுரையிலேயே
தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
நூலின்
தலைப்பையோ, ஆசிரியனாகிய என் பெயரையோ, முன்னிறுத்திப் பார்த்திடாமல், நடுநிலையோடு படிக்கவும்.
இவர், இவர்தான்,
இப்படிப்பட்டவர்தான்
கவி கா.மு.ஷெரீப்
---
கடந்த
11.8.2024
ஞாயிற்றுக்
கிழமை மாலை
ஏடகம்
ஞாயிறு முற்றம்.
ஏடகம் அமைப்பின்
பெரும் புரவலரும்
சிங்கப்பூர்,
மேனாள் தமிழ் விரிவுரையாளரும்
என் அத்தானுமாகிய
விடுதலைப்
போராட்ட வீரர் கவி கா.மு.ஷெரீப்
எனும் தலைப்பில்
ஒளி, ஒலிக்
காட்சிகளுடன் கூடய
அற்புத உரையினை
ஆற்றினார்.
கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்கள், தஞ்சாவூர்
மாவட்டம், வழுத்தூர், சவுகத் இஸ்லாம் மேனிலைப் பள்ளியில், முதுகலைத் தமிழாசிரியராகப்
பணியாற்றி வந்த காலத்தில், திருச்சி வானொலி ஒலிபரப்பிய புகழேணி எனும் தலைப்பிலான, அன்றைய பிரபலங்களின் நேர்முகம் நிகழ்ச்சியில்,
1986 ஆம் ஆண்டு, ஜுன் மாதம் ஒன்பதாம் நாள், ஒலிபரப்பப்பட்ட, நேர்முகத்தைக் கேட்டவரின்
உள்ளத்தில் ஒரு கிளர்ச்சி.
வானொலி வழி வெளிப்பட்ட குரலில் இருந்த கம்பீரமும்,
அருவியாய் ஆர்ப்பரித்து விழுந்த சொற்களும்,
ஒரு இனம்புரியா ஈர்ப்பை ஏற்படுத்தின.
அந்த வசீகரக்
குரலுக்குச் சொந்தக்காரர்
கவி கா.மு.ஷெரீப்
இதுவரை கேள்விப்படாதப் பெயர். அன்றே தனது பள்ளி
நூலகத்தில் கவி கா.மு.ஷெரீப் நூல்கள் இருக்கின்றனவா எனத் தேடிப் பார்த்தார்,
ஒரு நூல் கிடைத்தது.
ஆயிஷா நாச்சியார் பிள்ளைத் தமிழ்
படிக்கப் படிக்க சொக்கிப் போனார்.
ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃ.பில்.,) ஆய்வுப் படிப்பினை
மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவருக்கு, இந்நூல் என்னை ஆய்வு செய், என்னை
ஆய்வு செய் என்று அழைப்பு விடுத்தது.
சென்னைக்குப் புறப்பட்டார்.
1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் நாள்,
எல்லீஸ் ரோடு, பச்சையப்ப செட்டித் தெருவில் இருந்த கவி கா.மு.ஷெரீப் அவர்களின் இல்லத்திற்குச்
சென்றார்.
கை வைக்காத வெள்ளை பனியன், இருப்பில் கைலி, தலையில் வெள்ளை குல்லாய்.
வாருங்கள்
என கவிஞர் வரவேற்றார்.
கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்கள், தங்களின் ஆயிஷா நாச்சியார் பிள்ளைத் தமிழ் நூலினை
ஆய்வு செய்ய விரும்புகிறேன்.
அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.
அனுமதித்தார்.
நூல்
பற்றிய கேள்வி ஏதேனும் இருக்கிறதா? இருந்தால் கேள் என்றார்.
கேட்டார்.
மடை திறந்த வெள்ளமாய் பதில்கள் பெருக்கெடுத்து
வந்தன.
காலை 9.30 மணிக்குத் தொடங்கிய பேச்சு, நிறைவுற்றபோது,
மணி மாலை ஏழு.
கவிஞர் ப.திருநாவுக்கரசரின் உண்மை அன்பை அறிந்து
மகிழ்ந்தார்.
அன்று
முதல், கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்களை, கவி கா.மு.ஷெரீப் அவர்களின் குடும்பமே, தங்கள்
பெயரனாக வரித்துக் கொண்டது.
சொன்னால் நம்பமாட்டீர்கள், கவி கா.மு.ஷெரீப் அவர்கள், அன்று முதல், தன் வாழ்வின் இறுதி வரை, தன் கைப்பட, 120 கடிதங்களை, கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்களுக்கு எழுதியுள்ளார்.
ஒவ்வொரு கடிதமும் ஒரு களஞ்சியம்.
ஒவ்வொரு கடிதமும், ஒரு பெரும் பொக்கிசம்.
ஒவ்வொரு கடிதத்தையும், அவர் தொடங்கும் விதமே,
அவரது உயரிய, உன்னதப் பண்பினை வெளிப்படுத்தும்.
இறையருள் அனைவரையும்
காக்குமாக
அன்பும்
பண்பும் பாசமும் நிறைந்த தம்பி ப.திருநாவுக்கரசு, எம்.ஏ,. எம்.எட்., அவர்கட்கு, முதியவன்
கவி கா.மு.ஷெரீப் உடைய வாழ்த்துகள்.
மனைவி, மக்கள், உற்றார், சுற்றம் புடை சூழ நெடிது
வாழ்ந்திட இறையருளிடம் பிரார்த்திப்பு.
தங்கள் தந்தையார் அவர்கட்கு எனது பணிவன்புடன்
கூடிய கைகூப்பு-வணக்கம் தெரிவித்திடுங்கள்.
தங்களுடன் இங்கு வந்திருந்த, உங்கள் நண்பர்கட்கு
நன்றியும் நலமும் கூறுங்கள்.
எத்தனை பெரும் ஆளுமை, எத்தனை அன்புடன் எழுதியிருக்கிறார் பாருங்கள்.
உண்மையிலேயே, என் அத்தான் கவிஞர் ப.திருநாவுக்கரசு
அவர்கள் கொடுத்து வைத்தவர். பெரும் பேறு பெற்றவர்.
கவி கா.மு.ஷெரீப் அவர்களுக்கும், தனக்கும் இருந்த,
உண்மை அன்பை, பெறற்கரிய பெரும் பாசத்தை கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்கள் கூறக் கூற,
அரங்கே நெகிழ்ந்து போனது.
தஞ்சாவூர், தமிழ்ப்
பல்கலைக் கழக
சித்தமருத்துவத்துறை
உதவிப் பேராசிரியர்
தலைமையில்
நடைபெற்ற, இப்பொழிவிற்கு
வந்திருந்தோரை
தஞ்சாவூர், ஹஜ்ரத் ஷம்ஸ்
மன்சூர் பீர் நற்பணி மன்றப் பொருளாளர்
வரவேற்றார்.
பொழிவினைத் தொடர்ந்து
தஞ்சாவூர், அய்யம்பேட்டை,
ஸ்டார் லைன் கல்வியியல் கல்லூரி முதல்வர்
நன்றிகூற விழா இனிது
நிறைவுற்றது.
ஏடகப் புரவலரும், மாணவரும்
தஞ்சாவூர், பசுபதிகோயில்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்
பள்ளி பட்டதாரி ஆசிரியரும்,
கவிஞர் ப.திருநாவுக்கரசு
அவர்களின் மேனாள் மாணவருமான
அழகுத் தமிழால் விழா
நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியதோடு,
ஏடகம் என்னும் உன்னத
அமைப்பினை நிறுவி, தொடர்ந்து 80 மாதங்களாக தொய்வின்றி, பொழிவுகளை அரங்கேற்றிவரும்,
ஏடக நிறுவுநர், தலைவர்
முனைவர் மணி.மாறன் அவர்களைப் பாராட்டி
கவிதை ஒன்றினையும்
வாசித்து மகிழ்ந்தார்.
வலிமையின் பிறப்பிடம்
தனிமையை தமிழோடு பயின்றவர்
இனிமையை இதழோடு வணங்கி வருபவர்
அன்னைத் தமிழ் தொடர்ந்து வாழ
தன் வாழ்வை உரமாக்கி – தமிழுக்கு ஒரு
வரமாகிப் போனவர்.
வாழ்க
முனைவர் மணி.மாறன்.