02 டிசம்பர் 2024

Swadeshi Steam

 


     ஆண்டு 1981.

     சென்னை.

     அவர் ஒரு பள்ளி மாணவர்.

     மேல் சட்டை மற்றும் முழங்கால் வரை நீளும் அரை கால் சட்டையுடன், அந்த நூலகத்திற்குள் நுழைகிறார்.

நூலகத்தின் அடுக்குகளில் வரிசை  வரிசையாய், படைவீரர்கள்களைப் போல் அணிவகுத்து நிற்கும் நூல்களைப் பார்க்கிறார்.

     ஒவ்வொரு அடுக்காய் பார்வையிட்டவாறு சென்றவர், திடீரென நிற்கிறார்.

     பார்வை ஒரு குறிப்பிட்ட, சில பக்கங்கள் மட்டுமே உடைய, தகவல் தொகுப்பு அறிக்கை (Prospectus) ஒன்றின் மீது பட்டவுடன், அடுத்த நூலுக்கு நகர மறுக்கிறது.

அது

சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தின்

தகவல் தொகுப்பு அறிக்கை

The Swadeshi Steam Navigation Company

Prospectus

     ஒரு குழந்தையினைத் தூக்குவது போல, மெல்ல அந்த அறிக்கையினைக் கையில் எடுத்துப் பக்கங்களைத் திருப்புகிறார்.

     அதுநாள் வரை இல்லாத ஓர் உணர்வு உள்ளத்தே எழுகிறது.

     அந்த நொடி, அந்த நிமிடம், அந்த மாணவர், தன் வாழ்வின் இலட்சியத்தை, தன் வாழ்விற்கான நோக்கத்தை, அந்த தகவல் அறிக்கையில் கண்டு பிடிக்கிறார்.

     புத்தருக்கானப் போதி மரத்தைப் போல், தனக்கான போதிமரம், இந்த சிறிய எண்ணிக்கையிலான பக்கங்களில் ஒளிந்திருப்பதை உணர்கிறார்.

     கண்கள் புதிய பார்வையினைப் பெறுகின்றன.

     தேடுதலைத் தொடங்குகிறார்.

     அதே நூலகத்தில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் கைப்பட எழுதியக் கடிதங்கள், விவேகபானு இதழின் தொகுதிகள், அந்த சின்னஞ்சிறு இளைஞரை வா, வா என்று அழைத்தன.

     கப்பலோட்டியத் தமிழினின் கடிதங்களில் இருந்த எழுத்துகள், வார்த்தைகள், இம்மாணவரின் தலையெழுத்தையே மாற்றின.

     வ.உ.சி., என்ற மூன்றெழுத்து மந்திரம், இவரது சுவாசக் காற்றாய் மாறிப் போனது.

     ஒரு பதினைந்து வயது மாணவர், எழுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை, வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறைந்துபோன ஒரு மாபெரும் வரலாற்றைத் தேடத் தொடங்கினார்.

     நூலக அடுக்குகள், அரசு ஆவணக் காப்பகங்கள் எனத் தேடுதலைத் தொடர்கிறார்.

     1984 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வி நிறைவுற்று, கல்லூரியில் அடியெடுத்து வைக்கிறார்.

     கல்லூரிப் படிப்போடு, தேடுதலும் தொடர்கிறது.

     அரசு ஆவணக் காப்பகம் என்னும் மாபெரும் கடலில் மூழ்கிய ஒவ்வொரு முறையும், முத்தானத் தகவல்களுடன் மேலெழுந்து வருகிறார்.

     1985 ஆம் ஆண்டு முதன் முதலாக புது தில்லிக்குச் செல்கிறார்.

     தில்லியின் அழகையோ, தாஜ்மகாலின் வசீகரத்தையோ தேடிச் செல்லவில்லை.

     நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தைத் தேடிச் செல்கிறார்.

     நேரு நூலகத்தில், சுதேசமித்திரனின் பல வருட இதழ்கள் படச்சுருள் வடிவில் இவரை வரவேற்றன. பல்வேறு அரிய செய்திகள் ஒளித் திரையில் உயிர்த்தெழுந்து இவரை ஆரத் தழுவி மகிழ்ந்தன.

     1990 ஆம் ஆண்டில், புது தில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், முனைவர் ஆய்வுப் பட்ட மாணவராகச் சேர்கிறார்.

      தமிழ்ப் பதிப்பு வரலாறு என்னும் தலைப்பில் ஆய்வு ஒரு பக்கம், வ.உ.சி., தேடல் மறுபக்கம் என இவரது தில்லி வாழ்வு வேகமாக நகர்கிறது.

     தில்லியிலேயே தேங்கி நிற்காதே, உலக நூலகங்களையும் பார் எனக் கூறி, 1996 ஆம் ஆண்டின் இறுதியில், சார்லஸ் வாலஸ் அறக்கட்டளை இவருக்கு நிதி உதவி வழங்கி, பறக்க வைத்தது.

     பிரிட்டீஷ் நூலகத்திற்குப் பறந்து சென்றார்.

     பிரிட்டீஷ் நூலகம் வரலாற்று ஆய்வாளர்களின் மெக்கா.

     The British Library is the Mecca for Historians

     வியந்து போனார்.

     Lloyds Register of Shipping

     Guildhall Library என இவரது தேடல் நீண்டு கொண்டே சென்றது.

     இந்திய பிரான்ஸ் பரிமாற்றுத் திட்டம், இவரை பிரான்ஸ் நூலகங்களுக்கு அழைத்துச் சென்றது.

     உலகிலேயே எங்கும் இல்லாத, எங்கும் கிடைக்காக, மகாகவி பாரதி நடத்திய விஜயா எனும் பெயரிலான இதழ்களை, பிரான்சில்தான் கண்டு பிடித்தார்.

     1995 ஆம் ஆண்டில், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின், வரலாற்றுத் துறையில் பேராசிரியராய் இணைந்தார்.

     கூப்பிடு தூரத்தில் தூத்துக்குடி.

     வ.உ.சி., அவர்களின் மூன்றாவது மகன் வ.உ.சி.சுப்பிரமணியம், வ.உ.சி., அவர்களின் இளைய மகன் வ.உ.சி.வாலேசுவரன், வ.உ.சி., அவர்களின் முதல் பெயரன் அ.சண்முகசுந்தரம் என ஒவ்வொருவராய் சந்தித்தார்.

     வ.உ.சி., சுவாசித்தக் காற்றையும், சுதேசி இயக்கக் காற்றையும் ஆறு ஆண்டுகள் சுவாசித்தார்.

     தேடிக் கொண்டே இருந்தார்.

     தகவல்களை, ஆவணங்களை சேகரித்துக் கொண்டே இருந்தார்.

     சுதேசி கப்பல் கடலில் நெஞ்சம் நிமிர்த்தி பவனி வந்த காலத்திலும், சூழ்ச்சிக்கு இறையாகி காற்றோடு காற்றாய் கரைந்துபோன காலகட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சியராகவும், நீதிபதியாகவும் இருந்தவர் ஆங்கிலேயர் ஆஷ்.

     இந்த ஆஷ், 1911 ஆம் ஆண்டு மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுடப்பட்டதை நாம் அறிவோம்.

     இந்த ஆஷ் அவர்களின் வாரிசுகள் யாரேனும் இருக்கிறார்களா? இருந்தால் அவர்களிடம் ஏதேனும் ஆவணங்கள் இருக்கலாம் அல்லவா? என்று எண்ணி ஆஷ் குடும்பத்தினரைத் தேடினார்.

     அயல்ராந்தில் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

     அயர்லாந்து நாட்டின், கில்டேர் பகுதிக்குப் பறந்தார்.

     ஆஷ் அவர்களின் பெயரன் ராபர்ட் ஆஷ் அவர்களைச் சந்தித்தார்.

     இவரை மகிழ்வுடன் வரவேற்ற ராபர்ட் ஆஷ், தன்னிடம் இருந்த ஆவணங்களை எல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்தார்.

     இந்த ஆவணங்கள், இவரது தேடலில், இதுநாள் வரை இல்லாத புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சின.

     அயராத தேடல்.

      சோர்வறியா உழைப்பு.

     ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் நாற்பதாண்டுகாலத் தேடல், நாற்பதாண்டுகால இடைவிடா உழைப்பு.

     ஒரே இலட்சியம்.

     சுதேசி கப்பல் நிறுவனம்.

     இவரது தேடல்களும், தேடல்களின் கிடைத்த தகவல்களும், இன்று ஒரு நூலாய் அவதாரம் எடுத்திருக்கின்றன.

     அசைக்க முடியாத தரவுகளுடன், மறுக்க முடியாத ஆதாரங்களுடன் ஒரு நூல்.

SWADESHI STEAM

     இந்நூல் தமிழக எல்லைகளுக்குள் முடங்கி விடாமல், பரந்து, விரிந்து கிடக்கும் இவ்வுலகு முழுவதும் வலம் வர வேண்டும், ஆங்கிலேயரை எதிர்த்து, கப்பல்களை ஓட்டியிருக்கிறான் ஒரு தமிழன் என்பதை உலகமே அறிய வேண்டும், போற்ற வேண்டும் என்னும் உயரிய, உன்னத நோக்கத்தின் அடிப்படையில், இந்நூல் ஆங்கில நூலாக வெளிவந்திருக்கிறது.

    உலகளாவிய பென்குயின் நிறுவனத்தின் பதிப்பு.

     மொழி எல்லைகளைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.

     வெளிவந்த வேகத்தில், Gaja Capital Business Book Prize  விருதிற்கான தேர்வுப் பட்டியலில் (Short List)  ஐந்து நூல்களுள் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறது.

     விருதினை நிச்சயம் வெல்லும்.


SWADESHI STEAM

நாற்பதாண்டுகள் அயராது, தளராது பாடுபட்டு

தன் வாழ்வின் இலட்சியத்தை எட்டிப் பிடித்திருக்கிறார்

வரலாற்று ஆய்வாளர்


முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி.

---

வரலாற்று நிகழ்வுகளை

மீட்டெடுத்திருக்கும்

இப்பெருமைமிகு வரலாற்று ஆய்வு நூலின்

அறிமுக விழா,


மக்கள் சிந்தனைப் பேரவையின்

தமிழ் மாநிலக் குழுவின்

சார்பில்

கடந்த 9.11.2024 சனிக்கிழமை மாலை,

தஞ்சாவூர் பெசண்ட் அரங்கில்,

மக்கள் சிந்தனைப் பேரவையின்

மாநிலத் துணைத் தலைவர்


பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் ஐயா அவர்களின்

தலைமையில்

நடைபெற்றது.

தஞ்சாவூர், பாராளுமன்ற உறுப்பினர்


திருமிகு ச.முரசொலி அவர்கள்

கேட்டோர் வியக்கும் வகையில்,

சிறப்பானதொரு நூல் அறிமுக உரையினை வழங்கி

தானும் ஒரு சிறந்த இலக்கியவாதிதான் என்பதை

அனைவருக்கும் உணர்த்தினார்.

மக்கள் சிந்தனைப் பேரவையின் நிறுவனர், தலைவர்


தமிழ்த்திரு த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள்

நூலாசிரியரின் இடைவிடா முயற்சிகளை

தனக்கே  உரிய பாணியில் எடுத்துரைத்தார்.

நூலாசிரியர்


முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள்

அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத

தெளிந்த நீரோடைப் போன்ற ஏற்புரையினை வழங்கினார்.

முன்னதாக

நூல் அறிமுக விழாவிற்கு வந்திருந்தோரை.

தஞ்சாவூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவரும்,

மக்கள் சிந்தனைப் பேரவையின் பொதுகுழு உறுப்பினருமாகிய


புலவர் மா.கோபாலகிருட்டினன் அவர்கள்

வரவேற்றார்.

விழாவின் நிறைவில், நன்றியுரையாற்றும்

ஒரு பொன்னான வாய்ப்பினை, எளியேனான எனக்கு,

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் ஐயா அவர்கள்

வழங்கி இருந்தார்.

நானும் நன்றிகூறி மகிழ்ந்தேன்.

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் ஐயா அவர்களின் பெரும் முயற்சியால் நடைபெற்ற, இந்நூல் அறிமுக விழாவின் போது,

SWADESHI STEAM

நூல்

நூறு படிகளைக் கடந்து விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி

அவர்களின் நாற்பதாண்டுகால உழைப்பு

SWADESHI STEAM

ஒவ்வொருவர் இல்லங்களில் மட்டுமல்ல,

ஒவ்வொருவர் உள்ளங்களிலும்

நிரந்தரமாய் குடியிருக்க வேண்டிய நூல்.

 

 

Swadeshi Steam

Penguin Random House,4th Floor,

Capital Tower 1,

MG Road,

Gurugram 122 002

Haryana,

India

Price : Rs.999/-

 

Amazon தளத்திலும் கிடைக்கிறது