07 ஜனவரி 2025

இராசாளியார்

 


மாணவர் கழகம், மருந்தருள் சாலை,

பேணு மன்ன சத்திர மிவற்றை

புதுக்கிய புண்ணிய புனிதமா தவனா

நிலமதை யளந்த நெடுமுடி யண்ணறன்

மலர்ப்பத மறவா மாண்பமை மனத்தோய்

வாசுதே வப்பெயர் வள்ளல்செய் தவத்தான்

வந்தநற் றூய மனத்தகோ பால

சாமி ரகுநாத ராஜா ளிப்பெயர்

பெற்ற பெரியோய், பேணின மீண்டு

வருக வருக மகிழ்ந்தனை வருக

                                           கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார்.

 

     ஆண்டு 1903.

     குன்னூர்.

     இன்றைக்கும் 121 ஆண்டுகளுக்கும் முன்.

     குன்னூர் மலை ஏறுவதற்குச் சரியான பாதைகள் இல்லாத காலகட்டம்.

     கழுதைகளின் மேல் பயணித்து மலையேற வேண்டிய சூழல்.

     ஆனாலும், இந்தக் குன்னூர்தான், இந்தத் தமிழறிஞருக்கு, மிகவும் பிடித்தமான மலை.

     இவர் தமிழறிஞர் மட்டுமல்ல.

     மிகப்பெரும் செல்வந்தர்.

     எனவே தன் சொந்த செலவில், குன்னூரில் இடம் வாங்கி, கட்டடம் எழுப்பி, ஒரு பெரும் நூலகத்தை அமைத்தார்.

      நூலகம் அமைத்ததோடு, இவர் மனம் அமைதி அடையவில்லை.

     தமிழின் முதன் நூலாகிய, இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தை, இவ்வுலகிற்கு அளித்த, தொல்காப்பியருக்கு ஒரு சிலை எடுத்தார்.

     1911 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் நாள் சிலை திறப்பு விழா.

     குன்னூரே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

அந்நாளில் சுயநலம் வேட்டொருமுனியைத் தென்மலைமே லரன்வைத் திட்டான்

பன்னாளும் பொதுநலம்வேட் டரித்வார மங்கலக்கோ பால சாமி

பின்னாளிற் றமிழ்க்கடலுண்டையமலை யமிழ்த்து தொல்காப்பியர்பேர் பூண்ட

தென்னாரு மொருமுனியை நீலமலை மேல்வைத்தான் சிறப்பா மீதே

(சுயநலம் – என்றது – திருமணத்தின் பொருட்டு)

என்று குன்னூரே மனதார ஆடிப்பாடி மகிழ்ந்தது.

     குன்னூரில் மட்டுமல்ல, குன்னூருக்கு முன்னமே, தன் வீட்டில் ஒரு மாபெரும் நூலகத்தை அமைத்தவர் இவர்.

     ஒருமுறை, இவரது வீட்டிற்கு வந்த, திருவாவடுதுறை ஆதீனத் தலைவர், இவர் வீட்டு நூலகத்தைக் கண்டு வியந்து போனார்.

     அவரே, இவரது வீட்டு நூலகத்திற்குப் பெயரும் சூட்டினார்.

     சரசுவதி மகால் நூலகம்.

     வீரசோழியம், நற்றினை, புறநானூறு முதலான இலக்கண, இலக்கிய நூல்கள் அச்சு வாகனம் எறியது, இவர் தன் வீட்டு நூலகத்தில் இருந்து கொடுத்த ஓலைச் சுவடிகளால்தான்.

     தொல்காப்பியத்தைக்கூட, இவர் வீட்டுச் சொத்து என்றுதான் தமிழறிஞர்கள் கூறுவர்.

     1929 ஆம் ஆண்டு, கரந்தைத் தமிழ்ச் சங்கம், தொல்காப்பிய தெய்வச்சிலையார் உரையைப் பதிப்பிக்க, முயற்சிகளை முன்னெடுத்தபோது, தன் வீட்டில் இருந்த தொல்காப்பியச் சுவடிகளைக் கொடுத்தவரும் இவர்தான்.

     மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பாண்டித்துரை தேவர், இவரை எப்படி அழைப்பால் தெரியுமா?

     மாப்பிள்ளை.

     தஞ்சையில், வித்தியா நிகேதனம் என்னும் பெயரில், ஒரு தமிழ்ச் சங்கத்தை நிறுவியவரும் இவர்தான்.

     1911 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு, அள்ளி அள்ளிக் கொடுத்தவரும் இவர்தான். இவர்தான்

பெரும் புலவர், பெரும் புரவலர்

அரித்துவாரமங்கலம் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடக்க காலத்தில் இருந்த எளிய நிலையில், தம் உயர்வெல்லாம் எண்ணி விலகி இராது, சங்கத்தோடு சேர்ந்து பலவாறு ஊக்கமளித்து வந்த அரித்துவாரமங்கலம் கோபாலசாமி இரகுநாத இராசாளியார், நம் சங்கத்தின் இளமையிலேயே இறைவனடி சேர்ந்தது, தமிழ் செய்த தவக்குறையாகும் என்பார் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார்.

இத்தகு பெருமை வாய்ந்த

பெரும் புலவர், பெரும் புரவலர்

அரித்துவாரமங்கலம் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார்

நினைவினைப் போற்றும் வகையில் ஒரு விழா.

அவர் மறைந்து, 105 ஆண்டுகள் கடந்த நிலையில் ஒரு பெரும் விழா.

சென்னை, உயர்நீதி மன்ற நீதியரசர்


மாண்பமை இரா.சுரேஷ்குமார் அவர்கள்

அளித்த ஊக்கத்தால்,

சென்னை, வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர்


வழக்கறிஞர் வேலு.கார்த்திகேயன் அவர்களின்

முயற்சியால்,

ஏடகம் அமைப்பின் நிறுவனர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்கள்

முன்னெடுத்த பெருமைமிகு விழா.

---

அரித்துவாரமங்கலம் பெரும்புலவர், புரவலர்

வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார்

நினைவு

தமிழ்ப்பரிதி

விருது வழங்கும் விழா.

கடந்த 5.1.2025 ஞாயிற்றுக் கிழமை மாலை,

தஞ்சை தீர்க்க சுமங்கலி மகாலில் நடைபெற்றது.

ஓய்வுபெற்ற, உயர்நீதி மன்ற நீதியரசர்


மாண்பமை சு.இராஜேஸ்வரன் அவர்கள்

தலைமையில் நடைபெற்ற, இவ்விழாவிற்கு வந்திருந்தோரை,

ஏடக நிறுவனர், தலைவர்

முனைவர் மணி.மாறன்அவர்கள்

வரவேற்றார்.

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி மேனாள் உறுப்பினர்

திரு எம்.ரெங்கசாமி

சென்னை, வழக்கறிஞர்கள் சங்கத் துணைத் தலைவர்

வழக்கறிஞர் வேலு.கார்த்திகேயன்

தஞ்சாவூர், குழந்தைகள் நல மருத்துவர்

பேராசிரியர், மருத்துவர் ஏ.சீனிவாசன்

இந்திய மருத்துவக் கழக, மேனாள் மாநிலத் தலைவர்

மருத்துவர் வி.வரதராசன்

தஞ்சாவூர், சதய விழாக்குழுத் தலைவர்

திரு து.செல்வம்

பாரதிதாசன் பல்கலைக் கழக, தமிழியல் துறைத் தலைவர்

பேராசிரியர், முனைவர் உ.அலிபாவா

ஏடகப் புரவலர்

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம்

மன்னர் சரபோசி அரசினர் கலைக் கல்லூரி, உதவிப் பேராசிரியர்

முனைவர் வி.பாரி

உலகத் திருக்குறள் பேரவைச் செயலாளர்

தமிழ்ச் செம்மல் பழ.மாறவர்மன்

காவேரி வண்டல் கலை இலக்கியக் கூடுகை

திரு யோகம் இரா.செழியன்

தமிழ்ப் பல்கலைக் கழக, மேனாள் உதவிப் பதிவாளர்

முனைவர் பா.ஜம்புலிங்கம்

ஆகியோர்

வாழ்த்துரை வழங்கினர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்

மாண்பமை இரா.சுரேஷ்குமார் அவர்கள்

தஞ்சாவூர், சரசுவதி மகால் நூலக, மேனாள் வெளியீட்டு மேலாளர்


வரலாற்று ஆய்வாளர்

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுக்கும்,

தமிழ்நாடு அரசின், மேனாள் அரசுச் செயலாளர்


முனைவர் கி.தனவேல், இ.ஆ.ப., அவர்களுக்கும்

சிங்கப்பூர், மேனாள் தமிழ் விரிவுரையாளர்


கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்களுக்கும்,

அரித்துவாரமங்கலம் பெரும்புலவர், புரவலர்

வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார்

நினைவு

தமிழ்ப்பரிதி

விருதினை வழங்கிச் சிறப்பித்ததோடு,

     அரித்துவாரமங்கலத்தில், 150 ஆண்டுகளுக்கும் முன் பிறந்த இராசாளியர், 100 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். அவர் வாழ்ந்த ஐம்பது ஆண்டுகளில், அவர் தமிழுக்குச் செய்த தொண்டுகள் ஆச்சரியப்படத் தக்கது.

     எனவே, தமிழக அரசானது, இராசாளியாருக்கு, தஞ்சையில் மணி மண்டபம் அமைத்து, அதில் இராசாளியாரது முழு உருவச் சிலையையும் அமைத்து, இராசாளியார் பெயரில் ஒரு நூலகத்தையும் ஏற்படுத்திட வேண்டும்.

     மேலும் இராசாளியார் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்ற வேண்டுகோளினையும் முன்வைத்தார்.


பெரும்புலவர், பெரும் புரவலர்

அரித்துவாரமங்கலம் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார்

புகழ் ஓங்குக.