இவர் ஒரு ஜமீன்தார்.
சிறந்த கலாரசிகர்.
கலைகளையும், கலைஞர்களையும் போற்றிப் புரக்கும் வள்ளல்.
இவருக்கு ஒரு குறிப்பிட்ட இசைக் கருவியின்மீது அலாதி ஈடுபாடு.
அக்கருவியை வாசிப்பதிலும் இவர் வல்லவர்.
வித்தகர் என்றுகூட செல்லலாம்.
அந்த இசைக் கருவியின் பெயர்.
கஞ்சிரா.
கஞ்சிரா என்பது ஒரு தென்னிந்தியப் பாரம்பரிய,
கிராமிய இசைக் கருவி.
வட்ட வடிவ மரச் சட்டத்தில், உடும்புத் தோலைப்
போர்த்தி செய்யப்ட்ட, ஒரு சட்ட டிரம் ஆகும்.
இக்கருவியில், உலோக ஜிங்கிள் டிஸ்குகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இக்கருவியை கையால் தட்டி இசைக்கும்போது, ஒரு தனித்துவமான ஒலி எழுந்து, கேட்பவர்களை மயக்கும்.
இத்தகு கஞ்சிரா கருவியைத் தொடர்ந்து வாசிப்பதில், இந்த ஜமீன்தாருக்கு ஒரு பெருமை.
தான்
கஞ்சிரா வாசித்தால், தனது கஞ்சிரா இசைக்கு ஏற்றாற்போல், யாராலும் பாடமுடியாது என்ற
உறுதியான எண்ணம் இவருக்கு.
இவர் கஞ்சிரா இசைக்கும்போது, அதற்கு இணையாக,
ஏற்றவாறு பாடியப் பலரும் தோற்றுத்தான் போனார்கள்.
பின்னர், யாரும் பாடுவதற்கு முன்வரவே இல்லை.
தன் இசைக்கு எதிர்பாட்டு இல்லையா, இல்லவே இல்லையா?
எனத் தேடினார்.
அப்பொழுது சிலர், ஒரு நாடகக்காரரின் பெயரைச்
சொன்னார்கள்.
இவர்
அற்புதமாகப் பாடுவார்.
உங்களின் கஞ்சிரா இசைக்கு ஏற்பப் பாடக்கூடியவர்,
எங்களுக்குத் தெரிந்து இவர் ஒருவர்தான் இருக்கிறார் என்றனர்.
அவரை ஜமீனுக்கு வரச்சொல்லி ஆள் அனுப்பலாமா? என்று
யோசித்தார்.
வர மறுத்துவிட்டால், தன் இசைக்கு எதிர்பாட்டுப்
பாடக்கூடியவர் கிடைக்காமலே போய்விடுமே? எனவே நாமே நேரில் செல்வோம் என்று முடிவெடுத்தார்.
ஜமீனே கிளம்பி, அப்பாடகர் இருக்கும் ஊருக்குச்
சென்றார்.
திருமங்கலம்.
நாடக நடிகரை, பாடகரைச் சந்தித்தார்.
தன் இசைக்குப் பாட அழைத்தார்.
பாடகர் மறுத்தார்.
ஜமீன்தாரோ விடுவதாக இல்லை.
வேறுவழியின்றிச் சம்மதித்தார்.
ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து இருவரும் எதிர்
எதிரில் அமர்ந்தனர்.
ஊரே வேடிக்கைப் பார்க்க ஒன்று கூடியது.
ஜமீன்தார் கஞ்சிராவை வாசிக்கத் தொடங்கினார்.
பாடகரோ மெல்ல, மெல்லப் பாடத் தொடங்கினார்.
பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்கும்.
ஜமீன்தாரின் கைகள் கஞ்சிராவை இசைக்க மறுத்தன.
மறுத்தன என்பதைவிட, மறந்தன என்பதுதான் சரியாக
இருக்கும்.
இது என்ன குரல்?
கேட்பவர்களைக் கட்டிப்போடும் குரல்.
உலகையே மறக்க வைக்கும் குரல்.
பாடலின் இனிமையில், ஜமீன்தார் தன்னையோ மறந்து
போனார்.
இவரோடு போட்டிப்போட வந்திருக்கிறோம் என்பதையே
மறந்து, பாடலை ரசிக்கத் தொடங்கினார்.
இப்படியும் ஒருவரால் பாட முடியுமா?
ஜமீன்தார் மனம், பாடலுக்கு அடிமையாகிப் போனது.
பாடகர் பாடி முடித்தபோது, ஜமீன்தார், பாடகரைத்
தன் இருகைகளாலும், ஆரத் தழுவிப் பாராட்டினார்.
நீ தான் பாடகன்.
பாடகன் என்றால் நீ தான்.
இந்த
ஜமீன்தார் யார் தெரியுமா?
இராமநாதபுரம்,
நெல்லை மாவட்ட எல்லைக்கு அருகில் உள்ள ஜமீன்.
சேத்தூர்
ஜமீன்.
சேத்தூர்
ஜமீன்தாரர்.
சேவகப் பாட்டியன்.
இப்பாண்டியனைத்
தன் பாட்டுத் திறத்தால்,
மெய்மறக்கச்
செய்த, அந்தப் பாடகர் யார் தெரியுமா?
கொக்குப றக்குதடி பாப்பா என்று
கொடுத்தஅடி ஆங்கிலனைத் துடிக்க வைத்து
மக்களையும் எழுப்பிற்று, விசவ நாத
தாசென்னும்
பாவாணன் வரைந்த பாட்டு
வைக்கோலைத் தின்னுகின்ற மாடும் அன்னோன்
வாய்ப்பாட்டில் சொக்கிவிடும், நடிப்பில் வல்லோன்
தெற்கிலும்ஓர் நாடகமணி இருந்தான் என்று
செப்பிற்று வடநாடும் அந்த நாளில்
என்று
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் பாராட்டப்
பெற்றவர்.
நாடகத்திற்குள்,
முதன் முதலாக அரசியலைப் புகுத்தியவர்.
தன்
நாடகப் பாடல்களால்
சுதந்திர
உணர்வூட்டி, மக்களைக் கிளர்ந்தெழச் செய்தவர்.
முதல்
அரசியல் நாடகக்காரர்
முதல்
அரசியல் நாடகக்காரரின் நினைவினைப் போற்றுவோம்.