19 நவம்பர் 2025

நூற்றாண்டு கண்ட தமிழ்ப் பொழில்

கரந்தைத் தமிழ்ச் சங்கம்

மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் அடியொற்றி, 1911 ஆம் ஆண்டு கரந்தை, வடவாற்றின் வடகரையில் அமைந்துள்ள, கந்தப்ப செட்டியார் சத்திரத்தில், தோற்றம் பெற்றது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

     1913 ஆம் ஆண்டிலேயே, நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலைத், தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகம் செய்தது, கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

1919 ஆம் ஆண்டிலேயே, தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி எனத் தீர்மானம் இயற்றியதும், ஒரு கோடிக் கையெழுத்து இயக்கம் கண்டதும், வென்றதும், கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

1921 ஆம் ஆண்டிலேயே, தமிழுக்குத் தேவை, தனியே ஒரு, தமிழ்ப் பல்கலைக் கழகம் எனத் தீர்மானம் நிறைவேற்றியதும், போராடியதும் கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

1923 ஆம் ஆண்டிலேயே, ஆங்கிலேய அரசின், .சி.எஸ்., பட்டத்திற்குத் தமிழையும் ஒரு பாடமாக ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

1937 ஆம் ஆண்டில், பள்ளிகளில் நுழைந்த, கட்டாய இந்தியை எதிர்த்து, முதன் முதலில் தீர்மானம் இயற்றியதும், களத்தில் இறங்கிப் போராடியதும், கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

தமிழும், வடமொழியும் கலந்து பேசும் மணிப்பிரவாள நடையைத் தகர்த்து, தனித் தமிழ் நடையாம், கரந்தை நடையை உருவாக்கியதும், நடைமுறைப் படுத்தியதும் கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

திரு, திருவாளர், செல்வன், செல்வி, தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள், திருமண அழைப்பிதழ் முதலான எண்ணற்ற தனித் தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்

கரந்தை பெயர்க் காரணம்

மதுரையில் தோன்றியதால், மதுரைத் தமிழ்ச் சங்கம்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் அடியொற்றிக் கரந்தையில் தோன்றியதால், கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்று, பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

கரந்தைத் தமிழ்ச் சங்கம் அமைந்திருக்கும் சிற்றூரின் பெயர் கருந்திட்டைக்குடி.

இன்றுவரை அரசு ஆவணங்களில், இப்பகுதி கருந்திட்டைக்குடி என்றுதான் அழைக்கப் படுகிறது.

கருந்திட்டைக்குடியின் மரூஉ கரந்தை.

இப்படித்தான், சில கட்டுரைகளில் படித்தும் இருக்கிறேன்.

ஆனாலும், எனக்குள் ஒரு கேள்வி எழுந்து கொண்டே இருந்தது.

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி முதலியவை புறப்பொருள் வெண்பா மாலை கூறும் திணைகளாகும்.

இவற்றுள் வெட்சி என்பது ஆநிரைகளைக் கவர்தல்.

கரந்தை என்பது, கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்டல்.

கரந்தை என்றால், இழந்ததை மீட்டல்.

     தமிழின் இழந்த பெருமைகளை மீட்கத் தோன்றிய, தமிழ்ச் சங்கம் என்பதால்தான், சங்கத்திற்குத் திணைகளின் அடிப்படையில், கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்று பெயர் வைத்திருப்பார்களோ என்னும் ஒரு சிந்தனை என்னுள் எழுந்தது.

எனவே, கரந்தைத் தமிழ்ச் சங்க ஆவணங்களில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பெயருக்கானக் காரணத்தை, எங்கேயும் குறிப்பிட்டிருக்கிறார்களா என தேடத் தொடங்கினேன்.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின் போது ஒரு மலரினை வெளியிட்டிருக்கிறார்கள்.

மலரின் பெயர்.

கரந்தைக் கட்டுரை.

இம்மலரின் முதல் கட்டுரையே, தமிழவேள் உமாமகேசுவரனாரின் கட்டுரைதான்.

நமது சங்கமும் தமிழ் வளர்ச்சியும்.

இக்கட்டுரையில் தமிழவேள் குறிப்பிடுவதைப் பாருங்கள்.

தமிழின் தனி நிலை, தொன்மை, செம்மை முதலிய உயரிய பண்புகளை நன்குணர்ந்து, மக்கள் அனைவரும், இவ்வுயர்வை யோர்ந்து பயனடைய வேண்டும் என்னும் விருப்பத்தினாலும், உலக மொழிகளுள் உயர் மொழியாய் வீற்றிருந்த தமிழ் மொழி மீண்டும் அவ்வுயர்வைப் பெறவேண்டும் என்னும் ஆராத காதலினாலும், தமிழ் மக்கள் கலைநலம் முதலிய எல்லா நலங்களையும் பெற்று, உலக மக்களுள் ஒருவராகக் கருதப்பட வேண்டும் என்னும் கருத்தினாலும், நம் சங்கம் 1911 ஆவது ஆண்டு வைகாசித் திங்கள் முதல் நாள், சில இளைஞர்களால் நிறுவப்பெற்றது.

நம்மவரது பண்டைய மருத்துவ முறையின் சிறப்பையும், எளிமையையும், இக்காலத்து அஃது அடைந்துளள நிலையையும் யாவரும் நன்குணர்வர். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக, நம் நாட்டின் நிலைக்கு ஏற்ற வண்ணம் அமைந்து, மக்களைக் காத்து வந்த இம்முறை, மீண்டும் தக்க நிலையில், நம் நாட்டில் நிலைபெற்று, கால வளர்ச்சிக்கேற்பத் தன் தனி நிலையிலே வளர்ந்து வருமாயின், நம் நாட்டிற்கு எவ்வளவு துணை புரியுமென்பதையும், எத்தனை கோடி ரூபாயைச் சேமித்து வைக்குமென்பதையும் நன்குணர்ந்த, நம் சங்கம், தன்னிலைக்கேற்ப ஒரு தமிழ் மருத்துவ சாலையை ஏற்படுத்தி, தஞ்சையில் பலருக்கும் நோய் தீர்த்து வருகின்ற செய்தி, நம்மவருக்கு உவகையூட்டுமென்றே எண்ணுகிறோம். இம்முறையை மீண்டும் நிலைபெறச் செய்யவேண்டும் என்பது, நம் சங்க நோக்கங்களுள் ஒன்றாகும்.அதற்காகும் வழியிலும் பாடுபட்டு வருகிறது.

தமிழவேள் உமாமகேசுவரனார், சங்கத்தின் நோக்கங்களாக முன்வைப்பதைப் பாருங்கள்.

இழந்த தமிழின் பெருமைகளை மீட்பது.

இழந்த தமிழ் மருத்துவ முறைகளை மீட்பது.

இழந்ததை மீட்பதுதானே கரந்தை, கரந்தை திணை.

தமிழ்ச் சங்கத்திற்கு முன், கரந்தை இணைந்திருப்பதற்கானக் காரணத்தை ஒருவர் நேரடியாகவே குறிப்பிடுகிறார்.

தமிழ்ப் பொழில் இதழின் துணர் 15, இச்செய்தியினைப் பதிவு செய்திருக்கிறது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 28 ஆம் ஆண்டு, ஆண்டு விழா, 1939 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்றிருக்கிறது.

இவ்விழாவிற்குத் தலைமை ஏற்றவர்.

ஈழத்து அரசவை உறுப்பினர், பரமேசுவரக் கல்லூரி முதல்வர்

ஆனரபிள் சு.நடேசப் பிள்ளை.

     தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்கள், அருகில் அமர்ந்திருக்க, விழா தலைமையேற்ற, ஈழத்து திருவாளர் சு.நடேசப் பிள்ளை அவர்கள், தன் தலைமையுரையில் பேசுவதைச் செவிகொடுத்துக் கேளுங்கள்,

திருவருளால் இது கரந்தைத் தமிழ்ச் சங்கமெனப் பெயர் பெற்றுள்ளது. யாவர் தமிழர் மொழி, நாகரிகக் கலைகளைப் பற்றிக் குலைக்கிறார்களோ, அந்நிலையிலெல்லாம், தமிழ் மக்களைத் தூண்டியுய்த்துப் பழம் பெருமைகளை மீட்டுக் கொண்டு வருவது பற்றியே, இது கரந்தைத் திணைக்குரிய பெயர் பெற்றதென்பதை நீங்கள் அறிவீர்கள்.

கரந்தை திணை.

திணைக்குரியப் பெயராகிய, மீட்டலை உணர்த்தக்கூடிய கரந்தையினைப் பெயராகப் பெற்றதுதான், கரந்தைத் தமிழ்ச் சங்கம் எனத் தெள்ளத் தெளிவாகவே உணர்த்துகிறார்.

ஆனரபிள் சு.நடேசப் பிள்ளை அவர்களுக்கு நன்றி.

கரந்தை.

மீட்டலின் பெயர்.

கரந்தை

கருந்திட்டைக்குடியின் மரூஉ பெயரல்ல.

கரந்தை

திணையின் பெயர்.

காரணப் பெயர். 

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால்தான், இவ்விடத்தில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் அமைந்திருப்பதால்தான், கருந்திட்டைக்குடி என்பது தமிழ்ச் சங்கத்தின் பெயரால்தான், கரந்தை என்று அழைக்கப்படுகிறது.

கருந்திட்டைக்குடி, கருந்தட்டான்குடி என்ற பெயர்களின் மரூஉ அல்ல, அல்லவே அல்ல.

கரந்தை

தமிழ்த் தலமாம்

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால்

பெயர் பெற்ற ஊர்

பெருமை பெற்ற ஊர்

உயிர் பெற்ற ஊர் 

இனி கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழாராய்ச்சித் திங்களிதழான தமிழ்ப் பொழில் இதழின் தோற்றம் வளர்ச்சி குறித்துப் பார்ப்போம்

தமிழ்ப் பொழில் முயற்சிகள்

கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற மூன்றாவது ஆண்டிலேயே, திங்களிதழ் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உமாமகேசுவரனார் உள்ளத்தே உயிர் பெற்றது.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களைத் தமிழ்ப் பேருலகினருக்கு நன்கு தெரிவித்து, அன்னார் உதவிபெற்று அவற்றினை நிறைவேற்றுமாறு காண்டலும், தமிழ் மக்களையும், அவர்தம் தெய்வத் திருமொழியினையும் இழிதகவு செய்து, உண்மை சரித நெறி பிறழ எழுதி வரும் விசயங்களை நியாய நெறியில் கண்டித்தலும், மேல் நாட்டுச் சாத்திரங்களைத் தமிழில் மொழி பெயர்த்து அமைத்துக் கொள்ளுதலுமாகிய, இன்னோரன்ன நோக்கங்களோடு, சங்கத்தினின்று ஓர் சிறந்த தமிழ்ப் பத்திரிக்கை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஐவர் கொண்ட குழு ஒன்று 1914 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

திருவாளர்கள் நா.சீதாராம பிள்ளை, . குமாரசாமி பிள்ளை, .வீ. சோமநாதராவ்  மற்றும் .வே. இராதாகிருட்டினப் பிள்ளைஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாவர்.

இக்குழுவினர் பத்திரிக்கைத் தொடங்குவதற்காக அரசாங்கத்தின் அனுமதி பெறுவதற்குரிய பணிகளைத் துவக்கினர்.

இதே வேளையில் பத்திரிக்கை ஆரம்பிப்பதென்றால் அதற்கு வேண்டும் மூலதனத்தைத் திரட்டும் பணியும் தொடங்கப் பெற்றது.தமிழ் அன்பர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து நன்கொடைகள் பெறுவதற்காக வேண்டுகோள் விடுக்கப் பெற்றது.

      பத்திரிக்கை ஒன்றினைத் தொடங்குவதற்காக 1914 ஆம் ஆண்டில் உமாமகேசுவரனர் அவர்களால் தொடங்கப் பெற்ற முயற்சிகள், பல்வேறு காரணங்களாலும் நிதிப் பற்றாக் குறையாலும், நிறைவேறாமலே இருந்தது.  இருப்பினும் 1919 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பெற இருக்கின்ற மாதாந்திர இதழுக்கு தமிழ்ப் பொழில் என்னும் பெயர் சூட்டப்பெற்றது.

பொழிதல் என்றால் மழை பெய்தல்.

பொழில் என்றால், மழைக்காடு.

அதிக மழை வளத்தால் செழித்து வளர்ந்த காடு என்று பொருள்.

இது தமிழ்ப் பொழில்.

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் வளத்தால், செழித்து வளர்ந்த, தமிழின் பெருமை போற்றும் இதழ்.

எனவே, தமிழ்ப் பொழில்.

1920-21ஆம் ஆண்டிலும் போதிய அளவு புரப்போர் சேராமையினால் தமிழ்ப் பொழில் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இவ்வாண்டில் திருவாளர்கள் உமாமகேசுவரம் பிள்ளை, கும்பகோணம் .பொ.கை.அழகிரி சாமி பிள்ளை, கூடலூர் வே.இராமசாமி வன்னியர், பட்டுக்கோட்டை வேணுகோபால் நாயுடு, திருச்சிராப் பள்ளி .. பஞ்சரத்தினம் பிள்ளை, திருச்சி நா.துரைசாமி பிள்ளை, கும்பகோணம் ஆர்.சாமிநாத அய்யர் ஆகியோர் தமிழ்ப் பொழில் இதழுக்குப் பங்குத் தொகை வழங்கினர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழாவானது, 4.9.1921 மற்றும் 5.9.1921 ஆகிய தேதிகளில், கரந்தை கந்தப்ப செட்டியார் அறநிலையத்தில, கீழையூர் சிவ. சிதம்பரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் போது, தமிழ் மொழியின் மேன்மையைப் பேணுதற் பொருட்டாகத் தமிழ்ப் பொழில என்னும் திங்கட்டாளை வெளியிடுவதற்கு தக்கவாறு பொருளுதவி செய்ய வேண்டுமெனத் தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறார்கள் எனும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இவ்வாண்டில் திருவாளர்கள் வேணுகோபால நாயுடு மற்றும் திருச்சி டி.நாராயணசாமி பிள்ளை ஆகியோர் தமிழ்ப் பொழில் பங்குத் தொகையாக ரூ.23 வழங்கினர்.

தமிழ்ப் பொழில் இதழின் தோற்றம்

1914 ஆம் ஆண்டில் உமாமகேசுவரனார் அவர்களால் தொடங்கப் பெற்ற முயற்சியானது, பதினோரு ஆண்டுகளுக்குப் பின்னரே நிறைவேறியது.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப்பெற்றது.


தமிழ்ப் பொழில் தோன்றிய காலகட்டத்தில், தமிழகத்தில் வெளிவந்து கொண்டிருந்த இதழகளின் எண்ணிக்கை மிகக் குறைவு.அதிலும் இலக்கிய, இலக்கணத் திங்களிதழ் என்பது மிக மிகக் குறைவு.

1920 க்கும் 1930 க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில், தமிழ்ப் பத்திரிக்கை உலகம் என்பது குறுகிய விஸ்திரணமுள்ளதாகவே இருந்தது.குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இரண்டு மூன்று பத்திரிக்கைகளே உலாவிக் கொண்டிருந்தன.ஓரளவு பிரசித்தியடைந்திருந்த வார இதழ்களும், மாத சஞ்சிகைகளும் ஏழெட்டுக்கு மேல் இல்லை என்கிறார் அறிஞர் வெ.சாமிசாத சர்மா. (தமிழ் இதழ்கள், சோமலே, பக்.20)

முதல் பொழிற்றொண்டர்

பொதுவாகஒருஇதழ்எனின்ஆசிரியர்அல்லதுபொறுப்பாசிரியர்என்றுஅச்சிடுதல்மரபு.ஆனால்உமாமகேசுவரனாரோ, இதழாசிரியர்என்பதற்குப்பதிலாகபொழிற்றொண்டர்என்றேஅச்சிடச்செய்தார்.உறுப்பினர்கட்டணம்என்பதற்குமாறாககையொப்பத்தொகைஎன்றும், விலாசம்என்பதைஉறையுள்என்றும், ஆங்கிலத்தில்வி.பி.பி.என்பதைவிலைகொளும்அஞ்சல்என்றும்பயன்படுத்தத்தொடங்கினார்.

தமிழ்ப் பொழில் இதழின் முதல் பொழிற்றொண்டராகப் பணிபுரிந்தவர் கவிஞர் அரங்க. வேங்கடாசலம் பிள்ளையாவார்.

தமிழ்ப் பொழில் இதழின் ஆசிரியர் கரந்தைக் கவியரசு அவர்கள், தமிழ்ப் பொழிலின் முதல் இதழிலேயே, தமிழ்ப் பொழில் இதழின் நோக்கம் பற்றிக் கூறுவதைக் கேளுங்கள்.

இவ்விதழ் தமிழ்ச் சங்கத்தின் ஒரு வெளியீடு எனும் தகுதிக்கேற்பத் தமிழ் வளர்ச்சியும் தமிழர் மேம்பாடும் பற்றிய அருமைக் கட்டுரைகளையே தன்னகத்துக் கொண்டு வெளிவரும். சிறந்த கட்டுரைகள் ஆங்கிலம், ஆரியம், தமிழ் மொழிகளில் வல்லார் பலரால், கற்றாரேயன்றிக் கற்பாருக்கும் பயனுறத்தக்க நெறியில், தெள்ளிய (எளிய) இனிய தீந்தமிழ் நடையில் எழுதப்பெறும்.

ஒருவரை, ஒரு குழுவினரை, ஒரு சமயத்தைச் சுட்டி இகழும் மாறுபாட்டுரைகளும், வேற்றுமையை உண்டாக்கும் உரைகளும் இதன்கண் அறவே காணப்படா.

சங்கமே அரசியல் நெறியிற் கலவாத தொன்றாகவே, அதன் சார்பினதாகிய இவ்விதழ், அரசியல் நெறியிற் சிறிதும் விரவாததொன்று என்பதைக் கூறலும் வேண்டா.

கட்டணம்

தமிழ்ப் பொழில் இதழ் தொடங்கப் பெற்ற முதல் மாதத்தில் இருந்தே, தமிழ்ப் பொழில் இதழுக்கு, உறுப்பினர்களைச் சேர்க்க சங்கம் பெரிதும் பாடுபட்டது.

இவ்வளவிற்கும், அன்று தமிழ்ப் பொழில் இதழின் வாழ்நாள் கட்டணம் ரூ.50 மட்டும்தான்.

ஆண்டுக் கட்டணத்தில், சங்க உறுப்பினர்களுக்குச் சிறப்புச் சலுகையும் வழங்கப் பெற்றது.

சங்க உறுப்பினர்களுக்கு ஆண்டுக் கட்டணம் இரண்டு ரூபாய்

உறுப்பினர் அல்லாதவர்க்கு ஆண்டுக் கட்டணம் மூன்று ரூபாய்

ஓர் ஆண்டிற்கு, மாதம் ஒரு இதழ் என 12 இதழ்களுக்கும் ரூபாய் இரண்டு மட்டும்தான், உறுப்பினர் அல்லாதவர்க்கு ரூபாய் மூன்று மட்டும்தான்.

     தமிழ்ப் பொழில் உறுப்பினர்களின் சேர்க்கை தொடர்பாக, இதழ் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், பொழிற்றொண்டர் கரந்தைக் கவியரசு, தமிழ்ப் பொழில் இதழில், நமது பொழில் என்னும் தலைப்பில் இவ்வாறு எழுதுகிறார்

இவ்வாண்டில் பொழிலிற்கு உறுப்பினர்கள் எண் போதியனவாக இல்லை.சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், தாம் பொழிலிற்கும் உறுப்பினராக வேண்டுமெனும் தங்கள் பொறுப்பினை உணர்ந்தாரிலர்.

இப்போதிருக்கும் பொழில் உறுப்பினருட் பலர், சங்க உறுப்பினரல்லாரே.

பொழில் நடாத்த வேண்டுமென உறுப்பினர் பொதுக்கூட்டத்தில் ஒரு முறைக்கு இரு முறையாக முடிபுகள் செய்யப்பெற்றன.பொழில் நடைபெறத் தொடங்கி ஓராண்டாகியும் உறுப்பினருட்பலர், பொழிற்பால் தங்கள் திருக்கண்ணோட்டம் செய்திலர்.

     சங்க உறுப்பினர் எனினும் நினைவூட்டி வற்புறுத்தல் பொழில் வெளியீட்டிற் றலைநிற்பார் கடமையுள் ஒன்றெனின், அதனையும் ஒப்பி, அங்ஙனம் செய்யாமைக்கு வருந்திப் பொறுக்க வேண்டுகின்றோம். இனியாதல், இவ்வாறிராமல் ஒவ்வொரு உறுப்பினரும் பொழில் உறுப்பினராகி, இதனை வளர்த்து வருமாறு மிக மிக வேண்டுகிறோம்.

நமது பொழில் பொருள் ஈட்டும் நோக்கத்துடன் வெளிவருவதன்று.கைப்பொறுப்பு இல்லாத நிலையையே பெரிதாகஎண்ணி மகிழ்வதொன்று.

     ஆகவே, பொழில் உறுப்பினர்கள் மனமுவந்து, தங்கள் தங்கள் நண்பர்களுடன் கூடி, இத்தமிழ்த் தொண்டில் மனவுறுதியுடன் கலந்து, தாய்த் தொண்டியற்றிவர அருள் புரிவரேல், பொழில் நாளும் வளர்ந்து தழைப்பதுடன், கையொப்பத் தொகையும் அளவிற்குறைய, உறுப்பினர்க்கு மிகு நன்மையளித்துவரும்.

     பல்வேறு இன்னல்களைத் தாண்டி தமிழ்ப் பொழில் இதழானது வெளிவரத் தொடங்கிய பின்னரும் கூட,  ஒவ்வொரு மாதமும், இவ்விதழ் சந்தித்த சோதனைகள், தாண்டிய தடைகள் ஏராளம், ஏராளம்.

தமிழ்ப் பொழில் இதழினைப் போற்றுவார் போதிய அளவு இல்லாததால் வருந்திய உமாமகேசுவரனார் அவர்கள், தமிழ்ச் செல்வர்கள், தாய் மொழித் தொண்டிற்காக, ஆண்டிற்கு இரண்டு மூன்று ரூபாய் செலவிடுவதற்குத் தயங்கும் நிலை கண்டு வருந்தினார். தமிழ்ப் பொழில உறுப்பினராக அனைவரும் சேர்ந்து பயன்பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை

தமிழ்ப் பொழில்

கருந்திட்டைக்குடி,

விசு, சித்திரை,

ஐயா,

இத்துடன் பொழிற் கையொப்ப விண்ணப்பம் ஒன்று இணைத்துள்ளோம்.தங்கள் நண்பருள் ஒருவரையேனும் கையொப்பக்காரராகச் சேரும்படி வேண்டி, இணைத்துள்ள விண்ணப்பத்தில் அவர்கள் ஒப்பம் வாங்கி அனுப்ப வேண்டுகிறோம்.ஒருவரைத் தாங்கள் சேர்த்தனுப்புவது, பொழிலின் பயனை ஆயிரவர்க்கு அளித்ததாகும் என்பதை நினைவூட்டுகிறோம்.சிறுதொண்டு பெரும்பயன் விளைவிக்கும் வகைகளுள் இது ஒன்றெனக்கருத்திற் கொள்ள வேண்டுகிறோம்.

தங்கள் அன்பன்,

.வே. உமாமகேசுவரன்

பொழிற்றொண்டர் 

உமாமகேசுவரனார் மேற்கொண்ட அயரா முயற்சிகளின் பயனாக, தஞ்சை மாநாட்டாண்மைக் கழகத்தினரும், தஞ்சை நாட்டாண்மைக் கழகத்தினரும், பாபநாசம் நாட்டாண்மைக் கழகத்தினரும், தத்தம் ஆட்சி எல்லையிலுள்ள பள்ளிக் கூடங்களுக்கெல்லாம் தமிழ்ப் பொழில இதழினை அனுப்பிட ஆணை வழங்கி உதவினர்.

தஞ்சைமா நாட்டின் கல்வி நெறி ஆராய்ச்சியாளர் தலைவராக இருந்த, திரு பி.பி.எஸ். சாஸ்திரியார் அவர்களும், இத் தமிழ்ப் பொழில் கல்லூரி பள்ளிக் கூடங்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் சிறப்பினை உடைய உண்மையை அறிவித்து, அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிக் கூடங்களும் வாங்குமாறு செய்தார்.

பொழில் அமைப்பு

தோன்றிய நாள் தொடங்கி, இன்று வரை தமிழ்ப் பொழில் இதழானது 40 பக்கங்களை உடைய இதழாகவே மலர்ந்து வந்திருக்கிறது, இன்றும் மலர்ந்து வருகிறது.

தமிழ்ப் பொழில் இதழில் இடம்பெற்றக் கட்டுரைகளைப் பின்வருமாறு பிரிக்கலாம்.

1.      தமிழ்ச் செய்திகள்

2.      புதுப் படைப்புகள்

3.      தமிழ் ஆய்வுக் கட்டுரைகள்

4.      பொதுவானக் கட்டுரைகள்

5.      தமிழ் நூல் பதிப்புகள்

     கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிறுவனங்களின் செய்திகள், கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாச் செய்திகள், ஆண்டு விழவில் அறிஞர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகள், அறிஞர்களுக்கு வழங்கப்பெற்ற வரவேற்புரைகள், வாழ்த்துரைகள், வாழ்த்துப் பாக்கள் முதலியன இடம் பெற்றன.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்துடன் தொடர்வுடையோர் உயர் பதவிகள், பட்டங்கள், சிறப்புகள் முதலியவற்றைப் பெறும்போது, மகிழ்ச்சி என்னும் தலைப்பில் இவர்கள் பாராட்டப்பெற்றனர்.

சங்கத்துடன் தொடர்புடையோர் இவ்வுலக வாழ்வு துறக்கும்பொழுது, துயரம் என்னும் தலைப்பில் இரங்கல் செய்திகள் வெளியிடப்பெற்றன.

மற்ற தமிழ்ச் சங்கங்கள், தமிழ் வளர்ச்சி அமைப்புகள், தமிழாசிரியர் கழகங்கள் போன்ற அமைப்புகளின் செய்திகளும், தமிழ்ப் பொழில் இதழில் இடம் பிடித்துள்ளன.

இன்றைய இதழ்களில் வெளிவரும் தலையங்கம் என்னும் பகுதிக்கு இணையாக, பொழிற்றொண்டர் கருத்துரை என்னும் பகுதி தமிழ்ப் பொழில் இதழில் வெளிவந்தது.

தமிழ்ப் பொழில் இதழில் வெளிவந்த புத்தக மதிப்புரைகளை இரண்டாகப் பிரிக்கலாம்.

 ஒன்று, ஒரு நூல் பற்றி பொழிற்றொண்டர் தானே வழங்கும் மதிப்புரை

இரண்டு, ஒரு நூலைப் பற்றி மற்றவர் எழுதிய மதிப்புரை.

கவிதைகள், நாடகங்கள், படைப்புக் கட்டுரைகள், அறவுரைக் கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள் போன்ற புதுப் படைப்புகளும் இடம் பெற்றன.

     மேலும், இலக்கியக் கட்டுரைகள், இலக்கணக் கட்டுரைகள், தமிழக வரலாற்றுக் கட்டுரைகள், தமிழ்ப் பண்பாட்டுக் கட்டுரைகள், கலைச் சொல்லாக்கக் கட்டுரைகள், அறிவியல் தமிழ்க் கட்டுரைகள், அறிவியல் வளர்ச்சிக் குறித்தக் கட்டுரைகள், அறிவியலாளர் வரலாறு பற்றியக் கட்டுரைகள், பழைய நூல் பதிப்புகள், பழம் பாடல் பதிப்புகள் போன்ற தமிழியற் கட்டுரைகள் அதிகம் இடம் பெற்று, தமிழ்ப் பொழில் இதழுக்கு மெருகூட்டின.

தமிழ்ப் பொழில் இதழின் ஆண்டுத் தொடர் வரிசையினைக் குறிக்க துணர் என்னும் சொல்லையும், மாதத்தைக் குறிக்க மலர் என்னும் சொல்லையும் பயன்படுத்தினர்.

செடியிலோ, மரத்திலோ கொத்தாகப் மலர்ந்து மனம் தரும் பூங்கொத்திற்குத் துணர் என்று பெயர்.

எனவே ஆண்டிற்குத் துணர், மாதத்திற்கு மலர்.

தமிழ்ப் பொழில் இதழின் முதன் மலரைப் பார்ப்போமானால், ஒன்பது கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

முதல் கட்டுரை, பொழிற்றொண்டர் கரந்தைக் கவியரசு அவர்களால், பொழில் பற்றி எழுதப்பெற்ற நமது பொழில் என்னும் கட்டுரையாகும்.

அதனைத் தொடர்ந்து,

பண்டிதர் எல்.உலகநாத பிள்ளை அவர்களின்,

ஒரு திருப்பாட்டிற்கு உரை,

சோமசுந்தர தேசிகர் அவர்களின்

சங்ககால சோழ அரசு பரம்பரை,

நாவலர் .மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின்

தொல்காப்பியம்,

தி..உலகநாத பிள்ளை அவர்களின்

தமிழ் மொழியும், தமிழ் மக்களுயர்வும்,

டி.வி.இரத்தினசாமி அவர்களின்

தனிச் செய்யுட்கள்,

டி.வி.சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின்

மழவர் வரலாறு,

.சா.வேங்கடராய ஐயர் அவர்களின்

பாரத மகிமை என்னும் கவிதை,

சாமி.சிதம்பரனார் அவர்களின்

கட்டுரைக் கோவை

என ஒன்பது கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.‘

கருத்துரைகள்

தமிழ்ப் பொழில் இதழினைக் கண்ட மறைமலையடிகள் மனம் மகிழ்ந்து கூறியவற்றைப் பாருங்கள்.

தாங்கள் விடுத்த தமிழ்ப் பொழில் முதலிரண்டு மலர்களும் பெற்று மகிழ்ந்தேன்.தாங்களும் ஏனை கற்றறிஞரும் எழுதியிருக்கும் தமிழ்க் கட்டுரைகளை உற்று நோக்கி வியந்தேன்.தமிழ்ப் பொழில் நீடு நின்று நிலவுமாறு முயல்க. ஏனெனில், இஞ்ஞான்று பற்பல இதழ்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன.மேலும் வடசொற்கள் சிறிதும் கலவாத தனித் தமிழிழேயே, தாங்களும் மற்றைக் கல்வியறிஞரும் கட்டுரைகள் எழுதுவதை விடாப்பிடியாய்க் கைக்கொள்ளல் வேண்டும்.வடசொற் கலப்பால் தமிழைப் பாழாக்க மடிகட்டி நிற்கின்றனர்.ஆதலால் நம்மனோர் தமிழில் வடசொற்களைக் கலத்தற்கு சிறிதும் இடம் விட்டுக் கொடுத்தல் ஆகாது.தமிழ் மொழியை விட்டால் தமிழர்க்கு வேறு சிறப்பில்லை.தங்கள் முயற்சி நன்கு நடைபெறுக வென்று திருவருளை வேண்டுகிறேன்.

  தமிழ்ப் பொழில் இதழினைக் கண்ணுற்ற புலவர் . வரதநஞ்சைய பிள்ளை அவர்கள், இவ்விதழினை வாழ்த்தி இயற்றியப் பாடலைப் பாருங்கள்

              கரந்தையூன்றிய  கழகந்  தொடங்கின

              நான்முத  லிதுகாறு  நற்றமிழ்க்  குழைத்த

              தொண்டின்  பயனாத்  தோன்றித்  தழைத்தது

              தமிழ்ப்  பொழில் அம்ம, தமிழர்காள்  வம்மின்,

              தாயடி  நிழலிற்  றங்கி,வெப்  பொழிமின்

              ஆண்டு  தோறும்  நீண்டுவளர்  துணராற்

              றிங்கட்  கோர்  செழுமலர்  பூத்து

              நறுமணம்  வீசி  நலிவுதீர்க்  கும்மே

              தலைமிசைப்  புனைமின்  விழியி லொற்றுமின்

              மார்புற  அணைமின் தேர்ண்மிசை  தாங்குமின்

              காட்சிக்  கினியது,  கைக்குமெல்  லியது,

              நாவிற்கினிய  நறுந்தேன்  சுரப்பது,

              கேட்குஞ்  செவிபிற  கேளாது  தகைவது,

              உற்றுநோக்  குளத்துக்  குவகைமிக்  கீவது,

              இம்மை  மறுமை  யிரண்டுமிங்  களிப்பது

தமிழ்ப் பொழில் இதழினைத் தொடர்ந்து கவனித்து வந்த, தந்தை பெரியார், 1926 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் வெளிவந்த, தனது குடியரசு இதழில் ஒரு வேண்டுகோளினை முன்வைக்கிறார்.

தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினின்றும் தமிழ்ப் பொழில் என்னும் பெயரில் ஒரு திங்கள் வெளியீடு, தமிழறிஞர் திருவாளர் ஆர்.வேங்கடாசலம் பிள்ளையவர்களை ஆசிரியராகக் கொண்டு, ஓராண்டு வெளிப்போந்து நற்பயன் அளித்தமை நேயர்களுணர்ந்திருக்கலாம்.

என்றும் இடையறாது உரிய காலங்களில் வெளிவரற்குரிய சில முன் ஏற்பாடுகள் செய்தற் பொருட்டுப் பொழில் சிறிது காலந்தாழ்த்து வெளிவரும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.ஆசிரியர்க்குள்ள அலுவல் மிகுதியால் சிறிய கால அளவு, கொஞ்சம் பெரிதாக நீண்டது.

முன் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கின்றன.நிற்க.

     தமிழ்ப் பொழிலின் முன்னேற்றங்கருதி உழைக்க, ஆங்கிலமும், தமிழும் கற்றுவல்ல அறிஞராகிய திருவாளர்கள் நீ.கந்தசாமி பிள்ளையவர்கள், அரசர் மடம் பள்ளிக்கூடத் தமிழாசிரியர் சாமி.சிதம்பர உடையாரவர்கள் ஆகிய இருவரும் முன்வந்துள்ளார்கள்.

இருவருள் முன்னவர் உதவி ஆசிரியர், பின்னவர் உடனின்று துணை செய்தலேயன்று, வெளியிடங்கட்குச் சென்று பொழிலிற்கு அன்பர்களைத் திரட்டும் உதவியாளர் ஆவார்.

     திருவாளர் உடையாரவர்கள் தாம் எய்தி வந்த ஊதியத்தினையும் விட்டுவிட்டுத் (தமது சுருங்கிய செலவுகளை மட்டும் பெற்றுக்கொண்டு) தொண்டு செய்ய முன்வந்திருப்பது மிகப்பாராட்டற்பாலது.

     செந்தமிழ்ச் செல்வர்கள், ஊதியம் கருதாது தமிழ்த் தொண்டோன்றே கருதித், தனித் தீந்தமிழில் வெளிவரும் பொழிலைப் புரந்து, தமிழ்த்தாயைப் போற்றி வருமாறு வேண்டுகிறோம். (குடியரசு, 24.10.1926)

தமிழ்ப் பொழில் இதழின் எழுத்து நடை

தமிழ்ப் பொழிலில் வெளிவரும் கட்டுரைகள், தூய தமிழில் வெளி வந்தன.எனினும் நடை கடினம் என்று அவ்வப்போது சிலர் குறை கூறியதுண்டு.அதற்கு உமாமகேசுவரனார் அவர்கள் அளித்த விளக்கம், இன்றும் நாம் அனைவரும் எண்ணி எண்ணிப் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்.

     ஆறாயிரம் மைலுக்கு அப்பாலுள்ளள ஆங்கில மொழியையும், ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பெழுந்த வடமொழி நூல்களையும், இடர்பாடு சிறிதுமின்றிக் கற்கவும், கற்று மகிழவும், பிறர்க்குக் கூறிப் பரப்பவும் ஆற்றலுடைய நம்மவருக்குத், நம் தமிழகத்துத் தமிழ் மொழியின் தூய சொற்கள், பொருள் விளங்கிப் பயன்தர ஆற்றாவாயின், அது யாவர் குறை? பயிற்சிக் குறைவன்றோ?சொல்லாலும் பொருளாலும் பேசவும் எண்ணவும் இனிமை தரும் எம் தாய்மொழி, இன்று இவ்வாறாயிற்றே என்று யாம் வருந்துதல் பயனென்ன? தமிழோடு தொடர்புடைய வேற்று நாட்டவரும், இம்மொழியின் நன்மை உணர்ந்து போற்றுமிடத்து, நம்மவர் யாம் பொருளுணர மாட்டோம், யாம் பொருளுணர ஆற்றேம் எனக் கூறுவது, இதுகாறும் ஏழு வியப்போடு நின்ற இவ்வுலகத்து எழுந்த எட்டாவது வியப்பென்றே எண்ணுகிறோம். பொழிலின் நறுமணம் நாற்றிசையும் பரந்து உலகை மகிழ்விக்கத் தமிழ்த் தெய்வம் துணை செய்வதாக.

பிற மொழிக் கலப்பில்லாத தூய தமிழைப் பற்றி தமிழ் மக்கள் அறியாதிருப்பது குறித்து உமாமகேசுவரனார் கொண்ட துயரம் இதில் புலனாகிறது.

கட்டுரைகள் மற்றும் விவாதங்கள்

     அன்றைய நாளில் மேடையில் ஒருவர் சொற்பொழிவாற்றுகிறார் என்றால், அவர் எடுத்துவைக்கும் கருததுகள் குறித்து, அப்பொழுதே, அவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, பார்வையாளர்கள் கேள்வி எழுப்புவது வழக்கம்.

கரந்தைத் தமிழ்ச் சங்க மேடை இதுபோன்ற பல விவாதங்களைச் சந்தித்த மேடையாகும்.

ஒரு முறை மறைமலை அடிகளாரும், பண்டிதமணி கதிரேசஞ் செட்டியாரும், வடமொழி கலப்பு பற்றியச் சொற்போரில் ஈடுபட்ட நிகழ்வும் நடந்திருக்கிறது.

பேசும்பொழுதே எதிர்கேள்விகள் எழுந்திருக்கின்றன என்றால், எழுத்துவடிவில் அச்சேறிய ஆய்வுக் கட்டுரைகள் குறித்தும் கேள்விகள் எழுந்திருக்கும் அல்லவா.

தமிழ்ப் பொழில் இதழில், பலமுறை எழுத்துப் போரே நடைபெற்றிருக்கிறது.

உதாரணமாகச் சொல்லவேண்டுமானால், இலக்கணம் .நா.சோமசுந்தரம் என்று ஒருவர்.

உண்மையில் இவர் ஒரு காவல் ஆய்வாளர்.இருப்பினும் தமிழ்மேல் கொண்ட பற்றால், இலக்கணக் கடலில் நீந்திக் கரையேறியவர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் செயலாளரான, கரந்தைக் கவியரசு அவர்கள், தொடக்க காலத்தில், கந்தர்வக் கோட்டை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய இவரிடம் கேட்டுத்தான், தமிழ் இலக்கணம் குறித்தான் தனது ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

     இத்தகையப் புலமை வாய்ந்த, இலக்கணப் புலமை வாய்ந்த, இலக்கணம் .நா.சோமசுந்தரம் அவர்கள், பின்னங்குடி சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் எழுதிய, தொல்காப்பியச் சொல்லதிகார குறிப்பு என்னும் நூலைப் படிக்கிறார்.

     இந்நூலில், சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள், சொல்லதிகாரச் சூத்திரங்களில் சிறப்புற்றவைகளை எடுத்துக் கொண்டு, அவற்றிற்கு உரையாசிரியர்களாகிய இளம்பூரணர், தெய்வச்சிலையர், சேனாவரையர், நச்சினார்க்கு இனியர், கல்லாடர் போன்ற பெருமக்கள் எழுதிய உரைகளை, ஆராய்ந்து, இவ்விடத்தில் இளம்பூரணர் உரை தவறு, இவ்விடத்தில் தெய்வச்சிலையார் உரை தவறு, இவ்விடத்தில் சேனாவரையார் உரை தவறு, இவ்விடத்தில் நச்சினார்க்கினியர் உரை தவறு என, எழுதிச் சென்றதைப் பார்த்ததும், தமிழையும், தமிழ் நூலாசிரியரையும், தமிழ் உரையாசிரியர்களையும் இகழ்ந்து, வடமொழியும், வடமொழி நூலுமே சிறந்தனவென்று காட்டியிருப்பதைக் கண்டு வெகுண்டு எழுந்து மறுப்புக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதுகிறார்

இவர் எழுதிய மறுப்புக் கட்டுரைகளை மறுத்து, செந்தமிழ்ப் பத்திராதிபர் திரு நாராயண ஐயங்கார் என்பார் கட்டுரை எழுதுகிறார்.

இலக்கணப் புலவர் அசரவில்லை

     பின்னங்குடி சுப்பிரமணிய சாத்திராயர்தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சியுரை மறுப்பின் மேல், செந்தமிழ்ப் பத்திராதிபர் திரு நாராயண ஐயங்கார் எழுப்பிய தடையும் அதற்கு விடையும் என் பல தொடர் கட்டுரைகளை எழுதுகிறார்.

இவ்வாறாக, வாத பிரதிவாதங்கள் நிரம்பிய இதழாகத் தமிழ்ப் பொழில் வெளிவந்து கொண்டிருந்தது.

சில வேளைகளில் இந்த கருத்து மோதல் என்பது, தனி நபர் தாக்குதலில் போய் முடிந்ததும் உண்டு.

இவ்வாறான தருணங்களில், தமிழ்ப் பொழில் இதழில், கரநதைக் கவியரசு அவர்கள், ஒரு வேண்டுகோளை முன்வைப்பார்.

ஆராய்ச்சியுரைகள் எழுதும் புலவர்கள், மறுப்புப் பொருளின் புறத்தவாய் ஒருவரை ஒருவர் தாக்கி எழுதும் வேண்டா உரைகள் கலவாது இருக்குமாறு எழுத மிக மிக வேண்டிக் கொள்கின்றோம்.

     சில சமயங்களில், தமிழ்ப் பொழில் வெளிவரும் கட்டுரைகள் குறித்து, குறிப்பு எழுதும் பழக்கத்தையும், சில சமயங்களில் கட்டுரையின் சில சொற்றொடர்களை மாற்றி அமைக்கும் பழக்கத்தையும் உடையவராக கரந்தைக் கவியரசு இருந்திருக்கிறார்.

இதுகுறித்து, சாமி.சிதம்பரனார் அவர்கள், தமிழர் வீரம் என்னும் தனது கட்டுரையினை, தமிழ்ப் பொழில் இதழுக்கு அனுப்பியபோது, ஒரு வேண்டுகோளினை முன்வைக்கிறார்.இவ்வேண்டுகோளினையும் இதழில் வெளியிட்டிருக்கிறார் கரந்தைக் கவியரசு அவர்கள்.

திருவாளர் இதழாசிரியரவர்கட்கு,

ஐயா,

இத்துடன் அனுப்பியிருக்கும், தமிழர் வீரம் என்னும் கட்டுரையை, தங்கள் தாளில் வெளியிட வேண்டுகிறேன்.இக்கட்டுரையின் இறுதிப் பகுதியில், புலவர்கள் மறுக்கத்தக்க பொருள்களும் விரவி வரும், அவற்றையெல்லாம், தாங்களே பார்த்துக் கீழே குறிப்பெழுதும் உரைமையுண்டு.அன்றியும், இக்கட்டுரைக்காரரின் எண்ணங்களுக்குப் பத்திரிக்கையும், சங்கமும் உடன்பாடுடையவையல்ல என்றும் குறிப்பெழுதிக் கொள்ளலாம்.தயவு செய்து என் எண்ணத்தை மாற்றாமல், எல்லாவற்றையும் அப்படியே வெளியிட வேண்டுகிறேன்.

     இன்று தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில், பொறுப்புத் துறப்பு என்று தலைப்பிட்டு, பேசுபவரின் தனிப்பட்டக் கருத்திற்கு தொலைக் காட்சி பொறுப்பேற்காது என்று செய்தி போடுகிறார்கள் அல்லவா, இதனை அன்றே தமிழ்ப் பொழில் செய்திருக்கிறது. மாற்றுக் கருத்திற்கும் மதிப்பளித்திருக்கிறது.

கவியரசரின் விலகலும், சேர்தலும்

1925ஆம் ஆண்டு தொடங்கப் பெற்ற தமிழ்ப் பொழில் இதழானது, வணிக நோக்கமின்றி, விளம்பரங்கள் ஏதுமின்றி இன்றும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது.

திருவையாற்றில், காவிரியின் வடகரையில் ஒரு வடமொழி கல்லூரி நடைபெற்று வந்தது.அங்கு பிராமணர்களுக்கு மட்டும் வடமொழி கற்பிக்கப்பட்டு வந்தது.உமாமகேசுவரனார் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக மட்டுமன்றி, தஞ்சை வட்டக் கழகத் தலைவராகவும் விளங்கினார். உமாமகேசுவரனார் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக, திருவையாற்று வடமொழிக் கல்லூரியானது, தமிழ்க் கல்லூரியாக மாற்றப்பெற்று, அரசர் கல்லூரி என்ற புதுப்பெயரும் பெற்றது.

     மிகச் சிறந்தப் புலமை வாய்ந்த கரந்தைக் கவியரசர், செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரியில், சிறுவர்களுக்குத் தமிழ் எழுத்துக்களைச் சொல்லித் தருவதைவிட, திருவையாற்று அரசர் கல்லூரியில், பேராசிரியராய் பணி செய்து, அதிக எண்ணிக்கையில் தமிழ்ப் புலவர்களை உருவாக்கிட உதவினால், தமிழ் மொழி மேலும் வளரும் என்று உமாமகேசுவரனார் எண்ணினார்..

உமாமகேசுவரனார், கவியரசரிடம் தன் எண்ணத்தை வெளியிட, அவ்வண்ணமே பணியாற்ற கவியரசர் முடிவு செய்தார்.1932 ஆம் ஆண்டு செந்தமிழ்க் கைத்தொழில கல்லூரித் தலைமையாசிரியர் பொறுப்பில் இருந்தும், தமிழ்ப் பொழில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தும் விலகினார்.

     1925 ஆம் ஆண்டிலிருந்து 1932 ஆம் ஆண்டுவரை, நூற்றி எட்டு இதழ்களுக்கு ஆசிரியராக இருந்த கவியரசர்,

அன்பரீர்,

      இனி, யான் எனது தொண்டுரிமையை இன்று விடுவேனாயினும், இதுகாறும் செய்து வந்த என் எளிய தொண்டிற்குறையாத தொண்டுகளை, என்றுஞ் செய்திருப்பேனென்றும் உறுதி கூறி, பொழிலன்பர்களாகிய உங்களை எல்லாம் வணங்கி,

என்றினிக் கரந்தை சேர்வேன் என்னியல் தொண்டில் சேர்வேன்

என்றெல்லாம் உள்ள மாழ்கி இடம்பெயர் எளிய னாவேன்

சென்றன காலந் தம்மிற் செய்தன பிழைகள் பல்ல

ஒன்றுநன் றுளதாகக் கொண்டே உவைபொறுத் தருளுவீரே 

என்று பொழில்அன்பர்களுக்கு, தமிழ்ப் பொழில் இதழில் ஓர் கடிதம் எழுதி விடைபெற்றார்

கரந்தைக் கவியரசு அவர்கள் 1932 ஆம் ஆண்டு முதல் 1942 ஆம் ஆண்டுவரை, திருவையாற்று அரசர் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

     இக்காலகட்டத்தில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஒப்பிலா முற்றலைவர் தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்கள், பொழிற்றொண்டர் பொறுப்பினையும் தானே தன் தோளில் சுமந்து, தமிழ்ப் பொழில் தொடர்ந்து வெளிவர அரும்பணியாற்றினார்.

1942 இல் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், கவியரசர் அவர்கள் பொழில் ஆசிரியராய், மீண்டும் பொறுப்பினை ஏற்க வேண்டும் என்று சங்கத்தார் வற்புறுத்தினர்.கவியரசர் அவர்களும், மீண்டும் பொழில் ஆசிரியராய் அமர்ந்தார்.பொழில் ஆசிரியராய்ப் பொறுப்பேற்றவுடன், பொழில் அன்பர்களுக்கு ஓர் கடிதம் வரைந்தார்.

பொழிற் றொண்டருட் கூடும்

ஒரு பழைய எளிய தொண்டன் 

நமது தமிழ்ப் பொழிலின் தொடக்கம் முதல் ஏழாண்டின் இறுதி காறும், பொழிற்றொண்டில், இயன்ற சிறிய தொண்டுகள் செய்திருந்த எளியேன், திருவையாற்று அரசர் கல்லூரியில், தொண்டு செய நேர்ந்தது பற்றி, எட்டாம் ஆண்டின் தொடக்கத்தே, பொழிலின் புத்துயிர் என்ற தலைப்பில், இப்பால் பொழில் தொண்டனாக மேவ மனமுவந்த சங்கத் தலைவர் தமிழவேளின் அரும் பெரும் ஆற்றலும், அவர்கள் தொண்டினாற் பொழில் எய்த விருக்கும் சிறப்பும் கூறிப் பொழிலன்பர்கள்பால் விடுதலை ஆணை வேண்டினேன்.

என்றினிக் கரந்தை சேர்வேன் என்னியல் தொண்டில் சேர்வேன்

என்றெல்லாம் உள்ள மாழ்கி இடம்பெயர் எளிய னாவேன்

சென்றன காலந் தம்மிற் செய்தன பிழைகள் பல்ல

ஒன்றுநன் றுளதாகக் கொண்டே உவைபொறுத் தருளுவீரே 

எனக்கூறிச் சென்றது அன்பர்கள் நினைவிருக்கலாம்.

திருவையாற்று வேலையினின்றும் ஓய்வு பெற்று மீண்ட இந்நாள், இச்சங்கத்தின் இன்னுயிர் போன்றிருந்த தமிழவேள் புகழுடம்பு மேவியவுடன், அவர்தம் பொறுப்புகளையெல்லாம், தலைமீதேற்றுச் சங்கத்தை இனிது புரந்து வரும் தமிழ் வீரர், இராவ் சாகிப் திரு .குமாரசாமிப் பிள்ளையவர்கள் முதலாய, என் இனிய அன்பர்கள், மீண்டும் என்னைச் சங்கப் பணிகளில் அன்புடன் ஏற்றருளி, பொழிற் றொண்டருட் கூட்டுவாராயினர். இதுகாறும் பொழிற் றொண்டினைச் செய்து வந்த தலைவர், அமைச்சர், இங்குள்ள ஆசிரியர்கள் முதலாய என் இனிய அன்பர்களது தொண்டுகள், ஒரு சிறிதும் இனிக் குறையாது வளரும் என்ற உறுதி பெற்ற யான், என் எளிய தொண்டைத் தொடங்குவேன் ஆயினன்.

இன்றினிக் கரந்தை யுற்றேன், என்னியல் தொண்டைப் பெற்றேன்

என்றெழ லென்னே அந்தோ, எங்கணல் லுயிர்கா ணேனே

நின்றிடு காலத் தென்னால் நிகழ்வன குறைகள் பல்ல,

ஒன்றுநன் றுளதாக்க் கொண்டே யுவைபொறுத் தருளு வீரே

கரந்தைக் கவியரசு, தமிழவேள் .வே.உமாமகேசுவரனார், எல்.உலகநாத பிள்ளை, நீ.கந்தசாமி பிள்ளை, .குமாரசாமி பிள்ளை, கோ.பெரியசாமிப் புலவர், .கணபதியா பிள்ளை, .சுயப்பிரகாசம், செ.தனக்கோடி, அரங்க வே.சுப்பிரமணியன், .இராமநாதன், .கலியமூர்த்தி. கே.இராஜமன்னார், எஸ்.டி,பார்த்தசாரதி முதலானோர் பொழிற்றொண்டர்களாகப் பணியாற்றி தமிழ்ப் பொழில் இதழினைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

கட்டுரையாளர்கள் 

    தமிழவேள் ,வே,உமாமகேசுவரனார், கரந்தைக் கவியரசு அரங்க.வேங்கடாசலம் பிள்ளை, பண்டிதமணி மு.,கதிரேசஞ் செட்டியார், .வரதநஞ்சயபிள்ளை, தி..உலகநாத பிள்ளை, நாவலர் .மு.வேங்கடசாமி நாட்டார், .மு.கோவிந்தராய நாட்டார், எஸ்.நடேசபிள்ளை, சி,வேதாசலம் பிள்ளை, மு.இராக ஐயங்கார், இரா.இராகவ ஐயங்கார், டி.வி.சதாசிவ பண்டாரத்தார், ரா.பி.சேதுபிள்ளை, குடந்தை .சுந்தரேசனார், மறைமலை அடிகளார், தேவநேயப் பாவாணர், மு.அருணாசம் பிள்ளை, என தமிழ்ப் பொழில் இதழில் எழுதாத தமிழறிஞர்களே இல்லை எனக் கூறலாம்.

அறிவியல் தமிழ் வளர்த்த தமிழ்ப்பொழில்

     தமிழர்கள் தமிழ்ச் சொற்பொழிவுகளையும், இலக்கியக் கூட்டங்களையும் கேட்டால் மட்டும் போதாது, தமிழ் இலக்கியங்களையும், இலக்கணங்களையும், வரலாற்றுச் செய்திகளையும், கல்வெட்டுச் செய்திகளையும், தமிழரின் பண்டைய பெருமைகளையும் படித்து அறிந்து உணரவேண்டும் என்பதற்காக, தமிழகத்துப் புலவர் பெருமக்கள், வரலாற்று ஆய்வாளர்கள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் என அனைவரின் கட்டுரைகளையும் வெளியிட்டு, தமிழ் கூறும் நல்லுலகில் தமிழ் மொழியின் தொன்மை, பெருமை குறித்தான விழிப்புணர்வைத் தமிழ்ப் பொழில் இதழ் ஏற்படுத்தியது.

இதுமட்டுமல்லாமல், எதிர்காலச் சிந்தனையோடு, அறிவியல் தமிழையும் வளர்ப்பதற்காக, அறிவியல் தமிழ் குறித்த கட்டுரைகளையும், அறிவியல் கலைச் சொல்லாக்கத்தையும், அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றையும் வெளியிட்டு, அறிவியல் தமிழுக்கு முதன் முதல் தொண்டு செய்த பெருமை தமிழ்ப் பொழில் இதழினையே சேரும்.

     அக்காலத்திலேயே, சாமி.வேலாயுதம் அவர்கள் எழுதிய கலைச் சொல்லாக்கம் என்னும் தலைப்பில் பூதநூல், இயைபு நூல் முதலான பாடங்களுக்குஉரிய ஆங்கிலச் சொற்களுக்கு இணையான அழகான, எளிதான பொருத்தமான தமிழ்க் கலைச் சொற்களைத் தொடர்ந்து வெளியிட்ட இதழ் தமிழ் பொழிலாகும்.

உடல் இயலும், உடல் நல வழியும் என்னும் பெயரில் மருத்துவம் சார்ந்த கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்ட பெருமைக்கு உரியது தமிழ்ப் பொழில இதழாகும்.

தமிழ்ப் பொழில் இதழுக்காகவே தனி அச்சகம்

     தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழும், ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களுக்கானத் தமிழ்ப் பொழில் இதழின் சேர்க்கைப் பகுதிகளும், திருச்சிராப்பள்ளி, இராதாகிருட்டினப் பதிப்பகத்தில் அச்சிடப் பெற்றன.

முதலாம் ஆண்டின் இரண்டாவது மலரில் இருந்து, இரண்டாம் ஆண்டின், முதல் எட்டு மாதங்களுக்கான தமிழ்ப் பொழில் இதழ்கள், தஞ்சாவூர், பூர்ணானந்தா அச்சுக் கூடத்தில் அச்சிடப் பெற்றன.

ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிகளில் பொழில் இதழானது அச்சாகி வெளி வருவதில் தாமதமேற்பட்டது.தமிழ் மாதத்தின் முதல் நாளில் பொழில் இதழ் வெளிவர வேண்டும் என்று உமாமகேசுவரனார் விரும்பினார்.ஆனால் அச்சகத்தில ஏற்படும் தடங்கல்கள் காரணமாக, இதழினை குறிப்பிட்ட தேதிகளில் வெளிக் கொணர்வதில் தொடர்ந்து தடைகள் தோன்றத் தொடங்கின.

இதனால் மிகவும் மனம் வாடிய, உமாமகேசுவரனார் அவர்களே ஓரிடத்தில் அச்சகத் தாமதங்கள் குறித்து எழுதும் பொழுது, அச்சு என்னும் நச்சுத் தொல்லை என எழுதுகிறார்.

இத்தொல்லையில் இருந்து மீண்டு வருவதற்கு உமாமகேசுவரனார் வழி ஒன்றும் கண்டுபிடித்தார்.

அதுவே கூட்டுறவு அச்சகமாகும்.

     நீதிக் கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கிய உமாமகேசுவரனார், நீதிக் கட்சியின் சார்பில் தேர்தலில் நின்று வென்று, பன்னிரெண்டு ஆண்டுகள், தஞ்சை வட்டக் கழகத் தலைவராகவும் செம்மாந்தப் பணியாற்றியவர்.

வட்டக் கழகத் தலைவராய் பணியாற்றிய காலத்தில் கூட்டுறவு இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டியவர்.

      வேளாளர், வணிகர், நடுத்தர மக்கள் முதலானோர்க்குக் கடன் கொடுத்து, மிகுந்த வட்டி வாங்கும் லேவா தேவிக்காரர்களின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து, அவர்களுடைய கடன் சுமையைக் குறைப்பதற்காவும், மேலும் அவர்கள், அவர்கள் விரும்புகின்ற தொழில் ஒன்றினைச் செய்து முன்னேற வேண்டும் என்பதற்காகவும், கரந்தை திராவிட கூட்டுறவு வங்கி ஒன்றினைவும், கூட்டுறவு நில வள வங்கி ஒன்றினையும், கூட்டுறவு பால் உற்பத்தி மற்றும் விற்பனைக் கழகம் ஒன்றினையும் தொடங்கிய பெருமை உமாமகேசுவரனாரையே சாரும்.

தமிழ்ப் பொழில் இதழினை திங்கள் தோறும் தவறாது வெளிக் கொணர விரும்பிய உமாமகேசுவரனார் அவர்கள், தமிழன்பர்கள் பலரின் உதவியோடு, கூட்டுறவு முறையில் அச்சகம் ஒன்றைத் தொடங்கினார்.இக் கூட்டுறவு அச்சகம், 16.2.1927 முதல், கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்திலேயே செயற்படத் தொடங்கியது.

தமிழ்ப் பொழில் இதழானது, இரண்டாவது ஆண்டின், ஒன்பதாவது மலரில் இருந்து, இந்தத் தஞ்சைக் கரந்தைத் திராவிடக் கூட்டுறவுப் பதிப்பகத்திலேயே அச்சு வாகனம் ஏறத் தொடங்கியது.

கூட்டுறவு அச்சகத்தின் தோற்றத்திற்குப் பின், சங்கத்தின் அனைத்து அச்சுப் பணிகளும், இந்த அச்சகத்திலேயே மேற்கொள்ளப்பட்டன.தமிழ்ப் பொழில் இதழும் காலந் தாழ்த்தாது வெளிவரத் தொடங்கியது.

தற்சமயம் இவ்வச்சகமானது, தஞ்சைக் கூட்டுறவு அச்சகம் என்னும் பெயரில் மருத்துவக் கல்லூரி சாலையில் இயங்கி வருகின்றது.இன்றும் இந்த அச்சகத்திற்குச் செல்வோர், உமாமகேசுவரனாரின் திருஉருவப் படம், இவ்வச்சகத்தின் வரவேற்பறையை அலங்கரிப்பதைக் காணலாம்.

நான் பெற்ற பேறு

தமிழ்ப் பொழில் இதழானது, நூறு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் இவ்வேளையில், எனக்குக் கிடைத்த, கிடைத்தற்கரிய பெரும் பேற்றினை நினைத்துப் பார்க்கின்றேன்.

நான் தமிழ் பயின்றவனல்ல.

கணித ஆசிரியன்.

     இருப்பினும் தமிழ்ப் பொழில் இதழின் அச்சுப் பணியினை செய்யும் ஒரு பொன்னான வாய்ப்பினை எனக்கு வழங்கினார், அன்றைய கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கரந்தைத் தமிழ்ச் செம்மல் திரு .இராமநாதனார் அவர்கள்.

தமிழ்ப் பொழில் இதழுக்கு வரும் கட்டுரைகளை, பாவலர் .பாலசுந்தரம் ஐயா அவர்களிடம் கொடுப்பேன்.

ஐயா அவர்கள், அச்சிடத் தகுந்த, தரமானக் கட்டுரைகளைத் தேர்வு செய்து தருவார்.

பாவலர் ஐயா அவர்களால் தேர்வு செய்யப்பெற்றக் கட்டுரைகளை அச்சகத்தில் கொடுத்து, தட்டச்சு செய்து வாங்கி, மீண்டும் பாவலர் ஐயா அவர்களிடம் கொடுப்பேன்.

ஐயா அவர்கள் பிழைகளை திருத்தம் செய்து கொடுப்பார்.

பிழை திருத்தம் செய்யப்பெற்ற தட்டச்சுப் படியை, மீண்டும் அச்சகத்தில் கொடுத்து, அச்சிட்டு, ஒவ்வொரு மாதமும் மிகச் சரியாக 25 ஆம் நாள், அஞ்சலில் சேர்ப்பேன்.

இப்பணியினை, ஓராண்டு, ஈராண்டு அல்ல, முழுதாய் 25 ஆண்டுகள் செய்திருக்கிறேன்.

ஒரு நூற்றாண்டுகால தமிழ்ப் பொழில் வரலாற்றில், கால் நூற்றாண்டு தமிழ்ப் பொழில் தொண்டராய் பணியாற்றும் பெறும் பேற்றினைப் பெற்றேன்.

தமிழ்ப் பொழில் தொண்டனாய் பணியாற்றிய காலத்தில், 1925 ஆம் ஆண்டு தொடங்கி அச்சேறிய தமிழ்ப் பொழில் இதழ்கள் அனைத்தும் என் பொறுப்பிலேயே இருந்தன.

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், தமிழவேள் காலத்து இதழ்களைப் படிப்பேன்.

ஒவ்வொரு பக்கத்திலும், தமிழவேள் மற்றும் கரந்தைக் கவியரசரின் அகமும் புறமும் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.

அவ்வப்பொழுது, அச்சுப் பக்கங்கள் இன்னும் எவ்வளவு காலம் உயிர் வாழும் என்ற ஐயம் எழும்.காரணம், சில பக்கங்கள் மக்கி, ஒடிந்து போகும் நிலையில் இருக்கும்.

     இந்நிலையில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வந்த, சென்னை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் அவர்கள், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இருபது ஆண்டுகால இதழ்களைப் பெற்று, அவற்றை மின்னூலாக மாற்றிக் கொடுத்தார்.

இச்சூழலில்தான், பொள்ளாச்சி நசன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.

இவர் தமிழம் என்னும் தனது இணையத்தில் தொன்மை வாய்ந்த இதழ்களைப் பதிவேற்றம் செய்து காத்து வருபவர்.

இவர் மேலும் 25 ஆண்டு கால தமிழ்ப் பொழில் இதழ்களை மின்னூலாக மாற்றிக் கொடுத்தார்.

     இவ்வாறாக, தமிழ்ப் பொழில் இதழின் முதல் 45 ஆண்டுகால இதழ்கள், 1925 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரையிலான இதழ்கள் மின்னூலாக்கம் செய்யப் பெற்றன.

மின்னூலாக்கம் செய்யப்பெற்றபின், எனக்குள் ஓர் எண்ணம் தோன்றியது.

இந்த 45 ஆண்டுகால தமிழ்ப் பொழில் இதழ்களுக்கு, ஒரு அடைவு தயாரித்தால் என்ன?என்ற ஓர் எண்ணம் தோன்றியது.

     கணினியில் எக்ஸெல் அமைப்பின் உதவியுடன், 45 ஆண்டுகால தமிழ்ப் பொழில் இதழ்களில், கட்டுரை வரைந்த சான்றோர்களை, அகர வரிசையில், கட்டுரையாளர் பெயர், கட்டுரையின் பெயர், வெளிவந்த ஆண்டு, துணர் எண், மலர் எண், பக்க எண் முதலான விவரங்களுடன் தொகுத்தேன்.

முழுமையாய் ஓராண்டு உழைத்து, தமிழ்ப் பொழில் அடைவினைத் தனியொரு மின்னூலாய் உருவாக்கி இருக்கிறேன்.

25 ஆண்டுகள் தமிழ்ப் பொழில் இதழின் அச்சுப் பணியினைப் பார்க்கக் கிடைத்த பெறும் பேற்றிற்கு, என்னால் ஆன ஒரு சிறு கைமாறுதான் இந்த அடைவு.

வரலாற்றில் இடம்

      1925 ஆம் ஆண்டு தொடங்கித் தொய்வின்றி, திங்கள் தோறும், தமிழறிஞர்களின் தமிழாராய்ச்சிக் கட்டுரைகளையும், சங்கச் செய்திகளையும், வரலாற்று நிகழ்வுகளையும், தமிழுக்கு ஓர் இழுக்கு எனில் பொங்கி எழுந்து, தமிழர்களை ஒன்றிணைக்கக் குரல் கொடுக்கும் இதழாகவும், சீரிளமையோடும், செழுந்தமிழோடும் அயரா பணியாற்றிவரும் தமிழ்ப் பொழில் இதழானது, தமிழ் வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்றுள்ளது.

மேலும் இவ்வாண்டு தமிழ்ப் பொழில் இதழின் நூற்றாண்டாகும்.

     தமிழ்ப் பொழில் இதழின் நூற்றாண்டு விழாவினைச் சிறப்புடன், பார் போற்றும் வகையில் கொண்டாடவும், அவ்வமயம் சிறப்பு மலர் ஒன்றினை வெளியிடவும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் பெருமுயற்சி எடுத்துவருகின்றது, என்பதைக் கூறி, தமிழ்ப் பொழில் பற்றி உரையாற்ற   எனக்கு வாய்ப்பளித்த, தமிழ் மரபு அறக்கட்டளையினருக்கும், திசைக் கூடல் அமைப்பினருக்கும் நன்றி கூறி, நாவலர் .மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் வெண்பா வரிகளோடு, என் உரையினை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

                  வாழி  கரந்தை  வளருந்  தமிழ்ச்சங்கம்

                வாழி  தமிழ்ப்பொழில்  மாண்புடனேவாழியரோ

                மன்னுமதன்  காவலராய்  வண்மைபுரி  வோரெவரும்

                உன்னுபுக  ழின்நலம்  உற்று

 

நன்றி