24 டிசம்பர் 2025

மானோஜியப்பா சாவடி



      பள்ளியக்ரகாரம்.

     தஞ்சையின் வடக்குப் பகுதி.

     இங்குதான், அந்தப் படை இறங்கி முகாமிட்டிருந்தது.

     படையை நடத்தி வந்தவர் மாபூஸ்கான்.

     ஆற்காடு நவாய் அன்வாருதீன்கான் அவர்களின் மூத்த மகன்.

     தந்தையின் சொல்லை மீறித்தான் இந்தப் படையெடுப்பு.

     காரணம், தஞ்சையின் மராட்டிய மன்னர் பிரதாப சிம்ம மகாராஜா அவர்களிடமிருந்து, வரவேண்டியக் கப்பத் தொகையை வசூலிப்பதற்குத்தான் இந்தப் படையெடுப்பு. 

     கடந்த ஆண்டு செலுத்த வேண்டியதில் நிலுவைத் தொகை இரண்டு இலட்சம் பகோடாக்கள்.

     நடப்பு ஆண்டிற்கானக் கப்பம் நான்கு இலட்சம் பகோடாக்கள்.

     மராட்டிய மன்னர் பிரதாப சிம்மர் கொடுத்துவிடத்தான் விரும்பினார்.

     ஆனால், கஜானாவில் இருந்தால்தானே எடுத்து கொடுக்க முடியும்.

     தொடர் போர்கள்.

     முற்றுகை.

     சமாதான உடன் படிக்கை.

     வறட்சி.

     பஞ்சம் என பலப்பல காரணங்கள்.

     இருப்பதைத் தருகிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நிலுவைத் தொகையைத் தவணை முறையில், நிலமை சீரடைய சீரடைய அனுப்பி விடுகிறேன் என முக்கிய அதிகாரி மூலம் செய்தியும் அனுப்பி இருந்தார்.

     பிரதாப சிம்மன் நல்லவர், நாணயமானவர் என்று கூறிய தந்தையின் வார்த்தைகளையும் மீறி, மாபூஸ்கான் படையெடுத்து வந்துவிட்டான்.

     மாபூஸ்கானின் குணத்தை நன்கு அறிந்தவர் பிரதாப சிம்மன்.

     எனவே, தலைமைத் தளபதி மானோஜிராவ் ஜெகதாய் என்ற மானோஜியப்பாவை அழைத்தார்.

     மாபூஸ்கான் கோட்டையை முற்றுகையிடும் வரை காத்திருக்க வேண்டாம். உடனடியாக படையுடன் சென்று தாக்குதல் நடத்து. அவனைத் துரத்து.

     மானோஜியப்பா படையுடன் புறப்பட்டார்.

     போருக்கான ஆயத்த நிலையில் இல்லாமல், ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஆற்காடு வீரர்கள் மீது, மானோஜியப்பா, வழி நடத்திச் சென்ற படை, புலியெனச் சீறிப் பாய்ந்தது.

     தாக்குதலை சற்றும் எதிர்பாராத ஆற்காடு வீரர்கள் சிதறி ஓடத் தொடங்கினர்.

     மாபூஸ்கான் பலத்த காயங்களுடன் பல் உடைபட்டு பரிதாபமாக நின்றான்.

     மாபூஸ்கானையும், மீதமிருந்த படைவீரர்களையும் சென்று வாருங்கள் என அனுப்பி வைத்தார் மானோஜியப்பா.

---

     ஆற்காடு திரும்பிய மாபூஸ்கான், தன் தந்தையின் முன் தலைகுனிந்து நின்றான்.

     தஞ்சை மன்னர் நாணயமானவர், கப்பம் செலுத்தி விடுவார் என்று சொல்லியும் கேட்காமல் சென்ற போதிலும், இதை இப்படியே விட்டுவிட்டால், மற்றவர்களுக்குப் பயம் போய்விடும் என்று எண்ணி, தானே ஒரு பெரும் படையுடன் புறப்பட்டார்.

     வழக்கமான ஆற்காடு, அரியலூர், திருவையாறு பாதையைப் பயன்படுத்தாமல், மாற்றுப் பாதையில் கும்பகோணம், பாபநாசம் வழியாக வந்தார்.

     வழியெங்கும் உள்ள ஊர்களை கொளுத்தியும், கோயில்களை இடித்து கொள்ளையிட்டுக் கொண்டே, தஞ்சை நோக்கி முன்னேறினார்.

     வழியில் பசுபதிகோயிலில் பாசறை அமைத்துத் தங்கினார்.

     கோயில்கள் தரைமட்டமாக்கப்பட்டன.

     திருசக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலங்கள் உட்பட, பல கோயில்கள் அழிவைச் சந்தித்தன.

     அடுத்ததாய் மாத்தூரில் முகாமிட்டார்.

     மானோஜியப்பா, மல்லார்ஜி, காடேராவ் என 13 தளபதிகளின் தலைமையில் போர் தொடுக்க ஏற்பாடுகளைச் செய்தார் தஞ்சை மன்னர்.

     திடீரென்று ரகசியமாய் தாக்குங்கள்.

     எவ்வித ஆரவாரமும் இன்றி தஞ்சையில் இருந்து படை புறப்பட்டது.

     நள்ளிரவில் தஞ்சை படை, மாத்தூர் சென்றடைந்தது.

     நவாவின் படை முகாமைச் சுற்றி வளைத்தது.

     என்ன நடக்கிறது என்று, நவாபின் வீரர்கள் சுதாரிப்பதற்குள், தாக்குதல் தொடங்கியது.

     இரத்தம் ஆறாய் ஓடியது.

     துப்பாக்கிக் குண்டுகள் மழையாய் பொழிந்தன.

     நவாபின் படை வீரர்கள், உயிர் பிழைத்தால் போதும் என ஓட்டம் பிடித்தனர்.

     ஒரே ஒரு யானை மட்டும், அம்பாரியுடன் நின்றிருந்தது.

     யானையைச் சுற்றி வளைத்தனர்.

     யானையின் மேல், நவாய் அன்வாருதின்கான்.

     தஞ்சைக்குத் தகவல் பறந்தது.

     தஞ்சை மன்னர் பிரதாப சிம்மன் புத்திசாலி.

     நவாபைக் கைது செய்தால், நிஜாம் வருவார்.

     நிஜாமுக்காக முகலாயர்கள் வருவார்கள்.

     அடுத்தடுத்த போர்களால் தஞ்சை பெரும் சீரழிவைச் சந்திக்கும்.

     எனவே ஒரு முடிவிற்கு வந்தார்.

     ஆற்காடு நவாபை கைது செய்ய வேண்டாம்.

     முதல் உத்தரவு சென்றது.

     நவாபுக்கு செய்யும் மரியாதையாக பட்டு வஸ்திரங்கள், தங்க ஆபரணங்கள், கப்பத் தொகையின் ஒரு பகுதி பணம் அனுப்பி வைக்கிறேன்.

     நவாபிடம் உரிய முறையில் கொடுத்து, கௌரவமான வழி அனுப்பி வையுங்கள்.

     நிலுவைத் தொகையை விரைவில் செலுத்திவிடுவதாகத் தெரிவியுங்கள்.

    தஞ்சை தளபதிகள், மன்னரின் சமயோஜிதத்தையும், ராஜ தந்திரத்தையும் புரிந்து கொண்டனர்.

     அவ்வண்ணமே செய்தார்கள்.

     ஆற்காடு நவாப் நெகிழ்ந்து போனார்.

     தஞ்சை மன்னரின் அரசியல் முதிர்ச்சி, அவரைவிட வயதானத் தனக்கு இல்லையே என வருந்தினார்.

     ஆற்காடு நவாபும், தஞ்சை மன்னரையும், தளபதிகளையும் பாராட்டும் வகையில், சால்வைகளையும், பொன் ஆபரணங்களையும் வழங்கிப் புறப்பட்டார்.

     தஞ்சை தளபதிகள், ஆற்காடு நவாபை, போர்க் களத்தில் இருந்து அழைத்துச் சென்று, அவருடனே சிறிது தொலைவு பயணித்து, வழி அனுப்பி வைத்தனர்.

     ஆறகாடு நவாபை கொண்டு போய் வழியனுப்பிய இடம்தான், இன்று கொண்டவிட்டான் திடல்.

     கொண்டு விட்டான் திடல்.

     இம்மாபெரும் வெற்றியைத் தனக்குத் தேடித் தந்த தளபதிகளுள் முக்கியமானவரான, மானோஜியப்பாவைப் பாராட்ட விருமபினார் தஞ்சை மன்னர்.

     ஐயம்பேட்டைக்கு அருகில் இருந்த ராமச்சந்திரா புரத்திற்கு, மானோஜியப்பா சாவடி எனப் பெயரிட்டு மகிழ்ந்தார்.

     மானோஜியப்பா சாவடி இன்றும் இருக்கிறது.

     ஊரின் பெயரால் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மானோஜிராவ் ஜெகதாப்.

---

மறைந்து போன, எல்லோரும் மறந்து போன,

ஒரு ஊரின் வரலாற்றைத் தேடித் தேடி அலைந்து கண்டெடுத்து,

தகுந்த தரவுகளுடன் ஆவணமாக்கி

நூலாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்

ஒரு வரலாற்று ஆய்வறிஞர்.

தான் வாழும் ஊருக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

இவர்தான்

அய்யம்பேட்டை என்.செல்வராஜ்.

இவரது நூல்


வரலாற்றில் ஐயம்பேட்டை.