28 ஜூன் 2026

வேந்தரே தேடிச் சென்றவர்

 


     ஆண்டு 1929.

     அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தோற்றம் பெறுகிறது.

     அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர், அண்ணாமலை அரசருக்கு ஓர் ஆசை.

     தமிழ்ப் பேராசிரியர் பணிக்கு, முற்றிலும் தகுதியானவரை நியமித்து, தமிழ் வளர்க்க வேண்டும், பல்கலைக் கழகத்தை பார்போற்றும் வகையில் உயர்த்த வேண்டும் என்ற உன்னத ஆசை.

     கும்பகோணம் சென்றார்.

     டாக்டர் உ.வே.சாமிநாதையரைச் சந்தித்தார்.

     அண்ணாமலைக்கு வருக என அழைத்தார்.

     உ,வே.சா.வோ, தங்கள் பல்கலைக் கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராக இருக்கும் தகுதியுடையவர்கள் இருவர் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் இருமொழிப் புலமை உடையவர்கள் எனக் கூறி இருவரைக் கை காட்டினார்.

     இருவருள் ஒருவரை, மனதுள் தேர்ந்தெடுத்த அண்ணாமலை அரசர், அந்த ஒருவரைத் தேடி, அவர் வீட்டிற்கே சென்றார்.

     சிவகங்கை மாவட்டம், மகிபாலன் பட்டியில் இருக்கும் அவரது வீட்டிற்கே சென்றார்.

     தனியே சென்று கேட்டால், மறுத்துவிடுவாரோ என்று எண்ணி, பார்க்கச் செல்பவருக்கு மிகவும் வேண்டியவரும், நெருங்கிய உறவினருமான, கானாடுகாத்தன் சி.த.வீரப்பச் செட்டியார் என்பவரையும் அழைத்துச் சென்றார்.

     இருந்தும், அந்தத் தமிழறிஞரோ, நான் தங்கள் பல்கலைக் கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு தகுதி உடையவன் அல்ல என மறுத்தார்.

     பல்கலைக் கழக வேந்தரே நேரில் வீட்டிற்கு வந்து அழைத்தும் மறுத்தார்.

     அதற்கு அவர் கூறிய காரணம் கேட்டு, வேந்தர் மலைத்துப் போனார்.

     எட்டு மாதங்கள் கூட, பள்ளிக் கூடத்தில் படிக்காதவன், பள்ளிக் கல்வியே கற்காதவன், தங்கள் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்துவதா? வேண்டாம் ஐயா, வேண்டாம்.

     பள்ளிக் கூடத்தில் படிக்கவில்லையே தவிர, இவர் தானே கற்றுத் தேர்ந்த தமிழறிஞர்.

     வேந்தருக்கு இவரை விட மனமில்லை.

     மெதுவாகப் பேசிப் பேசி, கொஞ்சம் கொஞ்சமாக அவரைக் கரைத்து, பல்கலைக் கழகத் தமிழ்த் துறைக்கு அறிவுரை கூறும் குழுவில் இவரை இணைத்துக் கொண்டார்.

     பின்னர், இரண்டே வருடங்களில், 1934 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக இவரைப் பதவி ஏற்க வைத்தார்.

     அப்பொழுது, அந்தத் தமிழறிஞருக்கு வயது 53.

     1934 ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரை, 12 ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திறம்படப் பணியாற்றினார்.

     பள்ளிக்கூடம் செல்லாதவர், பல்கலைப் பேராசிரியர்.

    இவர், தமிழும் வடமொழியும், தானே முயன்று கற்றுத் தேர்ந்தவர்.

     மகாமகோபாத்யாய என்றாலே, நமக்கு உ.வே.சா., அவர்கள்தான் நினைவிற்கு வருவார்.

     ஆனால், இவரும், ஆங்கில அரசால் மகாமகோபாத்யாய விருது வழங்கிப் பாராட்டப் பெற்றவர்.

    இவர் சீரிய செந்தமிழ் நடை ஆசிரியர்.

     திருவாசகத்திற்கு உள்ளொளி பெருக்கும் கதிர்மணி விளக்கம் என்னும் பேருரை கண்டவர்.

     தமிழ் நயத் தந்தை எனப் போற்றப்பெற்றவர்.

இவர்தான்,

தமிழ் ஞாயிறு, முதுபெரும் புலவர்

சைவ சிந்தாந்த வித்தகர்,


மகாமகோபாத்யாய,

பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார்.