18 ஜூலை 2026

கனகி புராணம்

 

     ஈழம்.

     பழந்தமிழ் மரபுப்படி ஈழம் என்பது முழு இலங்கையையும் குறிக்கும்.

     இன்று இலங்கையில் வாழும் தமிழர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

     ஈழ மண்ணைத் தாய் மண்ணாகக் கொண்ட தமிழர்கள், ஈழத் தமிழர்கள்.          

     பல்லாயிரம் ஆண்டுகளாக, இன்னும் சொல்லப்போனால், அந்த மண்ணிலே ஈழத் தமிழர்கள் தோன்றியபோது, வேறு எந்த  இனத்தைச் சார்ந்தவர்களும், அந்த மண்ணில் பிறக்கவோ அல்லது அந்த மண்ணில் குடியேறவோ இல்லை. அந்த மண்ணுக்கு முழுமையானச் சொந்தக்காரர்கள் ஈழத் தமிழர்கள்தான்.

     இரண்டாவது வகை. பிற்காலத்தில் சமய மாற்றம் நிகழ்ந்து, ஈழ இஸ்லாமியர்களாக உருவெடுத்தவர்கள். சமயத்தால் வேறுபட்டிருந்தாலும் அவர்களும் தமிழர்கள்தான்.

     மூன்றாவதாக, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், வெள்ளையர் அரசாங்கத்தால், இலங்கையிலே இருக்கின்ற ரப்பர் தோட்டங்களில், தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காக, தமிழ் நாட்டில் இருந்து கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டத் தமிழர்கள்.

     ஈழத் தமிழர்களை மூன்று வகையாகப் பிரித்ததைப் போலவே, ஈழத் தமிழ் இலக்கிங்களையும் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

     பழங்காலம்.

     இடைக்காலம்.

     இக்காலம்.

     ஈழத்தைச் சார்ந்த பூதத்தேவனார் என்பவர், சங்க காலத்திலேயே. அகநானூற்றில் மூன்று பாடல்கள், குறுந்தொகையில் மூன்று பாடல்கள், நன்றினையில் ஒரு பாடல் என 7 பாடல்கள் எழுதியிருக்கிறார்.

     1877 இல் தோன்றிய ஒரு இலக்கியத்தை, அறுபது ஆண்டுகள் கடந்த நிலையில், 1937 இல் பதிப்பித்திருக்கிறார்கள்,

     கனகி புராணம்.

     கண்ணகி புராணம் அல்ல.

     கனகி புராணம்.

     ஈழ இலக்கியங்கள் சுவாரசியமானவையாகவும், மகிழ்ச்சியானவையாகவும் இருந்தன.

     ஏனென்றால் மண் அதுபோல் இருந்தது.

     மக்கள் அதுபோல் இருந்தார்கள்.

     மக்கள் வாழ்வு அதுபோல் இருந்தது.

     ஒரு படைப்பாளி ஒரு இலக்கியத்தைப் பெற்றெடுக்கிறான் என்றால், அவன் வாழ்ந்த காலச்சூழல் எப்படி இருந்ததோ, அதை அவன் தன் வரிகளில் பிரதிபலிப்பான்.

     கனகி புராணம்.

     கனகி என்ற நடன மங்கையைத் தலைவியாகக் கொண்டு, ஆடவர்களை அவர் வசியப்படுத்துவதைப் பற்றிப் பேசுகிற நூல்.

     நட்டுவச் சுப்பையனார் என்பவரால் இயற்றப்பட்டது.

     நகைச்சுவை மற்றும் நையாண்டி நிறைந்த சிற்றிலக்கியம்.

     எவ்வளவுதான் புகழ் பெற்றவர்களாக இருந்தாலும், செல்வந்தர்களாக இருந்தாலும், ஒரு பெண்ணின் அழகிலே மயங்கி, தங்களுடைய ஒழுக்கத்திற்கு கேடு வருகின்றவாறு நடந்து கொள்வார்களேயானால், அவர்களுடைய வாழ்க்கை சீரழிந்து போகும் என்பதற்கு உதாரணமாக கனகி புரணத்திலே, நட்டுவச் சுப்பையனார் 28 பாடல்களை எழுதியுள்ளார்.

     நட்டுவச் சுப்பையனாரைத் தொடர்ந்து, 19ஆம் நூற்றாண்டில் இன்னும் பல அறிஞர்கள் தோன்றினர்.

     வசன நடை கைவந்த     தமிழ் உரை நடையின் தந்தை என்று போற்றத் தகுந்த அளவிற்கு ஆறுமுக நாவலர் படைப்புகளைத் தந்துள்ளார்.

     திருக்குறள் பரிமேலழகர் உரை, நன்னூல் காண்டிகை போன்ற இலக்கிய இலக்கண நூல்களையும், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதிப்பித்துள்ளார்.

     அதேபோல் சி.வை.தாமோதரம் பிள்ளை.

     தமிழ்ப் பதிப்புத் துறையின் முன்னோடி.

     தமிழ்த் தாத்தா உ.வே.சா., அவர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

     பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து, அழிந்து போகாது, தனது அரிய தேடல்கள் மூலம் மீட்டெடுத்து, ஒப்பிட்டு, பரிசோதித்து அச்சிட்டுக் காத்து வாழ வைத்தவர்.

     தொல்காப்பியத்தைக் கண்டுபிடித்து, பதிப்பித்து வெளிக்கொண்டு வந்த மிகப்பெரும் பணியினைச் செய்தவர்.

     இவரைப் போலவே, ஞானப்பிரகாச அடிகள்.

     முதன் முதலாக வேர்ச்சொல் அகராதியை உருவாக்கியவர்.

     அதேபோல் ஆ.முத்து தம்பி பிள்ளை என்றொரு அறிஞர்.

     கலைக் களஞ்சியங்களுக்கெல்லாம் முன்னோடியான, அபிதான கோசம் என்னும் மாபெரும் நூலை எழுதிய பெருமைக்கு உரியவர்.

      இவர்களைத் தொடர்ந்து, இடைக் காலத்தில் தோன்றியவர் ஈழத்து மகாகவி.

     நம்முடைய மகாகவி பாரதியாரைப் போலவே, இவர் ஈழத்து மகாகவி.

     இயற்பெயர் உருத்திரமூர்த்தி.

     இலங்கை வானொலி, முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என பல தளங்களில் இயங்கியவர்.

     மரபுக் கவிதைகளில் புதுமையான உத்திகளைக் கையாண்டு, எளிய மக்களின் வாழ்க்கையைப் பாடுவதில் வல்லவர்,

     கல்லழகி, ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம், கந்தப்ப சபதம் போன்ற பல காவியங்களை இயற்றியவர்.

இன்னவைதான் கவி எழுத

ஏற்ற பொருள் என்று பிறர்

சொன்னவற்றை நீர் திருப்பிச்

சொல்லாதீர், சோலை, கடல்,

மின்னல், முகில், தென்றலினை

மறவுங்கள், மீந்திருக்கும்

இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு

என்பவற்றைப் பாடுங்கள்

என பாடுபொருளின் உள்ளடக்கத்திற்குப் புதிதாய் இலக்கணம் வகுத்தவர்.

இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள்

இன்றைய காலத் திருக்கும் நோக்குகள்

இன்றைய காலத் திழப்புகள், எதிர்ப்புகள்

இன்றைய காலத் திக்கட்டுகள்

ஆகியவையே, கவிதைகளில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியவர்.

     ஒரு கவிஞன், ஒரு படைப்பாளி, ஒரு மொழிக்குச் செய்கின்ற தொண்டு என்னவென்றால், எந்தப் பாதையில் இந்த உலகம், சமூகம் சென்று கொண்டிருக்கிறதோ, அந்தப் பாதையிலே செல்வது அல்ல.

     சமூகத்திற்கும், நாட்டிற்கும் மக்களுக்கும் புதிதாக ஒரு பாதையை உருவாக்குபவன்தான் உண்மையானப் படைப்பாளி.

     இப்படிப்பட்டவர்தான் மகாகவி.

     இவரது மகன்  கவிஞர் சேரன்.

குழந்தைகளை யார்

உருவாக்குகிறார்கள்

என்று நான் கேட்டேன்.

 

திறந்து வைத்த யன்னலூடாக

சலசலத்து

நானல்ல, அவர்களின் குரலுக்குச்

சங்கீத நரம்புகளைத் தருவதே

என் வேலை

என்றது காற்று.

 

அவர்களின் கண்களுக்கு

ஆழமான நிறங்களைத் தருகிறேன்

நான்

என்றது ஒளி.

 

அவர்களுடைய பிஞ்சுப்

பாதங்களுக்கு

ஒரு புன்னகையைத் தருகிறேன் நான்

என்றது  செல்லரிப்பூ.

 

அவர்களுடைய இதயத்தின்

சுவர்களை

காதலின் இழைகளால் நெய்கிறேன்

என்றது கடல்.

 

அவர்களின் சிரிப்புக்கு

மந்திர வலிமையைச் சேர்க்கிறேன்

என்றன காடுகள்.

 

அப்படியானால்

அவர்கள் கைகளில்

துப்பாக்கிகளையும்

கால்களுக்கு ராணுவச்

சப்பாத்துகளையும்

இடுப்பில் வெடிகுண்டுகளையும்

கண்களில் வெறுப்பையும்

தந்தது யார் என்று கேட்டேன்.

 

காற்றும் கடலும் உறைந்தன

வெளியில்

உலந்து நொறுங்கிற்று

கண்ணாடித் துண்டுகளாக ஒளி

ஒரு மின்னல் வெட்டில்

எரிய ஆரம்பித்தன பூக்களும்

காடுகளும்

எல்லா பறவைகளும்

கூட்டமாகப் பறந்து சென்று

அத்தீயில் விழுந்தன.

 

குழந்தைகள்

எங்களுடைய குழந்தைகள்.

     ஜெயபால் என்று ஒரு கவிஞர்.

     ஈழ மக்கள் எந்தச் சூழலில் வாழத் தொடங்கியிருக்கிறார்கள், அவர்களின் நிலை என்ன? போருக்கு முன் எப்படி இருந்தது? போருக்குப் பின் எப்படி இருக்கிறது? இப்போது எப்படி இருக்கிறது?  என்பதையெல்லாம் தன் பாட்டில் வைத்தவர்.

யாழ் நகரில் என் பையன்

கொழும்பில் என் பெண்டாட்டி

வன்னியில் என் தந்தை

தள்ளாத வயதினிலே

தமிழ் நாட்டில் என் அம்மா.

சுற்றம் பிராங்பேட்டில்

ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்

நானோ

வழி தவறி அலாஸ்கா வந்துவிட்ட

ஒட்டகம்போல்

ஓஸ்லோவில்

என்ன நம் குடும்பங்கள்

காற்றில்

விதிக்குரங்கு கிழித்தெறியும்

பஞ்சுத் தலையணையா?

     ஒரே குடும்பம்தான், குடும்பத்தில் இருக்கின்ற ஒவ்வொரு உறுப்பினரும், உலகத்தின் ஒவ்வொரு நகரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

     இருக்கிறார்களா? இல்லையா? என்பதுகூட தெரியாத வாழ்வு.

     இதுதான் புலம் பெயர்ந்து போனவர்களின் வாழ்வு என்பதை இன்றைய ஈழத் தமிழ்  இலக்கியங்கள் பதிவு செய்து கொண்டே இருக்கின்றன.

இழந்தவற்றை மீளப் பெருகின்ற போரில்

என்னை இன்னும் இழக்காதவன்.

நலிந்துபோனவன்தான் நான்

எனினும்

நம்பிக்கை இழந்து போனவன் அல்ல.

என்று முழங்குகிறது ஒரு சர்வதேச அகதியின் பாடல்.

      எவ்வளவு சோதனைகள் இருந்தாலும், குறைகள் இருந்தாலும், வேதனைகள் இருந்தாலும், நம்பிக்கை என்ற ஒன்றை, தன்னிடத்தே கொண்டிருந்த காரணத்தினாலேதான், உலகத்திலே இன்றைக்கும், தமிழர்கள் தலை நிமிர்ந்து

வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

     உலகம் முழுவதும் மற்ற இனங்கள் எல்லாம், தமிழினத்தை பார்த்து வியந்து போகின்றன என்றால் காரணம், தமிழர்களின் அறிவு, தமிழர்களின் கல்வி, தமிழர்களின் புத்திசாலித்தனம், தமிழர்களின் திறமை,

     ஈழத்தமிழ் இலக்கியங்கள் என்று கூறும்போது காசி ஆனந்தன் கவிதைகள் இல்லாமல், ஈழத் தமிழ் இலக்கியம் முழுமை பெறாது.

இருப்பாய் தமிழா

நெருப்பாய

இதுவரை இருந்தது போதும்

செறுப்பாய்.

---

ஏடகம்

ஞாயிறு முற்றம்.

12.07.2026 ஞாயிற்றுக் கிழமை மாலை

ஏடக அரங்கில்

தொலைத் தொடர்புத் துறையின் மேனாள் அலுவலர்


திரு க.அய்யனார் அவர்கள்

தலைமையில்

தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி

தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்


முனைவர் இராசு.தமிழடியான் அவர்கள்

ஈழத்தமிழ் இலக்கியங்கள்

என்னும் தலைப்பில் உரையாற்றி அமர்ந்தபோது

அரங்கே அமைதியில் உறைந்து போனது.

முன்னதாக,

பொழிவிற்கு வந்திருந்தோரை


தஞ்சை நா.இராமதாசு அவர்கள்

வரவேற்றார்.

பொழிவின் நிறைவில்

சுவடியியல் மாணவர்


செல்வன் லெ.சிவகங்காதரன் அவர்கள்

நன்றி கூறினார்.

ஏடகம், சுவடியியல் மாணவி


செல்வி செ.ஐஸ்வர்யா அவர்கள்

விழா நிகழ்வுகளை அழகுற தொகுத்து வழங்கினார்.