எல்லோரும் போய்விட்டார்கள்.
ஆம், எல்லோரும் போய்விட்டார்கள்.
எழுத்தாளர், கவிஞர், மானுடப் பற்றாளர் ஹரணி அவர்கள் எனக்குக் கொடுத்த கடைசிப் புத்தகம்.
எல்லோரும் போய்விட்டார்கள்.
இப்பொழுது, இவரும் போய்விட்டார்.
யாரிடமும் சொல்லாமல் போய்விட்டார்.
அப்படி என்ன அவசரம் என்று புரியவில்லை-
உள்ளத்து உணர்வுகளை, உறவுகளின் உன்னதத்தை, நட்பின்
மேன்மையை என்றும் தன் எழுத்தில் தூக்கிப் பிடித்துக் கொண்டாடி, நம் இதயங்களை நனைத்த
ஹரணி, இதயம் அடைத்து மறைந்ததுதான் வேதனை.
ஹரணி அவர்கள் எழுத, எழுத, ஒவ்வொரு எழுத்தாய்,
ஒவ்வொரு சொல்லாய் ரசித்து, ரசித்து மகிழ்ந்து துடித்த இதயம், திடீரென்று நின்று போனது,
ஹரணியின் எழுத்துக்குச் செய்த துரோகமல்லவா?
ஹரணியின் நூல்கள் போட்டிகளில் வென்று பரிசுபெறும்
பொழுதெல்லாம், கைதட்டி ஆர்ப்பரித்த இதயம், துடிக்க மறுத்தது துரோகமல்லவா?
வரம் கிடைத்தவன் போலவே எழுதிக்கொண்டே இருக்கிறேன்.
நமக்கு கற்றலில் கிடைத்த அறிவு, கிட்டிய அனுபவம், எழுத வாய்த்த வாய்ப்பு, இவற்றைக்
கற்பனை, சுவை இவை கூட்டி எழுதுகிறோம் என்பதோடு, இதயத்திற்கு ஒரு நியாயம் என்கிற உணர்வுடனும்
எழுதுகிறேன் இன்றுவரை, எனத் தன் கடைசி நூலில் எழுதியவரை, கடைசி நூல் வரை இதயத்திற்கு
நியாயமாக எழுதியவரின், இதயம் துடிக்க மறந்து நின்று போனது நியாயம் அல்லவே.
அப்படி என்ன வயதாகிவிட்டது?
படித்துப் படித்துத் தங்கள் கண்கள் அயர்ந்துபோய்
உறக்கத்தில் ஆழ்ந்து விட்டனவா?
எழுதி, எழுதி தங்கள் கைகள் அசந்துபோய் ஓய்வெடுக்கத்
தொடங்கிவிட்டனவா?
அயர்ந்து போனாலும், அசந்துபோனாலும், சற்று ஓய்வெடுத்துப்
பின் தொடர்ந்திருக்கலாமே?
ஏனய்யா? இந்த நிரந்தர ஓய்வு?
ஹரணி
என் எழுத்துலக ஆசான்.
படித்ததை எல்லாம் எழுதுங்கள், பார்த்ததை எல்லாம்
எழுதுங்கள், உணர்ந்ததை எல்லாம் எழுதுங்கள், மகிழ்வை எழுதுங்கள், துயரை எழுதுங்கள் என
எனக்கு வழிகாட்டிய குரு ஹரணி.
என் எழுத்துக்களை வாசித்தவுடன், மறக்காமல் அலைபேசி
வழி அழைத்துப் பாராட்டுவார், ஒவ்வொரு முறையும் நூறாண்டு வாழ வாழ்த்துவார்.
இறுதியாய், கணிதமேதை இராமானுஜன் அவர்களைப் பற்றி,
நான் பேசிய பேச்சினை, 22.9.2026 அன்று இணைய வழியில் கேட்டு, நெகிழ்ந்து, கண்கலங்கியவர்,
நூறாண்டு காலம் நான் வாழ வாழ்த்தியவர், இன்று இல்லை.
ஹரணி இன்று இல்லை என்பதை ஏற்க, என் மனம் மறுக்கிறது.
நூறாண்டு காலம் நீங்கள் வாழ வேண்டும் ஜெயக்குமார்
இதுதான் ஹரணி அவர்கள் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை
ஹரணி அவர்கள்
வாழ்த்திய வாழ்த்து என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
