19 அக்டோபர் 2013

இணைய வானில் தமிழ்ப் பறவைகள்

தாயெழிற்  றமிழை,  என்றன்
    தமிழரின்  கவிதை  தன்னை
ஆயிரம்  மொழியிற்  காண
    இப்புவி  அவாவிற்  றென்ற
தோயுறும்  மதுவின்  ஆறு
    தொடர்ந்தென்றன்  செவியில்  வந்து
பாயுநாள்  எந்த  நாளோ,
    ஆரிதைப்  பகர்வார்  இங்கே?

என ஏக்கத்தோடு பாடுவார் பாரதிதாசன். பாவேந்தரின் ஏக்கத்தைப் போக்க, வாட்டத்தை நீக்க, தாயெழில் தமிழை உலகெலாம் பரப்ப, அயரா முயற்சி மேற்கொண்டு, தளராது பாடுபட்டு வரும் தமிழாசிரியர் ஒருவரைச் சந்திப்போமா நண்பர்களே.

     மனதில் உறுதியோடும், வாக்கினில் இனிமையோடும், புதியன விரும்பும் புலவர் நா. முத்து நிலவன் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தினைச் சார்ந்தவர். தமிழாசிரியர். சிறந்தப் பட்டிமன்றப் பேச்சாளர்.
 
கவிஞர் முத்து நிலவன்
     நண்பர்களே, நாமெல்லாம் கணினி என்னும் வானூர்தியில் ஏறி, நித்தம் நித்தம் உலகை வலம் வருகிறோம். நண்பர்களின் எழுத்துக்களைக் கண்டு ரசிக்கிறோம், பாராட்டுகிறோம், மகிழ்ச்சியடைகிறோம்.

     நாமெல்லாம் வலைப் பூவில் வாசம் செய்பவர்களைத்தான் நாள்தோறும் சந்திக்கிறோம். ஆனால் கவிஞர் முத்து நிலவன் அவர்களோ, கணினியைக் கண்டாலே, காத தூரம் விலகியோடும், நண்பர்களைப் பற்றிச் சிந்தித்தார். என்ன செய்தால், இவர்களையும் வலைப் பூவிற்குள், வண்டாய் பறக்க விடலாம் என்று யோசித்தார்.

     நண்பர்களே, ஆசிரியர்களிலேயே பல பிரிவினர் உண்டு. ஆங்கிலம், கணக்கு, அறிவியல், வரலாற்று ஆசிரியர்களை எடுத்துக் கொண்டால், இவர்கள் கணினியை அதிகம் நாடுபவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களுள் எழுத்துப் பழக்கம் உள்ளவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள்.

     தமிழாசிரியர்களை எடுத்துக் கொண்டால், மேடைப் பேச்சில் வல்லவர்களாகவும், எழுத்தில் ஈடு இணையற்ற விற்பன்னர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களில் பொரும்பாலானவர்கள், கணினி இருக்கும் திசைக்கே பெரிய கும்பிடு போடுபவர்களாக இருப்பார்கள்.

     இப்படிப்பட்ட தமிழாசிரியர்கள் நாற்பது பேரைத் தேர்வு செய்தார் கவிஞர் முத்து நிலவன். 17 தமிழாசிரியைகள், 23 தமிழாசிரியர்கள். இவர்களுள் உதவிக் கல்வி அலுவலர் திருமதி ஜெயலட்சுமியும் ஒருவர்.

     இரண்டு நாட்கள் இவர்களுக்குப் பயிற்சி அளித்து, கணினிக்குள் இவர்களையும் இழுப்பது என்று முடிவு செய்தார். நாற்பது பேருக்கு கணினி பயிற்சி அளிப்பது என்றால், கணினி வேண்டுமல்லவா? இணைய இணைப்பு வேண்டுமல்லவா?
கவிஞர் கதிரேசன்

       கவிஞரான இவர், மற்றொரு கவிஞரை நாடினார். புதுக்கோட்டையில் ஸ்ரீ வெங்கடேசுவரா பாலிடெக்னிக்கின் தாளாளர் ஒரு கவிஞர். கவிஞர் கதிரேசன். எனது கணினி ஆய்வகத்தையே தந்தேன் உனக்கு எனக் கூறி அவ்வண்ணமே வழங்கியும் மகிழ்ந்தார். தமிழ் நெஞ்சமல்லவா.

     நண்பர்களே, நானும் ஒரு ஆசிரியன். கல்வித் துறை அலுவலர்களின் பணிச் சுமையினை ஓரளவு அறிவேன். இந்நாளில் கல்வித் துறை அலுவலர்களுக்கு ஓய்வு என்பதே இல்லை. இருபத்து நான்கு மணி நேரமும் இடைவிடாமல் பம்பரமாய் சுழன்று கொண்டேயிருப்பவர்கள்.
 
முனைவர் நா. அருள் முருகன்
      நண்பர்களே, புதுக்கோட்டை மாவட்டத்திற்குக் கிடைத்திருக்கின்ற, முதன்மைக் கல்வி அலுவலர், ஒரு தமிழாய்ந்த தமிழறிஞர். தமிழ் இலக்கியங்களிலேயே மிகவும் கடுமையானச் சொற்களை உடையது என கற்றறிந்த சான்றோர்களால் கூறப்படும், நேமிநாதம் என்னும் இலக்கண நூலை ஆராய்ந்து, முனைவர் பட்டம் பெற்றவர். முனைவர் நா. அருள் முருகன்.

     தமிழ் மொழியின் மீது உள்ள பற்றினாலும், தமிழைத் தழைக்கச் செய்ய வேண்டுமே, தமிழை கணினி மொழியாக மாற்ற வேண்டுமே என்ற, உயரிய, உன்னத எண்ணத்தினாலும், இரண்டு நாள் பயிற்சியின் போதும் உடனிருப்பதாய் கவிஞர் முத்து நிலவன் அவர்களிடம் உறுதியளித்தார்.

     நண்பர்களே, கவிஞர் முத்து நிலவன் அவர்கள், எனது வலைப் பூவிற்குத் தொடர்ந்து வருகை தருபவர். இவரை நான் பார்த்ததில்லை, பேசியதில்லை. ஆயினும் வலை வழித் தொடர்பின் காரணமாக, என்னையும், இப் பயிலரங்கிற்கு, மின்னஞ்சல் வழி அழைத்திருந்தார்.

     நண்பர்களே, வலைப் பூ ஏற்படுத்தித் தருகின்ற உறவை, நட்பைப் பார்த்தீர்களா? இதுவல்லவோ நட்பு.

கணினியில் தமிழ் எழுத, வலைப் பக்கம் உருவாக்க இரண்டு நாள் பயிலரங்கம்

களம்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி, கைக்குறிச்சி, புதுக்கோட்டை
காலம்
5, 6.10.2013 சனி மற்றும் ஞாயிறு
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

தலைமை
முனைவர் நா.அருள் முருகன்,
முதன்மைக் கல்வி அலுவலர், புதுக்கோட்டை
முன்னிலை
கவிஞர் கதிரேசன்,
தாளாளர், ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக்

    இப்பயிலரங்கில் கலந்து கொள்ளக் கட்டணம் கிடையாது. தனி ஊதியம் (T.A./D.A)  வருகைச் சான்று எதுவும் தரப்பட மாட்டாது. இரு வேளை தேநீர் மட்டுமே வழங்கப்பெறும். மதிய உணவினை, அவரவர்களே கொண்டு வருதல் வேண்டும்.

      நண்பர்களே, அழைப்பிதழிலேயே மேற்கண்ட நிபந்தனைகளை விதித்திருந்தார்.

      ஆசிரியர்களாகிய, எங்களுக்கு ஒரு வாரத்திற்குக் கிடைப்பதோ, இரு நாள் விடுமுறை. அதுவும் பல வாரங்களில் கிடைக்காது. சனிக் கிழமை பல வாரங்களில் அலுவல் நாளாகிவிடும். விடுமுறையில் கலந்து கொள்ள வேண்டும். தேநீர் மட்டுமே தருவோம். ஆனால் கணினியை போதும், போதும் என்கிற வகையில் திகட்டத் திகட்டக் கற்றுத் தருவோம். வாருங்கள் என அழைப்பு விடுத்திருந்தார்.

     நாற்பது பேர் திரண்டனர். முதல் நாள் நிகழ்வில், தனது வலைப் பூவில் மாயா ஜாலங்கள் பலவற்றை நிகழ்த்துபவரும், எவ்வலையின் பக்கம் திரும்பினாலும், கருத்து தெரிவிப்பதில் முதல் மனிதராய் விளங்குபவருமான, வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் ( நண்பர்களே, திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு இப்பட்டம் மிகவும் பொருத்தம்தானே) அவர்கள் கலந்து கொண்டார். நாற்பது பேரையும் மின்னஞ்சல் முகவரி பெறச் செய்தார். நாற்பது பேரும் வலைப் பூவினை உருவாக்க அருகிலிருந்து கற்றும் கொடுத்தார்.

     இரண்டாம் நாள் நிகழ்வில் நான் கலந்து கொண்டேன். புதுக்கோட்டை பேரூந்து நிலையத்தில், பேரூந்தில் இருந்து இறங்கியவுடன், கவிஞர் முத்து நிலவன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். பேரூந்து நிலையத்திற்கு எதிரிலேயே உள்ள, அபிராமி ஹோட்டலில் இருக்கிறேன், வாருங்கள் என்றார். சென்றேன். முதன் முறையாக கவிஞர் முத்து நிலவன் அவர்களை நேரில் சந்தித்தேன்.
பெரம்பலூர் இரா.எட்வின் 
     வலைப் பக்க எழுத்தாளர், பெரம்பலூர் இரா. எட்வின் உடனிருந்தார். தமிழாசிரியர் திரு மகா.சுந்தர் அவர்களும் உடனிருந்தார். அறிமுகப்படுத்திக் கொண்டேன். காலை உணவு உண்டோம். வெங்கடேசுவரா பாலிடெக்னிக் சென்றோம். இரண்டாம் நாள் பயிலரங்கு தொடங்கியது.

     என்ன செய்ய வலை? என்னும் தலைப்பில் பெரம்பலூர் கவிஞர் இரா.எட்வின் உரையாற்றினார். நண்பர்களே உங்களுக்குத் தெரியுமா, இவர் மேனிலைப் பள்ளி ஒன்றில், ஆங்கில அசிரியர்.

      சமூக வலைத் தளங்களின் பயனையும், அதன் வலிமையினையும் எடுத்துரைத்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் பேசியிருப்பார். இரா.எட்வின் அவர்கள் தனது உரையினை நிறைவு செய்த பொழுது, பெய்லின் புயல் சுற்றி, சுழன்று அடித்து ஓய்ந்ததைப் போல் தோன்றியது.
முதன்மைக் கல்வி அலுவலர்
     அடுத்ததாக, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள் முருகன் அவர்கள், கருவி நூல்கள் என்னும் தலைப்பில், நழுவுப் படக் காட்சியின் உதவியுடன் உரையாற்றினார். கவிஞர் இரா.எட்வின் புயலென்றால், இவர் தென்றல். இவரது பேச்சு தென்றலாய் தவழ்ந்தது. ஒவ்வொரு தமிழாசிரியர் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல்களையும், அதன் அவசியத்தினையும் பாங்குற எடுத்துரைத்தார். நூல்களுக்காக ஒரு ஆசிரியர் செய்யும் செலவு என்பது, செலவேயல்ல, வரவு, அறிவின் முதலீடு, ஆகவே வரவுதான் என்று நயம்பட எடுத்துரைத்தார்.

     பிற்பகல் அமர்வில் நான் பேசினேன். புயல் அடித்து ஓய்ந்த பிறகு, தென்றல் தவழ்ந்து வருடிச் சென்ற பிறகு நான் என்ன பேசுவது? இருப்பினும் நானும் எனது வலையும் என்னும் தலைப்பில் பேசினேன்.

     வலைப் பூவில் எழுதுவதற்கு செய்தி தேடி எங்கும் ஓட வேண்டாம். நூல்களின் பக்கங்களில் மூழ்கி, மூச்சுத் திணற வேண்டாம் என்றேன். உங்கள் அனுபவங்களை எழுதுங்கள், வாழ்வில் வென்ற தருணங்களை, தோல்வியைத் தழுவிய நிமிடங்களை, சாதித்த சாதனைகளை, சோதனையின் பிடியில் சிக்கி வேதனையால் புழுவாய்த் துடித்திட்ட யுகங்களை எழுதுங்கள் என்றேன்.

      மகிழ்ந்தால் நம்மோடு சேர்ந்து மகிழவும், வேதனையென்றால், நமக்காக வருந்தி, துயர் துடைக்க, வார்த்தை என்னும் கரம் கொண்டு ஆறுதல் மொழி பேசி, அரவணைக்க, வலைப் பூவின் உடன் பிறவா உறவுகள், நட்புகள், உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வாருங்கள் வலைப் பூ என்னும், அன்பு மயமான உலகில் ஒன்றிணைவோம் என்றேன்.

      நண்பர்களே, இரண்டு நாள் பயிலரங்கின் நிறைவில், கவிஞர் முத்து நிலவன் அவர்களின் முயற்சியால், வலையுலகிற்கு, நாற்பது புதிய பதிவர்கள் கிடைத்திருக்கிறார்கள். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்கள் பதிவர்களாய் உருவெடுத்துள்ளனர்.

உள்ளன்பு ஊற்றி  ஊற்றித்
தமிழை வளர்க்கும் சங்கம் ஒன்று
சிங்கப் புலவரைச்  சேர்த்தமைத்  தார்கள்.
உணர்ச்சியை, எழுச்சியை, ஊக்கத்தை யெலாம்
கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள்
சுடர்கவி  தொடங்கினர். பிறந்த்து தொழும்பு
கற்கண்டு மொழியில் கற்கண்டு கவிதைகள்
வாழ்க்கையை வானில், உயர்த்தும் நூல்கள்
தொழில் நூல், அழகாய் தொடுத்தனர்  விரைவில்
காற்றி லெல்லாம் கலந்த்து கீதம்
சங்கீ  தமெலாம்  தகத்தகா  யத்தமிழ்

என்பார் பாரதிதாசன். பாவேந்தரின் கனவை கணினி வழி மெய்ப்படுத்த முயற்சியினைத் தொடங்கி விட்டார் கவிஞர் முத்து நிலவன்.

     நண்பர்களே, இப்பயிலரங்கின் விளைவாய், புதுக்கோட்டையில், புதிதாய் ஓர் அமைப்பு, தமிழை உலகெலாம் கணினி வழி எடுத்துச் செல்ல, கணினித் தமிழ்ச் சங்கம் மலர இருக்கின்றது.

     கணினித் தமிழ்ச் சங்கம், சாதனைகள் பல படைக்க நாமும் வாழ்த்துவோம். தமிழாசிரியர்களின் முயற்சியினைப் போற்றுவோம்.


     

12 அக்டோபர் 2013

தஞ்சைக்கு வந்த சீனா

                                                     ஓவியம்  தருவாய், சிற்பம்
                                                               உணர்விப்பாய், கவிதை  யூட்டக்
                                                     காவியம் தருவாய், மக்கள்
                                                              கலகல வெனச்சி ரிப்பு
                                                    மேவிடும்  விகடம்  சொல்வாய்
                                                            மின்னிடும்  காதல்  தந்து
                                                    கூவுவாய், வீரப் பேச்சுக்
                                                            கொட்டுவாய்க்  கோலத்  தாளே   
எனப் பத்திரிக்கையின் மகத்துவத்தைப் பாடுவார் பாவேந்தர் பாரதிதாசன். நண்பர்களே, இக்கவிதை வலைப் பூவிற்கும் கச்சிதமாய்ப் பொருந்துகிறதல்லவா?

யாதும்  ஊரே  யாவரும்  கேளிர்
என்பார் கனியன் பூங்குன்றனார். கேளிர் என்றால் சுற்றம், நண்பர், உறவினர் என்பது பொருளாகும். நண்பர்களே, கனியன் பூங்குன்றனாரின், இவ்வரிகளுக்கு உயிர் கொடுத்து, மெய்ப்பித்து வருவது வலைப் பூ அல்லவா?

     நண்பர்களே, வலைப் பூ நமக்கு புதுப் புது உறவுகளை, நண்பர்களை, நாள்தோறும் வற்றாத அட்சய பாத்திரமாய் வழங்கிக் கொண்டே இருக்கிறது.

     நண்பர்களே, வலை உலகின் அட்சய பாத்திரமே என் இல்லம் நாடி வந்தது, எங்களையும், தன் சுற்றமாய், நட்பாய், உறவாய் இணைத்துக் கொண்டது என்று கூறினால் நம்புவீர்களா?

     உண்மை நண்பர்களே, உண்மை.

     கடந்த 7.10.2013 திங்கட் கிழமை காலை 8.30 மணியளவில், தஞ்சைக்கு, என் இல்லத்திற்கு, தன் மனைவியுடன் வருகை தந்தார் அன்பின் சீனா.


    


     தஞ்சையில் பிறந்தவர். மதுரையில் வளர்ந்தவர். சென்னையில் பணியாற்றி, மீண்டும் மதுரையில் குடிபுகுந்தவர். சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் மதுரையில், வலைச்சரம் வைத்துத் தமிழ் போற்றுபவர்.

     தமிழ் கற்றவர். புலவர் இல்லை. ஆனால் புரவலர்.

     நாமெல்லாம் கணினியில் எழுதி, நமது எழுத்துக்களைக் கண்டு மகிழ்கிறோம். இவரோ பிறரை எழுதவைத்து அழகு பார்ப்பவர். புத்தம் புது வலை உலக எழுத்தாளர்களை அறிமுகப் படுத்துவதில் ஆனந்தம் அடைபவர்.

வலைப் பதிவு உலகின்
பிதாமகர்
வலைச் சரம்
நிருவாகக் குழுவின் தலைவர்.

எனக்கு எழுதுவதில் இருந்த இன்பத்தை விட, பதிவுகளைப் படித்துப் பார்ப்பதிலும், பொருள் பொதிந்த மறுமொழிகள் எழுதியதிலும் அதிக இன்பம் பெற்றேன். அதிக நேரம் செலவிட்டேன். அதிக நண்பர்களைப் பெற்றேன் என்கிறார்.

      சொல்ல மறந்து விட்டேன் நண்பர்களே இவரது முழுப் பெயர் சிதம்பரம் காசி விஸ்வநாதன் என்பதாகும். காரைக் குடியினைச் சேர்ந்தவர். சிதம்பரம் என்னும் பெயரினை அங்குள்ளோர், சீனா தானா என்றுதான் அழைப்பார்கள்.

     இவரோ தானா வைத் தனியே விட்டு விட்டு, அன்பை இணைத்துக் கொண்டார். அன்பின் சீனா ஆனார்.

     அன்பின் சீனா அவர்களின் மனைவி திருமதி மெய்யம்மை ஆச்சி.

    ஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன். ஆனால் படித்தால்தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்றபோது சுவைக்கவில்லை கல்வி. கற்பித்தபோது சுவைத்தது. என் சொல்லைக் கேட்டு சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன். இதுதான் நான், இது – மெய். இதைத் தவிர வேறில்லை எனக்கு என்று கூறுகிறார்.

வாக்கு கற்றவன் வாத்தியார்
என்பர் நம் முன்னோர். இவர் முழுமையாக வாக்கு கைவரப் பெற்றவர். இவரது பேச்சு தமிழருவி.

     தற்பொழுது இலண்டனில் வசிக்கின்ற, இவரது மகள் கூறுவாராம்

                    எனது
                    தாயும் தந்தையும்
                    திருக்குறளின்
                    இரண்டு அடிகள்.

     திருமதி மெய்யம்மை ஆச்சி அவர்களும், ஒரு வலைப் பூ வைத்திருக்கிறார். வலைப் பூவின் பெயரே, இவரது உள்ளத்தை நமக்கு நன்கு உணர்த்தும்.

பட்டறிவும் பாடமும்

          நான் பிறந்தது தஞ்சையில். எட்டாம் வகுப்பு வரை படித்தது தஞ்சையில். 1963 ஆம் ஆண்டு மதுரையில் குடியேறினோம். தஞ்சை மண்ணில் கால் பதித்து, ஆண்டுகள் 50 கடந்து விட்டன. பிறந்த வீட்டினையும், படித்த பள்ளியினையும், மீண்டும் ஒரு முறை பார்க்க ஆவலாய் உள்ளேன் என எனக்கு முன்னரே மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் அன்பின் சீனா.

ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
நினைவலைகளை நோக்கி ஓர் இனிய பயணம் தொடங்கினோம்.
 
மருத்துவர் தம்பையா
    முதன் முதலில் அகத்தியர் இல்லம் சென்றோம். அகத்தியர் வாழும் இல்லம் என்னும், எனது முந்தையப் பதிவினைப் படித்தமையால், முதலாவதாக அகத்தியர் இல்லம் செல்ல விரும்பினார்.

     அகத்தியர் இல்லத்தில், மருத்துவர் தம்பையா அவர்களை அறிமுகப்படுத்தினேன். ஐந்து நிமிடம், பத்து நிமிடமல்ல, இரண்டு மணி நேரத்திற்கும் மேல், பேசினர், பேசினர், பேசிக்கொண்டே இருந்தனர்.

                 செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
                 வயிற்றுக்கும் ஈயப் படும்

     தமிழாசிரியை திருமதி மெய்யம்மை ஆச்சியும், தமிழ் உணர்ந்த ஞானி தம்பையா அவர்களும், பேசுவதைக் கேட்டேன், கேட்டேன், மெய் மறந்து கேட்டுக் கொண்டேயிருந்தேன்.

     அன்பின் சீனா அவர்கள் கேட்டார், மனம் என்பது நமது உடலில் எங்கிருக்கிறது?

     அதன்பின் நடந்த உரையாடலை விவரிக்கும் வயதோ, அறிவோ, அனுபவமோ எனக்கில்லை. மிகவும் தத்துவார்த்தமான உரையாடல் அது. பரவச நிலையில் அமர்ந்திருந்தேன்.


   
சுமார் இரண்டு மணி நேரம் கழித்து, அகத்தியர் இல்லத்தில் இருந்து, புறப்பட மனமின்றி புறப்பட்டோம். புறப்படுவதற்கு முன் அகத்தியர் இல்லத்தின், அருட்பெருஞ் ஜோதி அறக்கட்டளையின் சார்பாக, தினந்தோறும் நடத்தப் பெறும் அன்னதானத்தின் ஒரு நாள் செலவினை தான் ஏற்பதாகக் கூறி ரூ.3000 நன்கொடை வழங்கினார்.

    
யானையை விழுங்கும் பாம்பு

தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சென்றோம். நண்பகல் 12.00 மணி. காலை ஊன்ற இயலவில்லை. வெயில் சுட்டுப் பொசுக்கியது, கோயிலில் நடக்கவே இல்லை. ஓடினோம்.

     சீனா அவர்கள், தான் பிறந்த வீடு, மேல வீதியும் தெற்கு வீதியும் சந்திக்கும் இடத்தில், சங்கட மடத்தினை ஒட்டியவாறு இருந்தது என்றார். இரு வீதிகளும் இணையும் இடத்திற்குச் சென்றோம். புதுப் புதுக் கட்டிடங்கள். இடையே இரண்டே இரண்டு பழமை மாறாத ஓட்டு வீடுகள்.

     இடது புறம் இருக்கிறதே ஒரு ஓட்டு வீடு, வீட்டின் முன் புறம் ஒரு சிறிய பெட்டிக் கடை. இந்த வீடு, இந்த வீடுதான் நண்பர்களே, நமது அன்பின் சீனா அவர்கள் பிறந்த வீடு. மழலையாய் தவழ்ந்த வீடு.







முகம் நிறைந்த மகிழ்வோடு, வீட்டினையே பார்த்துக் கொண்டு நிற்கிறார். வீட்டிற்குள் செல்ல முடியுமா? அனுமதிப்பார்களா? என்ற ஏக்கம் கண்களில் தெரிந்தது. நான் மெதுவாக, பெட்டிக் கடையில் இருந்த பெண்மணியிடம் விவரத்தைக் கூறினேன். சார், நீங்க கரந்தைதானே? என்றார். ஆம் கரந்தைதான். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றேன் என்றேன். சார், நானும் சங்கத்தில்தான் படித்தேன். இது என்னுடைய வீடுதான். தாராளமாக வீட்டினுள் சென்று பாருங்கள் என்றார்.


     அடுத்த நொடி சீனா குழந்தையானார். வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தார். நண்பர்களே, 50 ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் பிறந்த வீட்டினைப் பார்ப்பதற்கு இணையான மகிழ்ச்சி ஏதேனும் இருக்கிறதா என்ன?


       
 அன்பின் சீனா அவர்கள் சிறுவனாய் இருந்த பொழுது, சீனாவின் நண்பர்கள் பலர், கல்வி பயின்ற பள்ளி, கல்யாணசுந்தரம் மேனிலைப் பள்ளி. சென்றோம். அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு பாண்டியராஜன் அவர்கள் எனது நண்பர். தலைமையாசிரியரைச் சந்தித்தோம். தாராளமாகப் பள்ளியைச் சுற்றிப் பாருங்கள் என்றார். கண்களில் மகிழ்ச்சி மின்ன, ஒவ்வொரு வகுப்பாகப் பார்த்தார் சீனா. சில மணித்துளிகள் கடந்த பின் அங்கிருந்து புறப்பட்டோம்.

     ஒவ்வொரு மனிதனாலும், மறக்க இயலாத பள்ளி என்று ஒன்று இருக்குமானால், அது அவர்கள் முதன் முதலில் கல்வி கற்க காலடி எடுத்து  வைத்த பள்ளியாகத்தான் இருக்கும். இதோ, இதுதான் நண்பர்களே, அன்பின் சீனா அவர்கள், அரைக்கால் டிராயர், சட்டையுடன், ஐந்து வயதில் தயங்கித் தயங்கி நுழைந்த முதல் பள்ளி. அன்பின் சீனா அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஐந்தாண்டுகள் தொடக்கக் கல்வியைப் பயின்ற பள்ளி.


  
  
 அ,ஆ, ..... எனத் தமிழ் எழுத்துக்களை சீனாவின் மனதில் முதன் முதலில் விதைத்த பள்ளி.

டி.கே.சுப்பையா நாயுடு தொடக்கப் பள்ளி

     இப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும், எனது நண்பர் திரு ஆறுமுகம் அவர்கள் அன்போடு வரவேற்றார். தலைமையாசிரியை முகம் மலர வரவேற்றார். சிறிய பள்ளிதான். எனினும் ஆயிரம், ஆயிரம் இளம் சிறார்களுக்கு எழுத்தறிவித்த ஆலயமல்லவா.



       தலைமையாசிரியர் அறையின் சுவர்களில் மாட்டப் பெற்றிருந்த படங்களை சீனா ஆர்வமுடன் பார்க்கிறார். சீனா அவர்களின் தலைமையாசிரியர் திரு வேணுகோபால் என்பவர், ஆசிரியர் தினம் கொண்டாடப் படுவதற்கு காரண கர்த்தாவான, மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருட்டிணன் அவர்களிடமிருந்தே, நல்லாசிரியர் விருது பெறும் படம் சீனாவின் கண்களைக் கவர்ந்தது. எனது தலைமையாசிரியர், எனது தலைமையாசிரியர் என குழந்தைபோல் கூறினார்.

      சீனா அவர்கள் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளைப் பயின்ற பள்ளி வீரராகவா மேனிலைப் பள்ளி. மங்கல விலாஸ் எனப்படும் அரசர் காலத்துக் கட்டிடம். தரைத் தளத்தில் ஒரு காலத்தில் நீதி மன்றம் இயங்கி வந்தது. முதல் தளத்தில் பள்ளியின் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகள் இயங்கி வருகின்றன.

     இன்று தரைத் தளம் பயன்பாடின்றி பூட்டப் பட்டுள்ளது. மெதுவாகப் படிகளில் ஏறி, முதல் தளத்திற்குச் சென்றோம். அங்கிருந்த ஆசிரியைகள் வரவேற்றனர்.

     சீனா அவர்கள் அப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதை அறிந்தபோது, அந்த ஆசிரியைகளின் மகிழ்ச்சி இரட்டிப்பானது.


     இதோ, இதுதான் எனது வகுப்பு என்றார் சீனா. அங்கு வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர்களிடம் சிறிது நேரம் பேசுங்களேன் என்றேன்.


     மாணவர்களே, உங்களைப் போல் சிறுவனாய் நான் பயின்ற பள்ளி இது. நான் பயின்ற வகுப்பு இது. இன்று நான் வாழ்வின் உயர்ந்த நிலையில் இருப்பதற்கு இந்த பள்ளிதான் காரணம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கடந்த நிலையில், எனது பள்ளியை, எனது வகுப்பைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் இன்று இங்கு வந்துள்ளேன். மாணவர்களாகிய நீங்கள், நல்ல முறையில் பயின்று, என்னைப் போல் வாழ்வில் உயர வேண்டும் என்று மாணவர்களை வாழ்த்தினார்.




     அடுத்த நொடி மாணவர்கள், அன்பின் சீனா அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். கை கொடுத்து மகிழ்ந்தனர். தங்களது புத்தகத்தின், முதல் பக்கத்தில் கையொப்பமிட்டுக் கொடுங்கள் எனப் புத்தகத்துடன் சீனாவைச் சுற்றி வளைத்தனர்.

     ஒவ்வொரு மாணவனுக்கும் கையொப்பமிட்டுக் கொடுத்தார். அப்பொழுது அவர் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே. தான் பயின்ற பள்ளியில், தான் பயின்ற வகுப்பில் அமர்ந்து, மாணவர்களுக்கு ஆட்டோகிராப் போடும் பொழுது ஏற்படும் இன்பத்திற்கு எல்லைதான் ஏது. இதற்குத் தானே ஆசைப் பட்டார் அன்பின் சீனா.

     நேரம் பிற்பகல் 2.30 ஆகிவிட்டதால், வீட்டிற்குத் திரும்பினோம். சிறிது நேர ஓய்வு. மீண்டும் 3.30 மணிக்குப் புறப்பட்டோம்.
மணி மாறன
     சரசுவதி மகால் நூலகம் சென்றோம். சுற்றுலா வந்த மாணவ, மாணவியர் வரிசையாய் நூலகத்திற்குள் சென்று கொண்டிருந்தனர். சரசுவதி மகால் நூலகத்தில் பணியாற்றும், எனது நண்பர் மணி.மாறன் என்கிற சரபோஜி அவர்களைச் சந்தித்தோம். நூலகத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் அழைத்துச் சென்று விவரங்களை எடுத்துரைத்தார்.

     பின்னர் அருங்காட்சியகம் பார்த்தோம். எனது அலைபேசி அழைத்தது. மறு முனையில் ஹரணி. எங்கிருக்கிறீர்கள் என்றார். அரண்மனையில் என்றேன். அடுத்த பத்தே நிமிடங்களில் நேரில் வந்தார். தஞ்சையின் மிக முக்கியப் பதிவர் ஹரணி. அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்.


ஹரணி
அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய திமிங்கலத்தின்
எலும்புக் கூட்டின் தலைப் பகுதியில் சீனாவுடன் ஹரணி
திமிங்கலத்தின் வால் பகுதியில் சீனாவுடன் நான்

     திருமதி மெய்யம்மை ஆச்சி அவர்கள் அண்ணாமலையில் பயின்றவர். ஹரணியோ அன்னாமலையில் பணியாற்றுபவர். கேட்கவும் வேண்டுமா? அதிலும் ஹரணிக்கு, அன்பின் சீனாவுடனும், திருமதி மெய்யம்மை ஆச்சியுடனுமான முதல் சந்திப்பு இது. உரையாடல் நீண்டு கொண்டே சென்றது. நண்பர்களே, மெத்தக் கற்றவர்களின் உரையாடலைக் கேட்பதும் இன்பம்தானே. கேட்டேன், ரசித்தேன்.

     பின்னர். புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் சென்றோம். தொடர்ந்து மேல வீதியில் சங்கர நாராயண சாமி கோயில், காமாட்சி அம்மன் கோயில்.

    இரவு வீடு திரும்ப மணி 9.00 ஆகிவிட்டது. இருவரும் எனது இல்லத்திலேயே தங்கினர்.

     மறுநாள் காலை வைத்தீஸ்வரன் கோயில் செல்லப் புறப்பட்டனர். எனது மனைவியையும் உடன் அழைத்துச் சென்றனர். நான் பள்ளிக்குச் சென்றேன்.

     மாலை 4.00 மணியளவில் மூவரும் வீடு திரும்பினர். வைத்தீஸ்வரன் கோயிலில் வழிபட்டதை மறக்க இயலாது. அருமையான தரிசனம் என்றனர். பின்னர் பிரியா விடை பெற்று மதுரை புறப்பட்டனர்.

     நண்பர்களே வலையில் மீன்கள் சிக்கும். ஆனால் வலைப் பூவிலோ, புதுப் புது உறவுகள் மலர்ந்து மனம் வீசுகின்றன.