12 செப்டம்பர் 2013

யானையை விழுங்கும் பாம்பு

   

    நண்பர்களே, தஞ்சைப் பெரிய கோயிலை அறியாதவர்கள் யாருமிருக்க இயலாது. பலர் நேரில் கண்டு வியந்திருக்கலாம். இதுவரை நேரில் காணாதவர்களும் கூட, என்றேனும் ஒரு நாள் பெரியக் கோயிலில் தங்கள் காலடியினைப் பதித்திட வேண்டும் என்ற ஆவல், கனவு, இலட்சியம் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள்.

     தொழில் நுட்ப வசதிகள் ஏதுமில்லா அக்காலத்தில், ஆயிரமாண்டுகளுக்கு முன்னர், வானுயர எழுப்பப் பெற்ற, கற் கோயிலின் எழிலில், கம்பீரத்தில் மயங்கி, கோயிலின் வளாகத்திலுள்ள சில காட்சிகளை காணாமலேயே சென்று விடுவது இயல்புதான். அவ்வாறு பலரும் காணாத காட்சி ஒன்றினைத் தங்களுக்குக் காட்டிட விரும்புகின்றேன்.

     வாருங்கள் நண்பர்களே, தஞ்சைப் பெரியக் கோயிலுக்குச் செல்வோம். நண்பர்களே உங்களுக்குத் தெரியுமா? சென்ற நூற்றாண்டு மக்கள், இப்பெரியக் கோயிலைக் கட்டியவர் யார் என்பதைக் கூட அறியாதவர்களாகவே இருந்துள்ளனர். கிருமி கண்ட சோழன் என்னும் கரிகாலனால் கட்டப்பெற்றது என்று, பிரகதீஸ்வர மகாத்மியம் என்னும் வடமொழி புராணத்திலும், காடு வெட்டிச் சோழன் என்பவரால் கட்டப் பெற்றது என்று ஜி.யு.போப் அவர்களாலும் பதிவு செய்யப் பெற்றத் தகவல்களையே உண்மை என்று, நம் முன்னோர் நம்பி வந்தனர்.

     ஆங்கிலேய ஆட்சியின்போது, கல்வெட்டு ஆய்வாளராக நியமிக்கப் பெற்ற ஜெர்மன் அறிஞர் ஹுல்ஸ் என்பவரே, 1886 ஆம் ஆண்டில், பெரியக் கோயில் கல்வெட்டுக்களைப் படியெடுத்துப் படித்து, இக் கோயிலைக் கட்டியவர் இராஜராஜ சோழன் என முரசறைந்து அறிவித்த பெருமைக்கு உரியவராவார்.

     ஆம் நண்பர்களே, ஒரு ஜெர்மானியர் வந்து சொன்ன பிறகுதான், பெரிய கோயிலைக் கட்டியது யார் என்பதே இந்நூற்றாண்டு மக்களுக்குத் தெரிந்தது. நமக்கும் புரிந்தது.
 
கேரளாந்தகன் திருவாயில்
    
இராஜராஜன் திருவாயில்
நண்பர்களே, நாம் இப்பொழுது பெரிய கோயிலின் வாசலில் நிற்கிறோம். கேரளாந்தகன் திருவாயில், இராஜராஜன் திருவாயிலைக் கடந்து உள்ளே செல்வோம் வாருங்கள்.  இதோ நந்தி மண்டபம்.

     பன்னிரெண்டு அடி உயரமுள்ள, ஒரே கல்லினால் ஆன நந்தி, கம்பீரமாய் அமர்ந்திருக்கும் காட்சியைக் காணுகின்றோம். இந்த நந்தியைப் பற்றிப் பல கட்டுக் கதைகள் உலாவுகின்றன. அவை நமக்குத் தேவையில்லை நண்பர்களே. நந்தியைப் பற்றி நாம் அறிய வேண்டிய செய்தி ஒன்று உள்ளது.


     
    பன்னிரெண்டு அடி உயரமுள்ள இந்த நந்தியையும், நந்தி மண்டபத்தினையும் கட்டியவர் இராஜராஜ சோழனல்ல. வியப்பாக இருக்கின்றதா நண்பர்களே உண்மைதான்.

      நந்தி மண்டபத்தில் இருந்து இடது புறம் பாருங்கள். இடது புற பிரகாரத்தில், வராகி அம்மன் கோயில் தெரிகிறதல்லவா. அந்த வராகி அம்மன் கோயிலுக்கு அடுத்துள்ள, பிரகார மண்டபத்தில், அளவில் சிறியதாய் ஓர் நந்தி சோகமாய் அமர்ந்திருப்பது தெரிகிறதா? வாருங்கள் அருகில் சென்று பார்ப்போம்.


     

   இருந்த இடத்தை விட்டு, வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டு விட்ட சோகத்துடன் அமர்ந்திருப்பது போல் காட்சி தருகின்றதே, இந்த நந்திதான் உண்மையில் இராஜராஜ சோழன் வடிவமைத்த நந்தியாகும். பிற் காலத்தில், பெரிய கோயிலின் எழிலார்ந்த நெடிய உருவத்தோடு ஒப்பிடுகையில், இந்த நந்தி சிறியதாக இருப்பதாக, எண்ணிய நாயக்க மன்னர்களால் நிறுவப் பெற்றதே இன்றைய நந்தியும், நந்தி மண்டபமும் ஆகும்.



    
    வாருங்கள் நண்பர்களே, நந்தி மண்டபத்தைக் கடந்து, பெருவுடையாரைத் தரிசிக்க, முக மண்டபத்தின் படிக் கட்டுக்களில் ஏறுவோம் வாருங்கள். படிகளில் ஏறிவிட்டோம். ஓங்கி உயர்ந்த, முதல் நிலை வாயிலின் இடது புறம் பாருங்கள். விநாயகர். வலது புறம் பாருங்கள் விஷ்ணு துர்க்கை.

     நண்பர்களே, இதோ விநாயகருக்கு இடது புறமாகவும், விஷ்ணு துர்க்கைக்கு வலது புறமாகவும், இரண்டு துவார பாலகர்கள் நிற்கின்றார்களே பாருங்கள்.

     வாருங்கள், நிலை வாயிலின் இடதுபுறம், விநாயகருக்கு அடுத்துள்ள துவார பாலகரின் அருகில் செல்வோம் வாருங்கள். பாருங்கள் நண்பர்களே, நெடிதுயர்ந்த துவார பாலகர், பாம்பு ஒன்றினைத் தனது வலது காலால் மிதித்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள். இதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா? நன்றாக அந்த பாம்பினைக் கவனியுங்கள். அந்தப் பாம்பானது, ஒரு யானையினை விழுங்கிக் கொண்டிருக்கும் காட்சி தெரிகிறதல்லவா?



    


யானையின் பின்பாதி உடல், பாம்பின் வாய்க்குள் சென்று விட்ட நிலையில், முன்னங் கால்கள் இரண்டும் வெளியே இருக்க, துதிக் கையினை உயர்த்தி அவலக் குரல் எழுப்பி யானை பிளிறிடும் பரிதாபக் காட்சித் தெரிகிறதல்லவா? பாம்பின் வாயில் இருந்து, மீண்டு வர யானை போராடுவது புரிகிறதல்லவா?

     யானையை விழுங்கும் பாம்பு. உலகின் எம் மூலையிலும், காண இயலாத விசித்திரக் காட்சி. இதன் பொருள்தான் என்ன?

     இராஜராஜசோழன் பெரியக் கோயிலைக் கட்டிய காலத்தில் இருந்த பெரிய விலங்கு யானைதான். அந்த யானையினை ஒரு பாம்பு விழுங்குகிறது என்றால், அந்தப் பாம்பு எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும். எண்ணிப் பாருங்கள் நண்பர்களே. அவ்வளவு பெரிய பாம்பு, துவார பாலகரின் காலடியில், ஒரு மண் புழுவினைப் போல், சுருண்டு மிதிபட்டுக் கிடக்கிறது என்றால், அந்த துவார பாலகர் எவ்வளவு உயரமானவராக இருக்க வேண்டும். ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள்.

      நண்பர்களே, துவார பாலகரின் இடது கையினைப் பாருங்கள். அவ்வளவு பெரிய துவார பாலகர், தனது இடது கையினை கோயிலின் உள்ளே அமைந்திருக்கும், மகாலிங்கத்தை நோக்கி, வியப்புடன் காட்டுவதைப் பாருங்கள். நான் ஒன்றும் பெரியவனல்ல, உள்ளே இருக்கின்றாரே, அவரே மிகப் பெரியவர் என்னும் பொருள்பட கைகளைக் காட்டுவதைப் பாருங்கள்.

     நண்பர்களே, தஞ்சையிலே ராஜராஜேஸ்வரமடைய பரமசாமி அமர்ந்திருக்கும் விமானத்திற்குப் பெயர் தஷிணமேரு என்பதாகும். இக் கோயிலின் விமானம் பேரம்பலம். பேரம்பலம் என்பது ஒரு கட்டுமானப் பகுதி மட்டுமல்ல, பரவெளியாகிய அம்பலமாகும்.

     சிவமாக விளங்குகின்ற, நமது பிரபஞ்சமாகிய பரந்த வெளியை, பூஜிப்பதற்காக, ஒரு நிலைப் படுத்திக் கட்டப் பெற்றதே பெரியகோயிலின் விமானத்துள் காணப்படும் வெளியாகும். இங்கு எல்லையில்லாப் பிரபஞ்சம் பரவெளி, ஒரு எல்லைக்கு உட்பட்டு விமானத்தின் உட்கூடாகக் காட்சியளிக்கின்றது.

     நண்பர்களே, தாங்கள் சிதம்பரத்திற்குச் சென்றிருப்பீர்கள். சிதம்பரம் கோயிலில், நடராஜப் பெருமானை தரிசித்தவுடன், சிதம்பர இரகசியம் என ஓரிடத்தை தீட்சிதர்கள் காட்டுவார்கள். பார்த்திருப்பீர்கள்.

     அங்கு சுவற்றில் தங்கத்தால் ஆன, வில்வ இலைகள் தொங்கிக் கொண்டிருக்கும். அடுக்குத் தீப ஒளியிலும், கற்பூர தீப ஒளியிலும், திரைச் சீலையை விலக்கிக் காட்டும் பொழுது, பிரபஞ்சத்தில் ஒளிரும் கோடானு கோடி விண்மீன்கள், கிரகங்களின் பேரொளியை, நாம் அங்கு ஒளிரும் தங்க வில்வ இலைகளில் கண்டு, பிரபஞ்சமாகத் திகழும் ஆடல் வல்லானின் பேராற்றலை, உருவத்தை உணரலாம். பிரபஞ்சத்தை உணர்தலே சிதம்பர இரகசியமாகும்.

     சிதம்பரத்தைப் போன்றே, ஆதி அந்தமில்லாத பர வெளியின் பேராற்றலை உணர்த்துவதே தஞ்சைப் பெரியக் கோயிலாகும். ஆம் நண்பர்களே, இப் பிரபஞ்சமானது முடிவில்லாதது, எல்லையில்லாதது, பிரபஞ்சத்தின் பேராற்றல் அளவிடற்கரியது என்பதை உணர்த்துவதே, துவார பாலகர்களின் நோக்கமாகும். இதுவே பெரிய கோயிலின் தத்துவமுமாகும்.


      நண்பர்களே, இராஜராஜன் இச்செய்தியினை உணர்த்த முற்பட்டது, இன்று நேற்றல்ல. விஞ்ஞானம் வளர்ச்சி அடையாத, தொழில் நுட்பம் ஏதுமில்லாத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்.


     எனது அழைப்பினை ஏற்று, தஞ்சைப் பெரிய கோயிலுக்கு வருகை தந்தமைக்கு நன்றி நண்பர்களே. தங்களின் பொன்னான நேரம், பயனுள்ளதாகவே கழிந்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் சந்திப்போமா நண்பர்களே.

05 செப்டம்பர் 2013

தியாகம் போற்றுவோம், கல்வி போற்றுவோம்

     நான் ஒரு ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும். கடந்த 30.8.2013 வெள்ளிக் கிழமை, எனது பத்தாம் வகுப்பு மாணவியரை நோக்கிக் கேட்டேன்.

அடுத்த மாதம் செப்டம்பர் 5 என்ன நாள் தெரியுமா?

ஆசிரியர் தினம்
டாக்டர் இராதாகிருட்டிணன் பிறந்த நாள்
என பல குரல்கள் எழுந்தன.


       1920 ஆம் ஆண்டு, மைசூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவருக்கு, தங்கள் பல்கலைக் கழகத்திற்கு வந்து பணியாற்றுமாறு கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பெற்றது. வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அப் பேராசிரியர், மைசூர் பல்கலைக் கழகத்தில் தான் ஆற்றி வந்தப் பணியினைத் துறந்து, கல்கத்தா புறப்பட ஆயத்தமானார். புகை வண்டி மூலம் கல்கத்தா செல்ல ஏற்பாடு செய்திருந்தார். பயண நாளும் வந்தது.

       பயண நாளன்று, காலை முதலே, மைசூர் பல்கலைக் கழகத்தில், அப் பேராசிரியரிடம் பயின்ற மாணவர்கள், அவரின் இல்லத்திற்கு முன் குவியத் தொடங்கினர். நேரம் ஆக, ஆக மாணவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றது. பேராசிரியரை அழைத்துச் செல்வதற்காக, குதிரைகள் பூட்டப்பட்ட கோச் வண்டி, வீட்டின் முன் தயார் நிலையில் நிறுத்திவைக்கப் பட்டிருந்தது.

          பேராசிரியர் வீட்டை விட்டு வெளியே வருகிறார். பேராசிரியர் வாழ்க வாழ்க என மாணவர்கள் முழக்கமிடத் தொடங்குகின்றனர். பேராசிரியரை கோச் வண்டியில் அமர வைக்கின்றனர். வண்டியிலிருந்த குதிரைகளை அவிழ்த்து விட்டுவிட்டு, மாணவர்களே கோச் வண்டியை இழுத்துக் கொண்டு புகை வண்டி நிலையம் நோக்கி, தங்கள் பேராசிரியரை ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். பேராசிரியர் வாழ்க வாழ்க என்னும் முழக்கம் விண்ணை முட்டுகின்றது. இதுநாள் வரை உலகம் கண்டிராத அற்புதக் காட்சி. புகை வண்டி நிலையம் வந்தவுடன், கோச் வண்டியிலிருந்த தங்கள் ஆசிரியரை மாணவர்கள்,தங்களின் தோள்களில் சுமந்து செல்கின்றனர்.

     பேராசிரியர் பயணிக்க வேண்டிய தொடர் வண்டிப் பெட்டியை அடைந்தவுடன் கீழே இறக்கி, வாய் விட்டுக் கதறி அழுதவாறு பேராசிரியருக்கு பிரியா விடை தருகின்றனர். பேராசிரியரும் கலங்கிய விழிகளுடனும், குளிர்ந்த உள்ளத்துடனும், கையசைத்து விடைபெறுகின்றார்.

       பல்கலைக் கழகப் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும், இந்தியத் தூதராகவும் பணியாற்றி இந்தியக் குடியரசுத் தலைவராகவும் உயர்ந்த இம்மாமனிதர் டாக்டர் எஸ். இராதாகிருட்டினன் ஆவார். இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாளைத் தான், ஆசிரியர் தினமாக பாரதமே கொண்டாடி மகிழ்கின்றது.

     மாணவியரைப் பார்த்து மீண்டும் கேட்டேன். இதே செப்டம்பர் 5 ஆம் நாளுக்கு, வேறொரு சிறப்பும் உண்டு தெரியுமா? மௌனமே பதிலாய் கிடைத்தது.

     நண்பர்களே, மாணவியர் மட்டுமல்ல நாமும் கூட மறந்து போன ஒரு சிறப்பு இந்நாளுக்கு உண்டு.

     1908 ஆம் ஆண்டு ஜுலை ஏழாம் நாள். திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிமன்றம். நீதிபதி ஏ.எஃப். பின்ஹே தீர்ப்பு வழங்குகிறார். சுப்பிரமணிய சிவாவிற்கு அடைக்கலம் கொடுத்த உதவியதற்காக ஆயுள் தண்டனையும், நாடு கடத்தல் தண்டனையும், மேலும் திருநெல்வேலியில் மார்ச் ஒன்பதாம் நாள் ஆற்றிய சொற்பொழிவிற்காக மற்றொரு ஆயுள் தண்டமையினையும், மற்றொரு நாடுகடத்தல் தண்டனையினையும் விதிக்கின்றேன். குற்றவாளி இவ்விரு ஆயுள் தண்டனைகளையும், இரு நாடு கடத்தல் தண்டனைகளையும் ஒன்றாக அனுபவிக்க வேண்டும்.
     பேசியதற்காகவும், நண்பருக்கு உதவியதற்காகவும் இப்படியொரு தண்டனை நண்பர்களே. இந்தத் தண்டனைகளைப் பெற்றவர் யார் தெரியுமா?

       கைநோவக்  கல் நோவக் கல்லுடைத்துச்  செக்கிழுத்து
       மெய்  சோர்ந்தும் ஊக்கம்  விடாத நின்ற – ஐயன்
       சிதம்பரம் அன்றுசிறை  சென்றிலனேல்  இன்று
       சுதந்திரம்  காண்போமோ  சொல்
என்று பாடினாரே கவிமணி, அவ்வீர்ர் செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி அவர்களின் பிறந்த நாள்தான் செப்டம்பர் 5.


     ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கப்பல் விட்டாரே, அந்தக் கப்பல் ஓட்டியத் தமிழனின் பிறந்தநாள்தான், செப்டம்பர் 5

       வந்த  கவிஞர்க்கெல்லாம்  மாரியெனப்  பல்பொருளும்
       தந்த  சிதம்பரமவன்  தாம்தின்று  - சந்தமில்  வெண்
       பாச்  சொல்லைப்  பிச்சைக்கு  பாரெல்லாம்  ஓடுகிறான்
       நாச்  சொல்லும்  தோலும்  நலிந்து
என்று தன் சொத்து முழுவதையும் நாட்டிற்காக இழந்த பிறகு, தன் வறுமை நிலையத் தானே பாட்டில் பாடினானே, அந்தத் தியாகத் திருஉருவம் வ.உ.சி அவர்களின் பிறந்த நாள்தான் செப்டம்பர் 5.
 
வ.உ.சி இருந்த சிறை அறை
     
வ.உ.சி. இழுத்த செக்கு
சிறை உடையில் வ.உ.சி
             சுவாமியே  தந்தையே  தூயுற்ற  பெரியோய்

      அவாவியே  வந்தென்னை  ஆண்டருள்  ஈசா,
      மூன்றிர  திங்கள்  முரண்சிறை  இருந்தேன்
      இந்தவாரம்  எடுத்த நிலுவையில்
      ஐந்தி  லொன்றாக அருகிய  தென்னுடல்
      அரிசி  உணவுக்கு அளித்தனர்  அனுமதி
      பெரியவன்,  மற்றவன்  பேசான்  என்னோடு
      சீரிய  நின்னடி  சிறமேற்கொண்டு  யான்
      பாரிய  என்னுளப் பாரத்த்  தாய்க்கும்
      உரிமையோடு  பெற்றெனை  உவம்யொடு  வளர்த்த
      பெருமை  சேர்  அன்னைக்கும்  பிறர்க்கும்  எனது
      மெய்  மன  வாக்கால்  விரும்பிஇன்  றளித்தேன்
      தெய்வ  வணக்கமும்  சீர்தரும்  வாழ்த்துமே
எனச் சிறையிலிருந்தவாறு, தந்தைக்குக் கவிதையாய் கடிதம் எழுதினாரே, அந்த வ.உ.சி அவர்களின் பிறந்தநாள்தான் செப்டம்பர் 5.
 
வ.உ.சி அவர்களின் இறுதி ஊர்வலம்
மாணவியர் அனைவரும் ஆழ்ந்த அமைதியில், வியப்புடன் செய்தியைக் கேட்டனர். ஆம் மாணவிகளே, செப்டம்பர் 5, இராதாகிருட்டிணன் அவர்களின் பிறந்தநாள் மட்டுமல்ல, செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி அவர்களின் பிறந்த நாளுமாகும். இந்நன்னாளில் நமது வகுப்பு மாணவியர் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் கட்டுரைப் போட்டி ஒன்றினையும், பேச்சுப் போட்டி ஒன்றினையும் ஓவியப் போட்டி ஒன்றினையும் நடத்துவோமா? என்றேன். அனைவரும் மகிழ்ச்சியாக நடத்துவோம், போட்டியில் கலந்து கொள்ள தயார் என்றனர்
     போட்டிக்கானத் தலைப்பைக் கூறுங்கள் என்றனர். பேச்சுப் போட்டிக்கானத் தலைப்பு டாக்டர் இராதாகிருட்டினன் அல்லது செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி என்றேன்.

     கட்டுரைப் போட்டிக்கானத் தலைப்பு எனது ஆசிரியர்கள்,

     மாணவிகளாகிய நீங்கள் அனைவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து தொடங்கி ஒன்பது ஆண்டுகள் கல்வி பயின்று, தற்பொழுது பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றீர்கள். கடந்த பத்தாண்டுகளில், உங்களுக்கு ஆசிரியர்களாக இருந்தவர்களைப் பற்றியும், தற்பொழுது உங்களுக்கு ஆசிரியர்களாக இருப்பவர்களைப் பற்றியும் எழுதுங்கள். உங்களது ஆசிரியர்களைப் பற்றிய உங்கள் எண்ணங்களை எழுதுங்கள் என்றேன்.

     5.9.2013 வியாழக்கிழமை. ஆசிரியர் தினம். செக்கிழுத்தச் செம்மலின் பிறந்த தினம். காலை பேச்சுப் போட்டியினையும், கட்டுரைப் போட்டியினையும், ஓவியப் போட்டியினையும் நடத்தினேன்.

     நண்பரும் ஓவிய ஆசிரியருமான திரு எஸ்.கோவிந்தராசன் அவர்களும், நெசவு ஆசிரியரும் நண்பருமான திரு டி.கோபால் அவர்களும், பேச்சுப் போட்டியில் பங்கு பெற்றவர்களில், வெற்றியாளர்கள் மூவரையும், ஓவியப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் வெற்றியாளர்கள் மூவரையும் தேர்வு செய்து கொடுத்தனர்..

     கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு மாணவியர் எழுதியக் கட்டுரைகளைப் படிக்கத் தொடங்கினேன்.

     எனது ஆசிரியர்கள் என்னும் தலைப்பில் மாணவியரின் கட்டுரைகளைப் படிக்கப் படிக்க வியப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. முதன் முறையாக மாணவியர், தங்களது பாடப் பகுதியினைத் தாண்டி, தாங்களாகவே, சுயமாக எழுதிய கட்டுரை. பல மாணவியர் தங்களுக்கு 6 ஆம் வகுப்பில்,  7 ஆம் வகுப்பில், 8 ஆம் வகுப்பில் பாடம் நடத்திய ஆசிரியர்களைப் பற்றி, மறவாமல் குறிப்பிட்டு, எக்காரணத்தால் அவ்வாசிரியரைத் தங்களுக்குப் பிடிக்கும் என்பதையும் விரிவாக எழுதியிருந்தனர்.
    
      அனைத்து மாணவிகளின் கட்டுரைகளையும் படித்த பிறகுதான் தெரிந்தது, இம்மாணவிகள் வயதில் வேண்டுமானால் சிறியவர்களாக இருக்கலாம், ஆனால் உள்ளத்தால், சிந்தனையால் உயர்ந்தவர்கள். அறிவு முதிர்ச்சியினை அடைந்தவர்கள், எதிர்கால் வாழ்வைத் துணிவுடன் எதிர்கொள்ளக் காத்திருக்கும் வீராங்கனைகள் என்பது புரிந்தது.
பேச்சுப் போட்டியில் வென்ற பத்தாம் வகுப்பு மாணவியர்
ஓவியப் போட்டியில் வென்ற பத்தாம் வகுப்பு மாணவியர்
கட்டுரைப் போட்டியில் வென்ற பத்தாம் வகுப்பு மாணவியர்
கட்டுரைப் போட்டியில் வென்ற ஒன்பதாம் வகுப்பு எஃப் பிரிவு மாணவர்கள்
கட்டுரைப் போட்டியில் வென்ற ஒன்பதாம் வகுப்பு டி பிரிவு மாணவியர்
பரிசில்களை வென்ற பத்தாம் வகுப்பு மாணவியருடன் ஒரு குழுப் படம்

     மாலை பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வென்றவர்களுக்கானப் பரிசளிப்பு விழா. பள்ளித் தலைமையாசிரியர் திரு சொ.இரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தலைமையாசிரியர் வெற்றியாளர்களுக்கானப் பரிசில்களை வழங்கிப் பாராட்டினார். பள்ளி உதவித் தலைமையாசிரியர் நண்பர் திரு அ.சதாசிவம் அவர்களும், உடற்கல்வி ஆசிரியரும் நண்பருமான திரு துரை.நடராசன் அவர்களும், ஓவிய ஆசிரியர் நண்பர் திரு எஸ்.கோவிந்தராசன் அவர்களும், நெசவு ஆசிரியர் நண்பர் திரு டி.கோபால் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு,  சிறப்பித்தனர்.
      ஒரு சிறிய வகுப்பறையில் நடத்தினாலும், ஒரு நிறைவான விழாவாக, இவ்விழா அமைந்திருந்தது.


கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி    டாக்டர் எஸ்.இராதாகிருட்டினன்
நினைவினைப் போற்றுவோம்






01 செப்டம்பர் 2013

திருவள்ளுவர் தவச்சாலை

   
  

    
      வையத்துள்  வாழ்வாங்கு  வாழ்பவன்  வானுறையும்
      தெய்வத்துள்  வைக்கப்  படும்

என்றார் திருவள்ளுவர். இப்புவியில் வாழும்போதே, தங்கள் சொல்லால், எழுத்தால், செயலால், தங்கள் வாழ்க்கை முறையால் தெய்வத்திற்கு இணையாக வாழ்வாங்கு வாழ்ந்து வருபவர்கள் பலர், இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

     நண்பர்களே, நாம் அனைவரும், நமது வாழ்வின் பல்வேறு கால கட்டங்களில், பயணங்கள் பலவற்றை மேற்கொண்டவர்கள்தான். புனிதத் தலங்கள் பலவற்றைக் கண்டு, மெய்மறந்து வணங்கி, இறைவனோடு ஒற்றெணக் கலந்து பரவசப் பட்டவர்கள்தான்.

      நண்பர்களே, ஒரு முறை, ஒரே ஒரு முறை என்னோடு வருகிறீர்களா?அன்னைத் தமிழின் வளர்ச்சிக்காகவே தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும் அர்ப்பணித்து, தெய்வத்திற்கு இணையாக வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்ற ஒரு தமிழ் முனிவரின் தமிழ்த் தலத்திற்குத் தங்களை அழைத்துச் செல்ல விரும்புகின்றேன். வருகிறீர்களா?

     நன்றி நண்பர்களே, அழைத்தவுடன், சிறிதும் தயங்காது, மனதில் மகிழ்ச்சியோடும், உதட்டில் மலர்ச்சியோடும் பயணப்பட இசைந்தமைக்கு நன்றி.

     வாருங்கள், வாகனம் தங்களுக்காகத் தயாராகக் காத்திருக்கின்றது. அமருங்கள். புறப்படலாமா?

     இதோ தஞ்சையிலிருந்து புறப்பட்டு விட்டோம். இதோ திருச்சி சத்திரம் பேரூந்து நிலையம். இதோ நமது வாகனம் கரூர் சாலையில் பயணிக்கின்றது. வலது புறம் காவிரி. இடது புறம் சிறு சிறு சிற்றூர்கள். முத்தரச நல்லூரைத் தாண்டிவிட்டோம்.

     இதோ அல்லூர். இதுதான் நண்பர்களே, நாம் காண வந்த தமிழ்த் தலம். புண்ணிய பூமி.


     திருக்குறளுக்குக் கோயில் எழுப்பி, வள்ளுவமாய், வாழும் வள்ளுவராய் வாழ்ந்து வரும்,
தமிழ்க் கடல்
உலகப் பெருந் தமிழர்
செந்தமிழ் அந்தணர்
முதுமுனைவர் புலவர் இரா.இளங்குமரனார் அவர்களின்
திருவள்ளுவர் தவச்சாலை.


    
வணக்கம் ஐயா, வாருங்கள். நம்மை அன்போடு அழைக்கின்றார்.

     அகவை 85ஐக் கடந்தபோதும், மலர்ந்த முகம், ஒடிசலான தேகம், தெளிவான தமிழ்ச் சிந்தனை, இனிமையானச் சொற்களுக்குச் சொந்தக்காரர்.



     விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப் புத்தூர் அருகேயுள்ள, வாழவந்தாள் புரம் என்னும் சிற்றூரில், ராமு – வாழவந்தாள் தம்பதியினரின் அருமை மகனாய்த் தோன்றியவர்.

     பள்ளிக் கூடமே இல்லாத, வாழவந்தாள் புரத்தில், பள்ளிக் கூடம் ஒன்றினை உருவாக்கி, தானே ஆசிரியராகவும் பணியாற்றியவர். பின்னர் கரியவலம் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

     ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன், தனது குடும்பத்தினரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, தனது ஓய்வூதியத் தொகை முழுவதையும் செலவிட்டு, திருச்சி அல்லூரில் திருவள்ளுவர் தவச் சாலையினை நிறுவித், தமிழ் முனிவராய் வாழ்ந்து வருபவர்.

       திருக்குறள் வகுப்புகளைத் தமிழகம் முழுவதும் நடத்தி வருபவர். இதுவரை ஐயாயிரத்திற்கும் மேற்பட்டத் திருமணங்களை தமிழ் முறைப்படி நடத்தி வைத்துள்ளார். தொடர்ந்து நடத்தியும் வருகிறார். ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.

     இளங்குமரனார் எழுதிய திருக்குறள் கட்டுரைகள் என்னும் நூலின் பத்து தொகுதிகளை, 1963 இல் வெளியிட்டவர் யார் தெரியுமா? இந்தியத் திருநாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு.

     புதுமணை புகுவிழா, பூப்புனித நீராட்டு விழா, காதணி விழா, மணி விழா, பெயர் சூட்டு விழா மற்றும் இறுதிச் சடங்குகள் உட்பட அனைத்தையும், தமிழ் முறைப்படி. தூய தமிழிலே பாங்குடன் செய்து வருபவர்.

     தமிழில் எப்படி விழாக்களை நடத்துவது? என்பதை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ் நெறிக் கரணங்கள் என்னும் நூலொன்றினையும் எழுதி வெளியிட்டவர்.

     தனது காலத்திற்குப் பிறகும், இப்பணியினைத் தொடர்ந்து திறம்பட நடத்திட, தமிழகம் முழுவதும் தமிழறிஞர்கள் பலருக்கும் பயிற்சி அளித்து, தமிழின் பெருமையினைக் காத்து வருபவர்.

பணியுமாம் என்றும் பெருமை
என்பார் வள்ளுவர். இதற்குப் பொருள் விளங்காதவர்கள், ஐயா அவர்களைக் கண்ட ஒரு சில நொடிகளிலேயே, இக்குறளின் பொருளை முழுமையாய் உணர்வர்.

     தமிழ்க் கடல் இளங்குமரன் ஐயா அவர்கள் தனது வாழ்வியல் அனுபவங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளார். நூலின் தலைப்பு என்ன தெரியுமா? ஒரு புல்.

             மனிதரெலாம்  அன்புநெறி  காண்ப  தற்கும்
                   மனோபாவம்  வானைப்போல்  விரிவடைந்து
             தனிமனித  தத்துவமாம் இருளைப் போக்கிச்
                   சகமக்கள்  ஒன்றென்ப  துணர்வ  தற்கும்
             இனிதினிதாய்  எழுந்தஉயர்  எண்ண  மெல்லாம்
                   இலகுவது  புலவர்தரு  சுவடிச்  சாலை
             புனிதமுற்று  மக்கள்புது  வாழ்வு  வேண்டில்
                   புத்தகசா  லைவேண்டும்  நாட்டில்  யாண்டும்

எனப் பாடுவார் பாவேந்தர் பாரதிதாசன். பாவேந்தரின் எண்ணம் செயலாக்கம் பெற்ற இடம்தான் தமிழ்க் கடலின் இல்லம். இல்லம் என்பது தவறு நண்பர்களே. நூலகம் என்பதுதான் உண்மை. வீட்டிற்கொரு நூலகம் அமைக்கச் சொல்வார் பாவேந்தர். ஆனால் இளங்குமரனாரே நூலகத்தில், தனது இல்லத்தை அமைத்தவர்.

     பாவாணர் நூலகம். சுமார் இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள். மலைப்பு ஏற்படுகிறது. அத்துனைப் புத்தகங்களின் ஒவ்வொரு ஏட்டிலும் உள்ள எழுத்துக்கள் அனைத்தையும், கரைத்து ரசித்துக் குடித்தவர் இளங்குமரனார். திருக்குறளுக்கு இதுவரை இவ்வுலகில் எழுதப்பட்ட உரைகள் அனைத்தும் இவரிடம் தஞ்சம். இளங்குமரன் ஐயா அவர்களே இதுவரை, திருக்குறளுக்காக மட்டும் எழுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். வெளிநாட்டினர் உட்பட, யார் வேண்டுமானாலும், இங்கு வந்து தங்கி ஆய்வு மேற்கொள்ளலாம்.



     அடுத்ததாகக் கலைக் காட்சியகம். தமிழ் இனம், தமிழர் வாழ்வு, தமிழ் இலக்கியங்களுக்காகத் தொண்டாற்றிய, நூற்றுக் கணக்கானத் தமிழறிஞர்களின் படங்களைக் கொண்ட கலைக் காட்சியகம் ஒன்றினையும் தனது இல்லத்திலேயே ஏற்படுத்தி பராமரித்து வருகின்றார். இக்கலைக் காட்சியகம், இதுவரை நாம் கண்டிராத வேறொரு புதிய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

      இளங்குமரனார் ஐயா அவர்கள், தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழ் மாமலைகளின் அன்பிற்கு உரியவர். அப்பெரியோர்கள், இளங்குமரனாருக்குத், தங்கள் கைப்பட எழுதியக் கடிதங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
 
சோமசுந்தர பாரதியாரின் கடிதம்
               
மறைமலை அடிகளாரின் கடிதம்
                பார்க்கும் இடமெல்லாம் பல்கலைக் கழகம்
                பார்வை சரியாக இருந்தால்

                உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்
                உள்ளம் சிறுத்தால் உறவும் பகையே

                காரணம் சொல்பவன் கடமை செய்யான்
                தம்துயர் தாங்கார் பிறர்துயர் தீரார்

                வாழ்ந்த நாளிலேயே வீடுபேறு பெறாதவன்
                வீழ்ந்த பின்னரா பெறுவான்

கலைக் காட்சியகத்தின் சுவர் முழுவதும் காணப்படும் வாசகங்கள், நம்முள் எழுச்சியினையும், கிளர்ச்சியினையும், புதிய சிந்தனைகளையும் உண்டாக்குகின்றன.

     இல்லத்தின் பின்புறம், இயற்கையை மனிதம் பாழாக்காதிருக்க, நல் அறிவுரைகளை வாரிவழங்கும் இயற்கை நல நிலையம்.

     திருவள்ளுவர் தவச்சாலையின் வாயிற் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே செல்வோமானால், வலது புறத்தில் ஓர் ஆலயம்.

                    

                         
                       திருக்குறள் நம்மறை – நெறி

                      திருக்குறள் வாழ்வியல் நடைநூல்
                      அது, மாந்தரை மாந்தர் ஆக்கும்
                      அது, மாந்தரை சான்றோர் ஆக்கும்
                      அது, மாந்தரை தெய்வம் ஆக்கும்
                      மாந்தப் பிறவியின் நோக்கு, தெய்வமாதல்

என நமக்கு அறிவுறுத்தி, முதலில் மனிதனாகலாம் வா, என நம்மை அழைக்கிறது திருக்குறள் ஆலயம்.

      ஆலயத்தின் கருவறையில், குறளின் அறத்துப் பால், பொருட் பால், இன்பத்துப் பால் மூன்றும் மும் மலைகளாய் காட்சியளிக்கின்றது. நடுவினில திருவள்ளுவர்.

     மும் மலைகளும் சிறுசிறு கற்களால் வடிவமைக்கப் பட்டவை. இளங்குமரனார் ஐயா அவர்களின் திருவடி படாத ஊரே தமிழகத்தில் இல்லை எனலாம். தமிழகத்தில் தான் காலடி பதித்த, ஒவ்வொரு ஊரில் இருந்தும், 1984 முதல் 1994 வரை பத்தாண்டுகளில், இவர் சேகரித்த கற்களின் எண்ணிக்கை 1330.

     அறத்துப் பாலில் 380 குறள்கள். எனவே 380 கற்களை உடைய ஒரு மலை. பொருட் பால் பெரியது. மொத்தம் 700 குறட்பாக்கள். எனவே 700 கற்களை உடைய ஒரு பொருட்பா மலை. இன்பத்துப் பால் சிறியது. மொத்தமே 250 குறள்கள்தான். எனவே 250 கற்களை உடைய ஒரு சிறு மலை.

     திருக்குறளின் முப் பாலையும் குறிக்கும், மும் மலைகளுக்கு முன்னதாக, மனிதனின் இரு பாதச் சுவடுகள்.

     ஏன் தெரியுமா? திருக்குறள் என்பது படிப்பதற்கல்ல. பின் பற்றி நடப்பதற்கு என்பதனை உணர்த்தவே, இப்பாதச் சுவடுகள்.

     இத் திருக்குறள் ஆலயத்தில் தீப ஒளி வழிபாடு கிடையாது. ஊது பத்தி வழிபாடு மட்டும்தான். ஏன் தெரியுமா? இதற்குப் பெரும்புலவர் ஐயா அவர்கள் கூறும் விளக்கம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். அதனை அவரே கூறுகிறார் கேளுங்கள்.

     ஊது பத்தியினைப் பாருங்கள். அதன் உருவத்தினை நோக்குங்கள். ஒரு மெல்லிய குச்சியினை, நெருப்பினையும், புகையினையும், நறுமனத்தினையும் உண்டாக்கும் ஒரு பசை பற்றியிருக்கின்றது. ஊது பத்தியினைப் பற்றவைப்போமேயானால், குச்சியினை பசை பற்றியிருக்கின்றவரை நெருப்பு தொடரும். பற்றியிருக்கும் பசை முடிந்தவுடன் ஊது பத்தி நின்றுவிடும். அதுபோலத்தான் மனித வாழ்வும்.

    
நம் மனத்தினை ஆசை, பேராசை, வெறுப்பு, கோபம் என்றும் பற்று, பற்றியிருக்கும் வரைதான், போராட்டங்களும், வருத்தங்களும், துயரங்களும், வேதனைகளும். பற்றைத் துறப்போமானால் தெய்வ நிலையினை அடையலாம்.

     திருக்குறள் கோயில் வளாகத்திலேயே மன வள நிலையம் ஒன்றினையும் நடத்தி வருகிறார்.

     ஆண்டுதோறும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும், பயணம், பயணம், பயணம்தான். திருமணம், சொற்பொழிவு என்று ஓயாத பயணமே இவரின் வாழ்க்கை. ஆனால் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை அன்று மட்டும், உலகப் பெருந்தமிழரை, திருவள்ளுவர் தவச்சாலையில் சந்திக்கலாம்.

     ஒவ்வொரு வாரமும், செவ்வாய்க் கிழமையன்று, அல்லூரில் இருந்தும், பிற பகுதிகளில் இருந்தும், குடும்பப் பிரச்சினைகளைச் சுமந்து கொண்டு, மீள வழியின்றித் தவிக்கும் அன்பர்களுக்கு, தக்க மன நல ஆலோசனைகளை வழங்கி, அவர்களின் சிந்தனையினைத் தொடும் வண்ணம், எடுத்துரைத்து, புத்தம் புது மனிதராய் மாற்றி அனுப்புவதை வழக்கமாய் கொண்டுள்ளார்.

                  தேரிழுக்கச்  செல்வாரில்  தீயணைக்கச் செல்வாரே
                நேருயர்ந்த மேலார் நினை
என்னும் உன்னத எண்ணத்தின் வழி நின்று, உயரிய வாழ்வினை வாழ்ந்து வரும் இளங்குமரனார் ஐயா , அவர்கள் பேசத் தொடங்கினாலே தமிழருவி கொட்டும், தமிழமுதம் பொங்கும்.

      நா து என்னும் சொல்லொன்றினைக் கூறினார். சிலப்பதிகாரத்தில் நா து என்னும் சொல் வருகிறது. நா என்றால் நாக்கு. து என்றால் துணை. அதாவது பேச்சுத் துணை.

     ஒரு பெண் திருமனமாகி, புகுந்த வீட்டிற்குச் செல்லும் பொழுது, தன் கணவரின் சகோதரியே, புது மணப் பெண்ணிற்கு சிறந்த பேச்சுத் துணையாய், தோழியாய் அமைவார். எனவே கணவரின் சகோதரியைக் குறிக்கும் சொல்லே நா து என்பதாகும். இது ஒரு காரணப் பெயர். பின்னாளில் இப்பெயர் மருவி, மாறி இன்று, நாத்தனார் என வழங்கப் படுகிறது என்றார். பெரும் புலவர் இளங்குமரனார் ஒரு நடமாடும் தமிழ்க் களங்சியம்.


                    
                        நல்லோரைக் காண்பதும் நன்றே
                     நல்லோர் சொல் கேட்பதும் நன்றே
என உரைப்பர் நம் முன்னோர். அப்படிப் பட்ட ஒரு நல்லோரை, தமிழில் இமயம் போல், உயர்ந்தோரை, வள்ளுவத்தின் வழி நின்று வாழ்ந்து வருவோரைச் சந்தித்தது, தங்களுக்கும், மகிழ்ச்சியினை, மன நிறைவினை, புத்துணர்ச்சியினை, உங்கள் உதிரத்தில் கலந்திருக்கும் என நம்புகின்றேன் நண்பர்களே.

     இச்சிறியேனின் அழைப்பினை ஏற்று, என்னுடன் பயணித்தமைக்கு, நன்றி நண்பர்களே. மீண்டும் சந்திப்போமா..