02 அக்டோபர் 2011

பள்ளிக்காக...

                                முன்னும்  கொடுத்தார்  கரந்தைக்கல்லூரிதான்  முன்னுறவே 
                                 பின்னும்  கொடுத்தார்  புலவர்குழு  நலம் பெற்றிடவே
                                 மன்னும் தமிழ்க்கென்று  வாய்மூடு  முன்நிதி  வைத்து விட்டேன்
                                 என்னும்  ஏ.கே.வேலனார்  வாழ்க  செந்தமிழ்க்  கீந்து  வந்தே
                                                                                                                                     ...பாரதிதாசன்

     எலி ஏறி இறங்கலாம், பெருச்சாளி  சுரண்டலாம், கரப்பான், வண்டு மொய்க்கலாம், பூச்சி, புழு நெளியலாம்,வௌவால்  புழுக்கைப் போடலாம்..... ஆறறிவு படைத்த மனிதன் வந்தால் ஆகாதோ? அதிலும் பக்தியால் வந்தால் பாதகமா?
இந்த பகுத்தறிவுக் கனல் பறக்கும் வசனங்களைத் தனது நாடகத்தில் எழுதியவர் யார் தெரியுமா?
நான்கு சுவர்களுக்கிடையே நாற்பது மாணவர்களுக்கு ஆசிரியனாக, உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18 என்று அரைத்த மாவையே ஏன் அரைத்துக் கொண்டிருக்கிறாய்? நாலரைக் கோடித் தமிழர்களுக்குப் பாடம் சொல்ல அழைக்கிறேன் வெளியே வா
ஏ.கே.வேலன்
என பகுத்தறிவுப் பகலவனாம் தந்தைப் பெரியார் அவர்கள் வெளிப்படையாய்,  ஆசிரியப் பணியைத் துறந்து, சமூகப் பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்தது யாரைத் தெரியுமா? 
தமிழார்வமும் இயக்கப் பற்றும் நற்பண்புகளும் கொண்ட இவர், நமது இயக்கத்திற்குக் கிடைத்திருக்கும் அறப்போர் வீரர்களிலே ஒருவர், முக்கியமானவர். இலக்கியச் செறிவும், சரிதச் சான்றும் நிரம்பிய அரும்பிய அரிய கட்டுரைகளைத் தீட்டியவர். இவைகள் யாவற்றையும் விட அவருடைய குணம் என்னை மகிழ்விக்கிறது. இயக்கம் அவரால் வளமாகும் என நம்புகிறேன்
என அறிஞர் அண்ணாதுரை அவர்களால் பாராட்டப்பெற்றவர் யார் தெரியுமா?
அவர்தான் ஏ.கே.வேலன்.
     முல்லைக்குத் தேர் ஈந்தப் பாரியைப் பற்றிப் படித்திருக்கின்றோம். பார்த்ததில்லை. ஆனால் பாரியின் மறு உருவாய் தோன்றிய அ.கு.வேலன் நமது காலத்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1921 இல் தஞ்சாவூர், ஆலங்குடி எனும் சிற்றூரில் பிறந்தவர். பாபநாசத்திலும், அய்யம்பேட்டையிலும் கல்வி பயின்றவர்.தொடர்ந்து தஞ்சாவூரில் ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் நிறைவு செய்தவர்.
சி.அருணாசலனார்
     தஞ்சைக் கரந்தையிலே மாபெரும் தமிழ்ப் பணியாற்றிவந்த, இன்றும் தளராத் தமிழ்ப் பணியாற்றிவரும், கரந்தைத் தமிழ்ச் சங்கம், வேலனின் சிந்தனையை, தமிழ் மனத்தைக் கவர்ந்தது. 
     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின்போது, 1938 இல் தோற்றம் கண்டது கரந்தைப் புலவர் கல்லூரியாகும். சென்னைப் பல்கலைக் கழகத்தாரின் அனுமதியைப் பெற இயலாமல். இக் கல்லூரி தத்தளித்த காலத்திலே. மாலை நேர வகுப்புகள் மட்டுமே நடத்தப் பெற்றன. பகற் பொழுதில் ஆசிரியர் பயிற்சி வகுப்பு பயின்ற வேலன், மாலை வேலையில், கரந்தைப் புலவர் கல்லூரியின் மாலை நேர வகுப்பில் சேர்ந்து பயிலத் தொடங்கினார்.
     நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு, வித்துவான் மு.சடகோப ராமானுஜன், நீ.கந்தசாமி போன்றோரிடம் தமிழ் பயின்றார்.
     வேலன் அவர்களின் ஆசிரியர் பயிற்சிப் படிப்பு நிறைவுற்றதும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பெத்தாச்சி புகழ் நிலையம் என்னும் நூலகத்தில் மதிப்பியல் காப்பாளராக சில காலம் பணியாற்றினார். அறிவுப் பசியால் தவித்துக் கொண்டிருந்த வேலனுக்கு இப்பணி பெருவிருந்தாய் அமைந்தது. தமிழ் இலக்கியம் எனும் மாபெரும் கடலில் மூழ்கி முத்தெடுக்கத் தொடங்கினார்.
அண்ணாவின்வாழ்த்து
     தொடர்ந்து சிலகாலம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டினத் தொடக்கப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்திலேயே, தமிழ் மொழிக்குக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய, ஆற்றிவரும் பணிகளை எண்ணி, எண்ணி வியந்தார். தமிழில் செல்வாக்கோடு விளங்கும் இச்சங்கத்தின் தொடக்கப் பள்ளியோ, பொருட்செல்வம் இல்லாததால் கீற்றுக் கொட்டகையில் செயலாற்றிவரும் அவல நிலையைக் கண்டு மனம் வருந்தினார்.
      பின்னாளில் தந்தைப் பெரியாரின் அழைப்பினை ஏற்று, தமிழாசிரியர் பணியினைத் துறந்து சென்னை சென்றார்.
     நாடக ஆசிரியராக, கதாசிரியராக,வசனகர்த்தாவாக, சினிமா தயாரிப்பாளராக,இயக்குநராக என பன்முகப் பரிமானங்களை உடையவராய் உயர்ந்தார். புகழின் உச்சிக்கே சென்றார்.
     வேலன் அவர்கள் கதை, வசனம்,எழுதி இயக்கித் தயாரித்த முதல் படம் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதாகும். இப்படம்  நூறு நாட்களையும் தாண்டி ஓடி நல்ல வெற்றியை, நல்ல செல்வத்தை வாரி வழங்கியது. வேலன் வாழ்விலும்  வழி பிறந்தது,வசந்தம்  மலர்ந்தது.

காமராசருடன் ஏகேவி
        தனது முதல் வருவாயைக் கொண்டு செய்ய வேண்டிய செயல்,தனது பள்ளிக்கு நல்ல உறுதிவாய்ந்த ஒரு பெரிய கட்டிடத்தைக் கட்டிக் கொடுப்பதே என எண்ணிச் செயலில் இறங்கினார். தனது தந்தையின் பெயரால் அருணாசல நிலையம் எனும் பெயரில் ஒரு மாபெரும் கட்டிடத்தைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குக் கட்டி அர்ப்பணித்தார்.
 தங்கமே  தென்பொதிகைச்  சாரலே  தண்ணிலவே
 சிங்கமே  என்றழைத்துச்  சீராட்டும்  தாய் தவிர
 சொந்தமென்று  ஏதுமில்லை,  துணையிருக்க  மங்கையில்லை
 தூய  மணி  மண்டபங்கள்  தோட்டங்கள்  ஏதுமில்லை
 ஆண்டி  கையில்  ஓடிருக்கும்,  அதுவும்  உனக்கில்லையே
என்று கவியரசு கண்ணதாசன் அவர்களால் வியந்து பாராட்டப்பெற்றவரும், அன்றைய சென்னை மாகான முதலமைச்சருமான கர்மவீரர் காமராசர் அவர்கள், 1959 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 20 ஆம் நாள் அருணாசல நிலையத்தைத் திறந்து வைத்தார்.

      அருணாசல நிலையத்தினைத் திறந்து வைத்து, கர்மவீரர் காமராசர் அவர்கள் ஆற்றிய உரை, ஏ.கே.வேலன் அவர்களின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய உரையாகும்.
அருணாசல நிலையம் திறப்பு விழா
   
      உங்களுடைய விழாவிலே கலந்து கொண்டு, புதிய கட்டிடத்தைத் திறந்து வைப்பதற்கு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். பல திறப்பு விழாக்களை நடத்தி இருக்கிறேன், நடத்திக் கொண்டே இருக்கிறேன். நான் மந்திரியாக இருக்கும்வரை நடந்து கொண்டே இருக்கும். அப்புறம் கூட்பிடுவார்களோ மாட்டார்களோ எனக்குத் தெரியாது. அப்புறம் பார்த்துக் கொள்வோம். இங்கு திறந்து வைக்கும் விழாவிலே விசேசம் என்னவென்றால், நன்றி மறவாமல் தான் பயின்ற பள்ளிக்கூடத்திற்கு. தன்னுடைய தந்தையின் பெயரால் கட்டிடம் கட்டிக் கொடுத்திருக்கிறாரே அதுதான். நன்றியை மறவாதிருக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தை வள்ளுவர் எடுத்துச் சொன்னார். உலகத்தில் உள்ள எல்லோரும் சொல்லுகிறார்கள். எண்ணிப் பார்த்தால் நன்றி மறவாமல் இருப்பவர்கள் எத்தனைபேர் இருப்பார்கள்? மிக அரிதாக இருக்கின்றார்கள். அப்படி அரிதாக இருப்பதினால்தான் உயர்வாகப் பேசுகிறோம். நன்றியை மறவாமல் இருப்பது பெரிய காரியம், சின்ன காரியம் அல்ல. அதனால்தான், நன்றியை மறவாமல் யாராவது ஒருவர் செயல் செய்தால் அவரைப் போற்றிப் புகழ்கின்றோம். 

     முதலில் சம்பாதித்த பணம் எனறும் கேள்விப் பட்டேன்.எல்லோரும் சம்பாதித்துச் சேர்த்த பிறகு செய்வார்கள். வேறு வழியில்லை சம்பாதித்துச் சேர்த்தாயிற்றே என்று. தண்ணீரைத் தேக்கி வைத்தாயிற்று, எங்கேயாவது உடைத்து விட வேண்டும் அல்லவா? அதைப் போல செலவழிக்கிறவர்களும் உண்டு. இவர் அதைப் போலவும்  செய்யவில்லை. ஏதோ ஒரு படத்திலே பணம் சம்பாதித்தார். முதல் கைங்கர்யம் என்னவென்றால் அவர் இதற்குக் கொடுத்ததுதான். அப்படி என்றால் அவர் உள்ளத்திலே இந்த எண்ணம் எவ்வளளவு நாளாக இருந்திருக்கும்? திடீரென்று ஏற்பட்டது என்று நினைக்கிறீர்களா? நமது தமிழ்ச் சங்கம் அது கூரையாக இருக்கிறது, இடமில்லை, அவத்தைப் படுகிறார்கள், யாரும் உதவி செய்யவில்லையே, என்றைக்காவது ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் அவரது உள்ளத்திலே இருந்து கொண்டே இருந்திருக்கிறது. கிடைத்தவுடன் பணத்தைக் கொண்டு வந்து போட்டுவிட்டார். அதனால்தான் திடீரென்று முதலில் வருவாய் வந்தவுடனே முதல் காரியமாகச் செய்து விட்டார். காரணம் அதுதான். அப்படியில்லாவிட்டால் யாரும் முதலில் சம்பாதித்தவுடனே போடமாட்டார்கள்.

     வேலன் நல்ல புகழோடு பணத்தைச் சம்பாதித்தார், நல்ல காரியத்துக்குக் கொடுத்தார், பிச்சைப் போட்டால் கூட பாத்திரமறிந்து பிச்சை போட வேண்டும் என்று சொல்வார்கள். அதைபோல எதற்குச் செய்ய வேண்டுமோ அதற்குச செய்திருக்கிறார் வேலன். வேலன் அவர்கள் ஏராளமாக சம்பாதிக்க வேண்டும்.ஏராளமாகத் தருமம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. அதற்கான மனம் அவரிடம் இருக்கிறது. அவரைப் போலவே இது போன்ற காரியங்களை மற்றவர்களும் செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இந்தக் கட்டிடத்தையும், வேலன் அவர்களின் தந்தையாரின் படத்தையும், வேலன் அவர்களின் படத்தையும் திறநது வைக்கிறேன்.
அருணாசல நிலையம்
படிக்காத மேதை காமராசரின் பண்பட்ட இவ்வுரை, பல்கலைக் கழகங்களில் வைத்துப் பயிலப்பட வேண்டிய, பயிற்றுவிக்கப் பட வேண்டிய பாடமாகும். படித்தவர்களும், செல்வந்தர்களும் தங்கள் வாழ்நாளெல்லாம் பின்பற்ற வேண்டிய ஒரு செயலாகும்.
       ஏ.கே.வேலன் அவர்களின் நன்றியுரையோ, நாமெல்லாம் வாழ்நாள் முழுதும் நினைத்து நினைத்து, மகிழ்ந்து மகிழ்ந்து போற்றவேண்டிய, நம் வாழ்நாளில் ஒரு முறையேனும் பின்பற்ற வேண்டிய ஒரு செயலாகும்.

       ஒரு பழைய கதை உண்டு. கள்வன் ஒருவன் களவாடச் சென்றானாம். சென்ற இடத்தில் உறிக்கலயங்களைத் தேடிக் கொண்டு வருகின்ற பொழுது ஒரு கலயம் உருண்டு அவன் தலையிலே விழுந்து விட்டதாம். விழுந்தபொழுது அவன் உடல் முழுவதும் திருநீறு விழுந்து விட்டது. கலயம் விழுந்த அரவம் கேட்டு வீட்டுக்காரர்கள் விழித்துக் கொண்டு வந்து பார்த்தார்கள். அவனைத் திருடன் என்று பிடித்து அடிக்காமல், பெரிய அடியார் என்று காலிலே விழுந்து வணங்கி மரியாதை செய்தார்களாம். சாதாரணமாகத் திருட வந்த இடத்தில், திருநீற்றுக்கு இவ்வளவு மரியாதை அளித்து நம்மைப் பெரியவராக, அடியாராக மதிக்கின்றார்கள், எப்பொழுதுமே அடியாராக இருந்துவிட்டால் நாடெல்லாம் மதிக்கும், புகழும் என் நினைத்து அன்று முதல் துறவியானானாம். இப்படிக் கள்வன் துறவியானான் என்று கதை சொல்வார்கள். இன்று நீங்கள் தந்திருக்கின்ற இந்தப் பெருமையினைப் பார்க்கும் பொழுது நிரந்தரமாக என்றென்றும் இது போல பல நல்லறங்களைச் செய்ய என் மனம் விழைகின்றது.அதற்கான ஊக்கத்தையும், உழைக்கும் வன்மையையும், நல்ல மனத்தையும் நான் என்றென்றும் பெற்றிருக்க வேண்டும் என்று உங்களுடைய வாழ்த்தினை நான் விரும்புகின்றேன்.அதனைக் கேட்டுக் கொண்டு என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன்.
    ஏ.கே.வேலன் இன்று நம்மோடில்லை. இருப்பினும் வேலன் அவர்களால் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு அளிக்கப்பெற்ற அருணாசல நிலையத்தின் ஒவ்வொரு செங்கல்லும், வேலனின் பெயரை இவ்வுலகு உள்ளவரை ஓங்கி ஒலித்து, வாழ்த்திக் கொண்டே இருக்கும்.
      பாரிவேள் ஏ.கே.வேலன் அவர்களைப் பின்பற்றி, நாமும் நாம் பயின்ற பள்ளிக்கு ஏதேனும் ஓர் சிறு உதவியினைச் செய்வோமானால்,அதுவே  நாம் வேலன் அவர்களின் வாழ்வினை அறிந்தவர்கள், உணர்ந்தவர்கள் என்பற்கான எடுத்துக் காட்டாக அமையும்.

 இம்மாதம் அக்டோபர்  24 ஆம் நாள் 
பாரிவேள் ஏ.கே.வேலனின் 
90வது பிறந்த நாளாகும். 
இந்நன்னாளில் ஏ.கே.வேலன் அவர்களின்
நினைவினை, தொண்டினைப், புகழினை 
மனதில் ஏந்திப் போற்றுவோம்.



கலைமாமணி பாரிவேள் ஏ.கே.வேலனின் புகழ் வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்.


••••••••••••


கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளர்  
செம்மொழி வேளிர் திரு ச.இராமாநாதன் அவர்களின் 
பெருமுயற்சியின் விளைவாக, கடந்த 26.7.2007 திங்கட்கிழமையன்று 
பாரிவேள்  ஏ.கே.வேலன் அவர்களின் 
படத்திறப்பும்
கலைமாமணி ஏ.கே.வேலனின் வாழ்வும் பணிகளும் 
எனும் நூல் வெளியீட்டு விழாவும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
 இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன் அவர்கள்
பாரிவேள் ஏ.கே.வேலன் அவர்களின் 
திருஉருவப் படத்தினைத் திறந்து வைத்து நூலினை வெளியிட,
ஏ.கே.வேலன் அவர்களின் மூத்த மகனார்
கவிஞர் ஏ.கே.வி. விஞ்ஞானி அவர்கள்
முதற்படியினைப் பெற்றுக் கொண்டார்,

படத்திறப்பு
கலைமாமணி ஏ.கே.வேலனின் வாழ்வும் பணிகளும் நுல் வெளியீட்டு விழா

                                அசைவிலா   துழைத்திங்   கோங்கும்   அண்ணலே    அ.கு.வேல
                                திசையெலாம்   தமிழின்   மேன்மை   திகழ்தரச்   செய்யுங்க   ரந்தை
                                மிசைவளர்   தமிழ்ச்சங்   கத்தார்   விரும்பிநல்   வாழ்த்துக்   கூற
                                இசைமிகு   தந்தை   பேரால்   எழுப்பினை   நிலையம்,   வாழி
                                                                                               
                                                                                                                .... கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார்