01 நவம்பர் 2011

இராமானுஜனை உயர்த்திய ஆங்கிலேயர்கள்


இராமானுஜன்
     இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கணித மேதையான சீனிவாச இராமானுஜன், தனது புதியத் தேற்றங்களை, தனது புதிய கண்டுபிடிப்புகளை, இவ்வுலகம் இனங்கண்டு தன்னை ஏற்காதா? அங்கீகரிக்காதா? பாராட்டாதா? என்று எண்ணி எண்ணி, ஏங்கி ஏங்கி ஆண்டுகள் பலவற்றைக் கழித்தவர் என்ற செய்தி பலருக்கு வியப்பைத் தரலாம்.

     தனது கணித நோட்டுக்களை எடுத்துக் கொண்டு, சென்னையில் இருந்த பல கணிதப் பேராசிரியர்களைச் சந்தித்தார். தனது கணித ஆர்வத்தினை, தனது புதிய கண்டுபிடிப்புகளை விளக்கினார். ஆனாலும் இவர்கள் இராமானுஜனின் ஆராய்ச்சியின் பெருமையினையும்,  திறமையின் அருமையினையும் உணராதவர்களாயிருந்தனர்.

நாராயண அய்யர்
    குடும்பத்திற்ககாகவும், தனது வயிற்றிற்காகவும் சென்னைத் துறைமுகக் கழகத்தில் சாதாரண எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். மாத ஊதியம் ரூபாய் முப்பது. சென்னைத் துறைமுகக் கழகத்தின் தலைவராக இருந்தவர் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் என்பவராவார். துறைமுகக் கழகத்தில் தலைமைக் கணக்கராகவும், ஸ்பிரிங் அவர்களின் முழு நம்பிக்கையைப் பெற்றவருமாகப் பணியாற்றி வந்தவர் எஸ். நாராயண அய்யர் என்பவராவார்.

     நாராயண அய்யர் இராமானுஜனுக்கு மேலதிகாரி மட்டுமல்ல. இந்தியக் கணிதவியல் கழகம் என்ற கணித அமைப்பின் பொருளாளராகவும் பணியாற்றி வருபவர். கணிதவியல் ஆர்வலர்.இராமானுஜனின் கணிதத் திறமையைக் கண்டு வியந்த நாராயண அய்யர் சிறிது காலத்திலேயே, இராமானுஜனின் மேலதிகாரி, உடன் பணியாற்றுபவர் என்ற நிலையிலிருந்து மாறி, இராமானுஜனின் நண்பராகவும் ஆலோசகராகவும் மாறிப்போனார். துறை முகக் கழகத் தலைவரான சர் பிரான்சிஸ் ஸ்பிரிங்கிடம் இராமானுஜன் பற்றியும் அவரது கணிதத் திறமைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.பிரான்சிஸ் அவர்களும் இராமானுஜனை சென்னையில் உள்ள அறிஞர்கள் சிலரிடம் அனுப்பி , இராமானுஜனின் கணிதத் திறமைகள் குறித்து கருத்துக்களைக் கேட்டார். ஆனால் இவர்களால் இராமானுஜன் திறமையானவனா? இல்லையா? என்ற முடிவிற்கு வரமுடியவில்லை.
நடுவில் அமர்ந்திருப்பவர் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங்
     சென்னையில் இருப்பவர்களால் இராமானுஜன் பற்றியோ அவரது திறமைகள் பற்றியோ கருத்துக்களைத் தெளிவாக கூற இயலாததால், சர் பிரான்சிஸ் ஸ்பிரிங், நாராயண அய்யர் ஆகியோரின் ஆலோசனையின் பேரிலும், உதவியுடனும், இராமானுஜன் 1912 ஆம் ஆண்டின் இறுதியிலும் 1913 ஆம் ஆண்டின் துவக்கத்திலும், இலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகக் கணித மேதைகளுக்கு  தனது கணிதக் குறிப்புகள் அடங்கிய கடிததை அனுப்பினார்.
     ஹென்றி ஃபிரட்ரிக் பேக்கர் என்பவருக்கு தனது முதல் கடிதத்தை அனுப்பினார். இ.டபிள்யூ.ஹப்சன் என்பவருக்கு  தனது இரண்டாவது கடிதத்தை  அனுப்பினார். இருவரிடமிருந்தும் பதிலில்லை. எனவே தனது மூன்றாவது கடிதத்தை ஜி.எச்.ஹார்டி என்பாருக்கு அனுப்பினார்.

      இராமானுஜனின் கடிதத்தைப் படித்த ஹார்டி தன் பல்வேறு அலுவல்களால் அக்கடிதத்தை மறந்து போனார். ஆனால் அக்கடிதத்தில் கண்ட கணக்குகள் அவ்வப்போது ஹார்டியின் மனக்கன் முன்னே வந்து சென்றது. எனவே இராமானுஜனின் கடிதத்தை மீண்டும் படித்த ஹார்டி, தனது நண்பரும் கணிதப் பேராசிரியருமான ஜான் ஏடன்சர் லிட்டில் வுட் என்பவரைச் சந்தித்தார். இருவரும் இராமானுஜனின் கணிதக் குறிப்புகளை ஆராய்ந்தனர்.மூன்று மணி நேரத்திற்குமேல் பரிசீலித்த இருவரும், தாங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு கணித மேதையின் குறிப்புகள் தான் என்ற முடிவிற்கு வந்தனர்.

இ.எச்.நெவில்
          பிப்ரவரி மாதம் 8 ஆம் நாள் இராமானுஜனுக்குப் பதில் கடிதம் எழுதிய ஹார்டி,இராமானுஜன் உடனடியாக இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு வந்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமாய் அழைப்பு விடுத்தார்.

           அய்யங்கார் வகுப்பைச் சார்ந்தவரான இராமானுஜன், தங்கள் சமூக விதிகளின் படி, கடல் கடந்து செல்லக் கூடாது என்பதால்,தான் இலண்டனுக்கு வர இயலாத நிலையில் இருப்பதை தெரிவித்தவர் ஒரு வேண்டுகோளினையும் முன்வைத்தார்.நான் தற்சமயம் தங்களிடம் வேண்டுகோளாக முன்வைப்பதெல்லாம் ஒன்றுதான். நான் உண்ண  உணவின்றி அரைப் பட்டினியாக இருக்கும் ஒரு மனிதன். எனது மூளையைப் பாதுகாக்க, எனது வயிற்றிற்கு உணவு தேவையாக உள்ளது. இதுவே எனது முதல் தேவையாகும், தாங்கள் கருணையோடு எழுதும் கடிதம் எனக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்தோ அல்லது  அரசாங்கத்திடம் இருந்தோ , கல்வி உதவித் தொகையினைப் பெற்றுத் தருமாயின், அதுவே தாங்கள் எனக்குச் செய்யும் பேருதவியாக அமையும் என்று எழுதினார்.

ஜி.எச்.ஹார்டி
     இதற்கிடையில் ஸ்பிரிங் அவர்களால் இராமானுஜனின் கணிதக் குறிப்புகள் கில்பர்ட் வாக்கர் என்பவரிடம் காட்டப்பெற்றன. கில்பர்ட் வாக்கர் ட்ரினிட்டி கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றியவர். சிம்லாவில் இந்திய மெட்ரோலாஜிகல் துறைத் தலைவராகப் பணியாற்றி வருபவர். அலுவல் தொடர்பாக சென்னை வந்த கில்பர்ட் வாக்கரைத் தொடர்பு கொண்ட சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் இராமானுஜன் தொடர்பான செய்திகளைக் கூறி கணிதக் குறிப்புகளைக் காட்டினார்.அடுத்த நாளே கில்பர்ட் வாக்கர் சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளருக்குக் கடிதம் எழுதி, கணித ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இராமானுஜன், பொருளாதார தட்டுப்பாடின்றி ஆய்வினைத் தொடருவதற்கு உதவித் தொகை வழங்கி உதவிட வேண்டுமாய் வேண்டுகோள் விடுத்தார்.

     கில்பர்ட் அவர்களின் வேண்டுகோளின்படி, சென்னைப் பல்கலைக் கழகம், கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.75 வழங்கத் தொடங்கியது.சென்னைத் துறைமுகக் கழகத் தலைவர் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் அவர்களும், இராமானுஜனுக்கு ஊதியத்துடன் கூடிய நீண்ட விடுமுறையை வழங்கினார்.

    இந்நிலையில் டிசம்பர் மாத இறுதியில் ஹார்டி மீண்டும் இராமானுஜனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் கேம்ப்பிரிட்ஜ்  பல்கலைக்  கழகத்தைச் சார்ந்த கணிதப் பேராசிரியர் இ.எச்.நெவில் என்பவர் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்னை வருவதாகவும், அவரை இராமானுஜன் அவசியம் சந்திக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதே சமயம் ஹார்டி நெவிலிடம் ஒரு முக்கியப் பணியை ஒப்படைத்திருந்தார். இராமானுஜனை சந்தித்து அவரை இலண்டன் வருவதற்கு எப்படியாவது சம்மதிக்க வைக்க  வேண்டும் என்ற பொறுப்பை அளித்திருந்தார்.

லிட்டில் வுட்
     நெவிலும் இராமானுஜனும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சந்தித்தனர்.அப்பொழுது நெவில் தாங்கள் தொடர்ந்து சென்னையிலேயே இருப்பீர்களேயானால், இலண்டனில் இருக்கும் என்னாலோ, தங்களின் அபாரதத் திறமையை நன்கு உணர்ந்து வைத்திருக்கும் ஹார்டியாலோ, தங்களுக்குப் பெரிய அளவில் உதவி செய்ய இயலாது. தாங்கள் இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு வர இசைவு தெரிவிப்பீர்களேயானால், ஹார்டி உடனிருந்து உதவவும், தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை கணித இதழ்களில் வெளியிட்டு, தங்கள் திறமையை வெளி உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டவும் தயாராக உள்ளார். ஆகவே தாங்கள் எங்களது அழைப்பை ஏற்று இலண்டனுக்கு வர ஒப்புதல் வழங்க வேண்டும் எனக் கோரினார்.

     முதல் முறை அழைப்பு விடுத்த போது மறுத்த இராமானுஜன் இம்முறை இலண்டனுக்கு வருவதற்கு தன்னுடைய சம்மதத்தினைச் தெரிவித்தார்.

     இதனைத் தொடர்ந்து 1914 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 28 ஆம் நாள் பேராசிரியர் நெவில் அவர்கள், சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் பிரான்சிஸ் டௌபரி என்பாருக்கு ஒரு கடிதம் எழுதினார்.அக்கடிதத்தில்,
கில்பர்ட் வாக்கர் 
இராமானுஜன் என்னும் கணித மாமேதை சென்னையில் இருக்கிறார் என்பதை கண்டு பிடித்த நிகழ்வானது, கணித உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய செய்தியாகும்.உலக வரலாற்றில் இராமானுஜன் பெயர் உன்னத இடத்தைப் பெறும் அதே நேரத்தில், இராமானுஜன் இலண்டன் சென்றுவர அவருக்கு உதவிய வகையில் சென்னையும், சென்னைப் பல்கலைக் கழகமும் பெருமைப் படலாம் என்று எழுதி நிதி உதவி கோரினார்.

     சென்னைப் பல்கலைக் கழகமும் இராமானுஜன் இலண்டன் சென்று ஆராய்ச்சியில் ஈடுபட ஆண்டுக்கு 300 பவுண்ட உதவித் தொகையினை வழங்கியது.

இராமானுஜனின் கடிதம்
    
     1914 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் இலண்டனில் இராமானுஜன் கால்பதித்தார். ஐந்தாண்டுகள் இலண்டனில் தங்கி, இதுவரை எந்த இந்தியரும் தொடாத சிகரத்தைத் தாண்டியவர் என்ற சாதனையுடன் இராமானுஜன் 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் நாள் இலண்டனிலிருந்து புறப்பட்டு கப்பலில் தாயகம் திரும்பினார்.

     ஆங்கிலேயர்களின் ஆர்வமும் உதவியுமே,  இராமானுஜன் என்ற மிகப் பெரிய கணித மாமேதையினை இவ்வுலகிற்கு  வெளிச்சமிட்டுக் காட்டியது.

வாழ்க இராமானுஜன் புகழ்
.......................................

கணித மேதை சீனிவாசஇராமானுஜன் பற்றி ஹாலிவுட் திரைப்படம் 

 ரோஜர் ஸ்பாட்டிஸ் வூட்
           ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட திரைப்படமான Tomorrow Never Dies  எனும் திரைப்படத்தினை இயக்கியவர் ரோஜர் ஸ்பாட்டிஸ் வூட் என்பவராவார். இவர் தற்சமயம் சீனிவாச இராமானுஜன் பற்றிய திரைப்படம் ஒன்றினை இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். படத்தின் பெயர் The First Class Man என்பதாகும். இத்திரைப்படம் இராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமல்ல.
       இராமானுஜனின் திறமைகளை முதன் முதலில் கண்டடுபிடித்து, பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து, இராமானுஜனை இலண்டனுக்கு வரவழைத்த பெருமைக்குரியவர் பேராசிரியர் ஜி.ச்.ஹார்டி அவர்களாவார். ஐந்து ஆண்டுகள் இராமானுஜனின் உடனிருந்து, இராமானுஜனின் ஆய்வுத் தாட்களை, கண்டுபிடிப்புகளை உலகின் பார்வைக்குக் கொண்டு சென்று, இராமானுஜன் உலகப் புகழ் பெறக் காரணமாக விளங்கியவர் ஜி.எச்.ஹார்டி. இராமானுஜன் மற்றும் ஹார்டி இருவரின் நட்பை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது.
     கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகதில் நடைபெற்ற விழா ஒன்றில், இராமானுஜனை அறிமுகப்படுத்தும் பொழுது ஹார்டி உச்சரித்த வார்த்தைகளே The First Class Man என்பதாகும். இதே தலைப்பில் திரைப்படம் தயாராகவிருக்கின்றது.
                                                                                                                                                                                                                                    .................நன்றி The Hindu 16.10.2011
 


                                                                                                                                           .......நன்றி  The Hindu, Sunday,6.11.2011