13 அக்டோபர் 2012

கணிதமேதை சீனிவாச இராமானுஜன்


வலைப் பூ தோழர்களுக்கு,

     வணக்கம். அன்பர்களே நான் ஒரு கணித ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும். நான் எனது M.Phil., ஆய்விற்கு எடுத்துக் கொண்டத் தலைப்பு கணிதமேதை சீனிவாச இராமானுஜன் என்பதாகும்.

     கணித மேதை சீனிவாச இராமானுஜனின் 125 வது பிற்ந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் கணித ஆண்டாக அறிவிக்கப் பட்ட ஆண்டு இவ்வாண்டாகும்.

     கணித ஆண்டாகிய இவ்வாண்டில், கணித மேதையின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி சிறிது தூரம் நடக்கலாமா தோழர்களே. M.Phil., ஆய்வில் நான் கண்ட, உணர்ந்த சீனிவாச இராமானுஜனைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

     இராமானுஜன் கண்டுபிடித்த கணக்குகளை,  புதிய தேற்றங்களைப் பற்றி அலசுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக, கணித மேதை சீனிவாச இராமானுஜனை, எலும்பும், தசையும், இரத்தமும், உணர்வுக் குவியல்களை உள்ளடக்கிய, நம்மைப் போன்ற சக மனிதராக உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகின்றேன்.

     உண்ண உணவிற்கே வழியின்றி, வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த, இராமானுஜனின் உண்மை உருவத்தை, உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகின்றேன்.

      தோழர்களே. இதோ கால இயந்திரம் நமக்காகக் காத்திருக்கின்றது. வாருங்கள், வந்து இருக்கைகளில் அமருங்கள். சற்று பின்னோக்கிப் பயணிப்போமா?.

      2012, 2010,...........2000.......1947,.......1900,.....1887. இதோ கும்பகோணம். உச்சிப் பிள்ளையார் கோவிலும், சாரங்கபாணிக் கோவிலும் தெரிகின்றதல்லவா. வாருங்கள் கால இயந்திரத்திலிருந்து, இறங்கி, சாரங்கபாணிக் கோவிலுக்கு அருகிலுள்ள கிழக்கு சந்நிதி தெருவிற்குச் செல்வோம். இதோ இந்த ஓட்டு வீடுதான், இராமானுஜனின் வீடு. வாருங்கள் உள்ளே செல்வோம்.

அத்தியாயம் 1

     தென்னிந்தியாவின் புனிதத் தலங்களுள் மிக முக்கியமான தலம் கும்பகோணம் ஆகும். இது தென்னகத்தின் கங்கை என்று போற்றப்படும் காவிரி ஆற்றினையும், அரசலாற்றினையும், புனித மகாமகக் குளத்தினையும் உடைய கோவில் நகரமாகும்.

இராமானுஜனின் வீட்டிற்கு முன் நான்
     கும்பகோணம் சாரங்கபாணிக் கோவிலுக்கு அருகில், கிழக்கு சந்நிதித் தெருவில் உள்ள 17 ஆம் எண் வீடு ஒரு சாதாரண ஓட்டுக் கூரை வீடு. குடும்பத் தலைவர் சீனிவாச அய்யங்கார். இவரது சொந்த ஊர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள, திருச்சேறை என்று இன்று அழைக்கப்படும் திருச்சிறை ஆகும். இவரது மனைவி கோமளத்தம்மாள். இவரது சொந்த ஊர் ஈரோடு.

கோமளத்தம்மாள்
     திருமணமாகி நீண்ட காலமாகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லையே என்ற கவலை. இந்நிலையில் கோமளத்தம்மாள் கருவுற்றார். முதல் பிரசவம் என்பதால் ஈரோடு, தெப்பக்குளம் தெருவில் இருக்கும் தனது தந்தையார் வீட்டுக்குச் சென்றார். இவரது தந்தையின் பெயர் நாராயண அய்யங்கார். இவர் ஈரோடு முன்சீப் நீதிமன்றத்தில் அமீனா வேலை பார்ப்பவர்.

     ஈரோடு சென்ற கோமளத்தம்மாளுக்கு, 1887 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 22 ஆம் நாள் வியாழக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது. இவர்கள் வைணவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், குழந்தையானது வியாழனன்று பிறந்ததாலும் இராமானுஜன் என்று பெயரிட்டனர். இவரது தாயார் இவரைச் சின்னச்சாமி என்றே அழைத்தார்.

குடும்பச் சூழல்

     இராமானுஜனின் தந்தை சீனிவாச அய்யங்கார், கும்பகோணத்தில் ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பாரத்து வந்தார். இவர் பட்டுப் புடவைகளைத் தரம் பார்த்து, மதிப்பிடுவதில் வல்லவர். இவரது மாதச் சம்பளம் ரூ.20.

     இராமானுஜனின் தாய் கோமளத்தம்மாள் பஜனைப் பாடல்களையும் மற்றும் பக்திப் பாடல்களையும், அருகிலுள்ள கோயில்களில் மற்றவர்களுடன் சேர்ந்து குழுவாகப் பாடுவதன் மூலம் மாதமொன்றுக்கு ரூ.5 அல்லது ரூ.10 சம்பாதித்துக் குடும்ப வறுமையைச் சமாளித்தார்.

     1889 ஆம் வருடம் டிசம்பர் மாதம் தொடர்ந்து நான்கு, ஐந்து நாட்களுக்குப் பஜனை பாடச் செல்லாததால், குழுத் தலைவியே நேரில் கோமளத்தம்மாள் வீட்டிற்கு வந்தார். வீட்டில் இரண்டு வயது நிரம்பிய இராமானுஜன் வேப்பிலைப் படுக்கையில் கிடத்தப் பட்டிருந்தான். அவன் உடல் முழுவதும் பெரியம்மையினால் பாதிக்கப் பட்டிருந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அவ்வாண்டில் மட்டும் சுமார் நான்காயிரம் பேர் பேரியம்மைக்குப் பலியாகியிருந்தனர். பெரியம்மையிலிருந்து இராமானுஜன் தப்பிவிட்டாலும், முகத்தில் ஏற்பட்ட வடுக்கள் இறுதிவரை மறையவில்லை.

     இராமானுஜனுக்கு ஒன்றரை வயது இருக்கும் பொழுது, கோமளத்தம்மாளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சடகோபன் எனப் பெயரிடப்பட்ட அக்குழந்தை மூன்றே மாதத்தில் இறந்து விட்டது. இராமானுஜனுக்கு நான்கு வயதிருக்கும் பொழுது கோமளத்தம்மாள் 1891 இல் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஆனால் அக்குழந்தையும் மூன்றே மாதத்தில் இறந்து விட்டது. இராமானுஜனுக்கு ஆறரை வயதிருக்கும் பொழுது, கோமளத்தம்மாள் ஆண் மகனைப் பெற்றெடுத்தாள். சேசன் எனப் பெயரிடப்பெற்ற இக் குழந்தையும் ஒரு வருடம் முடிவதற்குள் இறந்து விட்டது.

     இராமானுஜனுக்கு பத்து வயதிருக்கும் பொழுது, 1898 இல் கோமளத்தம்மாள் லட்சுமி நரசிம்மன் என்ற மகனையும், இராமானுஜனுக்கு பதினேழு வயதிருக்கும் பொழுது திருநாராயணன் என்றொரு மகனையும் பெற்றெடுத்தாள்.

     மூன்று குழந்தைகளைப் பறிகொடுக்க நேர்ந்ததால் சிறு வயதில் இராமானுஜனை, வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்காமலே வளர்த்தனர்.

     இராமானுஜன் மூன்று வயது வரை பேசவே இல்லை. ஊமையோ எனப் பெற்றோர் கவலையடைந்தனர். கோமளத்தம்மாள் தனது மகனை அழைத்துக் கொண்டு, அப்பொழுது தனது தகப்பனார் வசித்துக் கொண்டிருந்த காஞ்சிபுரத்திற்குச் சென்றார். அங்கு அவனது தாத்தா, தரையில் பரப்பிய அரிசியில் இராமனுஜனின் கைவிரலைப் பிடித்து எழுத்துப் பயிற்சி ஆரம்பித்து, எழுத்துக்களை எழுதக் கற்றுக் கொடுத்ததோடு, சுலோகங்களையும் கற்றுக் கொடுத்தார். சிறிது காலத்தில் இராமானுஜன் பேசவும், வேத மந்திரங்களை உச்சரிக்கவும் தொடங்கினான்.

நாமக்கல் நாமகிரித் தாயார்

     திருச்சியிலிருந்து சேலம் செல்லும் வழியில் அமைந்திருக்கும் ஊர் நாமக்கல். அவ்வூரின் மையப் பகுதியில் அமைந்திருப்பது நாமகிரி என்னும் மலையாகும். இம்மலை முழுவதும் வெள்ளைக் கற்களால் ஆனது. சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவும், 200 அடி உயரமும் உடையது. இதன் பாறைகள் செங்குத்தாக அமைந்திருக்கும் விதம், வைணவர்கள் தங்கள் நெற்றியில் இடும் நாமத்தைப் போன்று இருப்பதால், இம்மலைக்கு நாமக்கல் என்றும், பின்னர் ஊரின் பெயரும் நாமக்கல் என்றும் அழைக்கப்படலாயிற்று. இம்மலையின் அடிவாரத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயிலில், நரசிம்மரும் உடன் நாமகிரித் தாயாரும் அருள் பாலித்து வருகின்றனர்.

     கோமளத்தம்மாளின் பூர்வீகம், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிற்றூராகும். கோமளத்தம்மாளும் அவரது பாட்டனார்களும், நாமக்கல் நாமகிரித் தாயாரையே தங்களது குல தெய்வமாக வழிபட்டு வந்தனர். கோமளத்தம்மாளுக்கு திருமணமாகிப் பல வருடங்கள் ஆகியும், குழந்தை பிறக்காத போது, அவர்கள் வேண்டிக் கொண்ட தெய்வமும், இராமானுஜன் பிறந்து மூன்று வருடங்களாகியும் வாய் திறந்து பேசாதது கண்டு, அவர்கள் வேண்டிக் கொண்ட தெய்வமும் நாமகிரித் தாயார்தான்.

     கோமளத்தம்மாளின் உதடுகள் நாள்தோறும் உச்சரிக்கும் பெயர் நாமகிரித் தாயார்தான். குழந்தைப் பருவம் முதல் தாயாரின் அரவனைப்பில் மட்டுமே வளர்ந்த இராமானுஜனுக்கு இயற்கையாகவே நாமகிரித் தாயாரிடம் பக்தியேற்பட்டது.

தொடக்கக் கல்வி

     இராமானுஜன் 1892 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாள் விஜயதசமியன்று, காஞ்சிபுரத்தில் உள்ள திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். அதன் ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். மாணவர்கள் அனைவரும், எப்பொழுதும் கைகட்டி,  வாய்பொத்தி பணிவுடன் அமர்ந்திருக்க வேண்டும். இராமானுஜனுக்கு ஆசிரியரைப் பிடிக்கவில்லை, அவரின் கட்டுப்பாடுகளும் பிடிக்கவில்லை. எனவே அப்பள்ளியில் உட்கார மனமின்றிப் பாதியிலேயே எழுந்து வீட்டிற்கு வந்துவிடுவான்.  இரண்டு வருடங்களில், காஞ்சிபுரத்தில் உள்ள பல பள்ளிகளில் மாறி மாறிப் படித்தான்.

     ஒரு கடன் விசயத்தில் நாராயண அய்யங்காருக்குத் தன் முதலாளியின் மீது வருத்தம் எற்பட்டது. எனவே நாராயண அய்யங்கார் தனது பணியினைத் துறந்து, சென்னைக்குச் சென்று விட்டார். கோமளத்தம்மாளும் இராமானுஜனும் கும்பகோணம் திரும்பினர்.

     இராமானுஜன் கும்பகோணத்தில் காங்கேயன் பள்ளியில் சேர்க்கப்பட்டான். பின்னர் சிறிது காலம் சென்னையில் படித்தான். 1895 இல் மீண்டும் கும்பகோணத்தில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தான்.

     அக்கால வழக்கப்படி இராமானுஜன் குடுமி  வைத்திருந்தான். நன்றாக தலைவாரிப் பின்னல் போட்டிருப்பான். பூக்கள் கிடைக்கும் பொழுது அவையும் குடுமியில் வைக்கப்படும். நெற்றியில் பளிச்சென்று தென்கலை திருமண் இட்டிருப்பான்.

இராமானுஜனின் சன்னலில் நான்
     இராமானுஜன் கூச்ச சுபாவம் உடையவன். பள்ளியில் எந்த மாணவனிடமும் அதிகமாகப் பேச மாட்டான். ஆசிரியர் பாடம் சொல்லித் தரும்பொழுது நன்றாகக் கவனிப்பான். மாலையில் பள்ளி விட்டதும், நேராக தன் வீட்டிற்கு வந்து விடுவான். வீட்டின் வெளிப்புறத் திண்ணையை ஒட்டி அமைந்திருக்கும் சன்னலின் உட்புறம் உள்ள மேடையில் ஏறி உட்கார்ந்து கொள்வான. வீட்டை விட்டு விளையாடக் கூட வெளியில் செல்ல மாட்டான்.அந்த சன்னல் மேடையில் அமர்ந்துதான் அன்றாடப் பாடங்களைப் படிப்பான். வீட்டில் அவனது உலகமே இந்த சன்னல் மேடைதான்.

     காங்கேயன் தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கையில், சாரங்கபாணி என்பவன் இராமானுஜனின் மிக நெருங்கிய நண்பனாக இருந்தான். வகுப்பிலேயே சிறந்த மாணவர்களின் இராமானுஜன் ஒருவன், மற்றொருவன் சாரங்கபாணி.

மாவட்ட முதன்மை-சான்றிதழ்
     நவம்பர் 1897 இல் நடைபெற்ற ஆரம்பப் பள்ளித் தேர்வில், மாவட்டத்திலேயே முதல் மாணவனாக இராமானுஜன் வெற்றி பெற்றான். ஆனால் கணிதத்தில் 45க்கு 42 மதிப்பெண்கள் பெற்றிருந்தான். ஆனால் சாரங்கபாணியோ 43 மதிப்பெண்கள் பெற்றிருந்தான். இராமானுஜன் கணக்குப் பாடத்தில் மட்டும், சாரங்கபாணியால் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப் பட்டான். தன்னைவிட சாரங்கபாணி ஒரு மதிப்பெண் அதிகம் பெற்று விட்டான் என்பதை இராமானுஜனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இதனை இராமானுஜன் பெரிய அவமானமாக நினைத்தான். இதனால் சாரங்கபாணியிடம் கோபமடைந்து, அவனுடன் பேசுவதையே நிறுத்தி விட்டான். மதிப்பெண்களைப் பெற்றவுடன் அழுதுகொண்டே வீட்டிற்கு ஓடினான்.

     பள்ளியிலிருந்து தனது மகன் அழுது கொண்டே வீட்டிற்கு வந்ததைக் கண்ட கோமளத்தம்மாள் திகைத்துப் போய் காரணத்தை விசாரித்தாள். அதே நேரத்தில் சாரங்கபாணியும், இராமானுஜனின் வீட்டிற்கு வந்தான். நான் கணக்குப் பாடத்தில் மட்டும், அவனைவிட ஒரு மதிப்பெண் அதிகம் பெற்று விட்டேன். ஆனால் மற்ற பாடங்களில் அவன்தான் அதிக மதிப்பெண்கள் பெற்று, மாவட்டத்திலேயே முதலாவதாக வந்துள்ளான். இதற்குப் போய் அவமானப்படுகிறான்.  என்னுடன் பேசாமல் வந்துவிட்டான் என்று காரணம் கூறினான்.

     கோமளத்தம்மாள் தன் மகனை நோக்கி, அய்யா சின்னசாமி, நீ எதிலும் யாருக்கும் சிறியவன் இல்லை. நீயே முதல்தர மாணவன். உன்னை வெல்ல இவ்வுலகில் யாரும் இல்லை. அடுத்த முறை கணக்கில் நீதான் முதல் மதிப்பெண் பெறுவாய். கவலைப் படாதே. சாரங்கபாணி உன் நண்பன் அல்லவா? இனிமேல் எதற்காகவும் அவனுடன் சண்டையிட்டுப் பேசாமல் இருக்கக் கூடாது என்று கூறி அவனைத் தேற்றினாள்.

     தன் தாயின் செர்ல்லை வேதவாக்காகவே எடுத்துக் கொண்ட இராமானுஜன், தான்  இனி முழுக் கவனம் செலுத்த வேண்டிய பாடம் கணிதமே என்று முடிவு செய்தான். கணிதத்தில் மட்டும் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினான். இச்சம்பவமே பின்னாளில் இராமானுஜன் கணக்கையே தவமான, வேதமாக, வெறியாக நேசிக்க முதல் காரணமாக அமைந்து விட்டது.

     இராமானுஜன் தொடக்கப் பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து, மாவட்டத்திலேயே முதலாவதாக வந்த பெருமையுடன், தனது வீட்டிற்கு அருகிலுள்ள டவுன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தான்.

     ஒரு நாள் ஆசிரியர் கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தான். ஒரு எண்ணை அதே எண்ணால் வகுத்தால், என்ன விடை கிடைக்கும் என்பது பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். எந்தவொரு எண்ணையும் அதே எண்ணால் வகுத்தால் ஒன்று என்ற எண்ணே விடையாகக் கிடைக்கும் எனக் கூறினார். இராமானுஜன் உடனே எழுந்து பூஜ்ஜியத்தைப் பூஜ்ஜியத்தால் வகுத்தால் ஈவு ஒன்று வருமா? என்று கேள்வி கேட்டு ஆசிரியரையே அதிர வைத்தான்.

     சுமார் இருபது வரிகளில் வழிமுறையோடு செய்யவேண்டிய பெரிய கணக்குகளைக் கூட, இரண்டே வரிகளில் போட்டு சரியான விடையைக் கூறும் திறமை இராமானுஜனிடம் இருந்தது.

     இராமானுஜனின் குடும்பம் போதிய வருமானம் இன்றி வறுமையில் வாடிக் கொண்டிருந்தது. பல நாள் இரவில் வடிக்கும் சோற்றில் சிறிய அளவினைக் குழந்தைகளுக்கு உணவாகக் கொடுத்து, மறுநாள் காலை பழைய சோறாகப் போடுவது வழக்கம்.

     ஒருநாள் இராமானுஜன் பள்ளிக்குச் செல்வதற்கு முன் உணவுத் தட்டுடன் சாப்பிடத் தயாரானான். ஆனால் தாய் கோமளத்தம்மாளோ, அய்யா சின்னச்சாமி, அம்மா எப்படியும் மாலைக்குள் அரிசி வாங்கி சமைத்து  வைக்கிறேன், இரவு சாப்பிடலாம், அதுவரை பொறுத்துக் கொள் என வேண்டினாள். இராமானுஜனோ மறுவார்த்தை பேசாமல், வீட்டின் ஒரு மூலையில் இருந்த பானையில் இருந்து மூன்று டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, அம்மா நான் பள்ளிக்குச் சென்று வருகிறேன் என்று கூறிப் பள்ளிக்குச் சென்றுவிட்டான்.

     ஆனால் அன்று மாலை பள்ளியில் இருந்து இராமானுஜன் வீடு திரும்பவில்லை.

                                                             .......தொடரும். 


வணக்கம் தோழர்களே. அடுத்த சனிக் கிழமை சந்திப்போமா