02 மார்ச் 2013

கணிதமேதை அத்தியாயம் 21


 ------------
ஒன்று இவர் உலகளாவிய புகழ் பெற்று, புகழின் உச்சியில் இருக்கும்போதே இறந்து போவார், அல்லது நீண்டநாள் வாழ்வாரேயானால், இவர் இருப்பதையே உலகம் அறியாதிருக்கும் - ஜி.வி.நாராயண சாமி அய்யர்
--------------
    மார்ச் மாதத்தில் கோமளத்தம்மாள் ஜி.வி.நாராயண சாமி அய்யர் அவர்களை, அவரின் இல்லம் தேடிச் சென்று சந்தித்தார். இவர் பி.வி.சேசு அய்யரின் முன்னாள் மாணவர். சேசு அய்யரிடமிருந்து பெற்ற அறிமுகக் கடிதத்துடன், கோமளத்தம்மாள், நாராயணசாமி அய்யரைச் சந்தித்தார். ஆசிரியரான இவர் சோதிடம் பார்ப்பதில் வல்லவர்.

கோமளத்தம்மாள்

     நாராயண சாமி அய்யர், ஜாதகத்தைக் கேட்க, இராமானுஜனின் ஜாகதத்தை மனப்பாடமாக கோமளத்தம்மாள் ஒப்பித்தார். ஜாதகத்தினைப் பரிசோதித்த நாராயணசாமி அய்யர், ஒன்று இவர் உலகளாவிய புகழ் பெற்று, புகழின் உச்சியில் இருக்கும்போதே இறந்து போவார், அல்லது நீண்டநாள் வாழ்வாரேயானால், இவர் இருப்பதையே உலகம் அறியாதிருக்கும் என்று கூறி, இது யாருடைய ஜாதகம்? என்று கேட்டார். கோமளத்தம்மாள் அழுது கொண்டே இராமானுஜனுடைய ஜாதகம் என்று கூறினார்.


     உடனே நாராயணசாமி அய்யர், இராமானுஜனுடையதா? என்னை மன்னிக்கவும், தெரியாமல் கூறிவிட்டேன். தயவு செய்து நான் கூறியதை, அவருடைய உறவினர்கள் யாரிடமும், கூற வேண்டாம். நான் தவறுதலாகக் கூறிவிட்டேன் எனப் பின்வாங்கினார்.

     அதற்கு கோமளத்தம்மாள் நான்தான் அவன் தாயார் என்று கூற சங்கடமான இச்சூழலில் இருந்து தப்பிக்க வழி தெரியாத நாராயண சாமி அய்யர், அடுத்த முறை வரும் பொழுது, இராமானுஜனின் மனைவியின் ஜாதகத்தைக் கொண்டு வாருங்கள், மனைவியின் ஜாதகம் இவரது வாழ்வை நீட்டிக்கலாம் என்றார்.

     ஜானகியின் ஜாதகத்தையும் கோமளத்தம்மாள் உடனே ஒப்பித்தார். கோமளத்தம்மாளுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் கூறி அனுப்ப, ஜானகியின் ஜாதகத்தில் சாதகமான அம்சம் எதுவும் உள்ளதா என ஆராய்ந்தார். ஒன்றும் வழி இல்லாததால், இராமானுஜனும், ஜானகியும் சில காலம் பிரிந்திருப்பது நலம் பயக்கும் என்று கூற, நானும் இதையேதான் என் மகனிடம் கூறி வருகிறேன். ஜானகியை அவர் தந்தையிடம் அனுப்பி விடு என்று. பிறந்தது முதல் என் சொல்லைத் தட்டாத என் மகன், இந்த ஒரு விசயத்தில் மட்டும், நான் சொல்வதைக் கேட்ட மாட்டேன் என்கிறானே, நான் என்ன செய்வேன்? எனக் கூறி கதறி அழுதார்.

..... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.