இனி ஒரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம்
இராமானுஜன் தன் வாழ்வின் கடைசி மாதங்களில்
ஜானகியுடன் மிகவும் நெருங்கிப் பழகினார். தன் உடல் நலம் குறித்த கவலையில் இருந்து
ஜானகியைத் தேற்றுவது போல், இலண்டனில் செலவிட்ட நாட்கள் பற்றியும், இலண்டன்
மியூசியத்திற்குச் சென்றது பற்றியும், ஆங்கிலேயர்களை அழைத்து, தன் அறையில், தானே
சமைத்து விருந்து வைத்த நிகழ்ச்சிகள் குறித்தும் பேசிக் கொண்டே இருந்தார்.
இருந்த
போதிலும், இராமானுஜன் தன் இறுதி நாட்களில் அடைந்த சிரமங்கள் கொஞ்சமல்ல. இறுதி
நாட்கள் நெருங்க, நெருங்க இராமானுஜன் தன்னை இழந்த நிலையிலேயே காணப்பட்டார்.
இராமானுஜனை
சென்னை இரயில் நிலையத்தில் வரவேற்க வந்து, இராமானுஜனின் தோற்றத்தைக் கண்டு
திடுக்கிட்டுப் பெருங்கவலை அடைந்த, அவரது நண்பரான நரசிம்ம அய்யங்கார்,
இராமானுஜனின் வீட்டிற்குச் சென்று அவ்வப்போது பார்த்து வருவதை வழக்கமாகக்
கொண்டிருந்தார். அவரே பின்னாளில் கூறுகையில், இராமானுஜனின் உடல் மட்டுமே
உயிருடனிருந்தது, அவனது மூளை இறந்து விட்டிருந்தது எனக் குறிப்பிடுகிறார்.
1920
ஏப்ரல் 26 ஆம் தேதி காலை வேளையில் இராமானுஜன் பேச்சின்றி மயங்கிப் போனார். ஜானகி
அவரது அருகிலேயே அமர்ந்திருந்தார். அவ்வப்போது சிறிது பால் கொடுத்தார்.
மயக்கமடைந்து கண் மூடியவர், பிறகு கண்களைத் திறக்கவேயில்லை. நண்பகலுக்கு சற்று
முன்னர் அமரராகிப் போனார். கணிதத்தின் சுவாசக் காற்று அடங்கியது.
நன்றி தின த்தந்தி நாளிதழ் |
அன்று
மாலை சேத்துப் பட்டு இடுகாட்டில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இராமானுஜன் தங்களது
சமூக நெறிகளை மீறி, கடல் கடந்து சென்றதாலும், இந்தியா திரும்பிய பின், இராமேசுவரம்
சென்று தன்னைப் புனிதப் படுத்திக் கொள்ளாததாலும், இராமானுஜனது சமூகத்தினரும்,
நெருங்கிய உறவினர்களும் கூட, இராமானுஜனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாது
புறக்கணித்தனர்.
இராமானுஜனின் கணிதச் சுவாசம் நின்ற வேளையில்
இருந்து, அன்று மாலை சேத்து பட்டு இடுகாட்டை நோக்கிய இறுதிப் பயணம் புறப்படும்
வரையில், இராமானுஜனின் அருகில் இருந்தவர்கள், இராமானுஜனின் தாயார் கோமளத்தம்மாள்,
மனைவி ஜானகி, ஜானகியின் சகோதர, சகோதரிகள் மற்றும் இராமானுஜனின் சகோதரர்கள் மட்டுமே.
சேத்து
பட்டு இடுகாட்டில், இறுதி சடங்கிற்கு உரிய
ஏற்பாடுகளை நம்பெருமாள் செட்டியார் செய்திருந்தார். ஆனால் இராமானுஜனின்
இறுதிச் சடங்குகளை செய்வதற்கு வருவதாக ஒத்துக் கொண்டிருந்த, புரோகிதர் கூட,
இராமானுஜன் பற்றி அறிந்து, இடுகாட்டின் பக்கமே வராமல், எங்கோ சென்று விட்டார்.
செய்வதறியாது
உடனிருந்தவர்கள் திகைத்தனர். பின்னர் ராமச்சந்திர ராவ் மற்றும் நம்பெருமாள் செட்டியார்
இருவரும் பலவாறு முயன்று, வேறு ஒரு புரோகிதரை, எப்படியோ அழைத்து வந்து, செய்ய
வேண்டியச் சடங்குகளைச் செய்தனர்.
இராமானுஜன் அமரத்துவச் சான்றிதழ் |
சிறிய உருவமானாலும், தனது கணிதத் திறமையால்,
உலகையே அண்ணாந்து பார்க்க வைத்து, தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும், உலக அரங்கில்
உன்னத இடத்தினைப் பெற்றுத் தந்த, அம் மாபெரும் கணித மேதைக்கு, தமிழ் கூறும் நல்லுலகமும்,
அவரின் சமூகமும், காட்டிய கைமாறு, அவரது இறுதிச் சடங்கினைப் புறக்கணித்ததுதான்.
நண்பர்களே, இராமானுஜனுக்கு மட்டுமல்ல இந்த
இழி நிலை. நம் நாட்டு விடுதலைக்காக அரும்பாடுபட்டு, தனது செல்வம் அனைத்தையும்
இழந்து, கப்பல் ஓட்டிய தமிழன் என்றும், செக்கிழுத்தச் செம்மல்
என்றும் பெயர் பெற்றாரே, வ.உ.சிதம்பரனார், அவரது நிலை என்னவாயிற்று?. தனது
செல்வம் அனைத்தையும் நம் நாட்டுக்காக இழந்து, சிறையில் இருந்து விடுதலை
பெற்றவுடன், தனது குடும்பத்தைக் காப்பாற்ற, கோயமுத்தூரிலே ஒரு மளிகைக் கடையில்
அல்லவா வேலை பார்க்க வேண்டியதாயிற்று.
செக்கிழுத்தச் செம்மல் |
வ.உ.சி
அவர்களின் நிலை கண்டு கலங்கிய பழம் பெரும் தேசியவாதியும், காந்தியடிகளுடன்
நெருங்கிப் பழகியவருமான, வரதராஜுலு நாயுடு அவர்கள், சிதம்பரனாரின் மணி
விழாவினைக் கொண்டாடி, அவருக்கு நிதி வழங்க அரும்பாடு பட்டு ஏற்பாடுகளைச் செய்தாரே.
என்னவாயிற்று? நிதியே சேராததால் மணி விழா அல்லவா ரத்து செய்யப் பெற்றது.
வ.உ.சி
அவர்களுக்கு மட்டுமா இந்நிலை. அல்ல அல்ல.
தேடிச் சோறுநிதந்
தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள்
பேசி – மனம்
வாடித் துன்பமிக
வுழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள்
செய்து – நரை
கூடிக் கிழப்பருவ
மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்
பின்மாயும் – பல
வேடிக்கை
மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்றுநினைத்
தாயோ?
என்று வீர முழக்கமிட்டு, வீறு
கொண்டு எழுந்து, சுதந்திர தாகத்தை, தனது எழுச்சியுறு பாடல்களின் மூலம், தமிழ்
மக்களின் நாடி நரம்புகளில் எல்லாம் செலுத்தி, முறுக்கேற்றினானே மகாக் கவி பாரதி,
அம் மகா கவியின் நிலை என்னவாயிற்று.
யானையால்
தூக்கி எறியப்பட்டு, உடல் நலிவுற்று மரணத்தைத் தழுவினானே பாரதி,
காலா
உனை நான் சிறு புல்லென
மதிக்கின்றேன் என்றன்
காலருகே
வாடா, சற்றே உனை மிதிக்கிறேன்
மகாகவி
பாரதி அமரத்துவம் அடைந்த பின், அவனது உடலில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையினை விட,
அவனது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கைக் குறைவு. ஆம் இருபது
பேர் கூட, அம் மகா கவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை என்பதுதான், வரலாறு
சுட்டும் கசப்பான உண்மை.
இராமானுஜன் மட்டும் என்ன விதிவிலக்கா?
இராமானுஜனுக்கும் இதே நிலைதான்.
இராமானுஜன் மறைந்து 92 ஆண்டுகள் ஓடோடி
விட்டன. இராமானுஜனின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி நடந்த நமக்கு, அம்மாபெரும்
கணித மேதையை இப்பொழுதுதான் இக்கனத்தில் இழந்ததைப் போன்ற ஓர் உணர்வு. நம்முடன்
நெருங்கிப் பழகிய ஓர் உற்ற நண்பரை இழந்து
விட்ட சோகம் நெஞ்சில் நிழலாடுகிறது.
இனி ஒரு விதி செய்வோம்
அதை எந்நாளும் காப்போம்
என்றான் பாரதி. நாமும் இனியாவது
ஒரு விதிசெய்வோம், சபதமேற்போம், நமக்காகப் பாடுபட்ட நல் உள்ளங்களை நம் நினைவில்
எந்நாளும் காப்போம், மனதார போற்றுவோம், வாழ்க வாழ்கவென வாழ்த்துவோம்.
வாழ்க இராமானுஜன் வாழ்க
இராமானுஜன் புகழ்
..... நண்பர்களே இதயம் கணக்கிறது.
இராமானுஜனிடமிருந்து விடைபெறும் நேரம் நெருங்கி விட்டது. இராமானுஜன் உயிருடன்
இருந்தவரை, அவரை பொருட்படுத்தாத நமது சமூகம், உண்ண உணவிற்கே வழியின்றித் தவித்த
போது, ஒரு வாய் சோறிட்டுக் காப்பாற்றாத நமது சமூகம், அவரின் மறைவிற்குப் பின்,
அவரை எப்படியெல்லாம் போற்றியது, புகழ்ந்தது, தலையில் தூக்கி வைத்துக் கொண்டு
ஆனந்தக் கூத்தாடியது என்பதை அடுத்த வாரம் பார்க்கலாமா.