குயிலையா
தமிழ்ப் பாடல்களோடு தமிழுணர்வையும் சேர்த்தே ஊட்டினார்
------------ கடந்த வாரம்
------------
இந்நிலையில், கரந்தைப்
பகுதியினைச் சேர்ந்த 25 வயது நிரம்பிய, தமிழார்வமும், துடிப்பும் மிகுந்த இளைஞர்
ஒருவர், வித்தியா நிகேதனத்தில் உறுப்பினராய் சேர்ந்தார்.
அந்த இளைஞரின்
பெயர் த.வே. இராதாகிருட்டினன் என்பதாகும்.
-----------------------------------------------
இராதாகிருட்டினன்
சங்கம்
நிறுவிய துங்கனெ னத்தமிழ்ச்
சங்கமதை
தங்கக் கரந்தையில் தான்முத
லாகச் சமைத்தளித்தோன்
எங்கும் சிறந்தோன் இராதா
கிருட்டினப் பாவலனை
பொங்கும் புகழ்நிறை பொற்குணத்
தானையே போற்றுவமே
இராதாகிருட்டினன் அவர்கள் 1885
ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் இரண்டாம் நாள், வேம்பப் பிள்ளை காமாட்சி அம்மாள்
தம்பதியினரின் மகனாய் தோன்றினார்.
பள்ளிக் கல்வியை தூய பேதுரு கல்லூரியில்
பயின்றார். தூய பேதுரு கல்லூரியில் இவருக்குத் தமிழாசிரியராய் இருந்து, தமிழின்
இனிமையை உணர்த்தியவர் குயிலையா என்றழைக்கப் பட்ட சுப்பிரமணிய அய்யராவார்.
தமிழாசிரியரால் தமிழமுதம் பருகியதால், தமிழே
தன் வாழ்வெனக் கொண்ட தகைமையாளர். எண்ணியன முடிக்கும் திண்ணியர். தமிழின் நலன்
கருதாமல், தங்களின் நலனையே பெரிதாய் எண்ணி வாழும், கீழ் மக்களைக் கண்டு உள்ளம்
கொதித்தெழுந்த உண்மைத் தொண்டர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் தம் உறவை
வெறுத்து ஒதுக்கும் உள்ளமுடையவர். கல்வியில் சிறந்த கலங்கா நெஞ்சினர்.
இராதாகிருட்டினன் அவர்கள் பள்ளிக் கல்வியைத்
தொடர்ந்து, இளங்கலைப் பட்டம் பெற்று, அரசினர் அலுவலகத்தில் துணைப் பதிவாளராகச் சில
ஆண்டுகள் பணியாற்றி, பின்னர் தனுக்கோடி கடற் சுங்கத் ஆய்வுக் காகத் தலைமைத்
தாளாளராகப் பணியாற்றி வருபவர்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்
வளர்ச்சிப் பணிகளைக் கண்டு, உள்ளம் மகிழ்ந்திருந்த. இராதாகிருட்டினன்,
தஞ்சையில்,அதுவும் கரந்தையில், வித்தியா நிகேதனம் என்னும் தமிழ் அமைப்பு
தொடங்கப்பட இருப்பதை அறிந்து, மகிழ்ந்தார். வித்தியா நிகேதனத்தின் தொடக்க விழாவின்
போதே, அவ்வமைப்பில் உறுப்பினராய்த் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
இராதாகிருட்டினன் தான் மட்டும் தனியே,
வித்தியா நிகேதனத்தில் உறுப்பினராய்ச் சேரவில்லை. தனது நண்பர்கள் கூட்டத்தையே
அழைத்து வந்து உறுப்பினர்களாக்கினார். குறிப்பாக, தனது பள்ளிப் பருவம் முதலே, உடன்
பிறவாச் சகோதரராய்ப் பழகிவரும், தனது ஆருயிர் நண்பர் கவிஞர் அரங்க.வேங்கடாசலம்
பிள்ளை என்பாரையும் அழைத்து வந்து உறுப்பினராக்கினார்.
அரங்க. வேங்கடாசலம் பிள்ளை
தன்முயற்சி தனைக்கொண்டே
தானுயர்ந்தே ஆசானாய்
பன்மொழியில் உளநல்ல
கருத்தெல்லாம் தனதாக்கி
தன்மொழியின் உயர்விற்கே
தன்காலம் முழுவதையும்
தன்னுடலின் ஆற்றலெல்லாம்
தானீந்த பெரும்புலவர்
தஞ்சாவூர் மாவட்டத்தின் தென்புறம் கண்டார்
கோட்டை எனும் ஊர் ஒன்று அமைந்துள்ளது. இன்று இவ்வூர் கந்தர்வகோட்டை என்றழைக்கப்
படுகிறது. கந்தர்வக் கோட்டைக்கும் கிழக்கே
அமைந்துள்ள சிற்றூர் மோகனூர் ஆகும். இது கள்ளர் குல மக்கள் பெரும்பான்மையினராய்
வாழும் ஊராகும். இவ்வூரில், சங்க காலப் புலவர்களால், முல்லை நில மக்கள்
எனச் சிறப்பித்ததுப் பாடப்பெற்ற, புகழ் வாய்ந்த ஆயர் குல குடும்பம் ஒன்றும்
வழி வழியாய் வசித்து வந்தது.
இத்தகு பெருமை வாய்ந்த ஆயர் குடும்பத்தில் அரசங்கசாமி
பிள்ளை, தருமாம்பாள் தம்பதியினரின் முதல் மகனாய் 1886 ஆம் ஆண்டு மார்கழித்
திங்கள் ஐந்தாம் நாள் வேங்கடாசலம் தோன்றினார்.
அரங்க.வேங்கடாசலம் அவர்கள், தனது தொடக்கக்
கல்வியை, மோகனூரில் உள்ள ஒரு திண்ணைப் பள்ளியில் பயின்றார். திண்ணைப் பள்ளியில்
தனது படிப்பை முடித்தவுடன், தஞ்சாவூர் வடக்கு வீதியில் அமைந்துள்ள தூய
பேதுருகல்வி நிலையத்தில் சேர்ந்தார்.
தூய பேதுரு கல்வி நிலையத்தில் இவர், தனது
வகுப்புத் தோழர்களாய், நெருங்கிய நண்பர்களாய், உடன் பிறவாச் சகோதரர்களாய் இருவரைப்
பெற்றார். ஒருவர் இராதாகிருட்டினன் மற்றொருவர் தட்சிணாமூர்த்தி.
தூய பேதுரு கல்வி நிலையத்தில் இவர்களுக்குத்
தமிழாசிரியராய் அமைந்த குயிலையா என்றழைக்கப பெற்ற ஆர்.சுப்பிரமணிய அய்யரிடம்,
நன்னூல், திருக்குறள், சீவக சிந்தாமணி போன்ற இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
வேங்கடாசலம் அவர்கள் தினமும், பள்ளியில்
இருந்து வீடு திரும்பியதும், மோகனூரின் கிழக்கேயுள்ள குளத்தங்கரையில், அகன்று
தழைத்துக் கவிந்திருக்கும் அரச மரத்தின் நிழவில் அமர்ந்து, பள்ளியில் கற்றவற்றை
மனதிலேயே மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துப் பாடல்களை மனப்பாடம் செய்வதைத் தன்
அன்றாடப் பணியாகவே செய்து வந்தார். குயிலையா தமிழ்ப் பாடல்களோடு தமிழுணர்வையும்
சேர்த்தே ஊட்டினார்.
மகுடியின் ஓசை கேட்ட நாகம் போல, தமிழின்
இனிமை கண்டு மயங்கிய வேங்கடாசலம், தமிழமுதைத் தேடித் தேடிப் பருகினார்.
அக்காலத்தில் கரந்தையில், தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கிய, வெங்கடராம
பிள்ளை என்பாரிடம் தொடர்ந்து தமிழ் பயின்றார்.
மோகனூர் கிராமத்திலிருந்து, வாரந்தோறும்
மிதி வண்டியிலேயே கரந்தை வந்து தமிழ் கற்பார். நண்பர்களுடன் அளவாவி மகிழ்வார்.
கந்தர்வக் கோட்டையில் காவல் துறை
மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தவர் இலக்கணம் மா.ந. சோமசுந்தரம் பிள்ளை
ஆவார். இவர் தமிழ் இலக்கண, இலக்கியங்களை நன்கு கற்றுத் தேர்ந்து,
தொல்காப்பியத்தையும், அதற்கு உரையாசிரியர்கள் வகுத்துக் கூறிய உரை முறைகளையும்
தெளிவாகக் கற்றவர். தமிழறிஞர்களே வியக்கும் அளவிற்கு சில திருத்தங்களை
எடுத்துரைக்கும் திறமை வாய்ந்தவர். இதனாலேயே இவரின் பெயரின் முன் இலக்கணம் என்னும்
அடைமொழி, தானே வந்து சேர்ந்து கொண்டது.
வேங்கடாசலம்
பிள்ளைக்கு இத்தகைய தமிழ்ப் பெரியாரின் தொடர்பும் ஏற்பட்டது. வேங்கடாசலம்
பிள்ளையில் தமிழ்ப் புலமை இலக்கணத் துறையில், இவரால் மேலும் செழித்து வளரத்
தொடங்கியது.
ஆசானாற்றுப் படை
குளிர்ந்த சொல்லினர்
குணமொன் றில்லாக்
குணங்குண மாக்கொள்
குரிசினன் செய்யார்
சையைச் சுப்பிர
மணிய
ஐயரென் நாத் தருட்
கிழவோரே
தாமே முயன்று, தமிழ்த் துறையில் சிறந்த
அறிஞர்கள் பலரைத் தேடிச் சென்று சந்தித்து, கற்றுத் தேர்ந்து, தமிழ்த் துறையில்
மிகுந்த புலமை பெற்றாலும், தனக்கு முதன் முதலில் தமிழின் சுவை உணர்த்திய குயிலையா
சுப்பிரமணிய அய்யரை வேங்கடாசலம் மறந்தாரில்லை.
குயிலையாவிற்குத் தான் செலுத்தும்
குருதட்சணையாக ஆசானாற்றுப் படை என்றும் கவிதை நூலைப் படைத்தார்.
இந்நூலுக்கு பதிப்புரை எழுதி வெளியிட்டவர் யார் தெரியுமா? வேங்கடாசலம் பிள்ளையின்
அருமை நண்பர் இராதாகிருட்டினன்.
.... வருகைக்கு நன்றி நண்பரே.
அதியமான் ஔவைக்கு ஈந்த நெல்லிக் கனி போல், தன் ஆசானுக்கு படைத்திட்ட ஆசானாற்றுப்படை என்னும் அற்புத தமிழமுதை, அடுத்த
சனிக்கிழமை சிறிது பருகி மகிழலாமா நண்பரே.