01 மார்ச் 2014

காலத்தினாற் செய்த நன்றி


அழிவின் அவநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு
                            - குறள்

     நண்பர்களே, நான் ஆசிரியராகப் பணியாற்றுகின்ற, தஞ்சாவூர், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், சாரணர் இயக்கம், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், இண்ட்ராக்ட் கழகம், நாட்டு நலப் பணித் திட்டம், தேசிய மாணவர் படை போன்ற பல்வேறு அமைப்புகள் சிறப்புடன் இயங்கி வருகின்றன.

     இண்ட்ராக்ட் கழகமானது மாணவர்களுக்கு ஒரு பிரிவும், மாணவிகளுக்கு ஒரு பிரிவும் என இரண்டு பிரிவுகளாக இயங்கி வருகின்றது.

     மாணவர்களுக்கான உமாமகேசுவர இண்ட்ராக்ட் கழகத்தின் வழிகாட்டி ஆசிரியராக, நண்பரும் முதுகலை ஆசிரியருமான திரு டி.பாபு அவர்களும், மணவியருக்கான, இராதாகிருட்டின இண்ட்ராக்ட் கழகத்தின் வழிகாட்டி அசிரியையாக, பட்டதாரி ஆசிரியை சகோதரி திருமதி பா.மகேசுவரி அவர்களும் திறம்பட செயலாற்றி வருகின்றனர்.


     கடந்த 6.1.2014 திங்கட் கிழமை, பிற்பகல் 3.00 மணியளவில். இண்ட்ராக்ட் கழகங்களின் மாணவப் பொறுப்பாளர்களைப் பதவியில் அமர்த்தும் விழாவானது, சங்கத் தமிழ்ப் பெருமன்றத்தில் நடைபெற இருந்தது.

     இவ்விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, தஞ்சாவூர், ரோட்டரி சங்கப் பிரதிநிதிகள், எம் பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்களுள் ஒருவர் ரோட்டேரியன் திரு பிபி.என்.சுப்பிரமணியன். அவரைப் பார்த்ததும், என் மனதில் மகிழ்ச்சி அலைகள் பரவத் தொடங்கின. கடந்த ஓராண்டாக, யாரைப் பார்க்க வேண்டும், என்று எண்ணியிருந்தேனோ. அவர் இன்று, இதோ என் பள்ளிக்கே வந்திருக்கிறார்.

     உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியரும், நண்பருமான திரு வெ.சரவணன் அவர்களையும், இண்ட்ராக்ட் கழகத்தின் வழிகாட்டி ஆசிரியர் நண்பர் திரு டி.பாபு அவர்களையும் அணுகி, இன்று நடைபெற இருக்கின்ற விழாவில், ஒரு ஐந்து நிமிடம், மேடையேறிப் பேச எனக்கு அனுமதி வேண்டும் என்றேன். எதற்கு என்று கூட இருவரும் கேட்கவில்லை. தாராளமாகப் பேசுங்கள் என்றனர். நண்பர்களல்லவா.

     இண்ட்ராக்ட் கழக விழா தொடங்கியது. மாணவப் பொறுப்பாளர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பிறகு நான் பேச அழைக்கப் பட்டேன்.

     ஒலிப் பெருக்கியின் முன் நின்று, மேடையில் அமர்ந்திருந்தவர்களுக்கு வணக்கம் கூறி பேச்சினைத் தொடங்கினேன்.

    
மாணவ, மாணவிகளே, உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கலாம். இண்ட்ராக்ட் கழக விழாவில், நான் ஏன் பேச வந்திருக்கிறேன் என புரியாமல் இருக்கலாம். தலைமையாசிரியரின் அனுமதியுடன், உங்களுக்கு ஒரு கதை சொல்ல வந்திருக்கிறேன். கதை என்றால் கற்பனைக் கதையல்ல, எனது வாழ்வில், எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தினை, எவ்வளவு முயன்றாலும், சுவாசமென்று ஒன்று இருக்கும் வரை, உதறித் தள்ள முடியாத ஒரு நிகழ்வினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.


     மாணவர்களே, மாணவிகளே, என் மகளின் பெயர் சுவாதி. தற்பொழுது ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஆறாம் வகுப்பு பயின்று கொண்டிருந்த பொழுது, என் மகளுக்கு இருமல் வந்தது. மருத்துவரிடம் காண்பித்தோம். சில நாட்கள் மருந்து சாப்பிட்டும் இருமல் விடவில்லை. மருத்துவர் ஸ்கேன் செய்யச் சொன்னார். செய்தோம். ஸ்கேன் அறிக்கையினைப் பார்த்த மருத்துவர், ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

     உங்கள் மகளின் இதயத்தில் ஓட்டை இருக்கிறது என்றார். என் குடும்பத்தின் நிம்மதியே சீர் குலைந்தது.
திரு நாராயண சாமி

சென்னையில் வாழும் எனது நண்பர் திரு அனந்தராமன் அவர்களும், அவரது நண்பர், மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருபவருமான திரு சரவணன் அவர்களும் செய்த ஏற்பாடுகளின்படி, சென்னையில், முகப்பேரில் உள்ள ப்ராண்டியர் லைஃப் லைன் மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை மூலம், இதயத் துளையினை அடைப்பது என்று முடிவு செய்தோம். பணம் வேண்டுமே எங்கே செல்வது? சென்னையில் உள்ள நண்பர் அனந்தராமனின் சகோதரர், திரு நாராயண சாமி அவர்கள், திடீரென்று ஒரு நாள் தஞ்சைக்கு வந்து, இதை கண்டிப்பாக, மறுக்காமல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி ரூ.50,000 கொடுத்தார்

      எனது மனைவியின் நகைகளை, தஞ்சாவூர், பரோடா வங்கியில் அடமானம் வைத்து, ரூபாய் ஒரு இலட்சம் பெற்று, அத்தொகையினை, அவ்வங்கியிலேயே உள்ள, எனது வங்கிக் கணக்கில் போட்டுவிட்டு, ஏ.டி.எம். அட்டையினை மட்டும் எடுத்துக் கொண்டு, திரு நாராயண சாமி அவர்கள் கொடுத்த ரூபாய் 50,000 ஐ மட்டும், கையில் எடுத்துக் கொண்டு, எனது மனைவி, மகளுடன் சென்னை புறப்பட்டேன். நண்பர் பால்ராஜ் அவர்களும் என்னுடன் வந்தார்.

நண்பர் அனந்தராமன்
சென்னை வளசரவாக்த்தில் உள்ள, நண்பர் அனந்தராமனின் வீட்டில் தங்கினோம்.

     நான் அரசு ஊழியராதலால், ஸ்டார் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், என் மகளை மருத்துவ மனையில் சேர்க்க விரும்புகிறேன் என்பதை, மருத்துவ மனையில் தெரிவித்தேன்.

     மருத்துவமனையில் இருந்து, என் மகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு ஆகும் செலவு குறித்த அறிக்கை, ஸ்டார் காப்பீட்டுக் கழகத்திற்கு, முன் அனுமதி பெறுவதற்காக அனுப்பப் பட்டது. ஒரு நாளில் ஒப்புதல் கிடைத்துவிடும். ஒப்புதல் கிடைத்தவுடன் மகளை மருத்துவமனையில் சேர்க்கலாம் என்றனர்.

     ஸ்டார் காப்பீட்டுக் கழகத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருந்த வேளையில், அனந்தராமன் எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். கையில் ஐம்பதாயிரம் இருக்கிறது, வங்கியில் ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் இருக்கிறது. ஏ.டி.எம்., கார்டு இருக்கிறது, எங்கு வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றேன். எதற்கும் வங்கியில் இருக்கும் பணத்தினை இன்றே எடுத்து கையில் வைத்துக் கொள்வோம் என்றார்.

     ஏ.டி.எம்., செண்டருக்குச் சென்று வங்கி அட்டையினை சொருகி ரூ.50,000 என பொத்தான்களை அழுத்தினேன். பணம் வரவில்லை.இரண்டு மூன்று ஏ,.டி.எம்,. செண்டர்களுக்குச் சென்று முயற்சித்தும் பணம் வரவில்லை. தொகையினைக் குறைத்து முயற்சி செய்தேன் ரூ.15,000 தொகை வந்தது. இன்னும் ஒரு மூறை ரூ.15,000 எடுக்க முயன்றேன். ஒரு துண்டு சீட்டு மட்டுமே வந்தது. ஒரு நாளைக்கு ரூ.15,000 ற்கு மேல் ஏ.டி.எம்.,ல் எடுக்க முடியாது என்பது அப்பொழுதுதான் புரிந்தது.

     எனது சேமிப்புக் கணக்கில் பணம் இருந்தும் எடுக்க இயலவில்லை. மறு நாள் முயன்றாலும் ரூ.15,000 தான் எடுக்கலாம். என்ன செய்வது என்று புரியவில்லை.  ஆக மொத்தத்தில் புத்திசாலித்தனம் என்று எண்ணி, மடத்தனமான செயலினைச் செய்திருக்கிறேன் என்பது மட்டும் புரிந்தது. நேரமோ இரவாகிவிட்டது. ஒன்றும் செய்வதற்கில்லை. அனந்தராமன் அவரது நண்பர் ஒருவரிடம் பேசினார். நாளை காலை ரூ.50,000 தேவை என்று கூற அவரும் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தார்.

     பொழுது புலர்ந்தது. காலை 10.00 மணிக்கு முதல் வேளையாக, தஞ்சாவூர் பரோடா வங்கிக் கிளைவில் பணியாற்றி, கும்பகோணம் கிளையில்  பணியாற்றிக் கொண்டிருக்கும், திரு மதியழகன் என்பாரிடம் தொலைபேசியில் பேசினேன். அவர் கும்பகோணத்தில் இருந்து மாற்றலாகி நாகர் கோவிலில் இருப்பதாகக் கூறினார். மேலும் என்னிடம் செக் புக் இருக்கிறதா எனக் கேட்டார். செக் புக் இருந்தால், இந்தியாவில் எந்த பரோடா வங்கிக் கிளையிலிருந்தும் பணம் எடுக்கலாம் என்றார். என்னிடம் செக் புக் இல்லை என்றேன். வங்கியின் Withdrawal Slip ஐப் பய்ன்படுத்தி ரூ.25,000 வரை எடுக்கலாம் என்றார்.

     அடுத்து எனது சேமிப்புக் கணக்கு இருக்கும், தஞ்சை பரோடா வங்கிக்கு போன் செய்தேன். வங்கி அலுவலர் ஒருவர் பேசினார். நான் எனது நிலையினை எடுத்துச் சொன்னேன். பொறுமையாகக் கேட்டார். பின்னர் உங்களது சேமிப்புக் கணக்கு எண்ணைக் கூறுங்கள் என்றார். கூறினேன். சற்று காத்திருங்கள் என்றார். காத்திருந்தேன். அவர் கணிப்பொறிப் பலகையினைத் தட்டும்  ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு நிமிடம் கழித்துப் பேசினார், உங்கள் கணக்கைப் பார்த்தேன், ஒரு இலட்சத்து இருபத்து ஐந்தாயிரம் இருப்பு உள்ளது. உங்கள் கணக்குடன் உங்களது புகைப்படமும், மாதிரிக் கையெழுத்தும் பதிவாகி உள்ளதா? என்று பார்த்தேன், பதிவாகி இருக்கிறது. எனவே நீங்கள் பணம் பெறுவதற்கு ஒரு வழி இருக்கிறது என்றார். மகிழ்வுடன் கூறுங்கள் என்றேன்.

     உங்களிடம் செக் புக் இல்லாததால் நேரிடையாகப் பணம் எடுக்க முடியாது. ஆனால் வேறொரு கணக்கிற்கு உங்கள் பணத்தை மாற்றம் செய்யலாம். அதாவது சென்னையில் இருக்கும் பரோடா வங்கியின் ஏதேனும் ஒரு கிளைக்குச் செல்லுங்கள். அந்த வங்கியில், உங்களுக்குத் தெரிந்தவர் யாரேனும் கணக்கு வைத்திருப்பாரேயானால், Withdrawal Slip ஐப் பயன்படுத்தி, உங்கள் கணக்கில் உள்ள தொகையினை அவர் கணக்கிற்கு மாற்றுங்கள். பின்னர் அவரது காசோலையினைப் பயன்படுத்தி, அவர் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். வங்கிக் கிளைக்குச் சென்று, எனக்குப் பேசுங்கள், நானே அந்த வங்கி அலுவலரிடம் பேசி, பணத்தை மாற்றுவதற்கு உதவி செய்கிறேன் என்றார்.

     
திரு இராஜசேகர்
சென்னை பரோடா வங்கியில் கணக்கு வைத்திருப்பவரை எங்குபோய் தேடுவது? என்று புரியவில்லை. நண்பர் அனந்தராமன் உடனே அவரது நண்பர் ஒருவருக்கு போன் செய்ய, அவர், ஆம் வளசரவாக்கம் பரோடா வங்கிக் கிளையில் எனக்குக் கணக்கு இருக்கிறது, உடனே வருகிறேன் என்றார். உடனே புறப்பட்டு வளசரவாக்கம் பரோடா வங்கிக் கிளைக்குச் சென்றோம். சிறிது நேரத்தில் அனந்தராமனின் நண்பர் அங்கு வந்தார். அவரது நண்பர் ஒரு தனியார் நிறுவனத்தில், நீர் வள மேலான்மை தொடர்பான பணியினைச் செய்து வருகிறார் என்றும் திரு இராஜசேகர் என்பது அவர் பெயர் என்றும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நன்றி கூறி அவரை வரவேற்றேன். தஞ்சை கிளையில் பணியாற்றும் சுப்பிரமணியன் அவர்களைத் தொடர்பு கொண்டு, வளவரவாக்கம் கிளை அலுவலரிடம் எனது அலைபேசியைக் கொடுத்தேன். இருவரும் பேசிக் கொண்டனர். வங்கி அலுவலர் எனக்கு ஒரு
Withdrawal Slip ஐக் கொடுத்தார், ரூ.85,000 ஆனது எனது கணக்கிலிருந்து, ராஜசேகரின் கணக்கிற்கு மாறி, அவர் கணக்கிலிருந்து, என் கைக்கு ஐந்தே நிமிடத்தில் வந்து சேர்ந்தது. வங்கி அலுவலருக்கும், இராஜசேகருக்கும் நன்றி கூறி புறப்பட்ட நேரத்தில், அனந்தராமனுக்கு பிரான்டியர் லைப் லைன் மருத்துவ மனையிலிருந்து அலைபேசி அழைப்பு வந்தது.

     ஸ்டார் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலகத்தில் இருந்து அனுமதி வந்துவிட்டது. ரூ.1,72,000 கேட்டிருந்தோம். முதல் தவணையாக ரூ.80,000 அனுமதிக்கப் பட்டுள்ளது. ஆபரேசன் முடிந்தவுடன், மீதித் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் ரூ.80,000 போக மீதமுள்ள தொகையான ரூ.92,000 ஐ காப்புத் தொகையாக உடனே செலுத்துங்கள்.  ஸடார் காப்பீட்டுத் திட்ட அலுவலகத்திலிருந்து  மீதமுள்ள தொகையினைப் பெற்றவுடன், நீங்கள் செலுத்திய தொகை திருப்பித் தரப்படும். இன்று மாலை ஜெயக்குமாரின் மகளை மருத்துவ மனையில் சேருங்கள். நாளை காலை 11.00 மணிக்கு ஆபரேசன் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவமனை அலுவலர் கூறினார்.

    உடனே அனந்தராமனின் வீட்டிற்குச் சென்று மனைவியையும், மகளையும் அழைத்துக் கொண்டு மருத்துவ மனைக்குச் சென்றோம். பணத்தைக் கட்டினோம். மகளை சேர்த்தோம்.

       மகளை மருத்துவமனையில் சேர்த்தவுடன், மீண்டும் தஞ்சை, பரோடா வங்கியை அலைபேசியில் தொடர்பு கொண்டேன். சார் உங்களின் உதவியால், பணத்தை வங்கியில் இருந்து எடுத்து, மருத்துவமனையில் பணம் கட்டி, மகளையும் மருத்துவமனையில் சேர்த்துவிட்டேன். உங்களுக்கு மிக்க நன்றி சார் என்று கூறி, சார், உங்களின் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டேன். சுப்பிரமணியன் என்று கூறினார்.

திரு சுப்பிரமணியன்
மாணவர்களே,மாணவிகளே அந்த சுப்பிரமணியன் வேறு யாருமல்ல, இதோ இங்கே அமர்ந்திருக்கிறாரே, இந்த சுப்பிரமணியன்தான் என்றேன்.

     தமிழ்ப்பெரு மன்றம், மாணவ, மாணவியரின் கரவொலியால் அதிர்ந்தது.

     மாணவர்களே, மாணவிகளே, நமது பள்ளியின் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன், முதுகலை ஆசிரியர் திரு மு.பத்மநாபன், கலைக் கல்லூரியில் பணியாற்றும் திரு க.பால்ராஜ், நண்பர் பி.சேகர், சென்னை வாழ் நண்பர்களான திரு அனந்தராமன், திரு சுதாகர், எனது முன்னாள் மாணவர் திரு ஜெயக்குமார், எனது முன்னாள் ஆசிரியர் திரு டி.டி.ஜெயச்சந்திரன் ஆகியோரும் மற்றும் எனது மாமனார், மாமியார் உறவினர்கள் என பலரும், அறுவைசிகிச்சையன்று மருத்துவ மனையில் என்னுடன் இருந்தனர்.

     நண்பர்களின் மேன்மையை, நட்பின் வலிமையை, நான் உணர்ந்த நாள் அந்நாள்.

     நண்பர்களின் நல் எண்ணப்படியும், சுப்பிரமணியன் போன்ற மனிதாபிமானமுள்ள, அன்பர்களின் நல் உதவியாலும், மனித நேயமிக்க மருத்துவர் பிரேம்சேகர் அவர்களின், தன்னலமற்ற மருத்துவச் சேவையினாலும், அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் செல்லப் பட்ட என் மகள் சுவாதி, இதயத்தில் ஓட்டையே இல்லை, இல்லவே இல்லை, என கண்டுபிடிக்கப் பட்டு, கத்தி படாமல் மீண்டது தனிக் கதை.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

நன்றி என்றால் உதவி. ஞாலம் என்றால் உலகம். காலத்தினால் செய்த உதவி, எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அது உலகினும் பெரியது என்பார் திருவள்ளுவர்.

     சிறிய உதவியே, உலகைவிடப் பெரியது என்றால, இதோ இந்த மனிதர், மனிதநேயர் சுப்பிரமணியன் அவர்கள், காலத்தாற் செய்த பேருதவிக்கு எதை ஒப்பீடாகக் கூற முடியும். நன்றி என்ற வார்த்தையைத் தவிர என்னிடம் ஏதுமில்லை.

     மாணவ, மாணவிகளே என் மகளை மருத்துவமனையில் இருந்து, அழைத்துக் கொண்டு, மகிழ்வுடன் தஞ்சை திரும்பிய பின், பரோடா வங்கிக்குச் சென்று திரு சுப்பிரமணியன் அவர்களைப் பார்த்து நன்றி கூறினேன்.

     சுமார் ஒரு வருடம் கடந்த நிலையில், மருத்துவமும் மனித நேயமும் என்ற தலைப்பில், வலைப் பூவிலும் கட்டுரையாய் எழுதினேன்.

     கடந்த வருடம், கரந்தை ஜெயக்குமார் வலைப் பூக்கள் என்னும் எனது நூலில், இக்கட்டுரையினையே முதல் கட்டுரையாய் வெளியிட்டேன்.

மருத்துவர் பிரேம் சேகர்
என் மகளுக்கு மருத்துவம் பார்த்த மனிதநேயர் மருத்துவர் பிரேம் சேகர் அவர்களுடன் இன்று, முக நூலில் நண்பராயிருக்கிறேன். என் நூலுக்கு மனமகிழ்ந்து வாழ்த்துரையும் வழங்கியப் பெருமகனார் மருத்துவர் பிரேம்சேகர்.

     நூலினை வெளியிட்டவுடன், பரோடா வங்கிக்கு சென்றேன். ஆனால் அதற்கும் சில மாதத்திற்கு முன்னரே, திரு சுப்பிரமணியன் அவர்கள், பணி ஓய்வு பெற்று சென்று விட்டார் என்பதை அறிந்தேன்.

      இன்று, நம் பள்ளியில் திரு சுப்பிரமணியன் அவர்களைப் பார்த்தவுடன் பரவசம் அடைந்தேன். அவருக்கு உங்கள் முன்னால் நன்றி சொல்ல வேண்டும், உங்கள் முன்னிலையிலேயே, எனது நூலைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, இதோ உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

     காலத்தாற் செய்த பேருதவிக்கு நன்றி என்று கூறி எனது நூலினை வழங்கினேன்.

திரு சுப்பிரமணியன் அவர்கள்

ரோட்டரி சங்கத் தலைவர் திரு டி.கோவிந்தராஜன் அவர்கள்

ரொட்டரி சங்கச் செயலாளர் திரு ஏ.அன்புராஜா அவர்கள்

ரோட்டரி சங்க இயக்குநர் நண்பர் திரு பி.கண்ணன் அவர்கள்

நண்பரும், பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்கள்

இண்ட்ராக்ட் கழக வழிகாட்டி ஆசிரியை திருமதி பி.மகேசுவரி அவர்கள்
மறவற்க மாசற்றார் கேண்மை, துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு
தனக்குத் துன்பம் வந்தகாலத்து ஆதரவாய் இருந்தவரது நட்பை விடுதல் கூடாது என்பார் வள்ளுவர். இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி, எனக்குப் பேருதவி புரிந்த திரு சுப்பிரமணியன் அவர்களுக்கும், மருத்துவர் பிரேம் சேகர் அவர்களுக்கும், நண்பர்கள் திரு அனந்தராமன், திரு நாராயணசாமி, திரு சென்னை சரவணன்,திரு ராஜசேகர்,சென்னை நண்பர்கள் திரு சுதாகர், திரு ஜெயக்குமார், தஞ்சை நண்பர்கள் திரு வெ.சரவண்ண், திரு மு.பத்மநாபன், திரு சேகர், திரு பால்ராஜ் ஆகியோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கின்றேன். நன்றி நண்பர்களே.