07 மார்ச் 2014

கிளாரா

அழகான நாளன்று நாங்கள் அணிவகுக்கும்போது
ஆயிரக் கணக்கான இருட்டு சமையலறைகளும்
சாம்பல் நிறத்தில் ஓங்கிநின்ற இயந்திரங்களும்
ஒரு திடீர்ச் சூரியனின் பிரகாசத்தால்
உணர்வுகள் பெருக்கெடுத்துப் பாடுகின்ற,
எங்களைக் கேட்கின்ற மக்களுக்காக
பிரட் அண்ட ரோசஸ், பிரட் அண்ட் ரோசஸ்
                                  -- ஜேம்ஸ் ஓப்பன்ஹிமின்

    

பெண் தொழிலாளர்கள் ஆயிரக் கணக்கில், கொதித்தெழுந்து, வாக்குரிமை கோரியும், தொழிலாளர்களின் உரிமையினை வற்புறுத்தியும், போர்க் குணமுள்ள ஓர் ஆர்ப்பாட்டத்தை முதன் முதலில் நடத்திய நாள்தான் மார்ச் 8.


     ஆயத்த ஆடை தொழிற்சாலை மற்றும் ஜவுளித் தொழிற்சாலையைச் சார்ந்த பெண்கள் நடத்திய இந்த ஆர்ப்பாட்டம், நடைபெற்ற ஆண்டு 1857, மார்ச் 8. இடம் நியூ யார்க்.
    


நாள்தோறும் 15 மணி நேர வேலை. எவ்வளவு நேரம் வேலை செய்தனர் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வேலை செய்த பொருளுக்கு மட்டுமே கூலி.

     ஊசி, நூல், மின்சாரம், வேலைக்குப் பயன்படுத்தும் நாற்காலி மற்றும் கைப் பெட்டிக்கும் தொழிலாளர்களே பணம் கட்ட வேண்டிய பரிதாப நிலை. தாமதமாக வந்தால் அபராதம். கழிவறையில் சற்று அதிக நேரம் இருந்தாலும் அபராதம். இதுதான் அன்றைய நிலை.

     நண்பர்களே, 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட, ஒரு பெண் சொன்னதைக் கேளுங்கள். உங்கள் உள்ளம் நிச்சயமாய் உடையும்.

      நாங்கள் விலை குறைந்த துணிகளையே அணிந்தோம். கொடுமையான குடிசைகளில் வாழ்ந்தோம். மலிவான உணவை உண்டோம். எதிர்பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லை. மறுநாளாவது நன்றாக இருக்க வேண்டுமே என்று ஆசைப் படுவதற்குக் கூட எதுவுமே இல்லை.

துணிந்து இறங்கிய பெண் தொழிலாளர்கள்,
எங்களுக்கு ரொட்டியுடன் ரோஜாவும் வேண்டும்
என்ற பிரச்சார முழக்கத்துடன் போராட்டத்தில் குதித்தனர்.

As we come marching, marching, in the beauty of the day
A million darkened kitchens, a thousand lofts gray
Are touched with all the radiance that a sudden sun discloses
For the people hear us singing
Bread and Roses, Bread and Roses

     பெண் தொழிலார்கள் தங்களின் உரிமைக்காகவும், பசி, பட்டினி, ஓய்வின்மை, வாக்குரிமை, கூலி உயர்வு, எட்டு மணி நேர வேலை, வேலை நிரந்தரம் முதலான கோரிக்கைகளை வலியுறுத்தியும், வீதியில் இறங்கி முதன் முதலில் பேராடிய, அதே ஆண்டில், 1857 ஆம் ஆண்டில், ஜுலை மாதம் 15 ஆம் நாள் ஜெர்மனியில் பிறந்தவர்தான் கிளாரா ஜெட்கின்.

       ஏழைக் குடும்பத்தில் பிறந்து, சர்வதேசப் பொதுவுடமை இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவராய் உயர்ந்தவர் கிளாரா. பன்மொழிப் புலமையும், ஆழ்ந்த அரசியல் அறிவும், இலக்கிய ஞானமும் உடையவர்.

     ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஓசிப் ஜெட்கினை மணந்தார். தனது கணவரிடமிருந்து மார்க்சியத்தையும், விஞ்ஞான சோசலிசத்தையும் கற்றுணர்ந்து மார்க்சியவாதியாக மலர்ந்தார்.

     நண்பர்களே, கிளாராவின் இரு மகன்களின் பெயர் என்ன தெரியுமா? முதல் மகனின் பெயர் மார்க்சிம். இரண்டாவது மகனின் பெயர் கான்ஸ்டான்டின்.

    

கிளாரா பெண் தொழிலாளர்களை அமைப்பு ரீதியாகத் திரட்டி, வர்க்க உணர்வூட்டி, போராட்டக் களத்திற்குத் தயார் படுத்தினார்.

    நண்பர்களே, கிளாரா ஜெட்கின் பற்றிய இரு செய்திகளைக் கூறப் போகிறேன். இதிலிருந்தே, பெண்களின் உரிமைக்காக இடிமுழக்கமெனக் குரல் கொடுத்த, பெண்ணுரிமைப் போராளியின் உணர்வும், மேன்மையும் உங்களுக்குப் புரியும்.

     ஒன்று, பாரீசில் இருந்த பொழுது, மூலதனம் என்னும் காலப் பெட்டகத்தை வழங்கிய மாமேதை காரல் மார்க்ஸ்-ன் மகளான, கிளாராலாய்ப் உடன் இணைந்து, பெண் தொழிலாளர்களைப் புரட்சியாளர்களாக மாற்றப் போராடிய வீராங்கனை இவர்.

    இரண்டு, இரஷ்யாவிற்குச் சென்று, மாமேதை லெனினைச் சந்தித்து, உரையாடி, அவரது அறிவு வெளிச்சத்தில், தனது தத்துவப் பார்வையை கூர் தீட்டிக் கொண்டவர் இவர்.




கிளாராவிற்கு லெனின் எழுதிய கடிதம்
    

ஜெர்மனியில் பொதுவுடமைக் கட்சியை உருவாக்கிய மூலவர்களில் ஒருவர். உலக யுத்தத்தின்போது, வெறியாட்டத்தையும், ஏகாதியத்தியத்தையும், துணிந்து எதிர்த்து, சிறைபட்டு இன்னலுக்கு ஆளானவர் இவர்.

     இருபத்தைந்து ஆண்டுகள் சமத்துவம் என்னும் இதழின் ஆசிரியராய் இருந்தவர் கிளாரா. உலக யுத்தத்தின்போது, 1914 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி வெளியான இதழில் இவர்,  ஆண்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்கின்ற தருணத்தில், வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்குப் பெண்கள் ஆகிய நாம் போராட வேண்டும். ஆண்கள் மௌனமாக இருக்கும் பொழுது, நமது கடமைகளை உரக்கச் சத்தமிட்டுச் சொல்ல வேண்டிய கடமை நமக்குள்ளது என்று போதித்தார்.

     சர்வதேச சோசலிஸ்ட் பெண்கள் அமைப்பின் தலைவரான கிளாரா அவர்கள், 1915ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள், ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இக்கூட்டத்தில் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, போலந்த், ஹாலந்து, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த 28 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

     யுத்தத்தின் மீதான எதிர்ப்பை, முதன் முறையாக ஒருமுகப் படுத்தும் வடிவில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், யுத்தத்திற்கு எதிராக, கிளாரா ஒரு தீர்மானத்தை முன்வைத்தார். அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப் பட்டது.



உங்களின் கணவர்கள் எங்கிருக்கின்றனர்? உங்களின் மகன்கள் எங்கிருக்கின்றனர்? எட்டு மாத காலமாக அவர்கள் யுத்த களத்தில் இருக்கின்றனர். அவர்களை வலுக்கட்டாயமாக, வீடுகளில் இருந்தும், வேலை செய்யும் இடங்களில் இருந்தும் இழுத்துச் செல்கின்றனர்.

     இலட்சக் கணக்கானோர் ஏற்கனவே சமாதிகளில் ஓய்வு எடுக்கின்றனர். இன்னும் பல இலட்சக் கணக்கானோர் கை, கால்களையும், கண்களையும் இழந்து, சிதறுண்ட மூளைகளுடனும், தொற்று நோய்களுடனும், இராணுவ மருத்துவ மனைகளில் அழிந்து வருகினறனர்.

     மேலும் இந்த யுத்தத்தால் யாருக்கு லாபம்? ஒவ்வொரு நாட்டிலும் மிகக் குறைவானவர்கள் மட்டமே இந்த யுத்தத்தால் லாபமடைகின்றனர். ரைபிள்களையும், பீரங்கிகளையும், நெஞ்சுக் கவசங்களையும் வழங்குபவர்களும், இராணுவ வீரர்களுக்குத் தேவையான பிற பொருட்களை வழங்குபவர்களுமே, இந்த யுத்தத்தால் லாபமடைகிறார்கள்.

     லாபங்களுக்காக அவர்கள் மக்கள் மத்தியில் முரண்பாடுகளைத் தூண்டி விடுகின்றனர். பொதுவாக இந்த யுத்தம் முதலாளிகளுக்கு மட்டுமே பயன் அளிக்கும்.

     யுத்தத்தைக் கண்டிப்போம். சோசலிசத்தை நோக்கிப் பயணிப்போம்.

    கிளாரா எந்த அளவிற்குத் தெளிவும், தைரியமும் மிகுந்தவர் என்பது இப்போது விளங்குகிறதல்லவா.

     நண்பர்களே, கிளாராவின் இவ்வறிக்கை ஸ்விட்சர்லாந்தில் அச்சடிக்கப் பட்டு, ஜெர்மனியில் இரகசியமாகவும், பரவலாகவும் விநியோகிக்கப் பட்டது.

     விளைவு என்ன தெரியுமா? கிளாரா கைது செய்யப் பட்டார். கார்ல்ஸ் ரோஹெவில் நான்கு மாதச் சிறை.

     நண்பர்களே, சர்வதேச பொதுவுடமை இயக்கத்தின் மாவீரத் தலைவியும், ஆணாதிக்கத்தைத் தகர்த்தெறிய போரடிய வீராங்கனையுமான, இந்த கிளாரா ஜெட்கின் அவர்கள்தான், 1910 ஆம் ஆண்டு கோபன்ஹெகனில் நடைபெற்ற, சர்வதேசப் சோசலிசப் பெண்கள் மாநாட்டில்,
மார்ச் 8 ஆம் நாளினை
உலக மகளிர் தினமாக
அறவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார். தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

     ஆயிரமாயிரம் பெண்கள், தங்களது அடிப்படை உரிமைகளைப் பெற, இரத்தம் சிந்திப் போராடிய, வரலாற்றை நினைவு கூறும் நாள்தான் மார்ச் 8, உலக மகளிர் தினம்.

     நண்பர்களே, உலக மகளிர் தினம் என்ற பெயருக்குப் பின்னால் உள்ள உண்மை வரலாறு, இரத்தம் சிந்திய வீர வரலாறு, உண்ண உணவின்றி, உடுக்க தரமான உடையின்றித் தவித்த, வீதிக்கு வந்துப் போராடிய வீராங்கனைகளின் உணர்வு வரலாறு, இன்று மறக்கப்பட்டு விட்டது என்பதுதான் சோகத்திலும் சோகம்.

     இன்று மகளிர் தினமானது, கோலப் போட்டி, சமையல் போட்டி, அழகிப் போட்டி என திசை திருப்பப் பட்டு, பெண்ணடிமைச் சிந்தனைகள் வலுப்படுத்தப் படுகின்றனவோ, போராட்ட குணங்கள் மழுங்கடிக்கப் படுகின்றனவோ என்ற ஓர் எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

வாழ்க கிளாரா ஜெட்கின்.
அன்புச் சகோதரிகளுக்கு, உலக மகளிர் தின வாழ்த்துக்கள்.

-------

பரந்து பட்ட பாட்டாளி வர்க்க மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சியில், ஆண் தொழிலாளர் மீது வைத்த அக்கறையை, பெண் தொழிலாளர் மீது வைக்கவில்லை என்றால், அது பாட்டாளி வர்க்க இயக்கம் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பாகும்.
                                        - கிளாரா ஜெட்கின்
-------


பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
                          - மகாகவி பாரதி